அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 10 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 10 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் –1O

ஸ்பிட்டல் வீடு என்று ரன் அடித்து முடிந்து வழமையான வேலைகளுக்குள் வந்து விட்டாலும் வேலை நிமுத்தியது. தீபலஷ்மி குழந்தையுடன் இல்லம் வந்தாகி விட்டது.பத்திய சாப்பாடு குழந்தைக்கான தனி கவனிப்பு வருவோர் போவோர் உபசரிப்பு என்று நிலவழகி சுழன்று கொண்டிருந்தாள்.

சோபாவில் அமர்ந்து பேப்பரில் முகத்தை மறைத்தபடியே ரகசியமாய் மனைவியைத் தின்றுகொண்டிருந்தான் நந்தன் கண்களால்.

தாத்தாவும் மாமனாரும்  சேர்ந்தே வந்து உட்கார இருவருக்குமான காபியை கொண்டு வந்தாள் நிலா. அபய்யும் ஜாகிங் முடித்து  வர கணவனுக்கும் அபய்க்கும் க்ரின் டீ கொணர்ந்தாள்.

“நிலா! எனக்கும் காபி கொண்டா”

மஞ்சு குரல் கொடுத்தாள்.

ரங்கநாயகி இடை புகுந்தார்.

“ஏன் நீங்க போயி கலந்துக்க மாட்டீங்களோ! உன் புருஷனுக்கே அவதான் தர்ரா? வெட்கமாயில்லைஉனக்கு. காலையிலிருந்து அவளும் பம்பரமா சுத்திட்டு இருக்கா அவளைப்போல நீயும் இந்த வீட்டு மருமவ தானே! “

“பாட்டி! ஒரு காபிக்கு இத்தனை பேச்சா? அவளுக்கு இதெல்லாம் பழக்கம்”

“அவ ஒத்தைப் பொண்ணா ராஜகுமாரியா  வளர்ந்தவ. வாக்கப்பட்டு வந்த வீட்டுக்கு ஏத்தாப்போல வாழ்க்கையை அமைச்சுக்கிட்டு ஒத்துப்போறா”

“அதென்னமோ! உண்மைதான் ரங்க நாயகி. அன்னிக்கு பாரேன். ஒத்தையா நின்னு பெரிய வண்டியை ஓட்டிக்கிட்டு தைரியமா ஆஸ்பிட்டலில் சேர்த்து தாயும் பிள்ளையுமா ஆக்கிட்டா. இதுவரையும் உன் சின்னபேத்திக்கு காரோட்ட வரும்ங்கிற விசயமே தெரியாதே! நிறைகுடம் தளும்பாதுங்கறது நிசந்தேன்! “

“அப்பா! அது மட்டுமா? என் சின்ன மருமவ பல விசயம் பண்றா ஆதித்யாதான் சொன்னான்.

“உயிர்த்துளி”ன்னு அமைப்பு ஒன்னு ஏற்படுத்தி ரத்ததானத்துக்காக குழு ஏற்படுத்தி. ரத்ததான முகாமெல்லாம் வேற ஏற்பாடு செஞ்சிருக்குதாமே “

“ஆமாம்டா சீனி அது மட்டுமல்ல… அன்னிக்கு தீபா பிள்ளைக்கு தாய்ப்பால்தான் வேணும்னு அந்த நர்சம்மா கொணங்கிட்டு போச்சா …நானும் யாரெல்லாம் புள்ளைக்கு பால்குடுக்கிறவ இருக்கான்னு யோசிச்சிட்டே நிக்கேன். நிலா என்னடான்னா தாய்ப்பாலுக்கு ஏற்பாடு செஞ்சுட்டா. அப்புறம் தான்விசயமே தெரியும்.

