என்னை காணவில்லை – 21 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 21 | தேவிபாலா

அத்தியாயம் – 21

துளசி நிலை குலைந்து போயிருந்தாள். அங்கிருந்து தப்பித்து வந்தாகி விட்டது. சரியான நேரத்தில் துவாரகா வரவில்லையானால், அவர்கள் மருந்தை செலுத்தி மயங்க வைத்திருப்பார்கள்.

‘எனக்கு பைத்திய பட்டம் கட்டி, கூண்டில் அடைக்க சதி நடக்குது. யார் இதை செய்வது?’

வீட்டுக்கு வந்ததும் மாமா, அத்தை கேட்க, துவாரகா சகலமும் சொல்லி விட்டான். இப்போதும் துளசி புரிந்து கொள்ளவில்லை.

“ அந்த சுஷ்மா சதி பண்றா. இந்த டாக்டர் பல்லவி கூட கூட்டு சேர்ந்து  என்னை பைத்தியம்னு உலகம் பேசும் படி செய்ய சதி நடக்குது. அன்னிக்கு இந்த வீட்ல சுஷ்மாவை கொஞ்சினார். இன்னிக்கு ஆஸ்பத்திரில பல்லவியை. இந்த ஆள் பொம்பளை வெறி புடிச்சு அலையறார்.”

அம்மா வேகமாக அவளை நெருங்கி அறைந்தாள். ஏண்டீ இப்படி பேசற? நீ திருந்தவே மாட்டியா? ஒரு நல்லவர் மேல பழி சுமத்த ஒரு அளவு இல்லையா? நீ தப்பான எதையாவது கண்ணால பார்த்தியாடீ? உன் தாலி மேல சத்யம் பண்ணுடி.!”

“நான் பாக்கலை. பாக்க முடியலை. அது தான் இந்த ஆளோட ராஜ தந்திரம். மாய மந்திரம். அவளை கொஞ்சறார். இவர் வேர்வையை அவ துடைக்கறா. குடிக்க தண்ணி குடுக்கறா. எல்லாம் முடிஞ்ச பிறகு உண்டான தாகம். தண்ணி டம்ளர்,  டவல் அந்தரத்துல மிதந்து வருது. ஆட்களை காணலை. எனக்கு மட்டும் விரக தாபத்தோட குரல் கேக்குது. சத்யமா தப்பு நடக்குது. இவன் நல்லவன் இல்லை.! சூன்யக்காரன்.!”

“மாப்ளே! உறுதியா இவ பைத்தியக்காரி தான். புடிச்சு கீழ்ப்பாக்கத்துல கொண்டு போய் சேருங்க. சென்னை வேண்டாம்னா, குணசீலம், ஏர் வாடினு போயிடலாம்.!”

அப்பா சொல்ல,

“நீ ஏன் சொல்ல மாட்டே? உன் பொண்டாட்டி, மாப்ளைக்கு எண்ணை தேய்க்கறா. முத்தம் குடுக்கறா. இவனுக்கு அவளை நீ கூட்டிக்குடுக்கறியா?”

“இனிமே நான் பொறுத்துக்க மாட்டேன் மாப்ளே. இப்பவே நடவடிக்கை எடுக்கறேன். உங்களுக்கு மரத்து போச்சு. எனக்கு ரோஷம் இருக்கு.!”

அப்பா யாருக்கோ ஃபோன் செய்ய, அம்மா தடுத்தாள்.

“நீ ஏண்டீ தடுக்கறே. அவ உன்னைத்தான் கேவலப்படுத்தறா. இவளை மாப்ளை பயப்படறார். அதனால தான் அந்த அப்பாவி தாயை, கொண்டு போய் ஆஸ்ரமத்துல விட்டார். குழந்தைங்களை கொடைக்கானல்ல. நம்மை இவ தொடர்ந்து அவமானப்படுத்தினா, மாப்ளை நம்மையும் போக சொல்லிடுவார். இவ அராஜகம் தான் இந்த வீட்ல தொடரப்போகுது. மாப்ளை அழியப்போறது உறுதி.!”

“வாயை மூடுங்க. மாப்ளைக்கு சாபமா தர்றீங்க? உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க போங்க. நான் வர மாட்டேன்.”

“அதானே பார்த்தேன்? புருஷனை துரத்திட்டு இந்த ஆள் கூட சல்லாபமா? இந்த வயசிலும் உனக்கு அடங்கறதில்லை.”

