மரப்பாச்சி – 7 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 7
காரை டிரைவர் காளிராஜ் போர்டிக்கோவில் நிறுத்தினான்.. காரிலிருந்து இறங்கினர் மணிமாறனும், பிருந்தாவும். உள்ளேயிருந்து ‘ஐயா’ என்று ஓடி வந்தான் அந்த ஆள்.. பங்களா டைப் வீடு அது.. ஒடிசலான தேகம் தோளில் துண்டு சகிதம் நின்றவனை அறிமுகப்படுத்தினார் மணிமாறன்..
“இது சுந்தரம், வீட்டோட சமையல்காரன், தோட்டக்காரன், என் பி.ஏ எல்லாம்..” கூறியவர்.. “சுந்தரம் போய் ஸ்ட்ராங்கா ரெண்டு காஃபி போட்டு எடுத்துட்டு வா.. பாப்பாவுக்கு இன்னிக்கு ட்யூஷன் உண்டா?”
“உண்டு ஐயா.. வழக்கம் போல எட்டு மணிக்கு வரும்..”
“சரி நீ போய் காஃபி கொண்டு வா..”
அவர் பணிக்கவும் சுந்தரம் அடுக்கலையை நோக்கிச் சென்றான். மணிமாறன் கேட்டார், “டயர்டா ஃபீல் பண்ணலைனா, மொதல்ல வீட்டைச் சுத்திக் காட்டுறேன்…”
“டயர்ட் எல்லாம் ஒண்ணும் இல்லை, வாங்க வீட்டைப் பார்க்கலாம்..”
கீழே இரண்டு பெட்ரூம், ஒரு ஹால், டைனிங் ஹால் அப்படி ஸ்டேர்கேஸ்.. மேலே உயர மாடியில் இரண்டு பெட்ரூம், பால்கனி என்று உயர்தர இட்டாலியன் மார்பிளில் மின்னியது வீடு. மணிமாறன் வேலையால் அல்ல, பரம்பரையாவே சற்று வசதியானவர், தாய் தந்தையர் இல்லை, ஒரே ஒரு தமக்கை, அவளும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டாள், அவளுக்கு இந்தக் கல்யாணம் பற்றி தெரிவிக்கவில்லை அவர். வீட்டைச் சுற்றிப் பார்த்தவள் கூறினாள்..
“இதை கூட்டிப் பெருக்கவே நாலு ஆளு தேவைப்படுமே?..”
“அதெல்லாம் சுந்தரம் ஒருத்தனே பார்த்துக்குவான்..”
“இனி நான் சமைக்கலாம் இல்ல?”
“தாராளமாய் சுந்தரமும் ஹெல்ப் பண்ணுவான்” கூறி முடிக்கவும் சுந்தரம் இரண்டு கோப்பைகளுடன் வந்தான், கோப்பையை இருவரிடமும் கொடுத்தான், காபியை முதல் வாய் பருகியவள் மூளை கூறியது, ‘காஃபி சூப்பர், சுந்தரம் சமையலில் கில்லாடியாக இருப்பான்..’
“காஃபி அருமையா இருக்குதுங்க..”
“நன்றிம்மா..” என்றான்.
“சுந்தரம் நல்லா சமைப்பான்.. சுந்தரம் இன்னிக்கு எங்க கல்யாணம் முடிஞ்சிருக்குது, நைட் அருமையா ஒரு டின்னர் அரேஞ்ச் பண்ணு..”
“ஜமாய்ச்சுடலாம் ஐயா..” என்றவன் பையை எடுத்துக் கொண்டு டிரைவரை அழைத்துக் கொண்டு மார்க்கட் கிளம்பினான் இரவு டின்னருக்கு பொருட்கள் வாங்க.. சோபாவில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர் மணிமாறனும், பிருந்தாவும்.. சுவரில் தேடினாள் எதாவது படங்கள் இருக்கும் என்று துடைத்து வைத்த சிலேட்டாய் இருந்தது சுவர்கள்.. அவளின் மனதைப் படித்தவர் கேட்டார்..
“என்ன என்னோட கல்யாண போட்டோவைத் தேடுறியா, அதை கழட்டி உள்ளே வச்சுட்டேன்..”
“ஏன்?”
“என் பொண்ணு அம்மா படத்தைப் பார்த்தா அன்னிக்கு பூரா மூட் அவுட் ஆயிடுவா, சதா அம்மா படத்தைப் பார்த்து அழுதுட்டே இருப்பா, ஒரு நாள் இரண்டு நாள்னு சரியாயிடும்னு பார்த்தா, அம்மா படத்தைப் பார்த்தாலே அழுகைதான் அதான் கழட்டி உள்ளே வச்சுட்டேன்..” என்றவர் எழுந்து அந்த தேக்கு மர பீரோவைத் திறந்தார்.. உள்ளே இருந்து அந்த ஆல்பத்தை எடுத்தவர் பிருந்தாவின் கையில் கொடுத்தார்.. ஆல்பத்தை திறந்தவள் கண்கள் அகலத் திறந்தது.. அப்படியொரு அழகு அவர் மனைவி.. பக்கங்களை புரட்டியவள் விழிகள் அகன்று கொண்டே சென்றது, ஒவ்வொரு போடோவிலும் அசரடித்தாள் அவர் மனைவி..
“ரொம்ப அழகா இருக்கறாங்க..”