“அமுத சுரபி”ன்னு ஒரு அமைப்புல தாய்பாலை சேகரிச்சு வைக்கிற வங்கியாம். ரத்த வங்கி மாதிரி தாய்ப்பால் தான வங்கியாம். அதுக்கும் இவதான் பொறுப்பாம்

நிறைய பால்குடி தாய்மார்கள்கிட்ட பேசி பால் சேகரிக்கிறதாமே. “

“ஒவ்வொருத்தரிடமா போயி பிச்சையெடுத்தாளாக்கும் “

மஞ்சு மெதுவாகவே முனகினாள்.

“என்னடி பேத்தியாளே! முனங்கறே சத்தமாவே சொல்லு “

“இல்லை…யாரோ…என்னவோ…தாய்ப்பாலை சேகரிச்சதோடு அதை நம்ம குழந்தைக்குமே குடுத்திட்டா….ப்ச்…நினைச்சாலே குமட்டுது. இதைவேற குடும்பமே சேர்ந்து மேடை போடாத குறையா கூட்டம் போட்டுட்டு…..ச்சே! “

“மஞ்சு…தாய்ப்பால் பத்தி ஏதாவது தெரியுமா?

நிலா ஒன்னும் இதை புதிசாவோ புதுமையாவோ செஞ்சுடலை. இது காலம் காலமா இருந்து வர பழைய பழக்கம் தான். அப்போல்லாம் கூட்டுக் குடும்பம். ஒரே சமயத்திலே ரெண்டு பேராவது ஒரு குடும்பத்திலே பிரசவிச்சிருப்பாங்க. ஒரு தாய்க்கு முடியாம போனாலோ ஏடாகூடாம நடக்கக்கூடாதது நடந்திட்டாளோ இன்னொருத்தி அந்த  சிசுவுக்கு பால் கொடுத்து பெறாத தாயாகிடுவா.

அதுவுமில்லே….ன்னா வேறயாராவது கூட தாய்ப்பால் தந்து பசியாத்துவாங்க. இன்னிக்கும் பல கிராமங்கள்ளே பழக்கத்திலேயிருக்குது. அதைத்தான் காலத்துக்கேத்தாப்போல மாடர்னா குழுன்னு ஏற்படுத்தியிருக்கா! புரியாம பேசாதே.தாய்ப்பாலை பழிக்கலாமா? அது பவித்திரமானதுடீ  “

கைத்தட்டலுடன் வந்து உட்கார்ந்தான் தீபாவின் கணவன் மணிமாறன்.

“வெல்செட் பாட்டிம்மா! சரியா சொன்னீங்க. ஆனா இந்த சின்ன வயசுலே நிலாவுக்கு இப்படி ஒரு ஐடியா வந்தது ஆச்சர்யம்தான். சொல்லும்மா “

