மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 18 | பெ. கருணாகரன்
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி!
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. அந்த ஊரில் ஒரு கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கவிருந்தது. நானும் சென்றிருந்தேன். கூட்டத்துக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய சிதம்பரம் (தனி) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டார். தொண்டர்கள் ஏராளமானோர் தரையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் வந்தார். அவரும் தொண்டர்களுடன் தொண்டராய் தரையில் அமர்ந்தார். தனக்குப் பக்கத்தில் அவர் அமர்வதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஒருவர் விருட்டென்று எழுந்தார். தூரமாய்ப் போய்த் தள்ளி உட்கார்ந்து கொண்டார். அவர் அப்போது பேசிய வார்த்தைகள்… “எம்பி ஆயிட்டால் அவன் என் கூட சரிசமமா உட்கார்ந்திடலாமா?”
இந்தப் பேச்சு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. லட்சக்கணக்கில் ஓட்டு வாங்கி மக்கள் அங்கீகாரத்துடன் ஓர் உயரிய பதவி வகித்தவருக்கே இந்த நிலை என்றால்? சாமான்ய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனிதர்கள் தங்கள் திறமைகளாலும் தனித்துவங்களாலும் என்னதான் சமூகத்தின் முன்னிலைக்குச் சென்றாலும் அவர்களை அங்கீகரிப்பதென்பது குதிரைக் கொம்புதான் போலும்.
அந்தக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அப்படிக் கூறியவர் கூட அதிகம் கல்வியறிவில்லாதவர். ஆனால், படித்த சமூகத்திலேயே அத்தகைய ஜாதி வன்மம் தலையெடுத்தாடிக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். காதல், அதிகாரம் கைப்பற்றல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜாதி வன்மம் பல மனித உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டே இருக்கிறது. அறிவுசார் சமூகம் கூட ஜாதி உணர்வில் ஆழ்ந்து போயிருப்பதையும் கவலையுடன் காண நேரிடுகிறது. சமீபத்தில் முகநூலில் ஒரு நிலைத்தகவல். அதன் சாராம்சம்… ‘ஒரு காலத்தில் தெருவில் செருப்பு போட்டுக் கொண்டு வரத் தகுதி இல்லாதவன் எல்லாம் இப்போ நம் வண்டியில் லிப்ஃட் கேட்கிறான். என்ன காலக் கொடுமை..?’ இது காலக் கொடுமையா? அல்லது மனோபாவக் கொடுமையா?
ஒருவன் தன் திறமையின் மூலம் முன்னேறி வருவதை ஏன் சகித்துக் கொள்ள முடிவதில்லை? ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மீது ஏன் அருவருப்பு..? எரிச்சல்? ஜாதியைத் தொடர்த் தலைமுறைக்கென்று நேர்ந்துவிட்டது யார்? ஜாதி என்ற பிரிவு எதை வைத்துத் தோன்றியது? தொழிலை வைத்துத்தானே? அப்படியென்றால் ஜாதியை ஒரு தொழில் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஜாதி என்பது தொழில். ஜாதிச் சங்கம் என்பது தொழிற்சங்கம் மாதிரி. ஒரே தொழில் செய்பவர்கள் சேர்ந்து அமைக்கும் சங்கம். தொழிற்சாலை ஊழியர்கள் சேர்ந்து சங்கம் வைப்பது போல. ரயில்வே ஊழியர்கள் சங்கம் வைப்பது போல அதுவும் ஒரு சங்கம். அப்படியென்றால் ஒரு தொழிற்சங்கத்தில் அந்தத் தொழில் செய்யாதவர்களுக்கு அனுமதியில்லையே.
பொதுப்பணித் துறை ஊழியர்களின் சங்கத்தில் அவர்கள்தான் உறுப்பினர்கள். வருவாய்த்துறை ஊழியர்களுக்கு அந்தச் சங்கத்தில் உறுப்பினராகத் தகுதியில்லை. வருவாய்ப் பிரிவு ஊழியரின் தந்தை முன்பு பொதுப்பணித்துறையில் ஊழியராக இருந்தாலும் கூட அவர் வருவாய்ப்பிரிவு ஊழியர்கள் சங்கத்தில்தான் உறுப்பினராக முடியும். ஜாதியில் மட்டும் இது விதிவிலக்கு. தொடர்த் தலைமுறைக்கென்று அது நிர்ப்பந்திக்கப்பட்டது விநோதம்தான்.
ஜாதி என்பது எதில் தொடங்குகிறது? தொழிலை வைத்து… ஒரு தொழிலைச் செய்யக் கூடியவர் அந்த ஜாதியைச் சேர்ந்தவர். ஆனால், நீ எந்தத் தொழில் செய்தாலும் பரவாயில்லை. நீ இந்த ஜாதிதான் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?
