என்…அவர்., என்னவர் – 8 | வேதாகோபாலன்
அத்தியாயம் – 8
இந்தவாரத் தலைப்பு : உயிரோடு உணர்வுகள்
தலைப்பு உபயம் : அமுதா பொற்கொடி அம்மு
அம்மா காபி கொண்டு வருவதற்காக உள்ளே போனபோது.. “ஒரு நிமிஷம் பேசணுமே..” என்றார்.
“சொல்லுங்க சார்..”
“நேத்திக்கு எங்க வீட்டுக்கு யார் வந்தாங்க தெரியுமா?”
யாராவது எடிட்டர்கள்.. பெரிய எழுத்தாளர்கள் வந்திருப்பார்கள். அடடா. என்வீட்டுக்கு அழைத்து வந்திருக்கலாமே என்று தோன்றினாலும் அப்படி அழைத்து வராததற்கு மிக நியாயமான காரணம் ஏதாவது இருக்கும்/ அந்த அளவுக்கு அவரை நன்றாய்த் தெரியும்.
அவர் சொல்ல வந்ததை உங்களுக்குக் கடத்துவதற்கு முன் அது பற்றி ஒரு சின்ன முன்னுரை…
அவர் அறிமுகமான இந்த ஏழெட்டு மாதங்களில் என் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் மாதிரி ஆகிவிட்டார் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
என் அப்பா நான் டிகிரி படித்துக்கொண்டிருந்தபோது இறைவனடி சேர்ந்துவிட்டார்.
என் குடும்ப அங்கத்தினர்கள்.. அம்மா… அண்ணா.. மன்னி, அக்கா, அத்திம்பேர் (அதாவது அக்காவின் கணவர்), தங்கை, தம்பி.. ஆகியோரிடம் கலகலவென்று ஜோக் அடித்துப் பேசுவார்.
என் தம்பியும் அவரும் பெஸ்ட் நண்பர்களாகிவிட்டார்கள். அண்ணாவும் அவரும் நட்பு பாராட்டும் விதம் பற்றிச் சொல்லவே வேண்டாம். என் தங்கை வைஜயந்தி அப்போது ஏழாம் கிளாஸ் சிறுமி. அனேகமாக அவள் “இன்னிக்கு ஸ்கூல் போகும்போது, டிரெயின்ல பாமா சார் போன கம்பார்ட்மென்ட்டில்தான் நானும் போனேன்”, என்று பெருமையாகச் சொல்வாள்.
பாமா கோபாலன் யாருடன் பேசினாலும் அவர்களுக்கு எது போரடிக்காமல் இருக்கும் என்பதை மனசில் வைத்துக்கொண்டு பேசுவார். இதனால் என் அக்காவின் கணவரும் அவரும் நல்ல நட்புணர்வுடன் பேசுவது வழக்கம்.
எனக்கு அப்போது வரன்கள் வர ஆரம்பித்திருந்தன. பாமாஜி வசித்த (அதாவது தற்போது என் வீடு உள்ள) அதே ஸ்கூல் தெருவில் உள்ள ஒருவரின் ஜாதகம் எனக்கு வந்திருந்தது. அந்தப் பையனைப் பற்றி பாமாகோபாலனிடம் என் அண்ணா விஜாரித்தபோது மிக நல்ல அபிப்ராயம் கொடுத்திருந்தார்.
இப்போது…
“உங்க வீட்டுக்கு யார் சார் வந்தாங்க?” என்று வியப்புடன் கேட்டேன். அது வரைக்கும் பிரபல எழுத்தாளர்கள் ஹேமா ஆனந்ததீர்த்தன், ராஜேஷ்குமார் அண்ணா, போன்ற யார் வந்தபோதும் என் வீட்டுக்கும் அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதற்குள் எனக்கும் பல எழுத்தாளர்கள் நட்பாகிவிட்டதால் என் வீட்டுக்கு யாரேனும் வந்தால் அவர் வீட்டைப் போய்க் காட்டுவேன்.
“யார் வந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா வேதா?” என்று கேட்டாரல்லவா… நிஜமாய்க் குழம்பினேன். எனக்கெப்படித் தெரியும்?
“அவர் வந்ததே தெரியாதுன்னா எதுக்கு வந்தார்னும் தெரிஞ்சிருக்காது..” என்றபோது என் அம்மா காபி எடுத்துக்கொண்டு வந்து எங்கள் இருவருக்கும் கொடுத்தார்.
“அம்மா. உட்காருங்க உங்க கிட்ட பேசணும்..” என்றார்.
அம்மாவின் கம்பீர முகத்தில் தூங்கும்போதுகூட புன்னகை இருக்கும். அதே புன்னகையுடன் உட்கார்ந்தார்.
அம்மாவிடம் அதே கேள்வி..
அம்மாவுக்கும் தெரிந்திருக்கவில்லை. ஊகிக்கவும் முடியவில்லை.
“உங்க மாப்பிள்ளை வந்தார்” என்றார் அம்மாவைப் பார்த்து.
மீன்ஸ்.. என் அக்காவின் கணவர். ஓ.. இவர் தெருவில் இருக்கும் அந்தப் ‘பையன்’ வீட்டுக்குப் போய்விட்டு இங்கேயும் போனார் போலும். ஆனால் ஏன் எங்களிடமெல்லாம் சொல்லவில்லை?
