அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 11 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 11
மேடிட்டிருந்த வயிற்றோடு மெதுவாகவே சமையல் செய்து கொண்டிருந்தாள் அலமேலு. சின்னு வேறு எதனாலோ ‘நைநை ‘என்று படுத்திக் கொண்டிருந்தாள். மருதவள்ளியை வேற காணோம். அவள் இருந்திருந்தாலும் சின்னுவை சமாதானப்படுத்தி சமாளித்திருப்பாள். சற்றே உயரத்திலிருந்த சம்புடத்தை எட்டியெடுக்க கையை உயர்த்தினாள் அலமேலு. பின்புறமிருந்து இரண்டு வலியகரங்கள் அவள் இடையை பிடிக்க திடுக்கிட்டுத் துள்ளினாள்.
“அய்யோ.!அம்மா “
“ஹி..ஹி…நான்தாண்டி”
பலராமன் விகாரமாய் சிரித்துக் கொண்டிருந்தான்.
“தோ பாருடி! ரெண்டு தடவை தப்பிச்சுட்டே! இந்தத்தடவை முடியவே முடியாது. உன்னோட இருப்பானே அந்த செந்திலு அவன் ஊருலே இல்லைன்னு தெரியும். நீயா வந்தா அஞ்சு நிமிசத்துலே ரெண்டாம்பேர் அறியாம காரியம் முடிஞ்சுடும்.நான் பாட்டுக்குப் போயிட்டே இருப்பேன் முரண்டுனேன்னு வச்சிக்க ஸ்டேஷன்லே வச்சு நாசம் பண்ணிடுவேன். பேரை நாறடிச்சுடுவேன். உம்மேலே எனக்கு ரொம்ப நாளாவே ஆசடீ கண்ணு. “
“ச்சீ… இப்படி பேச வெட்கமாயில்லை. அதுவும் என் நிலைமையைப்பார்த்தும் இப்படி பேசுறே நீ மனுசன்தானா?”
“என்னடி? நிலைமை .?நல்லா கும்முன்னு தான் இருக்க .பெரிய பத்தினியாட்டம் பேசுறே! இந்த செந்திலுக்கு பொறந்ததா இது “
சின்னுவை காலால் எத்தினான்.
“வயித்திலேயிருக்கிறது மட்டும் செந்திலுக்குத்தான் சொந்தம்கிறது என்ன நிச்சயம். ரெண்டு பேருக்கு முந்தி விரிச்சவளுக்கு மூணாவதா எனக்கு விரிக்க எங்க வலிக்குது. வாடின்னா”
அவன் அலமேலுவின் கையைப்பிடித்து இழுக்க மேடைமேலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்தவள் ஆக்ரோஷமாய் அவனுடைய புறங்கையில் கீறினாள். புளிச் சென்ற ரத்தக் கோடு விழுந்தது பலராமன் கையில்.
மூர்க்கமானவன் அவன் தலைமுடியைக் கொத்தாகப்பிடித்து
“பொட்டை நாயே! உன்னை என்ன பண்றேன் பாருடி ! எங்கிட்டேயேவா”
“என்று ஓங்கி ஒரு அறை விட்டான். தரதரவென இழுத்துக் கொண்டு வந்து ஜீப்பில் ஏற்றினான். அலமேலு நிலைகுலைந்து போய் ஸ்மரணை தப்ப ஆரம்பித்திருந்தாள். சின்னு கதறிக் கொண்டிருந்தது. ஜீப் நகரவும் செவத்தைய்யாவும் மருதவள்ளியும் வரவும் சரியாக இருந்தது. இருவருமே திகிலுடன் போகிற ஜீப்பை வெறித்தனர்.
பின்பு உணர்வு பெற்றவளாய் மருதவள்ளி உள்ளே ஓடினாள். சின்னுவை தூக்கிக் கொண்டவள் அடுப்பை அணைத்தாள்.
“வள்ளி! என்னம்மாயிது. அய்யா கூட ஊருலே இல்லை. இந்தப்பாவி அம்மாவை இழுத்துட்டுப் போறானே என்னம்மா செய்றது”
“எனக்கும் ஒன்னும் புரியலையே சித்தப்பு “
செவத்தையா செந்திலுக்கு போன் போட போகவில்லை. இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு சின்னுவையும் தூக்கிக் கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பினர்.
மருதவள்ளிக்கு பாதி தூரம் வரும்போது தான் நினைவுக்கு வந்தது.
அன்றைக்கு….
