மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 19 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 19 | பெ. கருணாகரன்

தாவணி வலை! 

சுமார் நாற்பது  ஆண்டுகளுக்கு முன்பு, அன்று வீடு திடீரென்று பரபரப்பானது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கும்பலாக வீட்டுக்கு வந்து அக்காவைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அக்காவை வீட்டின் மூலையில் உலக்கையைக் குறுக்கே போட்டு உட்கார்த்தி வைத்திருந்தார்கள். அவருக்கு என்ன ஆச்சு என்று அக்காவிடம் நான் கேட்கப் போனால், எல்லோரும் என்னை விரட்டினார்கள்.  ஊரிலிருந்து சொந்தக்காரர்கள் எல்லாம் வந்தார்கள். வாழைப்பழம், சாக்லெட், சர்க்கரை என்று வீடே இனிப்பு மயமானது.

சிலதினங்கள் கழித்து, அக்காவைக் கூட்டிக் கொண்டு அம்மா வெளியில் சென்றபோது, அக்கா புதிய தாவணி கட்டியிருந்தார். அவரது நடையில் ஒரு தயக்கம். முகத்தில் வெட்கம். அதை அணிந்து நடப்பதில் ஓர் அசௌகரியத் தன்மை. சிறிய பதட்டம்…

அக்கா இதற்கு முன், அப்பாவின் துண்டை தாவணி மாதிரி தோளில் போட்டுக் கொண்டு, முந்தானை போன்ற பாவனையில் அதன் நுனியைப் பிடித்து விசிறிக் கொண்டு வீட்டில் சுற்றிவரும் போதெல்லாம், அம்மா, “துண்டைத் தூக்கிப் போட்டுட்டுப் போய் வேலையைப் பாருடி…” என்று விரட்டுவார்.

அக்கா அவருக்கு டிமிக்கிக் கொடுத்துவிட்டு இங்கும் அங்கும் ஆட்டம் காட்டுவார். அன்று அவர் விரும்பி அணிந்த உடையை அம்மா எதிர்த்தார். இன்று அம்மாவே விரும்பி அணிவிக்கிறார். ஆனால், அக்காவுக்கு அதில் ஏனோ விருப்பமில்லை.

இப்போது யோசிக்கும்போது, பெண் வளர்ந்து பெரிய மனுஷியாகி விட்டதை அவருக்கு அணிவிக்கும் உடை மூலம் வெளி உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. மஞ்சள் நீராட்டு விழாவிற்கெல்லாம் பதாகை வைக்கும் மனோபாவம் இதன் நீட்சிதான் போலும்.

சிறுவயதில் என் மகள் துண்டை எடுத்து தாவணி பாவனையில் தோளில் போட்டுக் கொண்டு வீட்டில் கண்ணாடியில் அழகு பார்த்ததும், பத்து வயதானபோதே என் பையன், ‘அப்பா… எனக்கு மீசை முளைச்சுடுச்சா பாரேன்…’ என்று என்னிடம் கேட்டதும்  ஒரேவித மனோபாவத்தின் இருவேறு வெளிப்பாடுகள் என்றே தோன்றுகிறது.

தாங்கள் பெரியவர்கள் ஆகிவிட்டதான அல்லது ஆகிவிட வேண்டும் என்கிற அந்தச் சின்ன வாண்டுகளின் ஆசைகளே அவை. நானும் கூட சிறுவயதில் பெரியவர்களின் செருப்பைப் போட்டுக் கொண்டு ‘த்த்தக்கா, பித்தக்கா’ என்று நடப்பதில் ஆனந்தமடைவேன். அதில் ஒரு ‘பெரிய மனுஷ’ சந்தோஷம்.

அக்காவுக்கு அதிகமாக கடையில் புதிய தாவணி எடுத்ததே இல்லை. அம்மாவின் பழைய சேலைகளே இரண்டாகக் கிழிக்கப்பட்டு தாவணிகளாய் மாறின. புடவை 70 எம்.எம். என்றால், தாவணி 35 எம்.எம்.

மழைநாட்களில் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருகரையும் வெள்ளம் வரும். வெள்ளம் வடிந்தபிறகு, ஆற்றங்கரையோரம் கெண்டை, வவுத்தான் கெண்டை போன்ற மீன்கள் துள்ளாட்டம் போடும். நண்பர்களுடன் ஆற்றுக்குச் சென்று மீன் பிடிப்போம். பெரும்பாலும் அக்காக்களின் தாவணிகளே மீன் பிடிக்கப்பயன்படும். தாவணி வலை?

தாவணியை விரித்து, அந்தப்பக்கம் ஒருவனும், இந்தப் பக்கம் ஒருவனுமாக இருகைகளாலும் விரித்து தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் பிடித்துக்கொண்டு, கரையை நோக்கி தாவணியை இழுத்து வருவோம். குட்டி குட்டியாக ஏகப்பட்ட மீன்கள் சிக்கும். அவற்றைக் கரையில் பள்ளம் தோண்டி அந்த நீரூற்றில் மீன்களை விட்டு அவை நீந்துவதைப் பார்ப்பதில் தனி சுவாரசியம்தான்.

