என்…அவர்., என்னவர் – 5 |வேதாகோபாலன்

 என்…அவர்., என்னவர் – 5 |வேதாகோபாலன்

வேதா அம்மா அவர்களின்  “என்…அவர்., என்னவர்” என்கிற அவர்களது அன்பு மொழி சொல்லும் அனுபவத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் நமது மின்கைத்தடி அன்பு வாசகர்களுக்கு வணக்கம்!

இதுவரை தாங்கள் படித்த முந்தையபகுதிகளை விட இப்போது வெளியாகியுள்ள இந்தப்பகுதி ஒரு கூடுதல் சிறப்பு இது நம் வேதா அம்மா அவர்களின் பிறந்த நாள் இன்று (15/11/2023). 
அம்மா அவர்கள் பிறந்த இன் நன்னாளில் அவர்களை வாழ்த்தி ஆசிபெற்றுப் படிக்க தொடங்குவோம். 

அத்தியாயம் – 5

அத்தியாயத் தலைப்பு : கோபாலனின் வேதம்

(தலைப்பு உபயம் : சுதா கிருஷ்ணமூர்த்தி)

நாங்கள் நாற்பத்தி இரண்டு வருடம் ஒன்றாய் வாழ்ந்தோம். அவர் சொல்வார் “அம்மா வீட்டில் 24 வருடங்கள் இருந்தாய். நம் வீட்டில் அதே எண்களைத் திருப்பிப்போட்டால் வரும் நம்பர்!”

அவர் கொடுத்த தைரியத்தில்தான் முதல் முதலாய்க் கதை என்ற ஒன்றை எழுதினேன்.

அந்தக் காலத்தில் சினிமா நடிகைகளின் அம்மாக்கள் அவர்களுக்குத் துணையாகச் செல்வது போல் எனக்கு என் அண்ணா கோபால் மிகவும் சப்போர்ட்டாக இருப்பவர். எல்லா இடங்களுக்கும் வந்தவர்.

1980 செப்டம்பர். முதல் முதலில் நான் கதை எழுதியபோது “எந்தப் பத்திரிகைக்கு அனுப்ப விருப்பற?” என்று கேட்டார் என் அண்ணா.

“அஃப்கோர்ஸ் குமுதம்” என்றேன்.

பின்னே? அது அதிக சர்க்குலேஷன் கொண்ட தமிழ்ப் பத்திரிகையாயிற்றே? ஆறு லட்சம் பிரதிகள் விற்றன. பத்து லட்சத்தை எட்ட வேண்டும் என்று எடிட்டர் திரு எஸ்.ஏ.பி லட்சியம் வைத்திருந்தார். ஒரு சர்வேயின்படி பத்து பிரதிகளை சராசரியாகப் பதினைந்து பேர் படிப்பார்களாம். சில குடும்பங்களில் ஒரு பிரதியை ஏழுபேர்கூடப் படிப்பார்கள். ஆக, ஆறு லட்சம் பிரதிகளை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்களேன்!

ஆரம்பத்தில், கதை எழுதுவதன் சூட்சுமங்கள்.. இலக்கணங்கள் என்ற எதுவுமே எனக்குத் தெரியாது. (இப்போது மட்டும் தெரியுமா என்று கேட்டுவிடாதீர்கள்) அன்றைய தேதியில் பலரைப் போல நானும் மனசுக்குத் தோன்றியவற்றைக் கதை என்று நினைத்து எழுதி எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பாமல் கிடப்பில் போட்டதுண்டு.

என் விமர்சகர்களைத் தேடி நான் வெளியில் போகவே வேண்டாம், என் அம்மா என்னுடைய முதல் க்ரிட்டிக். “நல்லாவே இல்லை. இதைப் பத்திரிகைக்கெல்லாம் போடாதே. முடிவு சப்பென்று இருக்கு..” என்று என் பல கதைகள் வெளியுலகைப் பார்க்குமுன்னரே உயிரைவிட்டதற்கு அம்மாவும் அண்ணாவும் காரணமானார்கள்.

முதல் கதையை எழுதி அண்ணா கையில் கொடுத்து, அதை  அவர் போஸ்ட் செய்த மூன்றாம் வாரம் …

அதிகாலை ஆறுமணிக்கு நான் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது என் அண்ணா உற்சாகக்  ’கூக்குரலுடன் என்னை எழுப்பினார். “வேதா.. உன் கதை குமுதத்தில் வந்திருக்கு.. நீ பாட்டுக்குத் தூங்கிக்கிட்டிருக்கியே.. ராமு சார் படம் போட்டிருக்காரு.. மை காட்.. நம்பவே முடியலை.. எழுந்திரு.. எழுந்திரு..”

என்னாலும் நம்ப முடியவில்லை. முதல் குழந்தைக்குத் தாயான அம்மா மாதிரி அதை அரை மணி நேரத்துக்குள் பதினைந்து இருபது முறை படித்திருப்பேன்.

அவசரப் பல்தேய்ப்பு. அதைவிட அவசரமாய்க் காபி. மீண்டும் அந்த அற்புத காவியத்தைப்(!) படித்தேன். குமுதத்தில் இரண்டே இரண்டு பக்கங்களுக்கு வந்திருந்தது.

நிஜமா?

நிஜமாவே என் கதையா?

அதுவும் எனக்கு மிகப் பிடித்த குமுதத்திலா?

