அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 13 | செல்லம் ஜெரினா
அத்தியாயம்-13
செந்திலின் தோப்பு வீட்டுக்குத்தான் வண்டியை செலுத்தினான் நந்தன்.உள்ளே வந்ததும் அலமேலுவுக்கு மாற்றுத்துணி கொடுத்து குளித்து விட்டு வரச் சொன்னாள். மருதவள்ளி சின்னுவை கிணற்றடியிலேயே உடம்பு துடைத்து விட்டு பவுடர் போட்டு சட்டை மாற்றினாள். அதற்குள்ளாக நந்தன் போனில் சொன்னபடியே ஆதி உணவோடு வந்திருந்தான். வாங்கிக் கொண்ட நிலா ஆதியை உடனே அனுப்பி விட்டாள். சாப்பாடு பறிமாறி அனைவரும் உண்டபின்பு ஓர் அறையில் மூவருமே படுக்கச் சென்றனர். நந்தனுக்கு மனசே ஆறவில்லை.கணவனின் மனசு புரிந்தவளாய் ஒரு தட்டில் அன்னமிட்டு குழம்புடன் பிசைந்து ஊட்டி விடத் துவங்கினாள்.தான் சாப்பிடாவிட்டால் அவளுமே சாப்பிடமாட்டாள் என்று உணர்ந்தவன் அவளையும் சாப்பிடவைத்து உண்டு முடித்தான்.
இருவருக்குமே பேச வேண்டிய விஷயங்களிருக்க இருவருமே கதவை வெறுமனே சாத்தி வைத்து விட்டு மாமரத்து நிழல் மேடைக்கு சென்றனர். மாந்துளிர் வாசனையோடு காற்று இதமாய்த் தீண்டியது. மனைவியின் மடியில் தலை வைத்து படுத்தவனின் சிகையை கோதியது அவளின் விரல்கள்.
“மாமா இப்படியோர் காரியம் பண்ணுவார்னு நினைக்கவேயில்லை நிலா…நீயும் மறைச்சிட்டேயில்லே “
“அய்யோ! இல்லைங்க! எனக்கு போனமாசந்தான் தெரியும் அமுதசுரபி’ கேம்புக்கு போனபோது தற்செயலாக அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன். கூடத்திலே நீங்க பார்த்த அதே போட்டோ …திகைச்சுப் போயிட்டேன். எனக்கிருந்த குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் இதைப்பத்தி யாரிட்டையும் பேச முடியலை. சித்தப்பாகிட்டேயும் கேட்க சங்கோஜமாயிருந்தது. ஆனா… இன்னிக்கு இப்படியாகிட்டுது. “
“அம்மாரொம்ப வருத்தப்படுவாங்க. மாமா கல்யாணம் பத்தி ஆசையாயிருந்தாங்க. மாமா பிடி கொடுக்கவேயில்லை. இப்போ குழந்தைகூட பிறந்து அடுத்ததும் ரெடின்னு கேள்விபட்டா அம்மா என்ன நினைப்பாங்க “
“சித்தப்பா வேணும்னு செஞ்சிருக்க மாட்டாருங்க. அவர் எந்த சூழ்நிலையிலே இதை செய்தாரோ. அத்தை மேலே சித்தப்பாவுக்கு ரொம்பவே ப்ரியமும் மரியாதையும் உண்டே! “
“அதுவுமே சரிதான். ஆனா …..நம்ம வீடு இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கிடுமோ? “
கணவனும் மனைவியும் இன்னும் பலதும் பேசிக்கொண்டிருக்க புல்லட் சத்தம் கேட்டது.
“சித்தப்பா தான்”
“மாமாதான் வர்ரார் “
வந்தது செந்தில்தான் ஆனால் அவருடைய பார்வை எதிலுமேயில்லை. செலுத்தப்பட்ட அம்பு போல வெகுவேகமாக வீட்டுக்குள்ளே ஓடினார். முதல் அறையைத் திறந்து பார்த்த போது சின்னுவும் மருதவள்ளியும் தூங்கிக் கொண்டிருக்க சின்னுவை வாஞ்சையோடு பார்த்து கண்ணில் நிரப்பி நெஞ்சுக்குள் நிறைத்துக் கொண்டார். சப்தமிடாது அடுத்த அறையை பார்க்க உள்ளே கட்டிலின் மீது உட்கார்ந்து சுவற்றின் மீது சாய்ந்தபடி எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த மனைவியைக் கண்டதும் மனமே விண்டு போனது செந்திலுக்கு.