“நிச்சயமா இவளுக்கு சாவு என் கையால தான்.!”

அவர் கொலை வெறியுடன் பாய, குறுக்கே வந்த துவாரகேஷ், துளசியை இழுத்துக்கொண்டு உள்ளே வந்தான். கதவை சாத்தினான்.

“ நான் குறுக்கே வரலைன்னா, அவர் உன்னை கொன்னு போட்டிருப்பார். டாக்டர் தாமதமா வந்தாங்க. ஓடி நீ வரும் போது தான், நான் காரை கொண்டு வந்து நிறுத்தினேன். அந்த கிறிஸ்துமஸ் ராத்திரில நான் வீட்ல இருந்தேனா? எதுக்காக இப்படி பழி சுமத்தறே? நான் கோவப்படாம கேக்கறேன். நிதானமா பதில் சொல்லு. அந்த நிர்வாண மந்திரவாதியை நடுநிசில நீ வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததை தெருவுல யாராவது பார்த்திருந்தா, உன் மானம் கப்பலேறி இருக்கும். இந்த நிலையிலும் நான் உன்னை சந்தேகப்படலை.இதப்பாரு! நடந்த சகலத்தையும் ஊரை கூட்டி சொல்லி, உன்னை பைத்தியம்னு ஆக்கி, பலவந்தமா மென்டல் ஆஸ்பத்திரில என்னால அடைக்க முடியாதா? ஏன் செய்யலை? என் குழந்தைங்க தன் தாயை இழக்ககூடாதுன்னு தானே சகலத்தையும் நான் தாங்கிக்கறேன். ஏன் உனக்கு இது புரியலை?”

“கொஞ்சற குரலை நான் கேட்டேன். டம்ளர், டவல் அந்தரத்துல மிதந்து வந்ததை பார்த்தேன். இது மந்திர வேலை தான்.!”

“சரிடீ. வீட்ல நான் சூன்யம் வச்சிருக்கேன். பல்லவி ஆஸ்பத்திரில சூன்யம் வைக்க என்னால முடியுமா? தயவு செஞ்சு தனியா யோசி.!”

அவன் கதவை நோக்கி நடக்க, அவள் பாய்ந்து வந்தாள்.

“நான் இந்த ரூம்ல தனியா இருக்க மாட்டேன்.!”

பாய்ந்து வெளியே வந்து விட்டாள். துவாரகா வெளியே புறப்பட்டான். வாசலில் இறங்கி காரை எடுத்தான். சாலைக்கு வர, ஆராவமுதனின் ஆள் பைக்கில் துவாரகேஷை பின் தொடர ஆரம்பித்தான்.  இன்னொரு உளவாளி ஆராவமுதன் எதிரே இருந்தான். பல்லவி க்ளினிக்குக்கு முதலில் துவாரகா வந்தது. பிறகு ஆவேசமாக பல்லவி வந்தது என ஆரம்பித்து தான் பார்த்த சகலமும் சொன்னான். துளசியை பைத்தியம் என ஆட்கள் துரத்தி, துவாரகா வந்து மீட்ட வரை சொன்னான்.

 “உள்ளே விசாரிச்சப்ப, இந்தம்மா டாக்டரை, தன் புருஷனோட இணைச்சு சந்தேகப்பட்டு அசிங்கமா பேசியிருக்கானு சொல்றாங்க. சுஷ்மா சங்கதியிலும் இது தொடருது. ஏற்கனவே துவாரகேஷை அவ பல வருஷங்களா டார்ச்சர் பண்றா.”

“நம்மை சேர்மன் கிட்ட மாட்டி விட்டு, நம்ம ஊழல் சகலத்தையும் வெளில கொண்டு வந்து, ஆதாரங்களோட நம்மை அசிங்கப்படுத்தி தெருவுக்கு கொண்டு வந்துட்டான். அதுக்கு அவனோட விஞ்ஞான புத்தி துணை. இப்ப சந்தேகப்படற மனைவியை ஒடுக்க, இதே விளையாட்டை தொடங்கியிருக்கான்.!”

