என்னை காணவில்லை – 20 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 20 | தேவிபாலா

அத்தியாயம் – 20

சுஷ்மாவை பார்க்க துவாரகேஷ் வந்தான். சுஷ்மாவின் பெற்றோர் அவனை வரவேற்க, குழந்தைகளுக்காக வாங்கி வந்த பொங்கல் உடைகளை தந்தான்.

“ இதைத்தரவா இத்தனை தூரம் வந்தே துவாரகா? நான் வாங்கிட்டேன். அப்பா தந்தார்னு தான் அவங்க கிட்ட தரப்போறேன்.!”

“இதுவும் இருக்கட்டும் சுஷ்மா. இந்த ட்ரஸ்கள் உனக்கு, அப்பா, அம்மாவுக்கு பொங்கலுக்கு. நீங்களும் என் குடும்பம் தானே?”

குடும்பமே நெகிழ்ந்து போனது. செலவுக்கு சுஷ்மாவுக்கு பணம் தந்தான்.

“ உனக்கு கார் ஏற்பாடு செஞ்சிருக்கேன். அங்கே நம்ம கம்பெனி ஆட்கள் கிட்ட பேசியிருக்கேன். பள்ளிக்கூட நிர்வாகிக்கு உன் ஃபோட்டோ, ஐ.டி. ப்ரூஃப் அனுப்பியிருக்கேன். உன் கூட மட்டும் தான் குழந்தைகளை அனுப்புவாங்க. நம்ம ஆட்கள் அங்கே உனக்கு எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு தருவாங்க. எப்ப வேணும்னாலும் என்னை கூப்பிடு. அங்குள்ள போலீஸ் அதிகாரிக்கு பேசிட்டேன்.!”

“ஏன் துவாரகா? எதுக்கு இத்தனை முன்னேற்பாடு? ஏதாவது பயமிருக்கா?”

“என்னால பாதிக்கப்பட்ட அந்த ஊழல் பெருச்சாளிகள், ஆராவமுதன் க்ரூப், வெறியோட அலையறாங்க. அதனால இது முன்னெச்சரிக்கை. நீ கவலைப்படாம உன் பயணத்தை தொடரலாம்.!”

“தம்பி! வெளியூர்ல உள்ள குழந்தைகளுக்கு பிரச்னை இருக்காதே?”

“இல்லீங்க. உள்ளூர்ல அவங்கம்மா காரணமா தினசரி படற வேதனைகளை விட புதுசா என்ன பிரச்னை வரப்போகுது.? சுஷ்மா! கொஞ்சம் வெளியே வா.!”

சுஷ்மா வெளியே வர,

“மொபைலை மறந்து வீட்ல வச்சிட்டேன். பல்லவி நம்பருக்கு போடு.!”

அவள் போட்டுத்தர,

“துளசி புறப்பட்டாச்சு. உங்க க்ளீனிக் வர்றா. நீங்க டிவைசை ஓப்பன் பண்ணி வச்சிடுங்க. நான் இப்ப வந்திர்றேன்.!”

“என்ன பண்றீங்க துவாரகா?”

“நீ கொடைலருந்து திரும்பி வந்ததும் சொல்றேன். சந்தோஷமா போயிட்டு வா. ஆல் த பெஸ்ட்.!”

அவன் காரை எடுத்து நேராக பல்லவி க்ளீனிக் புறப்பட்டான். ஆராவமுதன் ஆள், வீட்டிலிருந்து துளசி புறப்பட்டதும் பைக்கை இயக்க, பின்னாலேயே துவாரகா புறப்பட, தடுமாறி போனான். யாரை பின் தொடர்வது என தெரியவில்லை. துளசியை பின் தொடர்ந்தான். முதலில் துவாரகா வந்து விட்டான். பல்லவி காத்திருக்க, உள் அறைக்கு வந்து அவன் பொருத்தியிருந்த டிவைசை சரி பார்த்தான். அந்த சொல்யூஷனை பல்லவியிடம் தந்து, தடவிக்கொள்ள சொன்னான்.  வெளியே முப்பது பேஷன்டுகள் காத்திருந்தார்கள். மேலே இருபது படுக்கைகள் கொண்ட மனநல மருத்துவ மனை.