இன்று செருப்புத் தைப்பவர்களின் மீது சமூகம் கொடுக்கும் அழுத்தம் சொல்லும் தரமன்று. அதேநேரம் பிராண்டட் செருப்புகள் தயாரித்து விற்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் நிலை என்ன? அவர்கள் தொழில் செருப்பு தயாரிப்பது. அவர்களுக்குத் தொழில் அதிபர் என்னும் மரியாதை. அதேநேரம் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளுக்குக் கிடைப்பதோ மிகக் கேவலமான அணுகுமுறை. இன்று பியூட்டி பார்லர்கள் பல சமூகத்தாராலும் நடத்தப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதையே வேறு. மேலும் அவர்கள் தங்கள் பழைய ஜாதியமைப்பிலேயே தொடர்ந்து கொண்டு பியூட்டி பார்லரையும் நடத்திக் கொள்ளலாம். இன்று சென்னையில் பல இடங்களில் வாஷிங் மெஷின் வைத்துக் கொண்டு துணி சலவைக் கூடங்களும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் சார்ந்த சமூகங்கள் வேறு. ஒரு ஜாதியினர் செய்யும் தொழிலை இவர்கள் செய்வதால் இவர்கள் ஜாதி மாறிவிடுவதில்லை. தொழிலை வைத்துதான் ஜாதி என்றால் அவர்களும் ஜாதி மாற வேண்டாமா?
போர்த் தொழில் செய்பவர்கள் சத்திரியர்கள் என்றால், இன்று ராணுவத்தில் எவ்வளவோ தலித்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களையும் சத்திரியர் பட்டியலில் சேர்க்கலாம் தானே? இன்றைய சமூகம் உலக மயமாகி தன் பழைமைக் கட்டமைப்புகளை நொறுங்கி, தனியடையாளங்களை இழந்து மாறிவிட்டது. என்றாலும் ரத்தத்தாலோ, தோற்றத்தாலோ அடையாளப்படுத்தி விடமுடியாத ஒரு அரூப விஷயத்தைத்தான் நாம் அவர்களுக்கு அடையாளமாகத் தந்திருக்கிறோம். அவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்களின் முகங்களில் அந்த முகமூடியை வலிந்து மாட்டிவிடுகிறோம்.
சென்னையில் பணிபுரிபவர்களில் ஏராளமானோர் தான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் தங்கள் உண்மை ஜாதியைக் கூறுவதில்லை. காரணம் சென்னை போன்ற முன்னேறிய நகரங்களிலும் ஜாதி பார்க்கும் மனோபாவ மனிதர்கள் இன்னும் இருப்பதுதான். ஒருவன் எந்தப் பணியில் இருந்தாலும் மிக உயர்ந்த சம்பளம் வாங்குபவனாக இருந்தாலும் தன் சுயஜாதிக்கார்களுக்கே வாடகைக்கு விடும் அந்த மனிதர்களை என்ன சொல்ல?
ஒரு ஜாதியை உயர்வென்றும் இன்னென்றைத் தாழ்வென்றும் கூறுதல் எவ்வகையில் நியாயம்?
நான் பள்ளி நாட்களில் கடைசி பெஞ்ச் மாணவன். ஒழுங்காகப் படிக்க மாட்டேன். ஒருநாள் ஆசிரியர் என்னைப் பார்த்து, “மாடு மேய்க்கத்தான் நீ லாயக்கு…” என்று கிண்டலடித்தார். இப்போது அதனை யோசிக்கும்போது, சிரிப்புடன் கூடவே சிந்தனைகளும் அரும்புகிறது. எல்லாத் தொழிலிலும் ஒரு நுட்பம் உண்டு. அந்த நுட்பத்தின் விற்பன்னர்தான் அந்தத் தொழிலில் சிறக்க முடியும். அது செருப்பு தைப்பதாக இருந்தாலும் துணி தைப்பதாக இருந்தாலும். அந்த வகையில், மாடு மேய்ப்பது என்பது சாதாரண விஷயமா? அதில் உள்ள சிரமங்கள் அவருக்குத் தெரியாது.
வயல்நடுவில் இருக்கும் வரப்புகளில் பயிருக்குச் சேதாரம் இல்லாமல் மாடு மேய்க்கவும் தனித்திறமை வேண்டும். மேலும் ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு விதம். பத்து மாடுகளுக்கு மேல் ஒரு சேர மேய்ப்பது என்பது சிரமமான காரியம். விளைச்சலில் மேய்ந்து விடாமல் பார்ப்பது தொடங்கி, திசை தவறி மேய போன இடத்தில் காணாமல் போகும் மாட்டை தேடுவது என பல பிரச்சினைகளை கொண்ட தொழில் அது. ஆனால், படித்த ஆசிரியர் அந்தத் தொழிலையே மிகக் கேவலமாக எடைபோட்டு அதைப் பற்றிய விமர்சனம் செய்தது வருத்தம் தரவே செய்கிறது.
மாடு மேய்ப்பது என்றல்ல, இன்று சமூகத்தின் கீழ்மைப்பார்வை பார்க்கப்படும் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் உண்டு. ஒரு தொழிலை உயர்வாகவோ அல்லது மலிவாகவோ எடைபோடும் மனோபாவம் அதன் சம்பாத்தியத்தை வைத்தே வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எல்லாத் தொழிலும் ஒரு Taskதான். எல்லா வேலையிலும் ஒரு நேர்த்தி இருக்கும் அதை ஒழுங்காக கையாண்டால்தான் அந்தந்த வேலையில் பிரகாசிக்க முடியும். எந்த வேலையும் சுலபமாய் செய்யக்கூடியது அல்ல. ஆனாலும் தொழிலை வைத்து, ஒரு சமூகத்தை இழிவாக நினைக்கும் மனோபாவம் விநோதமானதுதானே.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 17 | அடுத்தபகுதி – 19