என்…அவர்., என்னவர் – 9 | வேதாகோபாலன்
இந்தவாரத் தலைப்பு : இளமை எனும் பூங்காற்று
தலைப்பு உபயம் : சுப்பிரமணி
அடுத்த வாரம் என் கதைகள் கல்கி, ஆனந்த விகடன், சாவி என மூன்று பத்திரிகைகளில் பிரசுரமாயிகியிருந்தன.
பாமாகோபாலனின் நாவல் மாலைமதியில் வெளியாகியிருந்தது. தெருவெங்கும் போஸ்டர். அவர் நாவல் எழுதி அனுப்பியது தெரியும்.
மாலைமதி நாவலைப் பொருத்தவரையில் எனக்கேற்பட்ட அதே அனுபவம் அவருக்கும் ஏற்பட்டது.
அதென்ன அனுபவம்?
என் நாவலை போஸ்ட் செய்த 2 மாசத்துக்குள் குமுதம் ஆபீசிலிருந்து போன் வந்தது. (எங்கள் வீட்டில்..ஏன் எங்கள் தெருவிலேயே கூட போன் கிடையாது.)
அப்பா நடத்தி வந்த அச்சாபீஸை அவர் காலத்துக்குப் பிறகு என் அண்ணா திறம்பட நடத்திக்கொண்டிருந்தார். அங்கு லாண்ட் லைன் இருந்தது. கதைகள், நாவல்கள் எழுதினால் அதில் அந்த போன் நம்பரைத்தான் குறிப்பிட்டு அனுப்புவோம். எனவே அண்ணா ஆபீசுக்கு போன் வந்தது. அது பற்றிய விவரத்தைச் சொல்வதற்காக அண்ணா பறந்து வந்தபோது நான் வீட்டில் இல்லை.
குரோம்பேட்டை வெற்றி திரை அரங்கில் என் சினேகிதிகளுடன் ரஜினி நடித்த ‘பில்லா’ திரைப்படத்துக்குப் போயிருந்தேன்.
அண்ணா தாமதிக்கவில்லை. அங்கேயே வந்துவிட்டார். உண்மையில் தியேட்டர்காரர்களின் அனுமதியுடன் சிலைடு போட்டாவது உள்ளே போய் அழைத்தாவது எனக்கு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன வந்தார் அண்ணா. ஆனால் நல்லவேளையாய்ப் படம் முடியும்போது கரெக்டாக வந்ததால் நான் வெளியே வரும்போது ‘கப்’பென்று பிடித்துவிட்டார்.
“உடனே வீட்டுக்கு வா.. மாலைமதிக்கு நீ குடுத்த நாவலை அவங்க பிரசுரத்துக்கு ஏற்றாச்சு..” என்றபோது சினிமாவையும் சேர்த்து இரண்டாவது லட்டு தின்ன சந்தோஷம்.
“பொது இடம். குதிச்சு டான்ஸ் ஆட முடியலை..” என்று அண்ணாவைப் பார்த்து சிரித்தேன்.
“ரொம்ப சந்தோஷப்பட்டுடாதே. இருபத்தைஞ்சு பக்கம் குறையுதாம். இன்றைக்கு ராத்திரிக்குள் எழுதி ஆபீசில் வந்து குடுக்கச் சொல்லி போன்..” என்றபோது பக்கென்றானது.
பிரதி வைத்துக்கொள்ளவில்லை. “அவங்க கிட்டேயிருந்து நாவலை வாங்கி வந்து..” என்றபோதே அன்றிரவே எழுதித்தர வேண்டும் என்ற எண்ணம் கவலை தந்தது.
“கதாபாத்திரங்களின் பேர் மட்டும் லேசாய் நினைவிருக்கு” என்றேன்.
நான் உண்மையைத்தான் சொன்னேன். ஆனால் அண்ணாவுக்கு டென்ஷன். “ஏய். ஜோக் அடிக்காதே. இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு.. ஒன்பது அத்தியாயம் கம்போஸ் செய்து லே அவுட் செய்துட்டாங்களாம். ஒன்பதாம் அத்தியாயத்துக்குப் பிறகு நீ சாப்டர் தரணும்..”
இன்றைக்காய் இருந்தால் அனுபவம் காரணமாக அதை நான் செய்துவிடுவேனோ என்னவோ. அந்த 24 வயசில்.. முதல் நாவல் என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ஒன்பது அத்தியாயங்கள் தயாராகிவிட்ட சந்தோஷத்தைக் கொண்டாடுவதா ராத்திரியோடு ராத்திரியாய் அத்தனை பக்கம் எழுதுவது பற்றி கவலைப்படுவதா?
என்ன எழுதுவது என்பது மில்லியன் டாலர் கேள்வி.
வீட்டுக்கு வந்து ‘குழந்தை சினிமா பார்த்துவிட்டுக் களைத்து வருகிறாளே’ என்று அம்மா தயாராய்ச் செய்து வைத்திருந்த டிபன் காபியை விழுங்கியபோது என்ன சாப்பிடுகிறோம் என்ற பிரக்ஞையே இல்லை.