“அச்சோ! அப்படியொன்னும் பெரிசா பண்ணலை நான் “

“இல்லே! இந்தத் தாட்…இந்த ஐடியா எப்படி வந்தது “

“காலேஜ் டைமில் ரத்ததான முகாம் நடத்த டாக்டர்ஸ் வருவாங்க. கருத்தரங்கம் விழிப்புணர்வு நாடகம் ல்லாம் நடக்கும் அப்போ ஃப்ரெண்ட்ஸ்லாம் சேர்ந்து “உயிர்த்துளி “ன்னு ஒரு  குழு ஏற்படுத்தி நிறைய பேர்  சேந்து பேரு ரத்தவகை போன் நம்பர் ன்னு ரெஜிஸ்டர் பண்ணோம். எமர்ஜென்ஸின்னு போன் வந்ததுமே ரத்தம் கொடுப்போம். அப்போதான் என் தோழியோட அக்காவுக்கு குறைப் பிரசவத்திலே குழந்தை பிறந்தது. அவங்களுக்குத் தொற்று காரணமா உடம்பு சரியில்லை. தாய்ப்பால் தர முடியலை. அப்போ அந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும்தான் சேரும்னு டாக்டர்ஸ் சொல்ல தாய்ப்பால் கிடைக்காம அவஸ்தை. பசும்பாலும் சேரலை. கடைசியிலே குழந்தையை காப்பாத்த முடியாம போச்சு. அதை என்னாலே தாங்கவே முடியலை. பத்து மாசம் கனவோடு சுமந்து பெத்த குழந்தை பசிதாங்காமே இறந்து போனது கொடுமையில்லையா… அப்போதான் டாக்டர்ஸ் கிட்டே பேசுனப்போ  …இப்படி தாய்ப்பால் வங்கியை அரசே உருவாக்கி நடத்துறதாகவும். நம்ம ஜனங்களிடம் விழிப்புணர்வில்லாததினால் இப்படி உயிரிழப்பு நடப்பதாகவும் சொன்னாங்க. பிறகுதான் “உயிர்த்துளி”யோடு சேர்த்து “அமுதசுரபி”யை உருவாக்கினோம். இதில் மருத்துவர்துணையோடு தாய் மார்களிடமிருந்து பெறும் பாலை நுண்கிருமியிருக்கிறதான்னு சோதனை செய்த பின்புதான் சேமிக்கிறோம்.நாங்க எல்லோருமே கொஞ்சம் கொஞ்சம் பணம் போட்டோம். எங்க முயற்சியைப்பார்த்து டவுன் பெரியாஸ்பத்திரி  டாக்டஸ் சிப்பந்திகள் எல்லோருமே சேர்ந்து பணம் போட்டு இதற்கான உபகரணங்களை வாங்கி  வங்கியை ஏற்படுத்தினோம். நாங்களும் நம்ம ஊரைச்சுத்தியும் டவுனைச் சுத்தியும் இருக்கிற ஊருகளுக்குப்போய் விழிப்புணர்வு முகாம் அமைத்து விசயத்தை சொல்றோம். நிறைய பேரு முன் வந்துகிட்டு இருக்கிறாங்க இப்போ “

நிலவழகி பேசி முடித்ததும் அமைதியே நிலவியது அங்கே.

ரங்கநாயகி எழுந்து வந்து நிலாவின் தலையை வருடி

 “நல்லாயிருப்பேடி கண்ணு”

 என்று சொல்லி கன்னம் வழித்தார். நந்தன் மட்டுமல்ல எல்லோருமே பிரமிப்பின் வசம் இருந்தனர்.

“ஒரு சின்னவயசுப் பெண்ணின் சாதனை வாயைப்பிளக்க வைத்தது. அவளுடைய விசுவரூபம் திகைக்க வைத்தது.

“நிலா! என் பையன் பிறந்த விசேஷமா ஏதாவது உனக்கு செய்யனும்னு ஆசைப்படுறேன். சொல்லும்மா? உனக்கு என்ன வேணும்? “

‘க்கூம் பாருடா! எல்லாரையும் விட்டுட்டு இவளுக்கு மட்டும் பரிசு தரானாமில்லே. இவ பலே வசியக்காரி மொத்த வீட்டையுமே முந்தியிலே முடிஞ்சு வச்சுருக்காளே ‘

“அச்சோ எனக்கெதுக்கு பரிசெல்லாம். இது நம்ம குடும்ப வாரிசு.நீங்க கொடுக்கனும்மின்னா தீபாவுக்குத்தான் தரனும்”

“ப்ச்! அது வேற! நீ கேளு…உனக்கு என்ன வேனும்னு. இது இந்த அண்ணனோட பரிசு. “

அவள் நந்தனைப்பார்த்தாள். அவன் லேசாய் தலையசைக்க

“நான் எது கேட்டாலும் தருவீங்களா? “

‘பாருடா பூனைக்குட்டி வெளியே வருது. என்ன கேட்பா …வைர வளைவியா? நெக்லேஸா? ‘மஞ்சு குறுகுறுவெனப் பார்த்தாள்.