பெண்கள்குழு ஒன்று வீடு வீடாய் வந்து தாய்ப்பால் பற்றி ஏதேதோ பேசுவதை கேட்டாள். தானம் என்றும். தாய்ப்பால் வங்கி என்றும் என்னவோ காதில் விழுந்தது. அலமேலு வீட்டுக்கு வந்த பெண் மிகவும் அன்பாகப் பேசியதோடு கூடத்திலிருந்த அலமேலு கல்யாண போட்டோவையும் யோசனையாகப் பார்த்தாள். கேட்டதற்கு ஜோடிப் பொருத்தம் ப்ரமாதம் என்றும் அழகாக இருப்பதாகவும் கூறிவிட்டு சின்னுவையும் கொஞ்சினாள். மருதவள்ளியிடம் தன்னுடைய போன் நம்பரைக் கொடுத்து என்ன உதவியென்றாலும் அழைக்கும் படி கூறிவிட்டு போனாள்.
மருதவள்ளிக்கு யோசனை உதித்தது. ‘அவரிடம் ஏன் உதவி கேட்கக் கூடாது? ‘ மருதவள்ளிக்கு பலராமனை நினைத்து பயமாக இருந்தது. அலமேலு இப்போது ஆறு மாத கர்ப்பிணி வேறு. அவன் அண்ணியை இழுத்துச் சென்ற விதமே சரியில்லை. முரட்டுத்தனமாக ஏதும் செய்து நடக்கக் கூடாதது எதுவும் நடந்து விட்டால்….?நினைக்கவே உடம்பு உதறியது.
பலராமனை நினைக்கையில் துண்டம்துண்டமாக நறுக்கிவிட வேண்டும் என்ற வெறி எழுந்தது.
‘ஏ! இன்ஸ்பெக்டரு! உன் சாவு என் கையிலதாண்டா! எழுதி வைச்சிக்கடா. இந்த காக்கிச் சட்டைதானே இத்தனை திமிரா நடக்க வைக்குது உன்னை. ‘என்று மனதில் அவனைத் தாளித்து வறுத்தெடுத்தாள். கொண்டாள். அவளின் கைகள் தாமாகவே அந்தப் பெண்ணின் நம்பரை அழுத்தின
********
மாவிலைத்தோரணம் வாசலில் வரவேற்க கூடமெங்கும் ஹோமப்புகை. பாட்டியின் விருப்பபப்படி வீட்டு மனுஷாள் வரை இப்போதைக்கு செய்து கொண்டு தீபா உடல்நிலை தேறியதுமே பெரிதாக ஊரையழைத்து செய்து கொள்ளலாம் என்றதும் தீபாவின் புகுந்த வீடும் ஒப்புக் கொண்டது. தீபாவுக்கு இன்னுமே உடம்பு படுத்தியது. நிலா
வந்த விருந்தினர்களை கவனித்தபடியே களைத்துப்போய் விட்டிருந்த தீபாவையும் பார்த்துக் கொண்டாள்.
கோயிலுக்கு வேறு பூஜை கொடுத்திருந்தது. இன்றே ஆம்புலன்சை ஹாஸ்பிடலுக்கு தருவதாக இருந்ததினால் மருத்துவமனை நிர்வாகமும் கோயிலுக்கே வந்திருந்தது.
நிலா தான் வீட்டிலிருப்பதாக சொல்லியும் மரகதம் இதற்கு காரணகர்த்தாவே நீதான் …நீயில்லாமல் எப்படி என்று கூறி அனுப்பி விட்டார்.கோயில் வாசலில் இரண்டு ஆம்புலன்சுகளும் நிற்க பூஜை போட்டு சக்கரங்களுக்கடியில் எலுமிச்சை வைத்து நகர்த்தினர். மருத்துவமனை மேலாளரிடம் வண்டி சம்பந்தபட்ட பேப்பர்களையும் வண்டிச் சாவிகளையும் கோயிலில் வைத்தே கொடுத்தனர்.
நந்தனும் நிலாவும் ஜோடியாக நின்று அனைத்து ஏற்பாடுகளையும் முடித்தனர்.கரும்பச்சை நிற ஷிபான் ஸாரியில் தங்கநிறப்பூக்கள் இறைந்திருக்க தங்க நிற மும் பச்சையும் கலந்த டபுள் நிறத்தில் ப்ளவுசும் பச்சைக்கல் ஜிமிக்கியும் இரு பச்சைகற்கள் வளையல்களுக்கிடையே கரும்பச்சை கண்ணாடி வளைகளும். பச்சைக்கல் கழுத்தணியும் நிலவழகியை பச்சைக்கிளியைப்போல காட்டியது. சிறு குங்குமத்தீற்றலுக்கு மேலே மெருன் நிற ஸ்டிக்கர் பொட்டு லேசான மைத் தீற்றல் அவ்வளவே. வகிட்டுக் குங்குமம் அவளை பேரழகியாய்க் காட்டியது. நெற்றி வியர்வை கூட அழகாய்த் தெரிந்தது நந்தனுக்கு.