எனில் எதற்காகப் போனார்?
அவர் விரிவாகச் சொன்னதன் சாராம்சம் இதுதான். “என் அப்பா கிட்ட அவர் பேசினார்மா.. “ஜீவனுள்ள ஒரு நாடகம் போடலாம்னு ஆசைப்படறேன்’ னு பேச ஆரம்பிச்சார். உங்க மகள் ஜாதகத்தை எனக்குப் பார்க்கலாமான்னு என் அப்பாகிட்ட கேட்டாரு..”
பக்கென்று ஆனது. அத்திம்பேர் சொல்லவேயில்லையே?
அம்மா எதையும் எப்போதும் அருமையாக டீல் செய்வார். “காபி ஆறிடப்போறது.. குடிச்சுடுங்கோ ”என்று மனசுக்குள் அவகாசம் வாங்கினார்.
அடுத்தடுத்து மனசுக்குள் கேள்விகள். என் அக்காவின் கணவர் வந்து கேட்டார் சரி. உங்கள் அப்பா என்ன சொன்னார்? நீங்கள் என்ன சொன்னீர்கள்? ஏன் என் அக்காவின் கணவர் என் அம்மாவிடம் கூடச் சொல்லவில்லை?
அம்மா அவரை எதுவுமே கேட்கவில்லை. ஆனால் சொன்னார். “இது வரைக்கும் இந்த வீட்டில் அப்பிடி ஒரு பேச்சு எதுவுமே வந்ததில்லையே? யாருக்கும் அப்பிடி ஒரு எண்ணம் இருந்ததில்லை. அவரைப் போகும்படி நாங்க சொல்லலை.. ஆனால் அவர் இவளைத் தன் மகளாய் நினைக்கறதால கேட்டிருக்காரு போலும்..”
“அப்பிடித்தான் சொன்னார்… ஆனா… அயம் ஸாரி.. இது நடக்காதுன்னு அவர் கிட்ட நான் சொல்லிட்டேன்..”
ஆச்சர்யமே இல்லை. எனக்கும் அம்மாவுக்கும் அவர் இப்படித்தான் பதில் சொல்லியிருப்பார் என்று நன்றாகவே தெரியும். எனவே எதிர்பார்த்தோம்.
அவருக்குத் திருமணம் செய்து கொள்ளும் உத்தேசமே கிடையாது. காரணம் அவரின் உயிருக்குயிரான நண்பர் போன்ற அண்ணா இரண்டாண்டுகளுக்கு முன் தனது நாற்பதாவது வயதில் இறந்துவிட்டார்.
இருவருமாய் ராமகிருஷ்ணா மடம்.. சின்மயா மிஷன் என்றே ஒன்றாய்த் திரிந்தவர்கள். ஆன்மிக சிந்தனை அதிகம் உள்ளவர்கள். பகவத்கீதை… உபநிஷதங்கள் என்று வீடு முழுக்க நூல்கள் நிறைந்திருக்கும். உலகப் பற்று கூடாது என்ற உறுதி உள்ளவர்.
திருமணம் என்ற பந்தத்தில் சிக்கி உழல்வது அபத்தம் என்று இருவருமே நிறையப் பேசியவர்கள். அதெல்லாம் இவருடைய பேச்சில் பல முறை வெளிப்பட்டிருக்கிறது.
உலக வாழ்வின் நிலையற்ற தன்மை.. சந்தோஷங்களின் நிரந்தரமின்மை என்று அவர் பேசும்போது நமக்கே பிரமிப்பு ஏற்படும்.
“ஒரு வாட்டி சுவாமி சின்மயானந்தாவின் ‘கீதக்ஞான யக்ஞா’ நிகழ்ச்சிக்கு என்னோட வாங்க. எளிய வார்த்தைகள்ல ஸ்வாமிஜி பகவத் கீதாவை விளக்கும்போது நமக்குப் புல்லரிக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
அப்படிப் பட்டவர் என் அக்காவின் கணவர் போய்க் கேட்டபோது மனம் நோகாத முறையில் மறுத்துவிட்டார். நடக்காத விஷயத்தைச் சொல்லுவானேன் என்று என் அத்திம்பேரும் எங்கள் வரை விஷயத்தைக் கொண்டுவராமல் விட்டுவிட்டார் போலும். ஆனால் என் அத்திம்பேருக்கு ஒரு ராசி உண்டு.. அவர் எதை ஆரம்பித்தாலும் வெற்றியாகவே முடியும். எது பேசினாலும் அப்படியே பலிக்கும்.
எனக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை. மேலும் அதுவரைக்கும்கூட அவருடன் எனக்குத் திருமண எண்ணம் வராததற்கு ஒரு மிகப் பெரிய காரணம் இருந்தது. இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் சொன்னால் உருண்டு சிரிப்பார்கள்.
ஆனால் ஒரே வாரத்தில் வேறு ஒரு ட்விஸ்ட் நிகழ்ந்து சகலத்தையும் தலைகீழாக்கியது.
(-நினைவுகள் தொடரும்…)
முந்தையபகுதி – 7 | அடுத்தபகுதி – 9