“அதனாலதான் ரொம்ப காலம் இருக்காதே மேலே வந்துடுன்னு கடவுள் அழைச்சுட்டார் போல..”
“அவங்க பேரு?”
“நீலவேணி..”
“ஐயாம் சாரி..”
“எதுக்கு இந்த சாரி..”
“இப்படி ஒரு அழகியை மனைவியா அடைஞ்ச ஒங்களுக்கு இப்படி ஒரு மரப்பாச்சி ரெண்டாவது மனைவியா வந்து வாய்ச்சதுக்கு..”
“இங்க பாரு பிருந்தா, அழகு நிலையானது இல்லை, நல்ல மனம் வேணும் அது உங்கிட்ட இருக்குமுன்னு நம்பறேன், அந்த நம்பிக்கையிலதான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நல்ல அன்பைச் செலுத்தி என்னோட மகளை வளர்க்கிறதுதான் உன்னோட தலையாய கடமை, அதை நீ செய்தா போதும்..”
“நிச்சயமாங்க, அக்கா எப்படி இறந்தாங்க?”
“மஞ்சள் காமாலை..” கூறிக் கொண்டிருக்கவே.. கார் போர்டிக்கோவில் நுழைந்தது, சுந்தரம் நாங்கைந்து பைகளுடன் உள்ளே நுழைந்தான்..
“என்ன சுந்தரம் எல்லாம் வாங்கிட்டியா?”
“ஆமாய்யா..”
“டின்னர் சூப்பரா இருக்கணும்..”
“அசத்திடுறேன்..”
“நான் எதாவது ஹெல்ப் பண்ணவா?”
“வேண்டாம்மா இன்னிக்கு நீங்க புதுப்பொண்ணு ஒரு வேலையும் செய்யக் கூடாது, நான் பார்த்துக்கறேன்” என்றவன் பைகளுடன் சமயலறைக்குள் புகுந்தான்.. சுவற்றில் தொங்கிய பிரம்மாண்ட எல் இடியை ஆன் செய்தார் மணிமாறன்..
“உனக்கு எந்த சீரியல் புடிக்கும்?”
“நான் சீரியல் பார்க்கிறதில்லைங்க..”
“இங்க பார்டா.. சீரியல் பார்க்காத பொம்பளையா அதிசயமா இருக்குது..” மணிமாறனின் இயல்பான பேச்சு அவளை வசீகரித்தது.. அலுவலகத்தில் பார்த்த அதிகாரி மணிமாறனாக இல்லாமல் வேறு ஒரு மனிதனாக இருந்தார் மணிமாறன்.. பார்ப்பதற்கும் வயதான தோற்றம் இன்னும் அவரிடம் வரவில்லை, தலைகொள்ளாத கேசம், நேர்த்தியான பல்வரிசை, அவரை நாற்பத்தைந்து வயதானவராக காட்டவே இல்லை, ஒரு இளைஞர் போலத்தான் தெரிந்தார் மணிமாறன்..
டிஸ்கவரி சேனலை வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தார்..
நேரம் மணி ஏழு டிரைவர் காரை எடுத்துக் கிளம்பினான் மணிமாறனின் மகளை ட்யூசனில் இருந்து அழைத்து வர. அதுவரை இயல்பாக இருந்த பிருந்தா சற்று பதட்டப்பட்டாள். ‘வரும் குழந்தை அவளை எப்படி நேரிடும்’ என்று.. திக்திக் நிமிடங்கள் நாற்பது கரைய போர்டிக்கோவில் கார் நின்றது.. கான்வெண்ட் யூனிபார்மில் கால் முளைத்த தேவதையாய் அந்த பதினொரு வயதுக் குழந்தை காரிலிருந்து இறங்கியது.. புத்தகக் கூடையை டிரைவர் எடுத்து வந்து அறைக்குள் வைத்துத் திரும்பினான்..
“வாங்க.. வாங்க ப்ரியாக்குட்டி வாங்க..”
என்று மகளை கட்டியணைத்து வரவேற்றார் மணிமாறன்.. சோபாவில் அமர்ந்திருக்கும் பிருந்தாவை ஓரக்கண்ணால் பார்த்தவள் தந்தையை விலக்கிக் கேட்டாள்..
“யாரு டாடி இது?”
இந்த தடாலடிக் கல்யாணம் பற்றி குழந்தையிடம் எதுவும் கூறியிருக்கவில்லை மணிமாறன்.. ஒருகணம் தடுமாறியவர் கூறினார்..
“உங்க மம்மி வானத்துக்குப் போயிட்டால்ல அதனால உன்னை கவனிச்சுக்க ஒரு மம்மி வேணுமில்லையா அதான் அப்பா இந்த மம்மியை அழைச்சுட்டு வந்திருக்கறேன்..”
ஒரு உக்கிரப் பார்வை பார்த்தவள் தந்தையைப் பார்த்து கேட்டாள்..
“அது எப்படிப்பா இது என்னோட மம்மி ஆகும்?, இது உங்க செகண்ட் வைஃப் அவ்வளவுதான்..”
பெரிய மனுஷி தோரணையில் பேசிய மகளை அதிர்ச்சி மாறாமல் பார்த்து சிலையாய் நின்றார் மணிமாறன்.. செய்வதறியாது நின்றாள் பிருந்தா!
(-தொடரும்…)
முந்தையபகுதி – 6 | அடுத்தபகுதி – 8