“ எல்லாம் சரியா இருக்கா டாக்டர்?”

“எனக்கே கொஞ்சம் பதட்டமா இருக்கு துவாரகேஷ்!”

“எதுக்கு? நான் இங்கே தானே இருக்கேன். சொல்லி தந்ததை மட்டும் பேசுங்க.!”

துளசி ஆவேசமாக ஆட்டோவில் வந்து இறங்கினாள். வேகமாக உள்ளே வந்தாள்.

“ டாக்டர் பல்லவி எங்கே?”

“உள்ளே பேஷன்டை பாக்கறாங்க. ஒக்காருங்க. டோக்கன் தர்றேன்.!”

“தேவையில்லை. நான் ட்ரீட்மென்டுக்கு இங்கே வரலை.!”

“அப்பாயின்ட்மென்ட் இருக்கா?”

“தள்ளுடி!”

அவளை பலவந்தமாக விலக்கி உள்ளே நுழைந்தாள் துளசி. அந்தப்பெண் பின்னால் வர, டாக்டர் அறையில் யாரும் இல்லை.

 “ டாக்டர் எப்ப வெளில போனாங்க?”

அவள் வெளியேற, துளசியும் வெளியே காலை வைக்க, கதவு தானாக சாத்தி தாழ்ப்பாள் நகர்ந்து லாக் செய்ய, துளசி மிரண்டாள்.

“ என்ன துவாரகா, தாப்பா போடறீங்க? வெளியே பேஷன்டுகள் இருக்காங்க.!”

“எனக்கு பேஷன்ஸ் இல்லை பல்லவி. உன்னை அப்படியே இறுக்கி..”

“எதுக்கு? நீங்க கேட்டா நான் தர மாட்டேனா? அந்த கிறுக்கச்சி கூட வாழ்ந்து..ஸாரி..நீங்க எங்கே வாழ்ந்தீங்க? லட்டு மாதிரி இருக்கற உங்களைப்போய்,  நிச்சயமா அவ பைத்தியம் தான். நான் உங்களை விட மாட்டேன் துவாரகா!”

ஆட்களே இல்லை.ஆனால் சல்லாபக்குரல். அன்றைக்கு வீட்டில் இதே மாதிரி..சுஷ்மாவுடன். ஆனால் ஆட்களே இல்லை. உள்ளே திரை விலக்கி எட்டி பார்க்க, பரிசோதனை அறையில் யாரும் இல்லை. துளசி மிரண்டு வெளியே வர,

“உங்களுக்கு ரொம்ப வேர்க்குது துவாரகா. நான் துடைச்சு விடறேன்!”

சில நொடிகளில் மேஜையில் இருக்கும் டவல் அந்தரத்தில் மிதந்து வர, துளசி நடுங்கினாள். யாருக்கோ துடைப்பதை போல டவல் மட்டுமே அசைந்தது. நிஜத்தில் பல்லவி எடுத்து தந்த டவலை வைத்து, துவாரகா தானே தன் முகத்தை துடைத்து கொண்டான். துளசி கண்களுக்கு டவல் மட்டுமே தெரிந்தது.

“ குடிக்க தண்ணி வேணும் பல்லவி.!”

பல்லவி எழுந்து வந்து கண்ணாடி ஜக் எடுத்து, கண்ணாடி டம்ளரில் நீரை ஊற்றினாள். துளசி பார்வையில் ஜக் தானாக உயர்ந்து தண்ணீரை டம்ளரில் வார்க்க, டம்ளர் தானாக அந்தரத்தில் மிதந்து வர( எடுத்து வந்தது பல்லவி. ஆனால், துளசி கண்களுக்கு பல்லவி, துவாரகா இருவரும் தெரியவில்லை).அப்படியே கடகடவென இறங்கி, காலி டம்ளர் திரும்பி மேஜைக்கு போனது. துளசிக்கு மயக்கமே வந்தது. அங்கே நிற்க முடியாமல் வெளியே வந்தாள். உட்கார்ந்து விட்டாள். சில நிமிஷங்களில் பெல் அடிக்க, நர்ஸ் உள்ளே போய், திரும்பினாள்.