பார்க்க பார்க்கத் திகட்டவில்லை அவனுக்கு.மனைவியை ரகசியமாய் உள்ளூரக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.. சொந்த ஊருக்குப் போயிருந்த செந்தில் இன்னும் வரக்காணோம்.
மதியம் சமைக்கவேண்டாமென முன்பே ஆர்டர் செய்தபடி உணவு வந்துவிடுமென ஆண்கள் கூறிவிட பெண்கள் ரிலாக்ஸ்ஸாகிவிட்டனர்.நந்தனும் அபய்யும் ஆபிஸ் வரை போய்விட்டு வந்து விடுவதாகக் கூறி கிளம்பிச் சென்றனர். கைப்பிள்ளைக்காரிக்கு மட்டும் சிம்பிளாக சமைத்து விட்டாள் பொன்னி.
தீபாவைப் பார்க்க போனாள் நிலா.இப்போதெல்லாம் குட்டிப்பயல் இவள் குரல் கேட்டால் போதும் துள்ளுகிறான். “ங்காங்கா” என்று கதைத்து காலை உதறுகிறான்.
அனைவரும் விச்ராந்தியாய் கதை பேசிக்கொண்டிருக்க …நிலவழகியின் போன் கிணுகிணுத்தது.
ஜீப்பிலிருந்து இறங்கியவன் கிறங்கிப் போய் கிடந்தவளின் முடியைப்பிடித்து இழுத்தபடியே வந்து ஸ்டேஷனுக்குள் தள்ள அலமேலு ஒரு சுழன்று சுழன்று தடுமாறி வயிற்றில் ஒரு கையும் சுவற்றில் ஒரு கையுமாய் நிலைகுலைந்து நின்றாள்.
” ஓய் 304! பிராத்தல் கேசுன்னு எழுதுய்யா. கையும் களவுமா பிடிச்ச என்னை ரத்த காயம் பண்ணிட்டாய்யா! ஏய் நீ போய் அந்த பர்ஸ்ட் எய்ட் பாக்ஸைக் கொண்டா “”
எழுத்தர் அலமேலுவையும் அவர் கோலத்தையும் கண்டவர் ‘இந்த நிலைமையிலே இந்தப்பொண்ணு பிராத்தல் பண்ணுதாம்மா? இவரு போயி பிடிச்சாராமா? இந்த ஆளுக்கு மறை கழண்டு போச்சா. திமிர் பிடிச்சு ஆடறானே ‘என்று எண்ணிக்கொண்டார்.அவர் 304 ஐ பார்த்து கண் கொட்ட …304 பலராமன் அருகில் போய்
“ஐயா! ஜூஸ் எதுவும் ஜில்லுன்னு வாங்கியாரட்டுமாய்யா? “
“ஆமாய்யா! வேணும். இன்னிக்குத்தான்யா உருப்படியா கேட்டுருக்க.நல்லதா மாதுளம் ஜூஸ் போட்டுக் கொண்டா ஐஸ் நிறைய போடச் சொல்லு “
புஸ்புஸ் ஸென்று மூச்சு விட்டான்.
‘இன்னிக்கு உங்கதையை நான் முடிச்சு வைக்கலை நான் பலராமன் இல்லடி. அந்த செந்திலும் அந்தப் பெரீரீரீய்ய்ய குடும்பத்துக்காரன்தானே! இன்னிக்கு அடக்கிறேன்டீ அவங்க திமிரை. ஊரே சிரிக்கும்படி செய்றேன் பாரு ‘ கறுவிக் கொண்டே அவளையே வன்மத்தோடு பார்த்தான்.
304 வேகமாக எதிர்சாரியிலிருந்த ஜுஸ் கடைக்கு ஓடினார். அவருக்கு அந்தப்பெண்ணைப்பார்த்தாலே பாவமாயிருந்தது.’ யார் பெத்த பொண்ணோ? இந்த ராட்சசன் கிட்டே மாட்டியிருக்குதே! ‘
அலமேலு முகமெல்லாம் வெளுத்து வியர்வை வழிய சுவரில் சாய்ந்தாற் போல நின்றாள். கால்கள் நடுங்கின. வயிறு பயத்தில் குழைந்தது.உட்கார்ந்தால் தேவலாம் போலிருந்தது. மயங்கி கீழே விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.