இன்றைய தலைமுறையினர் மீன் பிடிக்க நினைத்தாலும் முடியாது. நதியில் நீரும் இல்லை. வீட்டில் அக்காக்கள் உண்டு. தாவணிகள் இல்லை.

இப்போதெல்லாம் தாவணிகளின் பயன்பாடு அருகிவிட்டது. அத்திப் பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவதுதான் தாவணிப் பெண்களைக் காண முடிகிறது. கல்யாணம் போன்ற விஷேச நிகழ்ச்சிகளில் பட்டுப் புடவை கட்டுவதைப் போலவே, தாவணிகளும் வீட்டு விஷேச உடையாய் மருகிவிட்டது.

ரயில்வே ஸ்டேஷன், சினிமாத் தியேட்டர் போன்ற இடங்களில் அடிக்கடி நான் காணும் காட்சி, ஒரு பெண் தன் புடவையின் இடுப்புப் பகுதியைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு, அவிழ்ந்து கொண்ட சேலையைக் கட்டுவதற்கு மறைப்பான இடம் இருக்கிறதா என்று பதட்டத்துடன் தேடுவார். இந்த அனுபவம் பலருக்கும் நேர்ந்திருக்கும்.

பருவமடைந்த பெண்கள் அணியும் நம் பாரம்பரிய உடைகள் அசௌகரியமானவையாகவே தோன்றுகிறது. அவர்கள் எந்த வேலை செய்தாலும் அவர்களின் கவனம் அவர்கள் கட்டியிருக்கும் தங்கள் புடவையின் மீதும் பதிந்திருக்கும். இதுவும் ஒரு வகை மல்டி டாஸ்க்தான்.

எனக்குக் கூட வேட்டி கட்டும்போது ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும். என் கவனமெல்லாம் வேட்டியின் மீதே இருக்கும். எங்கேயாவது அவிழ்ந்து மானத்தை வாங்கிவிடக் கூடாதே என்று கைகளால் அதனை அவ்வப்போது, தொட்டுப் பார்த்துக் கொள்வேன். அதனால் வேட்டியின் மீது எனக்கு நாட்டமில்லை. பேண்ட்தான் வசதி. இதே மனோபாவம்தான் தாவணியையும் வழக்கொழித்திருக்க  வேண்டும்.

தாவணியின் இடத்தை இப்போது சல்வார்களும், சுடிதார்களும் நிரப்பிவிட்டன. நவீன உடை என்று கருதப்பட்ட சல்வார் இன்று நடைமுறை உடையாகி, தாவணி பாரம்பரிய உடையாகி பீரோவில் அந்துருண்டை மயக்கத்தில் தூங்குகிறது. ஃபேஷன் ஷோவில் நவயுவதிகள் தாவணி அணிந்து கேட் வாக் செய்வதைக் காண முடிகிறது. பெண்கள் கல்லூரிகளில் தாவணி தினம் கொண்டாடி பாரம்பரியத்தை நினைவுப்படுத்தி மகிழ்கிறார்கள்.

பாரம்பரிய உடை வழக்கொழிந்த சோகம் சிலருக்கு இருக்கலாம். அது தேவையில்லை என்றே நினைக்கிறேன். சௌகரியமான எந்தப் பாரம்பரியமும், நவீனத்திடம் தோற்பதில்லை. அசௌகரியமானவற்றைதான் நவீனம் இட்டு நிரப்புகிறது. புடவையாகட்டும், தாவணியாகட்டும் இரண்டின் முக்கிய பலன் முந்தானைதான். அந்த முந்தானையின் இடத்தைத் துப்பட்டாக்கள் பிடித்துவிட்டன. தேவையை எது எளிதாக நிறைவேற்றுகிறதோ அவற்றுக்கே மக்கள் தாவுகிறார்கள்.

தாவணியும் அப்படிதான். சல்வார், சுடிதார் என்கிற நவீனத்தின் வெற்றியின் சூட்சுமப் புள்ளி அதுதான்.

முன்பு ஒருமுறை என் மகளிடம் ‘தாவணி எடுத்துத் தரவா?’ என்று நான் பாசத்துடன் கேட்டபோது, ‘போப்பா… உனக்கு வேறு வேலை இல்லை…’ என்று சூடாக முறைத்தாள். ஒரு தலைமுறை சௌகரியத்தை முன்னெடுத்து தங்கள் உடை இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது, தாவணிகள் பரணுக்குப் பறந்தன.

புடவைக்கும் அந்த நிலை வரலாம். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம்.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 18 | அடுத்தபகுதி – 20

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...