“ டாக்டர் கூப்பிடறாங்க!”

துளசி எழுந்தாள். அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய, பல்லவி உட்கார்ந்திருந்தாள்.

“ யார் நீங்க? ஏன் இத்தனை வேகமா வர்றீங்க?”

“எங்கே துவாரகேஷ்?”

“ஓ…உன்னை சுஷ்மா வீட்ல பார்த்திருக்கேன். துவாரகா மனைவி துளசி தானே? துவாரகேஷ் இங்கே வரலியே?”

“நிறுத்துடி. கொஞ்சம் முன்னால என் புருஷன் கூட சல்லாபம் பண்ணிட்டு, அவனுக்கு வேர்வை துடைச்சு, தண்ணீர் தந்து..கொஞ்சிக்கிட்டிருந்தியே!”

“நான்சென்ஸ்! என்ன தப்பா பேசற? நீ பைத்தியம்னு சுஷ்மா சொன்னப்ப நான் நம்பலை. இப்ப கண்ணால பாக்கறேன். பாய்ஸ்!”

குரல் கொடுக்க, இரண்டு இளைஞர்கள் ஓடி வர,

“இந்தம்மாவை இழுத்து பிடிங்க! நர்ஸ்! இன்ஜெக்ஷன் ரெடி பண்ணு.!”

“அவர்கள் பிடிக்க, நர்ஸ் ஊசியை ரெடி பண்ண, துளசி மிரண்டாள்.

“ ஏய்..என்ன பண்ணப்போறீங்க என்னை?”

“கொல்லப்போறதில்லை. உன்னை வெளில விட்டா ஆபத்து. ரூம்ல நானில்லை. துவாரகேஷ் இங்கே வரலை. ஆனா நீ தப்பு, தப்பா பேசற எங்களைப்பற்றி. நான் ஒரு டாக்டர். வெளில ஏராளமான பேஷன்ட். வேலை நேரத்துல உன் புருஷன் கூட சல்லாபம் பண்ணறதா தப்பா பேசறியா? போலீசை கூப்பிடவா? சுஷ்மா உன்னை பற்றி நிறைய சொன்னா!”

“யாரு? அந்த ….டியா முண்டையா?”

“ஏய்..ஸ்டாப் இட். அன்பார்லிமென்டரி வார்த்தைகளை பேசறியா? போன வாரம் துவாரகேஷ் எங்கிட்ட வருத்தப்பட்டார். சந்தேகம் முத்திப்போய் என் மனைவிக்கு மூளை கலங்கி போச்சு. நான் கூப்பிட்டா அவ இங்கே வர மாட்டானு. அது சரியா போச்சு. முதல்ல ஊசியை போடுங்க. நான் துவாரகேஷூக்கு தகவல் தர்றேன்.!”

ஊசி டாக்டரின் கைக்கு மாற, டாக்டர் இவளை நெருங்க,

“ ஊசி வேண்டாம். எனக்கு மூளை கலங்கலை. நான் தெளிவா இருக்கேன். என்னை விட்ருங்க!”

படக்கென அவர்களை பலவந்தமாக உதறி விட்டு துளசி வெளியே ஓட, ஆட்கள் துரத்த, ஹாலை கடந்து துளசி ஓட,

“ஏதோ ஒரு பைத்தியம் தப்பிச்சு ஓடுதுப்பா!”

ஓடிக்கொண்டிருக்கும் துளசியின் காதில் இந்த சொற்கள் விழ வேதனை, அவமானம் சுமந்து தலை தெறிக்க ஓடி, துளசி சாலைக்கு வந்து விட்டாள். அவளை உரசிய படி கார் வந்து நிற்க, ஓடிய வேகத்தில் அந்த காரின் மேல் துளசி விழ, காரை நிறுத்தி, துவாரகா இறங்கினான். அங்கே உள் அறையில் பல்லவி பேசுவது சகலமும் கேட்டு, வேறு வழியாக வெளியே வந்த துவாரகா, தள்ளி நிறுத்தியிருந்த காரில் ஏறி முன்னால் வர, துளசி ஓடி வர சரியாக இருந்தது.

“ நீங்களா? இப்பத்தான் வர்றீங்களா?”