“கதை வந்திருச்சு.. ஆசையில் ஓடிவந்தேன்.. காபி டிபனும் தேவையில்லை..  தூக்கமில்லை.” என்று வாய்க்கு வந்தபடி உச்சபட்சக் குரலில் பாடிக்கொண்டே டான்ஸ் நடையுடன் ஹாலுக்கு வந்தவள் வாசலில் யார் நிற்கிறார்கள் என்று பார்க்கவேயில்லை.

காலையில் கடைக்குப் போய்க் குமுதம் வாங்கி, தன் கதை பிரசுரமாகியிருக்கிறதா.. அல்லது.. தனக்குத்  தெரிந்தவர்கள் யார் கதையாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பது என்னவரின் வழக்கமாம்.

அது மாதிரியே அன்றைக்கு வாங்கிப் பார்த்துவிட்டு, பாராட்டுத் தெரிவிப்பதற்காக நேராக என் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதை நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சினிமாவில் ஃப்ரீஸ் ஆகும் ஷாட் மாதிரி வாயைத் திறந்துகொண்டு நின்றுவிட்டேன். அச்சோ.. நான் பாட்டுக்கு உரக்கப்பாடிக்கொண்டு.

“பாராட்டுகள்.. கதையைக் கடைலயே நின்னு படிச்சுட்டேன். எழுத்தாளர் ஒரு இளம் பெண்ணுனு படிச்சவுடனேயே வாசகர்களுக்குப் புரியும். ஷார்ப்பான நல்ல பிளாட். குமுதத்துக்கு என்ன தேவைன்னு நீங்க டக்குன்னு பிடிச்சுட்டீங்க..”

ஒரு நிமிஷம் நினைத்துப் பாருங்கள். வெறும் 23 வயசே ஆன பெண்ணுக்கு வாழ்க்கையில் ஒரு அபூர்வமான வெற்றி கிடைத்திருக்கிறது. எடுத்த எடுப்பில் ஓர் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் பாராட்டுகிறார் என்றால் சும்மாவா?

“அம்மா.. யாரு வந்திருக்காங்க பாரேன்..” அடுக்களையிலிருந்து அம்மாவும், மாடியிலிருந்து அண்ணாவும், உள்ளேயிருந்து தம்பியும் வந்தார்கள்.

பேச்சு.. பேச்சு.. பேச்சு.. (என் முதல் கதையின் தலைப்பும் அதுதான்.) பேசிக்கொண்டே இருந்தோம். அது முதல் அடிக்கடி வர ஆரம்பித்தார். அதாவது என் கதை அடிக்கடி பிரசுரமாக ஆரம்பித்தது.

ஆங்கிலத்தில் ஹாட்-ட்ரிக் என்ற வார்த்தை சொல்வார்களே.. அது எனக்கு சாத்தியமாயிற்று. அடுத்தடுத்து மூன்று வாரங்களுக்குக் குமுதத்தில் சிறுகதைகள் வந்தன.

எடுத்த எடுப்பில் வெற்றி கிடைத்துக்கொண்டிருந்தால் அருமை தெரியாது என்பார்கள். நல்லவேளையாய் அது எவ்வளவு அபூர்வமான, அருமையான விஷயம் என்பதை அவர் எங்களுக்கு எடுத்துச் சொன்னதால் அருமை தெரிந்தது.

குமுதத்தில் மட்டுமில்லாமல் எல்லாப் பத்திரிகைகளிலும் உங்க கதைகள் வரணும் மேடம்..”

எல்லா வாரங்களும் பத்திரிகைகளில் கதை வரணும்னா தினமும் ஒரு கதை எழுதுங்க.”

கதை பிரசுரமாகிற மாதிரிரிஜெக்ட் ஆகித் திரும்பி வரவும் செய்யும். மனசைத் தயார் நிலையில் வெச்சுக்குங்க..”

கதை பிரசுரமாகலைன்னா பத்திரமாய் நம்ம கிட்ட திரும்பி வந்துடணும். அதுக்கு ஸ்டாம்ப் வைச்சு அனுப்புங்க..”

ஒரு கதை ரிஜெக்ட் ஆயிட்டா சோர்ந்து போகாமல் அதில் என்ன குறைன்னு கண்டுபிடிச்சு சரி செய்த பிறகே மற்றொரு பத்திரிகைக்கு அனுப்புங்க..”

எந்தப் பத்திரிகைக்கு என்ன மாதிரி கதை அனுப்பணும்னு ஜட்ஜ் செய்து அனுப்புங்க.”

இதெல்லாம் அவர் வரும்போதெல்லாம் எனக்குக் கொடுத்த ஆலோசனைகள்.

அவரிடம் ஒரு பழக்கம் உண்டு., பத்திரிகைகளில் யாருடைய கதை நன்றாய் இருப்பதாக நினைத்தாலும் அவருக்கு ஒரு கடிதம் எழுதிப்போட்டுவிடுவார். முகவரி கண்டுபிடிக்க இயலாவிட்டால் என்று எழுத்தாளரின் பெயர் போட்டு, கேர் ஆஃப் என்று போட்டு பத்திரிகைக்கே கடிதம் அனுப்புவார். அது எழுத்தாளருக்கு அனுப்பப்பட்டுவிடும்.

அதுபோல் அவர் சேகரித்த நண்பர்கள் ஏராளம். அதனால் என்ன ஆயிற்று தெரியுமா?

(-நினைவுகள் தொடரும்…)

முந்தையபகுதி – 4 | அடுத்தபகுதி – 6

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...