இன்னொரு உளவாளி செல்வம் மூச்சிரைக்க ஓடி வந்தான். அவன் சேகரித்த மந்திரவாதி சங்கதியை , கிறிஸ்துமஸ் இரவில் மந்திரவாதியை துவாரகா வீட்டில் வைத்து போலீஸ் கைது செய்ததை, அவன் வெளியே வந்து விட்டதை சொன்னான். நிர்வாண மந்திர வாதிக்கு காஞ்சனா கையாள் என்பதையும் சொல்ல,

“நாளைக்கே அந்த மந்திரவாதியை சந்திக்கறோம். காஞ்சனாவை இங்கே வரவழை. இந்த துவாரகேஷ் பிள்ளை பூச்சி மாதிரி இருக்கான். ஆனா பயங்கர ஆசாமியா இருப்பான் போலிருக்கே?”

“நம்மை போட்ர போறான் குருவே. நமக்கு உயிர் ஒண்ணு தான் மிச்சமா இருக்கு. அதையும் இவன் எடுத்துடுவானா?”

“அவனோட எலக்ட்ரானிக் ரகசியங்களை கண்டு பிடிச்சிட்டா, அத்தனை உண்மைகளும் வெளில வந்துடும். சரி வேலையை பாரு.!”

துவாரகேஷ் காரை கொண்டு வந்து நிறுத்த, சுஷ்மா ஷாப்பிங் முடித்து காரில் ஏறினாள். நேரம் மாலை ஏழு. இரவு பத்து மணிக்கு கொடைக்கு புறப்பட தயாரானாள். பல்லவி அங்கு நடந்த கூத்தை சுஷ்மாவுக்கு ஃபோனில் சொல்லியிருந்தாள்.

“இத்தனை நடந்தும் துளசி அடங்கலை. அவளோட ஆவேசம் குறையலை. நீங்க இனி மேலும் பொறுத்துக்கணுமா துவாரகா? படக்குனு ஒரு முடிவை எடுங்க துவாரகா. இந்த சித்ரவதை வாழ்க்கைக்கு, ஒரு முற்றுப்புள்ளி வைங்க. எல்லாருக்கும் அது நல்லது.!”

“சுஷ்மா! துளசிக்கு பயம் வந்தாச்சு. சந்தேக எல்லைகளை கடந்து அவளுக்கு தன்னை சுற்றி என்ன நடக்குதுன்னு ஒரு கலக்கம் வந்தாச்சு. அவளை பைத்தியம்னு எல்லாரும் சொல்ல தொடங்கியாச்சு. அவ பார்த்த நிஜமான காட்சிகளை யார் கிட்ட சொன்னாலும், அவ மூளை கலங்கியிருக்குனு தான் சொல்லுவாங்க. உண்மையிலேயே இந்த நிலைல யாருக்குமே மூளை குழம்பும். ஆனா துளசி ஸ்ட்ராங் லேடி. யோசிக்க தொடங்கிட்டா.!”

“அதுல உங்களுக்கு என்ன பிரயோஜனம்? அவ திருந்துவாளா?

“வேற வழியில்லை. யாரும் இல்லைனா வழிக்கு வந்து தான் தீரணும். அதுக்கு முன்னால என்னை வீழ்த்த இன்னும் பெரிய ஆட்டங்களை ஆடுவா. என் எதிரிகள் இவளை கையில எடுப்பாங்க. ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியாச்சு. பாரேன்.!”

“என்ன சொல்றீங்க துவாரகா?”

“ஆராவமுதனும், அவனோட சகாக்களும் சகலமும் இழந்து தெருவுக்கு வந்தாச்சு. நான் முந்திக்கலைன்னா, அடுத்த  நாலு நாட்கள்ள கம்பெனியை ஏறத்தாழ எதிரிகளுக்கு இவங்க வித்திருப்பாங்க. நம்ம கம்பெனி ஷேர் வேல்யூ சரிஞ்சு, சேர்மன் மிகப்பெரிய சரிவை சந்திச்சிருப்பார். முழிச்சு கிட்ட காரணமா, சேர்மனை காப்பாற்றி அவங்களை தெருவுக்கு கொண்டு வந்தாச்சு. அதனால அந்த கூட்டம் கொலை வெறில இருக்கு. எதிரிகள் நம்பர் ஒன்.!”

“அவங்களை புடிச்சு உள்ளே போட்டிருக்கணும் துவாரகா. தப்பு பண்றவங்களை..துளசி உட்பட..நீங்க மன்னிக்கறீங்க. அதனால தான் சிக்கல் பெரிசாகுது.!”