“கண்டிப்பா “

“ம்…இல்லை அது வந்து…நம்ம ஊர் ஆஸ்பத்திரிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கித்தாங்களேன். “

“என்ன? “

எல்லோருமே இந்த பதிலில் திகைத்துப் போக மஞ்சுளாவோ ‘அடக் கிறுக்கச்சீ’என்பது போல பார்த்தாள்.

இவர்கள் அனைவரின் பார்வையையும் பார்த்தவள் தயக்கத்தோடு…

” தாத்தா! … அது வந்து அன்னிக்கு ஆம்புலன்ஸ் ரிப்பேர்ன்னு சொல்லிட்டாங்க. நம்மகிட்டே கார் இருந்தது தீபாவை கூட்டிட்டு போயிட்டோம். ஆனா வசதியில்லாதவங்க என்ன செய்வாங்க அதான் ….நம்ம பிள்ளை பேரு சொல்லி ஆம்புலன்ஸ் ஓடினா…..”

தாத்தாவும் ரங்கநாயகியும் அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டனர்.

“ரொம்ப பெரிய மனசும்மா உனக்கு”

அபய் தம்பியைக் கட்டிக் கொண்டான்.

தாத்தா மகன் ஸ்ரீநிவாசனைப்பார்க்க

“நிலா! மாப்பிள்ளை தருவது மட்டுமல்ல நாமும் இன்னொரு ஆம்புலன்ஸை தந்திடுவோம்.பேரன் பேரூ சொல்லட்டும்..அது மட்டுமில்லேம்மா. நம்ம மில்லு வருமானத்துலே இருபது பெர்சென்ட் அமுதசுரபிக்கும் உயிர்த்துளிக்கும் ஒதுக்கிடுறேன். தேவைப்பட்டதை அதுலயிருந்து செலவு பண்ணுங்க நாளைக்கே அபய் இது பத்தின விவரத்தை சட்டபூர்வமா செய்வான்.”

“ரொம்ப தேங்க்ஸ் மாமா! “

என்றவளை காதலுடன் ஒரு ஜோடி விழிகள் விழுங்கின.

உள்ளறையில் படுத்திருந்த தீபாவும் வியப்புடன் ஹாலில் நடந்த பேச்சு வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டுதானிருந்தாள்.

அன்றைய தினம்……

ஆபரேஷன் முடிந்தும் இவளின் உடல்நிலை போக்கு காட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரம் அவளால் அமுதூட்ட முடியாத நிலை. மயக்கம் முற்றும் தெளியாவில்லை.

அப்போதுதான் நர்ஸ் ஒருவர் இவர்களிடம் வந்து தாய்ப்பால் வேண்டும் என்று சொல்லிவிட்டு போனார்.

“இதென்னடா இது? இந்த நர்சம்மா வந்து உங்க சின்ன பேத்தி எங்கே.?அவங்ககிட்டே சொல்லுங்க. தாய்ப்பால் கிடைக்குங்கிறா. பொசக் கெட்டவ”

“உங்க சின்னப்பேத்திக்கு தாய்ப்பால் விக்கிற இடம் தெரியுமோ என்னவோ? “

“இவ அதுக்கு மேல பொசக் கெட்டவளாயிருக்காளே ‘!ஏண்டி மஞ்சு தாய்ப்பாலை விக்க முடியுமா? அது என்ன ஆவின் பாலா ஆட்டுப்பாலா?”

ரங்கநாயகி சலித்துக் கொண்டார்.

மனைவியைப் பார்த்தான் நந்தன். சற்றே ஒதுங்கி நின்று போன் பேசிக் கொண்டிருந்தாள் நிலவழகி.

நந்தன் தாயிடம் கூறிவிட்டு அருகிலிருந்த செவிலியோடு ரத்தம் தருவதற்காக சென்றான்..

இன்னும் ஆபரேஷன் முடியவில்லை அதற்குள் குடும்பமே குழுமி விட்டது. மணிமாறனும் வந்து விட்டிருந்தான். அபய் அருகிருந்து தைரியம் சொல்லிக் கொண்டிருந்தான்.

மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே உலகை எட்டிப்பார்க்க அவசரப்பட்ட தீபலஷ்மியின் செல்வனை ஜஸ்ட் கண்ணில் மட்டுமே காட்டிவிட்டு தனியே சிறப்பு கண்காணிப்பிற்காக தனியறைக்கு கொண்டு போய் விட்டனர்.

செவிலியோ தாய்ப்பால் கிடைத்ததா என்று நச்சரிக்க ரங்க நாயகியும் மரகதமும் யாராவது சமீபத்தில் தங்களுக்கு வேண்டியவர்கள் வட்டத்தில் பிரசவித்து பால்கொடுக்கிற தாய்மார்களை யோசித்து வலை வீசி அலுத்துப்போக …ஆதித்யாவின் பின்னால் அமர்ந்து வந்தாள் ஒரு பெண்மணி.

“நிலாக்கா!”

“ஏ…மீரா வந்திட்டியா”

“வராமலிருப்பேனாக்கா”

“வா! வா!நர்ஸ்ம்மா தேடிட்டே இருந்தாங்க “

நிலவழகி அவளை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.எதிரே வந்த நர்ஸ்

“வந்திட்டியா மீரா!வா! வா பேபி தொண்டை காய்ஞ்சி போய் கிடக்கு கொடு அதை நார்மல் ஹீட்டுக்கு வேற கொண்டு வரணும் “.”

ரங்கநாயகி ஆதியிடம் கேட்டார்.

“என்னடா நடக்குது!? நர்சம்மா என்னவோ சொல்லிட்டே ஓடுது.”

“அவங்க தாய்ப்பால் கொண்டு வந்திருக்காங்க பாட்டி. அண்ணிக்குத் தெரிஞ்சவங்க!”

“பாலை கொண்டாந்திருக்காளா? இவ பாலூட்ட வரலியா? என்னடா குழப்புறே! “

“அது….வந்து பாட்டி! நீங்க அண்ணிகிட்டேயே கேளுங்க “

“தேங்க் யூ மீரா! கரெக்ட் டைமுக்கு வந்திட்டீங்க “

“ஏ நிலா? என்ன இந்த ஆதிப்பய உளறுறான். தாய்ப்பால் கொண்டு வந்தாங்கிறா? யாரிவ? இவளைப்பார்த்தா நம்ம ஆளுங்கமாதிரியில்லயே இவளா பால்குடுத்தா.?  நம்ம கௌரவம் என்னாகிறது? யோசிக்கவே மாட்டியா? “

மஞ்சு படபடவென பொறிந்தாள்.

மஞ்சுவின் குரலில் சங்கடப்பட்டவள்

“ஸாரி மீரா! தப்பா நினைக்காதீங்க. இதைப்பத்தியெல்லாம் அவங்களுக்கு ஒன்னுமே தெரியாது. “

“பரவாயில்லை நிலாக்கா! நாம பார்க்காதவங்களா. விடுங்கக்கா. நான் கிளம்பறேன். அபுறமா  போன் பண்ணுங்கக்கா”

என்று போய் விட்டாள்.

தீபாவுக்கு இதையெல்லாம் பாட்டி சொல்ல நிலாவின் மீது பேரன்பும் மரியாதையும் பெருகியது.

இப்போது ஆம்புலன்ஸை பரிசாகக் கேட்க மதிப்பு கூடியது.

குழந்தைக்கு புண்யாஜனம் செய்யும் போது ஆம்புலன்ஸை வழங்கி விடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டனர்.

புண்யாஜன நாளும் வந்தது. கூடவே விதியும் போன் கால் வழியே சிரித்தது.

(-சஞ்சாரம் தொடரும்…)

முந்தையபகுதி – 09 | அடுத்தபகுதி – 11

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...