என்…அவர்., என்னவர் – 7 |வேதாகோபாலன்

 என்…அவர்., என்னவர் – 7 |வேதாகோபாலன்

அத்தியாயம் – 7

அத்தியாயத் தலைப்பு : என் பார்வையில் பாமா கோபாலன்

தலைப்பு உபயம் : உஷா கோபால்

றுவாரம் பாமாகோபாலன் வந்தபோது அந்த வேண்டுகோளை என் அம்மாவின் முன் வைத்தார்… என்று சொன்னேன் அல்லவா?

இதைப் படித்துவிட்டுப் பலரும் ஒரே கேள்வியைப் பல டிசைன்களில் கேட்டார்கள்.

“என்ன உங்களைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்” என்று கேட்டாரா?

“உங்களைப் பெண் கேட்டாரா?”

உங்களை மணக்க விரும்பினாரா?

இல்லை ஃப்ரெண்ட்ஸ்.  அப்படி எதுவும் கேட்கவில்லை…

     “இலக்கியச் சிந்தனை மீட்டிங்ஸ் பத்தி நான் போன வாரம் சொன்னேன் இல்லையா அம்மா..?” (அவர் எப்போதுமே என் அம்மாவை அம்மா என்று அழைப்பதுதான் வழக்கம்.)

     ஏற்கனவே இலக்கியச் சிந்தனை அமைப்பு பற்றி எங்கள் குடும்பத்தாரிடம்  சொல்லியிருக்கிறார்.

திருவாளர்கள் பாரதி, லட்சுமணன், ப.சிதம்பரம் என்ற மூன்று பேரும் சேர்ந்து இந்த அமைப்பை நடத்தினார்கள். கரெக்ட். நீங்கள் ஊகிக்கும் அதே ப.சிதம்பரம்தான் இந்த அமைப்பாளர்.

ஒவ்வொரு மாதமும் வெளியாகும் எல்லா அச்சிதழ்களிலிருந்தும் ஒரு சிறந்த சிறுகதை தேர்ந்தெடுக்கப்படும். (ஒவ்வொரு மாதமும் யாரேனும் ஒரு எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளர் அதைத் தேர்ந்தெடுப்பார்)

 பன்னிரண்டு மாதமும் தேர்வாகும் கதைகளில் ஒன்றை,  அனுபவம் மிக்க ஒரு பத்திரிகையாளரோ எடிட்டரோ எழுத்தாளரோ தேர்ந்தெடுப்பார். ஏப்ரல் மாதம் நடக்கும் விழாவில் அந்த எழுத்தாளர் கௌரவிக்கப்பட்டுவார். ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் கதைக்கும் சரி.. பன்னிரண்டில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்படும் கதைக்கும் சரி.. வெளியிட்ட பத்திரிகைக்கும் சரி.. பணப்பரிசு வழங்கப்படும்.

பன்னிரண்டு கதைகளையும் தொகுத்து ஒரே நூலாக ஆண்டுவிழாவின்போது வெளியிடுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் நடக்கும் மீட்டிங், ஆழ்வார்ப்பேட்டை, எல்டாம்ஸ்ரோடில் உள்ள சி.எல்.எஸ் கட்டடத்தில் நடைபெறும். ஏப்ரல் மாத ஆண்டுவிழா, சென்னை ஏ வி எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெறும்.

(கொசுறுத் தகவல் : ஆனந்த விகடன் கதைகள் ஒன்பது முறை ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதிக முறை பரிசு பெற்றவர் எஸ் சங்கர நாராயணன். 11 கதைகள்!)

“இந்த வாரம் கடைசி சனிக்கிழமை எல்டாம்ஸ் ரோடு மீட்டிங்குக்கு உங்க மகன்கள், மகள் ஏன்.. நீங்ககூட வந்தா சந்தோஷப்படுவேன். ரொம்ப சுவாரஸ்யமாயிருக்கும். கதைகளை டிஸ்கஸ் செய்வாங்க..” என்றார்.

யம்மாடி! என்ன ஒரு வாய்ப்பு!! மனசு பறந்தது.

அண்ணா கோபாலுக்கும் ஏக சந்தோஷம். “நான் வேதாவைக் கூட்டிண்டு வரேன்.. நீங்க என் வீட்டுக்கு வந்துடுங்களேன். சேர்ந்து போகலாம்” என்றார்.

சனிக்கிழமை வந்தார். போனோம்.

வாழ்க்கையில் முதல் முதலாக நாங்கள் சேர்ந்து வெளியே போனதும்.. முதல் முதலாக நான் எழுத்தாளர் விழா என்ற ஒன்றைப் பார்த்து வியந்ததும் அன்றைக்குத்தான்.

இருபது முப்பது பேர் வந்திருந்தார்கள். நான் சந்திக்க ஆசைப்பட்ட பெரிய எழுத்தாளர்கள் சிலர் வந்திருந்தது என் உற்சாகத்தை உயரத்துக்குக் கொண்டு போனது.

பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜூ, இரட்டை எழுத்தாளர்களாகிய சுரேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தார்கள்.