“அம்முலு” என்று பாய்ந்து வர கணவனின் குரலில் தூக்கி வாரிப் போடத் துள்ளித் திரும்பினாள்.
“மச்சான்! நா…நா…வந்து என்னை போலிஸ் வந்து “
அவள் திணற லேசாய் அணைத்துக்கொண்டு முதுகை வருடினார்.
“ஷ்! அம்முலு. டென்ஷன் ஆகாதே! “
“இல்லே மச்சான்! நா வந்து “
“உனக்கு ஒன்னும் ஆகலையே! ஏடாகூடமா நடந்…”
அவர் வாயைப் பொத்தியவள்
“இல்லேயில்லே! அதுக்குள்ளே அந்தப்பொண்ணும் அவங்க வீட்டுக்காரரும் வந்திட்டாங்க. ரத்ததானம் தாய்ப்பால்தானம் கண்தானம்னு எல்லாம் ஒரு சின்னப்பொண்ணு நம்ம வீட்டுக்கே வந்து பேசிட்டு போச்சுன்னு சொன்னேனில்லே அவங்கதான் வந்து அந்தப்பாவி கிட்டேயயிருந்து வழக்காடி மீட்டுகிட்டு வந்தாங்க…இல்லேன்னா இந்நேரம் நான் நாண்டுகிட்டிருந்திருப்பேன். “
“ஏய் என்ன பேச்சு இதெல்லாம்? “
“சாப்பிட்டியா “
“சாப்புட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா”
“பொய் பேசாதீங்க! வாங்க சாப்பாடு இருக்குதான்னு பார்க்கிறேன். அந்தத் தம்பிதான் சாப்பாடு வரவழைச்சுது. “
“நீ எடுத்து வை வரேன். அந்தத் தம்பி யாருன்னை சொல்லலையா? “
“எனக்கு கிறக்கமாருந்ததுங்க. பிரமை பிடிச்சாப்பலேருந்தது. எதுவுமே கேட்டுக்கலை. மருதா தான் சொன்னா அவதான் போன் போட்டு அந்தப் பொண்ணை வரவழைச்சாளாம்.”
“சரி சரி …நம்ம சொந்தம்தான். நீ ரெஸ்ட் எடு முதல்லே. பொறவு விவவரமா சொல்றேன்”
ஊரிலிருந்து நேரே மனைவியைப்பார்க்கத்தான் வீட்டுக்கு வந்தார். செவத்தையா நடந்ததை சொன்னதோடு ‘சின்ன மருமகப்புள்ளே நந்தன் ஐயாவும் அவர் சம்சாரமும் வந்து அழைத்துப்போனதாக சொன்னார். செந்திலே யோசித்து நந்தன் பெரிய வீட்டுக் கு போயிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் தோப்பு வீட்டுக்கு வந்தார்.
இப்போது மகளையும் மருமகனையும் எதிர்கொள்ள சங்கடமாயிருந்தது.
“மாமா ” என்று செந்திலின் வயிற்றின் மீது முகத்தை வைத்துக் கட்டிக் கொண்டான் நந்தன் ஆதரவு தேடும் சிறுவனைப்போல.
“மாப்பிள்ளே! மாப்பிள்ளே”
“மாமா! மாமா! “
“மன்னிச்சுக்கடா மாப்பிள்ளே! எல்லாமே அதுவா நடந்துருச்சுடா “
“அம்மா வை நினைச்சா பயமாயிருக்கு “
“ஆமாம்டா “
“நாங்க முதலில் போய் இதுபத்தி பேசட்டுமா? இல்லேன்னா இங்கே அழைச்சிட்டு வந்திடவா? நீ பேசுறியா “
“ச்சேசே! அது இன்னும் தப்புடா. நாந்தான் அக்காவையும் அத்தானையும் பார்த்து பேசி காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்கனும். போகலாம் வா”
“சித்தப்பா! சாப்பிட்டு வாங்க பிறகு போகலாம். “
செந்தில் சங்கடத்துடன் தலையாட்டி விட்டு நகர்ந்தான்.
