தனது ரசிகர்களுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் இலவச திருமண மண்டபம் ஒன்று கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே சூர்யா ஆகியோர் நடித்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யா என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கார்த்திக சுப்பராஜ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நவீன் சந்திரா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.

இந்த விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், இந்த படம் எனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. என் உள்மனம் சொன்ன மாதிரி இந்தப் படத்தின் நாயகன் கார்த்திக் சுப்பராஜ் தான். இந்தப் படத்துக்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய உள்ளது அது தான் இந்த படத்தின் வெற்றி.
ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பேன் அந்த வகையில், என் அம்மாவின் பெயரில் கண்மணி திருமண மண்டபம் ஒன்று கட்ட உள்ளேன். அதில்,என் ரசிகர்கள் இலவசமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். என் ரசிகர் ஒருவர் திருமண பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்திற்கு அழைத்தார். அப்போது எங்கே கல்யாணம் என்று கேட்டேன். அதற்கு அவர், திருமண மண்டபத்தில் கல்யாணம் வைக்கும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை இதனால், வீட்டிலேயே கல்யாணம் வைத்து இருக்கிறேன் என்று சோகமாக சொன்னார்.
அன்று தான் எனக்கு இலவச திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதற்கான இடத்தை பார்த்துவிட்டேன் விரைவில் இலவச திருமண மண்டபம் கட்டப்படும். தெய்வத்தை தேடி பக்தன் தான் வரவேண்டும். அதே போல, என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கும் தெய்வத்தை தேடி நான் எப்போதும் வருவேன் என்றார்.