“ஆமாம். நீ ஃபோன்ல கண்ட படி பேசி புறப்பட்டே. ஒரு கௌரவமான டாக்டரை நீ அசிங்கப்படுத்தக்கூடாதுன்னு நான் அவசரமா வர்றேன்.!”

ஆட்களும், நர்சும் ஓடி வர,

“ அய்யோ, அவங்க வந்தாச்சு. எனக்கு ஊசி போட வர்றாங்க. நான் பைத்தியமில்லை. காரை எடுங்க. என்னை இதுல சேர்த்துடாதீங்க, ப்ளீஸ்!”

அவர்கள் நெருங்கி விட்டார்கள்.

“ சார், நீங்க வந்தாச்சா? டாக்டர் மேம் கடும் கோபத்துல இருக்காங்க.!”

“நான் பேசிக்கறேன் அவங்க கிட்ட. துளசி! நீ வண்டில ஏறு. நீங்க போங்க.!”

அதற்குள் கூட்டம் சேர்ந்து விட, துவாரகேஷ் காரில் ஏறி, அதை எடுத்து போக்குவரத்தில் கலந்தான். துளசி நிம்மதி பெருமூச்சு விட, துவாரகா ஃபோன் அடிக்க,

“ குட்மார்னிங் டாக்டர்!”

அவன் ஸ்பீக்கரை இயக்க,

“ நிச்சயமா துளசி பைத்தியம் தான். என்னை உங்களோட சேர்த்து, அசிங்க அசிங்கமா பேசி, ரகளை பண்ணி..வாட் ஈஸ் திஸ் துவாரகேஷ்? நான் அப்பத்தான் வந்திருக்கேன். நீங்க வரவேயில்லை. என்னன்னமோ பேசறாங்க. நிச்சயமா சந்தேகம் உச்சிக்கு போய் மூளையை பாதிச்சிருக்கு. இனி வீட்ல வச்சுக்க முடியாது. துளசியை அட்மிட் பண்ணணும் துவாரகேஷ்!”

ஸ்பீக்கரை அவன் வேண்டுமென்றே அழுத்தியதால், சகலமும் துளசி கேட்க, பெரிதாக அதிர்ந்தாள்.

“ நான் உங்களுக்காக அவங்களை சும்மா விடறேன். என்ன ஒரு அசிங்கமான லேடி. தன் புருஷனை இப்படியா ஒருத்தி பேசுவா? ஏன் நீங்க பொறுத்துக்கறீங்க? வேற யாரா இருந்தாலும், அடிச்சு துரத்தியிருப்பாங்க. அட, நீங்க சகிச்சுக்கலாம். நான் ஏன் பொறுத்துக்கணும்? நம்ம மேல நடக்காத ஒண்ணை சொல்லி பழி சுமத்தினா எப்படி? எங்கிட்ட நீங்க கூட்டிட்டு வந்தாலும் இந்த பைத்தியத்துக்கு நான் வைத்தியம் பார்க்க மாட்டேன்.!”

“டாக்டர். நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அப்புறமா உங்க கிட்ட பேசறேன்!”

அவன் கட் செய்ய,

துளசி ஒரு மாதிரி நிலை குலைந்து போயிருந்தாள்.

“ இதப்பாரு! நீ என்னையும், நம்ம குடும்பத்தாரையும் கொடுமை படுத்தி சாகடிக்கலாம். எங்க தலையெழுத்து அது. ஆனா ஒரு கௌரவமான டாக்டர் மேல கையை வச்சிருக்கே நீ. முதல்ல சுஷ்மா. அப்புறமா எங்கம்மா, உங்கம்மா. இப்ப டாக்டர் பல்லவி. நான் மானமா முழுக்க ட்ரஸ் போட்டு வாழறேன். நீதான் நடுநிசில நிர்வாண மந்திரவாதியை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றே. நான் கேவலமா? இல்லை நீ அசிங்கமானவளா? சொல்லு துளசி. நீ வீம்புக்கு என்னை அவமானப்படுத்தினாலும், யோசனை பண்ணு.”

துளசிக்கு பலமான அடி இறங்கியது.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 19 | அடுத்தபகுதி – 21

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...