விழாவுக்கு வந்திருந்தவர்கள் கிளம்பிப் போயிருக்க வீட்டு மனுஷாள் மட்டுமே. நந்தன் கண்களை மூடியபடி சோபாவில் அமர்ந்து விட்டான். நிலா சுவரோரமாய் சாய்ந்து தரையில் உட்கார்ந்தாள். உடலும் மனதும் அலண்டு போய் கிடந்தது. திகில் தீ வாசமாய் புகைந்தது.
செந்தில் சொன்ன விஷயத்தில் அதிர்ந்து போயினர் தம்பதியர்.எதிர்பாராமல் தாக்கிய சுனாமியாயிருந்தது செய்தி. கரகரவென கண்ணீர் வழிந்தது.
“என்னங்க இது? இவன் இப்படி என்னவோ சொல்றான் “
“எனக்கும்தான் நம்ப முடியலை. வேற யாரோ சொன்னா நம்பாமலிருக்கலாம்.. ஆனா நம்ம பிள்ளையே சொல்றானே “
“ஏண்டா! உன் இஷ்டத்தை மீறி நடப்பேனா? ஏண்டா இப்படி “
“என்னை மன்னிச்சுடுக்கா வேனும் னு செய்யலை. அப்படி அமைஞ்சுடுச்சு “
“இவ்ளோ நாள் மறைச்சவன் இப்போ ஏண்டா வந்து சொல்றே”
“முடியலைக்கா. பாரமாயிருக்கு உண்மையை சொல்லாம நெஞ்சு வெடிச்சு செத்துடுவேனோன்னு தோனுது “
“செந்திலு என்னடா பேச்சு இது “
“சரி! போனது போகட்டும் .பிள்ளைகளை கூட்டி வா”
“அத்தான்! இன்னும் சிலவிசயம் சொல்லனும். பின்னாலே தெரிய வந்து மனசு கஷ்டப்படக்கூடாது. அதோடு இந்தக் கல்யாணம் நடந்த விதமும் நீங்க ரெண்டு பேர் மட்டும் கண்டிப்பா தெரிஞ்சுக்கனும். உங்க ரெண்டு பேர்கிட்டேயும் எதையும் மறைக்க நான் விரும்பலை.”
செந்தில் தான் அலமேலுவை சந்தித்ததிலிருந்து விவரித்தார். பெரியவர்களிருவருமே பேசத் திராணியின்றி அமர்ந்திருந்தனர். தம்பியின் நல்ல மனசு அவன் விசுவரூபத்தைக் காட்டியது. அதே சமயம் இது வெளியே தெரிந்தால் ஏற்படப்போகும் அனர்த்தங்களை எண்ணி கலங்கியது.
“இது விஷயம் இன்னும் வேறு யாருக்கும் தெரியுமா செந்தில்? “
“இல்லத்தான். காந்தி டாக்டர் மட்டும் தான் எங்களை அறிந்தவர். அவரும் அவருடைய வீட்டை சின்னு பேருல எழுதிவச்சிட்டு இறந்து போயிட்டார். நானும் அந்த ஊரை விட்டு தள்ளி வந்திட்டேன். ஆனா. பலராமனுக்கு சந்தேகமிருக்குமோ என்னவோ… சின்னுவைப் பத்தி தெரிஞ்சுகிட்டுதான் அலமேலுவை இப்படி படுத்துறானோன்னு டவுட் இருக்கு. ஆனா அவனுக்குமே உறுதியாத் தெரியுமான்னு தெரியாது.
