அனாமிகா – குறுநாவல் – 3 | திருமயம் பாண்டியன்

 அனாமிகா – குறுநாவல் – 3 | திருமயம் பாண்டியன்

அத்தியாயம் – 3

அனாமிகா இறப்பதற்கு முந்தைய கதை:

“நடிக்காதே… நடிக்காதே! ஆபாசமாய் நடிக்காதே… கெடுக்காதே… கெடுக்காதே! தமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்காதே!” நடிகை அனாமிகா வீட்டின்முன்  மாதர்சங்க உறுப்பினர்கள் பெருந்திரளாய் கூடி போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

“எதுக்கு இந்த போராட்டம்?”- மைக்கை நீட்டியபடி நியூஸ்9 சேனலுக்காக பேட்டி எடுத்தார்கள்.

“அனாமிகாவின் படங்களை நீங்கள் பார்க்கறதே இல்லையா? ஒரு தமிழ் பெண்ணா இருந்துக்கிட்டு நம்  கலாச்சாரத்தை சீரழிக்கற மாதிரி படங்களில் அதிக ஆபாசம் காட்டி நடிக்கறாங்க. அதை பார்க்கும்போது எங்க நெஞ்சு கொதிக்குது.

ராத்திரி கனவுகள் மாதிரி இனி படம் பண்ண மாட்டேன்னு அவங்க எங்களுக்கு உத்தரவாதம் தரணும்.இல்லைன்னா இங்கே நடக்கிற இந்த போராட்டம் மேலும் விரிவடையும். தமிழகம் முழுக்க இருக்கற எங்க மாதர் சங்கங்கள் தொடர்ந்து போராடும். அவங்க நடிக்கற எந்த படத்தையும் ரிலீஸ் பண்ணவிடாம தடுப்போம்…” அந்த கூட்டத்தில் இருந்த மாதர் சங்கத் தலைவி சொன்னாள்.

“சமீபகாலமாக நடிகை அனாமிகா  ஆபாசமாக நடித்து வருவது மக்களிடையே பெரும் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அவர் வீட்டின் முன்பு நடக்கும் இந்த போராட்டம் தமிழ் பெண்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டத்திற்கு நடிகையின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நியூஸ் 9  சேனலுக்காக  கேமராமேன் ஹரிகோபியோடு உங்கள் கிருத்திகா..” என்று பேட்டி எடுத்த பெண் கேமராவைப் பார்த்து சொல்லிக்கொண்டிருந்தாள்.

                       **

இன்பக்கனவுகள் படத்திற்கு டப்பிங் கொடுத்துவிட்டு ஸ்டூடியோவிலிருந்து வெளியேறினாள் அனாமிகா.

அங்கேயும் அவளுக்கு எதிராக போராட மகளிர் குழு கூடியிருந்தது.

“நடிக்காதே… நடிக்காதே… ஆபாசமாய் நடிக்காதே…” கத்தியது கூட்டம்! சமீபமாய் அவள் போகுமிடமெல்லாம் பெண்கள் கூட்டமாய் கூடி அவளுக்கெதிராய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

தயாரிப்பாளர் சீதாராமன் ஓடி  வந்தார்.

” இதெல்லாம் டம்மி கூட்டம்மா. இதுக்கெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம். இந்த போராட்டம் நமக்கு ஆதாயம்தான். பேப்பர், டி.வியில வந்தா நம்ம படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைச்சிடும்…!” அனாமிகாவுக்கு  தைரியம் சொன்னார்.

“விட்டா நீங்களே இது மாதிரி போராட்டம் நடத்தச்சொல்லி விளம்பரம் தேடுவீங்க போலிருக்கே…” எனச் சொல்லி சிரித்தாள் அனாமிகா

“அப்படி நினைக்காதீங்கம்மா. நான் உங்களோட பரம விசிறி. நீங்க போட்ட பிச்சையில வளர்ந்தவன். அப்படியெல்லாம் செய்யமாட்டேன்…” அவர் சொல்ல, அனாமிகா சிரித்துக்கொண்டே பாதுகாவலர்கள் சூழ காரில் ஏறி, அடுத்த சூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனாள்.

                  ***

அனாமிகா இறப்புக்குப் பின்:

இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மார்ச்சுவரிக்கு போனார். சிமெண்ட் பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த அனாமிகா உடலை நெருங்கினார். பிரேதத்தின் மேல் போர்த்தப்பட்டிருந்த துணியை விலக்கிப்பார்த்தார்.

