மரப்பாச்சி – 6 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 6
ரிஜிஸ்டர் அலுவலகம்..
மாசிலாமணி முன்னிலையில் மாலை மாற்றி சட்டப்படி திருமணம் முடித்துக் கொண்டனர் பிருந்தாவும், மணிமாறனும்.. கல்யாணம் என்றால் ஒரு பெண்ணின் மனமும், உடலும் எவ்வளவு பூரிப்படையும்.. ஆனால் இங்கே தகித்துக் கொண்டிருந்தது பிருந்தாவின் மனமும், உடலும், எப்படி மாலையும் கழுத்துமாய் தாய், தந்தை முன் நிற்பது? தங்கைகளைப் பற்றி கவலை இல்லை, அவர்கள் வழி திறந்தது என்று மகிழ்ச்சியடைவார்கள்.. தன் மூத்த மகளுக்கு, குடும்பத்தில் முதல் கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கவேண்டுமென்று கனவு கண்டிருப்பார்கள் அதையெல்லாம் சுக்கு நூறாக உடைத்துவிட்டு மாலையும், கழுத்துமாய் நிற்பதை எப்படி என் பெற்றோர் தாங்குவார்கள்?.. நினைவுச் சுழல் அவளை சுழற்றியது..
“பிருந்தா.. பிருந்தா..” மாசிலாமணி அழைக்கவும் கலைந்தவள் கேட்டாள்..
“என்ன சார்?”
“என்ன ஒரே யோசனை?”
“வீட்டை நெனைச்சுத்தான்..”
“எல்லாம் முடிவெடுத்து முடியவும் செய்தாச்சு.. இனி என்ன யோசனை.. கோயில்ல தாலிகட்ட எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்குது, நல்ல நேரம் முடியறதுக்குள்ள கோயிலுக்குப் போகணும் கிளம்புங்க..”
ரிஜிஸ்டர் மணிமாறனுக்கு கை கொடுத்து, “ஆல் தி பெஸ்ட்” கூறினார்..
அங்கிருந்து கிளம்பினர் கோயிலை நோக்கி. கடவுள் சாட்சியாய் பிருந்தாவின் கழுத்தில் தாலியை கட்டினார் மணிமாறன். அவருக்குள் ஒரு குற்ற உணர்வு சுழன்று கொண்டே இருந்தது, அது தன்னைவிட அதிக வயது குறைவான பொண்ணை திருமணம் செய்துவிட்டோமே என்று, இனி ஆகப் போவது ஒன்றும் இல்லை என்று அவர் மனம் அவரைத் தேற்றியது.. கோயிலில் அவர்கள் பெயரில் அன்னதானம் வழங்கப்பட்டது.. அன்னதானம் முடித்துவிட்டு மாசிலாமணியும், நண்பர்களும் ஒரு காரில், பிருந்தாவும், மணிமாறனும் ஒரு காரில் புறப்பட்டனர் பிருந்தாவின் இல்லம் நோக்கி..
வீட்டின் முன் கார் ஹாரன் சத்தம் கேட்கவும் வெளியே வந்தாள் அபிநயா.. ‘நம்ப வீட்டு முன்னாடி என்ன கார்?’ என்று அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காரின் பின் கதவு திறந்து மாலையும், கழுத்துமாய் இறங்கினாள் பிருந்தா.. அபிநயாவின் கண்கள் நிலைகுத்தியது.. அவளுக்குப் பின்னர் மாலையும், கழுத்துமாய் இறங்கினார் மணிமாறன், அபிநயாவின் அதிர்ச்சி இரட்டிப்பானது.. சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்தவள்.. “அம்மா.. அப்பா சீக்கிரம் வெளியே வாங்களேன்..” என்று உரக்கக் குரல் கொடுத்தாள்.
“ஏண்டி ரோட்டுல நின்னு கத்துற” என்றவாறே வெளியே வந்தாள் தமயந்தி. வீட்டின் முன் காரும், ஒரு ஜோடி மாலையும், கழுத்துமாய் நிற்பதைக் கண்டவள் மூளை ஒரு கணம் ஸ்தம்பித்தது.. இதில் மாலையும், கழுத்துமாய் ஒரு ஆடவனோடு நிற்பது நம் மகளல்லவா என்று உணர்ந்தவள்..
“அடிப்பாவி மகளே என்ன காரியம்டீ செய்துவிட்டு வந்து நிற்கற” என்று கூவியவள் அப்படியே நிலத்தில் சரிந்து அழ ஆரம்பித்தாள்.. இத்தகைய நிலமைதான் இருக்கும் என்று எதிர்பார்த்த மணிமாறன் எந்த அதிர்ச்சியையும் காட்டாமல் நின்றார்.. தாயின் அழுகை கேட்டு கார்த்திகாவும், அவள் தந்தையும் வெளியே வந்தனர்.. அவர்களும் அதிர்ச்சியில் விழுந்தனர் பிருந்தாவின் மணக்கோலம் கண்டு.. முதலில் சுதாகரித்தவர் பிருந்தாவின் தந்தை சங்கரன்.. நடந்து காரின் அருகில் வந்தவர் பிருந்தாவை வினவினார்..
“என்னம்மா இது.. வீட்டுக்குத் தெரியாம எங்ககிட்டச் சொல்லாம, என்ன வேஷம் இது?”
பிருந்தா மெல்லிய குரலில் கூறினாள்.. “இது வேஷம் இல்லைப்பா, நிஜம் இது என்னோட மேலதிகாரி மணிமாறன் சார்..”
அப்பொழுது கூட அவள் மனம் மணிமாறனை தன் கணவனாக ஒத்துக் கொள்ளாமல் தன் மேலதிகாரியாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தது..