நல்ல வேளையாய் அம்மா கதையை ஊன்றிப்படித்திருந்தார். ஒரு காகிதத்தில், அத்தியாயங்களைப் பிரித்து ஒவ்வொரு வரி எழுதி வைத்திருந்தேன். அதைத் தேடி எடுக்கவே அரை மணி ஆயிற்று.
“இந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக் ஆரம்பிச்சு ஒரு அத்தியாயம் எழுதிடேன்’ என்ற ஐடியாவை என் அம்மா கொடுத்தார் என்றால் நம்புவீர்களா?
சரியாக ஒன்பதரை மணிக்கு எழுத ஆரம்பித்தேன். பதினொன்றுக்கு ஒரு முறை.. பன்னிரண்டரைக்கு ஒருமுறை.. இரண்டு மணிக்கு ஒரு முறை அம்மா எழுந்து எழுந்து.. “சரியாப் போகுதா?” என்று கேட்டதோடு நிற்காமல் ஒரு முறை பம்ப் ஸ்டவ் மூட்டி காபி போட்டுக் கொடுத்தாள் (அப்போது வீட்டில் ஃப்ரிஜ்ஜெல்லாம் கிடையாது. பாலை இரு முறை காய்ச்சி தண்ணீருக்கு நடுவில் வைப்பதோடு சரி)
காலையில் ஏழரைக்கு அண்ணா கிளம்பும்போது இருபத்தைந்தாவது பக்கத்தைக் கோழிக்கிறுக்கலாய் எழுதிக் கொடுத்துவிட்டுத் தூங்கினேன். நாவல் வெளிவந்தபோது தனியாய் எழுதியது என்றே தெரியாமல் கதையுடன் இணைந்துபோயிருந்தது அந்த அத்தியாயம். உண்மையில் என் அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வை மு கோதைநாயகி மாதிரி .. கமலா சடகோபன் மாதிரி அறிவாற்றல் கொண்டவர் என் அம்மா இந்திரா ஸ்ரீனிவாசன்.
நாவல் விஷயத்தில் பாமாஜிக்கும் பத்துப் பக்கம் குறைந்து அவர் போய்க் குமுதம் ஆபீசிலியே ஒரு புறம் உட்கார்ந்து எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டார். அவருக்கு டிஸிப்ளின் அதிகம். கையெழுத்தும் பிரமாதமாக இருக்கும். எந்த அத்தியாயத்தில் என்ன எழுதினோம் என்று டயரியில் எழுதி வைத்திருப்பார்.
எனவே நாவல் அருமையாய் வந்திருந்தது.
பாராட்டலாம் என்று பார்த்தால் ஆளையே காணோமே? என் கதைகள் பிரசுரமானதற்கு “கங்கிராஜுலேஷன்ஸ்” என்ற உற்சாகக் குரலில் வழக்கம்போல் சொல்லக்கூட வரவில்லையே?
ஒரு வேளை..
பல காரணங்களை யோசித்துக் குழம்பினோம் எல்லோரும். அந்த ஏழெட்டு மாதங்களில் அத்தனை நாள் தொடர்ந்து வராமல் இருந்ததில்லை.
அவருக்கு போன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல் முறையாகத் தோன்றியது.
அத்தனை காலமும் திருமணம் பற்றிய நோக்கம் எனக்கு வரவில்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
காரணம்..
எனக்கும் அவருக்கும் 13 வயது வித்தியாசம்.
இன்றைய இளம் பெண்கள், “இரண்டரை வருடங்களுக்கு மேல் அரை நாள் பெரியவனாய் இருந்தால்கூட வேண்டாம்..” என்கிறார்கள். ஒரு வயசு சின்னவனாய் இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்கள்.
அவருடைய ஆபீஸ் கார்ட் என்னிடம் இருந்தது. பத்து நிமிஷம் நடந்து ‘பேக்கரி’க்குப் போய் போன் செய்தேன். “மி..மிஸ்டர்.. கோ….கோபாலன் இருக்காரா?”
“நீங்க..?”
பயந்து போனை வைத்துவிடலாம் என்று நினைத்தபோது “கோபாலன்தான் பேசறேன்..” என்றார்.
“நீங்க ஏன் வீட்டுக்கு வரலை? உங்களைப் பார்க்காம ரொம்ப கஷ்டமா இருக்கு.. கதை வந்ததைப் பாராட்டக்கூட வரலையே? ” என்றெல்லாம் நான் கேட்டிருப்பேன் என்றுதானே நினைக்கிறீர்கள்.
நோ.
“உங்க நாவல் வந்திருக்கே. கங்கிராஜுலேஷன்ஸ்” என்றேன். நாவலை வரிவரியாய்ச் சொல்லிப் பாராட்டத் தயாரானேன்…
“ரொம்ப தாங்க்ஸ். ஆபீஸ் வேலைல பிஸியா இருக்கேன்.. பை” என்றார். எனக்கு எப்படி இருந்திருக்கும்?
“எப்போ வருவீங்க?” என்று கேட்க நினைத்தவளின் காதில் ரிங் டோன்தான் ஒலித்தது.
ஏதாவது கோபமா?
(-நினைவுகள் தொடரும்…)
முந்தையபகுதி – 8 | அடுத்தபகுதி – 10