அழகான அனாமிகா அலங்கோலமாய் தெரிந்தாள். தன் அழகால் எல்லோரையும் வசீகரித்து பெரிய ரசிகர் பட்டாளமே வைத்திருந்தவள் முகம் வீங்கி கிடந்தது. விழிகள் நிலைகுத்தி பார்க்க விகாரமாக இருந்தாள்.

பிரேத பரிசோதனை செய்த தலைமை டாக்டர் பக்கத்தில் வந்தார்.

“பாவம்! சின்னப்பொண்ணு சார். நடிப்பில் சிகரம் தொட்ட நேரத்தில் இப்படி ஒரு கொலை. ரொம்ப கொடூரம்! மனசு தாங்கலை. அனாமிகாவின் ரசிகனா என்னால ஜீரணிக்கவே முடியவில்லை…”என்றார் டாக்டர்.

ரவீந்திரன் அவரை ஏறிட்டார்.

“டாக்டர் நீங்கள் மட்டுமல்ல, நானும் கூட அனாமிகாவின் ரசிகன்தான். நான் மட்டுமல்ல. நம்மைப்போல் நாலுகோடி பேர் அவளின் ரசிகர்கள். அவளைப் போல காதலி வேண்டும்.மனைவி வேண்டும் என ஆசைப்படாத இளைஞர்கள் இருக்க முடியுமா? ஆனால், இப்போது இந்த போஸ்ட்மார்டம் அறையில் நம்மால் அவளை ரசிக்க முடிகிறதா?  நிலைக்குத்தி போயிருக்கும் இந்த விழிகள்தானே அத்தனை கோடி ரசிகர்களின் மனதையும்  கட்டிப்போட்டது? அவள் முகத்தில் வழியும் சிரிப்பில் எவ்வளவு வசீகரம் இருந்தது? ஒரு பார்வையில் எவ்வளவு  காதல் இருந்தது? அதுதானே எல்லோரையும் ஈர்த்தது? அனாமிகா போல அழகுபடுத்திக்கொள்ள எல்லா வீட்டுப் பெண்களும் ஆசைப்பட்டார்களே…! எங்கே போயிற்று எல்லாம்? “கேட்டார்.

“எல்லாம் உயிர் இருக்கும்வரைதான். ரசிப்பும், ஆனந்தமும், ஆட்டம், பாட்டமும். அனாமிகாவின் சாவு நமக்கு நிலையாமையை உணர்த்திவிட்டது…” என்றார்  தலைமை டாக்டர்.

“உண்மை!” என்றார் ரவீந்திரன்.

இருவரும் இணைந்து அவளுக்காக ஒரு பெருமூச்சை விட்டார்கள்.

“சரி டாக்டர்… இந்த கொலை எத்தனை மணிக்கு நடந்திருக்கலாம் என  நினைக்கிறீர்கள்?”

“இரவு 9 மணியிலிருந்து 10 மணிக்குள்…”

“மரணம் எப்படி நிகழ்ந்திருக்கு டாக்டர்…?”

“கழுத்த நெறிச்சு கொன்னிருக்காங்க. குரல்வளை நசுங்கி இருக்கு…”

“டிரிங்ஸ் எதுவும் சாப்பிட்ட தடயம் இருக்கா டாக்டர்?”

“இல்லை…”

“ஆனா, பெட்ல பியர் கொட்டிக்கிடந்ததே?”

“அது வேற யாராவது சாப்பிட்டிருக்கலாம்…”

“சரி டாக்டர்! ரேப் அட்டம்ப்ட் எதுவும்.?”

“இல்லை. அது மாதிரி எதுவும் நடக்கல…”

கொலையாளிக்கும், அனாமிகாவுக்கும் போராட்டம் எதுவும் நடந்தது மாதிரியும் தெரியல. பாடியில சின்ன கீரல் கூட இல்லை. நாம சாகப் போறோம்னு தெரியாமலயே கூட உயிர் போயிருக்கலாம். யாரோ நல்லா பழக்கமான ஒருத்தர்தான் இந்த கொலையை செஞ்சிருக்கணும். இது என்னோட யூகம்தான். மற்றதை நீங்கதான் கண்டுபிடிக்கணும்…” என்றார் டாக்டர்.

ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அனாமிகாவின் படத்தை போட்டு, ஆழ்ந்த இரங்கல்கள், RIP  என கமெண்டுகளை வாங்கி கொண்டிருந்தனர் . சிலர் அவள்  இறந்ததைத் தாங்கமாட்டாமல் தற்கொலைக்கு முயன்றனர்.

போஸ்ட்மார்டத்துக்குப் பின்  அனாமிகா புதைக்கப்பட்டாள்.  கொலையாளியை விரைவாக பிடிப்போம் என வழக்கம்போல போலீஸ் சொன்னது.

இரு நாட்கள் கடந்திருக்கும்.

‘கொலையை மறைக்கிறதா போலீஸ்? ஒரு முன்னணி நடிகையின் கொலையில் ஏன் இத்தனை அலட்சியம்? ஒரு பிரபல நடிகைக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் கதி என்ன? என ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக டீக்கடை பெஞ்சுகளிலும், டி.வி விவாத மேடைகளிலும் மக்கள் பேசத் தொடங்கியிருந்தார்கள்.

                      ***

அனாமிகாவின் வீட்டுக்குப் போயிருந்தார் ரவீந்திரன். கேட்டை திறந்துவிட்ட செக்யூரிட்டியிடம்,

“அனாமிகாவோட அப்பா வீட்டுல இருக்காரா..?”எனக் கேட்டார்.

” இல்லை சார். வேலைக்கார பொண்ணு வத்ஸசலாதான் இருக்கு. அதுக்கிட்ட சொன்னா சாருக்கு தகவல் சொல்லி வரச்சொல்லிடும்….” என்றார்.

“சரி. வத்ஸலாவை வரச்சொல்லுங்க…”ஹாலில் அமர்ந்தார்.

சோகமாக வத்ஸலா வந்தாள். ஜீன்ஸில் ஆஃப் டிராயரும், டீசர்ட்டும் அணிந்திருந்தாள். உயர்தர வெளிநாட்டு சென்ட் மணத்தது.

வணக்கம் வைத்தாள்.

விழிகள் சிவந்து போயிருந்தது. மிச்சம் வைத்திருந்த அழுகையை அழுதாள்.உதடுகள் துடிக்க விம்மினாள்.  “எப்படியாவது அந்த கொலைகாரனை கண்டுபிடிச்சு தண்டனை வாங்கிக்கொடுங்க சார்…” என்றாள்.

“கண்டிப்பா! உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? இந்த மரணத்துக்கு யார் காரணமா இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?” கேட்டார்.

“தெரியலை சார்! ஆனா, அனாமிகா தொடர்ந்து கிளாமரா நடிச்சதுல  கொஞ்சம் எதிர்ப்பு இருந்துச்சு. அப்பாகூட எதிர்ப்பு காட்டினார் . அவங்க எதையும் கண்டுக்கல.. தமிழ் சினிமாவுல வருஷத்துக்கு பத்து பெரிய கம்பெனி படங்கள் வருதுன்னா அதுல ஒன்பதுல இவங்க நடிச்சுக்கிட்டிருந்தாங்க. இவங்களால வாய்ப்பை இழந்த யாராவது கொலை செய்திருக்கலாம்ன்னு சந்தேகிக்கிறேன் சார். அந்த கோணத்தில விசாரிச்சுப்பாருங்க சார்…”என்றாள்.

“அனாமிகா பீல்டுக்கு வர்றதுக்கு முந்தி நடிகை அப்சராதானே நம்பர் ஒன்னா இருந்தாங்க..?”

“ஆமா சார்!  இப்ப அவங்களுக்கு தமிழில் பட வாய்ப்பு இல்லை. தெலுங்கில் நடிக்க போயிட்டாங்க!”

“அனாமிகாவுக்கு அப்சரா கூட நட்பு உண்டா..?”

“பெருசா இல்ல சார்! எங்கேயாவது பிலிம் பெஸ்டிவல்ல சந்திச்சு பேசறதோடு சரி..!”

“அனாமிகாவோட அப்பா எங்கே?”

“கம்பெனில ஆடிட் நடக்குது சார். அங்கே போயிருக்கார். அப்பாவை கூப்பிடவா சார்?”

“வேணாம். நாளைக்கு வரும்போது சந்திக்கிறேன். அப்பாவுக்கும், மகளுக்கும் ரிலேசன்ஷிப் எப்படி? ஸ்மூத்தா இருக்குமா? அடிக்கடி சண்டை சச்சரவா இருக்குமா?”

