என்…அவர்., என்னவர் – 6 |வேதாகோபாலன்

 என்…அவர்., என்னவர் – 6 |வேதாகோபாலன்

அத்தியாயம் – 06

அத்தியாயத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே

தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன்

ண்பர்களைச் சந்திக்கும் எந்த வாய்ப்பையும் என் கணவர் நழுவ விட்டதே இல்லை. திருமணத்துக்கு முன்பே எங்கள் இருவருக்குமே தனித்தனியாக நட்பு வட்டம் மா-வட்டம்தான்.

இப்போதாவது முகநூல் என்ற ஒன்று நண்பர்கள் சேர உதவியாக உள்ளது. எண்பதுகளில் அப்படி ஏதும் கிடையாது. (பேனா நட்பு என்ற ஒன்று உண்டு. எனக்கு நிறையப் பேனா நண்பர்கள் உண்டு. அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன்),

நண்பர்களையும் நட்பையும் தக்க வைத்துக்கொண்டதெல்லாம் தபால்மூலம்தான்.

ஒருமுறை போஸ்ட் ஆபீசுக்குப் போனால் இருபது போஸ்ட்கார்ட்கள், இருபது இன்லண்ட் கடிதங்கள், இருபது கவர்கள் என்று வாங்கி வருவது என் வழக்கம். இதை நான் பெருமையாக நினைத்ததில் என் தலையின் கனம் டன் கணக்கில்) அவர் என்னடாவென்றால் என் பெருமிதத்தையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டார். (ஆமாம்.. அவர் பிளஸ் ஐந்து).

அது ஒரு பக்கம் இருக்கட்டும்…

     றவினர் வரும்போது குழந்தைகளுக்கு சாக்லேட்டோ பணமோ கொடுத்துப் பழக்கிவிட்டால், அடுத்த முறை அந்த உறவுக்காரர் வரும்போது குழந்தை அதை எதிர்பார்க்குமல்லவா.. அதுமாதிரி என்னுடைய இரண்டாவது கதை வெளியானபோது “இன்றைக்கு நிச்சயம் பாமாகோபாலன் வருவார்..” என்று நாங்களெல்லாம் பேசிக்கொண்டோம்.

நானும் ஒழுங்கு மரியாதையாய் டான்ஸ் நடை நடக்காம.. பரட்டைத் தலையை சீவி, உட்கார்ந்திருந்தேன்.

     ஆனால்… அன்றைக்கு அவர் வரவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்துத்தான் வந்தார். அலுவலக விஷயமாக மும்பை போயிருந்தாராம்.
மும்பையில் குமுதத்தைப் பார்த்திருக்கிறார்.

     கதையின் தலைப்பு தண்டனை. ஒரு கோபக்காரக் கணவன் தன் மனைவி செய்த தவறுக்காக (குழந்தையை அடித்துவிட்டாள்) அவளைத் தண்டிக்கிறேன் பேர்வழி என்று அவளைக் கட்டிப்போட்டு அவள் மேல் இஸ்திரிப்பெட்டியை வைத்து ஆன் செய்துவிட்டுக் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பிவிடுவான். (உண்மையில் மனைவிக்குத்  தெரியாமல் மெயினை முன்பே ஆஃப் செய்திருப்பான்) சும்மா பயமுறுத்தலாமே என்று செய்யப்போக, அவன் மாலையில் வரும்போது அவள் பயத்திலேயே இறந்துபோயிருப்பாள். இதுதான் கதை.

     குமுதம் பத்திரிகை புதுமைக்குப் பெயர்போனது என்பது அனைவருக்குமே தெரியும். அந்த வாரம் அந்தப் புதுமைக்கு என் கதையைப் பயன்படுத்தியிருந்தார்கள் எனக்குக் கால் தலை புரியவில்லை.

     இந்தக் கதைக்கு நாங்கள் ஓவியம் எதுவும் பிரசுரிக்கவில்லை. நீங்கள் படம்போட்டு அனுப்புங்கள். சிறந்த படம் பிரசுரிக்கப்பட்டு சன்மானமும் அளிக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்கள்.

     இது என் கதையைப் பலர் படிக்கவும் என் பெயரை கவனிக்கவும் உதவி செய்யும் என்று பாராட்டினார் அவர்.

     அது வரை அவர் குடும்பத்தைப் பற்றி நாங்கள் யாரும் எதுவும் கேட்கவில்லை. அது நாகரிகம் இல்லை என்பதால் மட்டுமின்றி, அவர் வந்தபோதெல்லாம் கதைகளையும் எழுத்தாளர்களையும் பற்றிப் பேசுவதற்கே நேரம் போதவில்லை என்பதுதான் உண்மை.