திரும்ப வரும்போது, மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வந்து ரயிலில் பயணித்தபோது தமிழ் எழுத்துலகம் என்றைக்கும் மறக்காத சுப்பிரமணிய ராஜூவுடன் பேசிக்கொண்டே வந்தது பெரிய பிரமிப்பைத் தந்தது. பழவந்தாங்கல் ஸ்டேஷனில் ராஜூ இறங்கினார். நாங்கள் குரோம்பேட்டை வந்தோம்.

“பை பாமா சார். வரோம். மறக்க முடியாத மீட்டிங்” என்றேன். அதற்கு அந்த நிமிஷம் வேறு எந்த அர்த்தமும்  இல்லை என்பது நிஜம்.

“சும்மா மீட்டிங்கெல்லாம் போனால் போதுமா? சிறுகதை எழுதறதோட திருப்தியாயிடுவீங்களா? நாவல் எழுத வேண்டாமா?” என்று கேட்டார்.

நிஜமாகவே, வாயைக் கைக்குட்டையால் பொத்தியவாறு, அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். எனக்கு எங்கே அத்தனை பொறுமையெல்லாம்?

“வ்வ்வ்வ்வ்வ்வாட்? சிறுகதை எழுதவே பெண்டு நிமிர்ந்து ஔவையார் ரேஞ்சுக்கு நடக்கறேன்.. நாவல் எழுதறதாவது?” என்று கேட்டபோது அந்தத் திறமை எனக்கில்லை என்றுதான் உறுதியாக நம்பினேன்.

“அடுத்த முறை நான் வரும்போது குறைஞ்சது பத்துப் பக்கமாவது எழுதியிருக்கணும்” என்றார் அவர்.

“ஒரு நாவல் எத்தனை பக்கம் எழுதணும்னுகூட எனக்குத்  தெரியாது சார்.. அவ்ளோ பக்கம் எழுதற அளவு விஷயமும் கெடையாது” என்றேன்.

“எழுதறீங்க..” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்தபோது அம்மாவும் “மனசு வைச்சா உன்னால் எல்லாம் முடியும். ஆனா மனசு வைக்க மாட்ட நீ.” என்று சொன்னார்கள்.

சொல்லாதது “நீ சோம்பேறி நம்பர் ஒன்” என்பது.

அடுத்த முறை அவர் வந்தபோது நான் நாவலுக்குப் பிள்ளையார் சுழிகூடப் போட்டிருக்கவில்லை.

“சினாப்ஸிஸ் எழுதிட்டீங்களா?” என்று கேட்டார். அந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. கேட்டேன். விளக்கினார். நாவல் சுருக்கமாம்.

அந்த முறை இலக்கியச் சிந்தனை மீட்டிங்குக்குப் போனபோது என் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியை, எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர், திருமதி கலா. கே. தாக்கர் வந்திருந்தார். குஜராத்தியைத் தாய் மொழியாகக் கொண்ட அவர் தமிழ் எழுத்துலகில் ஜமாய்த்துக்கொண்டிருந்தார்.

தன் மாணவிகளை ஒருமையில் பேசாத ஒரே பேராசிரியை. “அட வேதாவா.. ” என்று கேட்டவர் என் பக்கத்தில் நின்றிருந்த இவரைப் பார்த்து “இவர் எழுத்தாளர் பாமாகோபாலன்தானே?” என்று கேட்டார். அவரையும் என்னையும் சேர்த்துப் பார்த்து வியப்படைந்திருப்பாரோ என்னவோ.

     இது மாதிரி நிறைய மீட்டிங்குகளுக்குச் சேர்ந்து போய்விட்டு வருவது வாடிக்கையாயிற்று. போகும்போதும் வரும்போதும் சிறுகதைகள், நாவல்கள், சமீபத்தில் பார்த்த சினிமாக்கள் என்று விவாதிப்போம். இருவரின் ரசனையும் ஒரே திசையில் இருந்ததை நாங்கள் உணர்வதற்கு முன் என் நாவல் பிரசுரமாகிவிட்டது.

    ஆம். என்னால் முடியாது என்று நினைத்த ஒரு விஷயத்தை சாத்தியமாக்கிவிட்டார்.

     முதல் சிறுகதையைப் பிரசுரித்த குமுதமே தனது மாலைமதியில் என் முதல் நாவலையும் வெளியிட்டு என்னை நாலுபேர் அறியும்படி செய்து பெருமைப்படுத்தியது.

           வழக்கம்போல் முதலில் வந்து இவர்தான் பாராட்டினார். “செப்டம்பரில் முதல் கதை. ஜனவரியில் முதல் தேதி நாவல். சாதாரண சாதனை இல்லை இது.  இனிமேல் உங்களுக்குப் பொறுப்பு அதிகமாயிடுத்து வேதா. இந்த உயரத்தைத் தக்க வைச்சுக்கறது உங்க கையில்தான் இருக்கு..” என்றார்.

அம்மா காபி கொண்டு வருவதற்காக உள்ளே போனபோது.. “ஒரு நிமிஷம் பேசணுமே..” என்றார்.

“சொல்லுங்க சார்..”

 (-நினைவுகள் தொடரும்…)

முந்தையபகுதி – 6 | அடுத்தபகுதி – 8

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...