‘சின்னுவை வேறு விட்டுட்டு வந்திட்டோமே குழந்தை என்ன செய்றாளோ?’
என்ற கலக்கத்தில் அடிவயிற்றை புரட்டியது.
‘செவத்தையாவாவது வள்ளியாவது வந்திருப்பார்களா? இவர் ஊரிலிருந்து வந்து விட்டிருப்பாரா …நான் இப்படி போலிஸ் ஸ்டேஷன்ல கிடக்கிறதைப்பார்த்தா என்ன நினைப்பாரு? அன்னிக்கே அவர் கிட்டே இவனைப் பத்தி சொல்லியிருக்கனுமோ. தப்பு பண்ணிட்டேனோ? ‘
காலம் கடந்து முகிழ்த்த சிந்தனையில் அலமேலு உள்ளுக்குள்ளேயே மருகினாள். கண் செருகியது.
*********
“அக்கா…அக்கா…நான் மருதவள்ளி பேசறேனுங்க…”
“யாரு…எங்கேருந்து பேசுறீங்க?”
“அக்கா…மருதவள்ளி…மருதவள்ளி பேசுறேன். போனமாசம் எங்க ஊருக்கு வந்திருந்தீங்களே! உங்களோடு இன்னும் கொஞ்சம் பேருகூட வந்தீங்களேக்கா ..எங்க அண்ணி வீட்டுக்கு வந்து தாய்ப்பால் குழந்தைக்கு முக்கியம்னு பேசினிங்களே. சின்னுபாப்பாவுக்கு கூட சாக்லேட் குடுத்தீங்களே. எங்கண்ணன் அண்ணி போட்டோ பார்த்துட்டு அழகானஜோடின்னு சொன்னீங்க என்னைக்கூட ஏன் மேலே படிக்கலைன்னு கேட்டீங்க புறப்படுறப்போ எதுனா தேவைன்னா போன் பண்ணுன்னு நம்பர் கொடுத்தீங்களேக்கா.”
“ம் சொல்லு …. சொல்லு! ஞாபகம் வந்திடுச்சு.சின்னு அலமேலுஅம்மா எல்லோரும் நல்லாயிருக்கிறாங்களா”
“இல்லைக்கா நல்லாயில்லேஅண்ணிய போலிஸ் பிடிச்சுட்டு போயிருக்கு. அண்ணன் கூட ஊரிலேயில்லேக்கா. “
மருத வள்ளி வெடித்தாள்.
“என்னது”
மருதவள்ளி பேசபேச….. இங்கே நிலவழகி கோபத்தில் கொதித்தாள். விவரங்களை முடிந்தவரை கேட்டறிந்தவள் தான் உடனே வருவதாகக் கூறி போனை வைத்தாள்.சற்று நேரம்
ஆலோசனை செய்து விட்டு வேறு சிலருக்கும் போன் செய்தாள். கணவனையும் அழைத்தாள்.
“என்னங்க! “
“சொல்லுங்க”
“என்னங்க …நம்ம லாயர் ஒருவரைக் கூட்டிக்கிட்டு போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் நீங்க வரனும்ங்க. அந்த இன்ஸ்பெக்டர் பலராமன் ஒரு கர்ப்பிணியை இழுத்துட்டு போயிருக்கிறார்.அவங்க….அவங்க..”
“சொல்லு அழகி! நமக்கு வேண்டப்பட்டவங்களா? “
“நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க. நமக்கு முக்கியமான சொந்தமுங்க..”
“யாரது “
“நீங்க வாங்க சொல்றேன். பேச நேரமில்லைங்க. ஏதாவது பிரச்னையாகிட்டா நம்மளை நம்மாலேயே மன்னிச்சுக்க முடியாது
துண்டிக்கப்பட்ட போனை பார்த்தவன் ஒன்றும் புரியாமலே தோளைக் குலுக்கிக் கொண்டான்.
நிலா பாட்டியிடம் ஓடினாள்.கணவன் அவசரமாக அழைத்ததாகக் கூறி விடைபெற்றவள் வேகமாகக் கிளம்பினாள்.
அங்கே……
ஸ்டேஷன் முன்னால்……..
(-சஞ்சாரம் தொடரும்…)
முந்தையபகுதி – 10 | அடுத்தபகுதி – 12