     எழுபதுகளும் எண்பதுகளும் தொண்ணூறுகளும் பத்திரிகைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும், ஓவியர்களுக்கும், நிருபர்களுக்கும் பொற்காலம் என்பேன். ஒரு வாரத்தில் பதினைந்துக்கும் மேலான பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன.

“நான் கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளுமே வாங்கிவிடுவேன்.” என்று பொறாமை கிளப்பினார்.

நாங்கள் படிக்காத கதைகளைக்கூட சுவையாக விவரித்துச் சொல்லுவார்.

அவர் அப்போது எழும்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். எழுத்தாளர் ஜே எஸ் ராகவன் அவர் நிறுவனத்தில் அவருடன் வேலை பார்த்து வந்தார். ராகவன் அவருடைய கல்லூரித் தோழரும்கூட.

வார இறுதிகளில் எழுத்தாளர் சுகந்தி, நிவேதா, இ ரா கணேஷன் என்று பலர் சந்தித்து உரையாடுவது வழக்கம் என்றார். சுகந்தி என்ற புனை பெயரில் எழுதும் ஆர் வெங்கட்ராமனின் மகன்தான் பிரபல கிருஷ்ணா டாவின்சி (வெங்கட கிருஷ்ணன்.) அப்போது அவர் பள்ளி மாணவர். பிறகு குமுதம் சப் எடிட்டர். சுகந்தியின் மகள் வி உஷா. இவரும் பிரபல எழுத்தாளராக விஸ்வரூபம் எடுத்தவர். நிவேதா என்ற பி கிருஷ்ணமூர்த்தி, இ ரா கணேஷன் (ஆர் கணேசன்) ஆங்கில நாவல்களைக் கரைத்துக் குடிப்பார். சினிமா நகைச்சுவைக் காட்சிகளை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பதில் எக்ஸ்பர்ட். இன்றளவும் நட்பில் உள்ளார்.

“அடுத்த வாரம் இந்த எழுத்தாளர்களை உங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரலாமா?” என்று கேட்டார் பாமாஜி. (நாங்கள் இப்படித்தான் அவரைக்கூப்பிட ஆரம்பித்தோம்.)

     ஆஹா.. எங்கள் வீட்டில் எழுத்தாளர் சந்திப்பா (பிறகு அது நிறைய முறை நடந்தது)

“சார் உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க” என் அண்ணா கேட்டபோது உற்சாகமும் நகைச்சுவையுமே உருவாக இருந்த பாமா கோபாலன் சட்டென்று சோகமானார்.

“நானும் என் அப்பாவும் மட்டும்தான் இருக்கோம். போன வருஷம் என் அம்மா கான்ஸரில் இறந்துட்டாங்க. அதுக்கு முன் வருஷம் என் மூத்த அண்ணா இறந்துட்டார்.  எழுத்தாளர் எஸ் சேஷாத்திரிதான் என் அண்ணா.” என்றார்.

அட. அந்தப் பெயர் அப்போதெல்லாம் மிகவும் பரிச்சயம். வாரா வாரம் குமுதத்தில் ஒரு கதை ஒரு துணுக்கு என்று ஜமாய்த்திருப்பாரே… அடடா. சின்ன அண்ணா வெளியூரில். சகோதரிகள் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்கள்.

சட்டென்று பேச்சைத் திசை திருப்பி, யார் சமையல் செய்வார்கள், அன்றைக்கு லஞ்ச்சுக்கு என்ன கொண்டு போனார் என்று அம்மா கேட்க ஆரம்பித்து மடைமாற்றினார்.

“நான் சமையல் ரூமுக்குப் போகாததால் தினமும் சுவையாய் சாப்பாடு கிடைக்கும். என் அப்பா எக்ஸ்பர்ட்” என்றார்.

நண்பர்கள் வீடு, எழுத்தாளர்கள் மீட்டிங், கம்பன் விழா, பட்டிமற்றங்கள் என்று தன் பொழுதை நல்ல முறையில் செலவழிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

     நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த ‘அடுத்தவாரம்’ வந்தது. நாங்கள் எழுத்தில் மட்டுமே பார்த்திருந்த அந்த மூன்று எழுத்தாளர்களும் என் வீட்டுக்கு வந்தார்கள். மூன்று மணி நேரம் எழுத்தை மட்டுமே சுவாசித்தோம்.

     பிளாட்களை விவாதித்தோம். நல்ல ட்விஸ்ட்களையும் கிளைமாக்ஸ்களையும் அந்த சீனியர் எழுத்தாளர்கள் சொல்லிக்கொடுத்தார்கள்.

     மறுவாரம் பாமாகோபாலன் வந்தபோது அந்த வேண்டுகோளை என் அம்மாவின் முன் வைத்தார்…

(-நினைவுகள் தொடரும்…)

முந்தையபகுதி– 05 | அடுத்தபகுதி – 07

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...