“சரி சரி! விடு நாம பார்த்துக்கிடலாம். இனிமே இது பத்தி யாரிடமுமே பேச வேண்டாம். “
“அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடலாமாங்க. வாயும் வயிறுமா தனியா தோப்பு வீட்டுலே என்னத்தை பண்ணுவா
அது மட்டுமில்லே! நாம அவளுக்கு முறை செய்யனும். என் தம்பி கல்யாணத்தைத்தான் பார்க்க முடியாம போச்சு இப்போ எத்தனை மாசம் மின்னு கேட்டு வளைகாப்பு வச்சு வீட்டுக்கு அழைச்சுக்கிடலாம். ஊருக்குமே கல்யாணத்தை தெரிவிச்சுட்டா மாதிரி இருக்கும். அதே சமயம் சின்னுவுக்கும் குலதெய்வம் கோயிலில் முடியிறக்கி காது குத்தி விருந்து போட்டு ஊரை அழைக்கலாம். “
“ஆமாம்டா செந்திலு! மனைவி மக்களையும் ஊருமுன்னாலே காட்டிட்டா அப்புறம் எவனாலும் எதுவும் செய்ய முடியாது. “
“சரி! ரெண்டு பேரும் கிளம்பி வரோம். இன்னிக்கு அங்கேயிருக்கட்டும். நீயும் ஊரு சுத்தப் போகாம வீட்டோடு இரு. புது இடம் பயப்படுவா. நான் ஜோசியர்கிட்டே நாள் குறிச்சு கேட்டுட்டு மேற்கொண்டு செய்யலாம். “
மரகதம் சொல்லியபடியே அடுத்து நடக்க வேண்டியதை மடமடவென்று செய்தாள் தன் மாமனாரிடமும் மாமியாரிடமும் செந்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டு தனக்கு பயந்து மறைத்து விட்டதாகவும் சொன்னாள். ரங்கநாயகி முதலில் முனகினாலும் குழந்தையுண்டாகியிருக்கிறாள் மீண்டும் என்று தெரிந்ததுமே திட்டினர். முதல் குழந்தை உண்டானதுமே சொல்லாததற்கும் சாடினார். அபய் கலாட்டா செய்ய நந்தனும் இணைந்து கொண்டான். எல்லோருமாய் போய் அலமேலுவை தோப்பு வீட்டில் பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட வீடே களிப்பில் இருந்தது. மஞ்சுவைத் தவிர.
முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அலமேலுவையும் சின்னுவையும் ஒதுக்கி வைத்தவளை குடும்பமே சட்டை செய்யவில்லை.
ஜோசியர் குறித்துத் தந்த நாளில் அவர் சொன்னபடியே குலதெய்வம் கோயிலில் வைத்து வளைகாப்பையும் காதுகுத்தலையும் ஒரு சேர வைத்துக் கொள்ள. ஏற்பாடு நடந்தது. ஊரே விருந்து கொண்டாட்டமாய் கோயில் திடலில் கூடியிருந்தது.
சிலர் ஏற்றுக் கொண்டாலும் சிலர் தூற்றினார்கள். சிலர் செந்திலை * கில்லாடிய்யா நீ” என்று கேலி செய்தார்கள்.
செந்திலுக்கு நிம்மதியாயும் சந்தோஷமாயுஇருந்தது.
அக்காவும் அத்தானும் இத்தனை துரிதமாகத் தன் செயலை ஏற்று மன்னித்து விடுவார்கள் என்று எண்ணவேயில்லை. இன்னும் அக்கா அத்தான் மீது பிடித்தம் அதிகமாயிற்று.
சின்னுவும் பட்டுப்பாவாடையில் இத்தனை உறவுகளுக்கிடையே சுற்றி சுற்றி வந்து சிரித்தாள். அவளுக்குமே புதுமையாக இருந்தது எல்லாம். மருதவள்ளியும் செவத்தையாவும் கூட புது உடையுடன் மிடுக்காக வலம் வந்தனர். மருதவள்ளி சின்னுவுக்காக இங்கேயே வந்து விட்டாள்.
முதலில் காதுகுத்து விழா முடிந்தது. சின்னுவின் அழுகை ஓய்ந்து முடிந்ததுமே அலமேலுவை உட்காரவைத்து ரங்க நாயகியே முதலில் நலங்கு வைத்து காப்பு இட்டார் பிறகே அனைவரும் வந்து வளையிட செந்தில் மனைவிக்கு கைக்கு ஆறு தங்கவளையல்களை பூட்டினான். அலமேலு இயற்கையிலேயே அழகி. இப்போது அகமும் குளிர்ந்து மலர்ந்திருக்க தாய்மையின் பொலிவும் சேர தகதகத்தாள்.
மஞ்சுவுக்கு முகம் கறுத்தது யார்வீட்டு பணத்தை யார் செலவு செய்வது.? குமுறினாள். மனதுக்குள் பொறாமையும் கோபமும் கொழுந்து விட்டெரிந்தது. குமுறிக் கொந்தளித்தவள் ஊர் கூடி நின்ற சபையில் வார்த்தைகளை கோபத்தோடு சிதற விட்டாள்.
விபரிதம் வெடித்தது
(-சஞ்சாரம் தொடரும்…)
முந்தையபகுதி -12 |அடுத்தபகுதி – 14