“பார்த்திருக்கறேன்.. என்ன சார் இது?, எதோ விளையாட்டுப் பிள்ளைங்க மாதிரி நடந்துக்கிட்டிருக்கறீங்க, வயசுலயும் இவளைவிட பெரிய ஆளா இருக்கறீங்க, தாசில்தார்ங்கற பெரிய பதவி வேற, சமூகத்துல ஒரு பெரிய மனுஷன் பண்ணுற காரியமா இது?”
“அப்பா கூட்டம் கூடுது, நாங்க உள்ளே வரலாமா இல்லை இப்படியே போயிடவா? நல்லதோ, கெட்டதோ நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம், எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மனசிருந்தா, இல்லை இப்படியே போகச் சொல்லிடுங்கோ போயிடறோம், ரோட்டுல நிப்பாட்டி எங்கொயரி வேண்டாம்..”
‘தன் மகளா இப்படிப் பேசுகிறாள், அவரால் நம்பமுடியவில்லை, தாய், தந்தை மேல் கரிசனமானவள் அவள் ஒருத்திதான், அவளா இப்படிப் பேசுகிறாள்?’ அவரால் நம்ப முடியவில்லை. பிருந்தா கூறியது போல் அக்கம் பக்கத்தவர் கூட ஆரம்பித்தனர்.. நிலமை எல்லை மீறுவதைப் புரிந்தவர்,
“வாங்க வீட்டுக்குள்ளே” என்று கூறி வீட்டினுள் நடக்க ஆரம்பித்தார். தரையில் அமர்ந்திருந்த தமயந்தியும் எழுந்தாள். மணிமாறனும், பிருந்தாவும் வீட்டை நோக்கி நடந்தனர். இளையவள் கார்த்திகா தமைக்கையின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தாள், மணிமாறன் நின்று கொண்டிருந்தார்.. “சார் உக்காருங்க” என்றாள் கார்த்திகா. தயக்கமாய் சோபாவில் அமர்ந்தார் மணிமாறன்.. யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, நிலமை அங்கே இறுகிக் கிடந்தது.. மணிமாறன் குரலைச் செருகிக் கொண்டு பேசினார்,
“நிலமை இப்போ சரியில்லை, நாங்க எங்க வீட்டுக்குப் போறோம், உங்களுக்கு இது அதிர்ச்சியாத்தான் இருக்கும், இதுல இருந்து விடுபட உங்களுக்கு நாள் பிடிக்கும், அப்புறம் நாங்க வர்றோம், பிருந்தா எழுந்திரு நாம கிளம்புவோம்” என்றவர் கழுத்தில் கிடந்த மாலையைக் கழற்றி கையில் தொங்கவிட்டார். பிருந்தா புறப்பட எழுந்தாள்.. அவளை கைபிடித்துத் தடுத்த தமயந்தி தழுதழுத்தாள்..
“ஏண்டி இப்படிச் செய்த?”
“எனக்கு வேற வழி தெரியலைமா”
“இந்த அம்மா ஒனக்கு கல்யாணம் செஞ்சு வச்சுக்க மாட்டேன்னு முடிவே எடுத்துட்ட அதனாலதானே இந்த முடிவு?”
“இல்லைமா, என்னோட தங்கச்சிங்களுக்கு என்னை மாதிரி இல்லாம காலா காலத்துல கல்யாணம் நடக்கணும், அதுக்கு இனியும் நான் தடையா இருக்கக்கூடாது, அதுக்காகத்தான் இந்த அவசரக் கல்யாணம்..”
“அதுக்காக உன்னைவிட இத்தனை வயசு பெரிய ஆளையா?”
“என் வயசுக்காரன் எவனும் கட்டிக்கமாட்டேங்கிறாங்கன்னு தானேம்மா இந்த முடிவெடுத்திருக்கறேன்”
சங்கரன் கேட்டார், “ஏம்மா உங்க சாருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சுல்ல..”
“ஆமாப்பா கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருக்குது, ஆனா அவங்க சம்சாரம் இறந்து நாலு வருஷம் ஆகுது..”
அபிநயாவும், கார்த்திகாவும் அதிர்ச்சியில் பேச்செழாமல் நின்றனர்.. அங்கே நிலமை சரியாக நாள் பிடிக்கும் என்பதை மீண்டும் உணர்ந்தார் மணிமாறன்..
“நாங்க கிளம்புறோம், எங்களை மன்னிச்சு ஏத்துக்கறதா இருந்தா எங்க வீட்டுக்கு வாங்க” என்றவர் சோபாவிலிருந்து எழுந்தார்.. கூடவே பிருந்தாவும் எழுந்தாள்.. எழுந்தவள் தங்கைகள் அருகில் சென்றாள்.. அவர்கள் காதில் மெதுவாய் கிசுகிசுத்தாள்..
“இந்த மரப்பாச்சிக்கு வேற வழி தெரியலைடீ, சீக்கிரம் அக்கா உங்களுக்கு நல்ல மாப்பிள்ளைகளை பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு மணிமாறனுடன் கிளம்பினாள்..
“அக்கா” என்று கதறியபடி ஆரம்பித்தார்கள் அபிநயாவும், கார்த்திகாவும். அந்த ‘அக்கா’வில் முதல்முறையாக அன்பும், பாசமும் கலந்திருப்பதை உணர்ந்த பிருந்தா தன் புதுக் கணவனின் கைபிடித்து அவர் வீட்டிற்கு புறப்பட்டாள்…
(-தொடரும்…)
முந்தையபகுதி – 5 | அடுத்தபகுதி – 7