“சுஷ்மா! துளசியை விட்டு வச்சது குழந்தைகளுக்காக. இந்த கூட்டத்தை உள்ளே போட்டிருந்தாலும் வெளில வந்துடுவாங்க. போலீஸை கொஞ்சம் கையில வச்சிருக்கான் ஆராவமுதன். கம்பெனில நிறைய வில்லங்கம் இருக்குனு நியூஸ் பரவினா, அது முதலீட்டாளர்களை முகம் சுருக்க வைக்கும். அடுதத்படியா எதிரி நம்பர் டூ..மந்திரவாதி கபாலி. அவனை அடிச்சு அசிங்கப்படுத்தின காரணமா, அவனும் கொலை காண்டுல இருக்கான்.!”

“எனக்கு பயமே அவன் கிட்டத்தான். அவனால உங்களுக்கு என்னல்லாம் பிரச்னைகள் வரும்னு தெரியலியே?”

“எது வந்தாலும் சந்திச்சு தான் ஆகணும் சுஷ்மா.!”

“இத்தனை நல்லவரா இருக்கற உங்களுக்கு ஏன் இவ்ளோ சங்கடங்கள்?”

“அவரவர் தலைல என்ன எழுதியிருக்கோ, அது தான் நடக்கும் சுஷ்மா. சரி நேரமாச்சு. நீ வீட்டுக்கு போய் பேக் பண்ணிக்கோ. காரும் டிரைவரும் ரெடி. டிரைவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. கையில லைசென்சோட ரிவால்வர் இருக்கும். உன்னை யாரும் நெருங்க முடியாது. தைரியமா புறப்படு. கார்ல டிவைஸ் வச்சிருக்கேன். ஜெல் தர்றேன். ஆபத்து நெருங்கினா நான் சொன்ன மாதிரி நடந்துகோ.”

அவளை வீட்டில் இறக்கி விட்டு புறப்பட்டான். அவனை தொடர்ந்து வந்த ஆள், துவாரகாவை பின் பற்றினான். யாருக்கோ ஃபோன் செய்தான். ஏதோ ஒரு தகவலை சொன்னான்.

“கொடைக்கானல்ல நம்ம கதிர் இருக்கான். அவனுக்கு தலைவர் ஆரா, தகவல் தந்தாச்சு. அவன் பார்த்துப்பான்.!”

துவாரகேஷ் நேராக அம்மா இருக்கும் ஆஸ்ரமத்துக்கு வந்தான். அம்மா அவனை பார்த்ததும் பரவசமானாள்.

“ எப்படீம்மா இருக்கே? சரியா சாப்பிடறியா?”

“ஏதோ உயிர் வாழ சாப்பிடறேன்பா. எனக்கு எப்பவும் உன்னை பற்றின கவலை தாண்டா துவாரகா. ஒரு மனைவிக்கு சந்தேகம் இருக்கலாம். என் புருஷன் எனக்கு மட்டும் தான் சொந்தம்னு ஒரு குறுகின மனசு இருக்கலாம். ஆனா இவளை மாதிரி வெறி பிடிச்ச ஒருத்தி உனக்கு அமைஞ்சது சாபக்கேடு. இவளை விட்டு தொலைச்சிட்டு, நீயும் கொடைக்கானல்ல போய் இருடா. உன் கம்பெனி கிளை தான் அங்கே இருக்கே.!”

“இல்லைம்மா. இங்கே எதிரிகள் சுற்றி சூழ்ந்தாச்சு. சேர்மனை நான் பாதுகாக்கணும். விடும்மா. நீ என் பக்கத்துல இல்லைன்னாலும் நீதான் என்னோட காவல் தெய்வம். இது அனாதை விடுதி இல்லை. வசதியான சீனியர் ஹோம். உன்னை நல்லா கவனிக்க சொல்லி நிறைய பணம் தந்திருக்கேன்மா.!”

அம்மாவுக்கு பால் எடுத்து வரும் பணிப்பெண்ணை, அந்த வயதான ஆயா மடக்கினாள். அவள் கையில் பணத்தை திணித்து விட்டு, பாலை ஆயா வாங்கி கொண்டாள். ஒரு ஓரமாக வந்து பாலில் ஒரு பொடியை கலந்தாள். அதோடு அம்மா அறை வாசலுக்கு வந்து நின்றாள்.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 20 | அடுத்தபகுதி – 22

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...