“நார்மல்தான் சார்! அப்பா சொல்றதை அவங்கதான் கேட்கறதில்லை…” என்றாள்.

                         **

ரவீந்திரன் காபியை உறிஞ்சினார். எதிரே கமிஷனர் அமர்ந்திருந்தார்.

“கேஸ் எந்த திசையில் போகுது ரவீந்திரன்..?”

” திசை தெரியாமல் போகுது சார்…” கவலையாகச் சொன்னவர், ” சீக்கிரமே கொலையாளிய ஃபைண்டவுட் பண்ணிடலாம் சார்!” என்றார் ஒரு ஆறுதலாக.

” இந்த கொலையில, யார் யாரையெல்லாம்  சந்தேகப்படறீங்க?”

“நடிகை அப்சரா…!”

” காரணம்?”

“அனாமிகா பீல்டுக்கு வந்த பிறகு அப்சராவுக்கு பட வாய்ப்பே  இல்லாம போயிருக்கு. அதுல மனம் நொந்த அப்சரா தொழில் போட்டியில இந்த கொலைய செய்திருக்கலாம்னு சந்தேகிக்கறேன் சார்…”

“மோட்டிவ் சரியா இருக்கு. தீர விசாரிங்க. நம்ம கஸ்டடியில எடுத்துகூட விசாரிங்க. சீக்கிரம் கொலையாளியை கண்டுபிடிக்கணும்.இல்லைனா மீடியாவுல நம்ம கிழிச்சு தொங்க விட்டுடுவாங்க…” என்றார் கமிஷனர்.

“ஓ.கே சார்! நிச்சயம் நல்ல செய்தியோட மறுபடி வர்றேன்…” என எழுந்து கொண்டார் ரவீந்திரன்.

                   **

கோடம்பாக்கம்  நடிகை அப்சராவின் பங்களாவை அடைந்திருந்தார் ரவீந்திரன்.

செக்யூரிட்டி கேள்வி கேட்க, பதில் சொல்லி… உள்ளே பொமேரியன்கள் குறைக்க வீட்டினுள் நுழைந்து, சோபாவில் அமர்ந்தார்.

டீ, பிஸ்கட் கொண்டு வந்து தந்தாள் வேலைக்காரி.

“அம்மா குளிக்கறாங்க. வெயிட் பண்ணுங்க.வந்துடுவாங்க…” என்றார் அந்த நடிகையின் பிஏ.

வயதான யாரோ பக்கத்து ரூமில் இருமும் சத்தம் கேட்டது. டேபிளில் கிடந்த தினசரி எடுத்து புரட்டினார். கடைசி பக்கம் வருகையில் அப்சரா வந்துவிட்டாள்.

ரவீந்திரனுக்கு எதிரே சோபாவில் அமர்ந்தாள். நைட்டியில் இருந்தாள். மார்பகங்கள் திமிறி நின்றன.

அனாமிகாவோடு  ஒப்பிடவே முடியாத அளவுக்கு மிக சாதாரணமாக இருந்தாள். மேக்கப் மட்டும் இல்லாவிட்டால் இந்த பெண் எல்லாம் சினிமாவில் ஜெயிக்கவே முடியாது என்று தோன்றியது.

“சொல்லுங்க சார்.. என்கிட்ட என்ன என்கொயரி..?” அப்சரா கேட்டதும், யோசனையில் இருந்தவர் சட்டென  வெளியே வந்தார்.

“சினிமா இண்டஸ்ட்ரியில் உங்களுக்கும், அனாமிகாவுக்கும்தான் போட்டின்னு சொல்றாங்களே…”

“அதெல்லாம் பொய். அனாமிகா  ரொம்ப உயரம் போயிட்டாங்க. அவ அழகுக்கும் எனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் அதை நல்லாவே புரிஞ்சு கொண்டாடினாங்க. அதனால அவங்க நடிக்கற படம் எல்லாமே சூப்பர் ஹிட்டாச்சு.

 தயாரிப்பாளர்கள் எப்பவும் ஜெயிக்கற குதிரை மேலதான் பணம் கட்டுவாங்க. நான் அதை உணர்ந்தேதான் இருந்தேன். தவிர, ஹீரோயின்களின் மார்க்கெட்டே கொஞ்சகாலம்தான். அப்புறம் ஹீரோவுக்கு அக்காவா, அம்மாவா நடிக்க வேண்டியதுதான்.

சினிமா வாய்ப்புகள் சுலபமா கிடைக்கறதில்ல சார். நிறைய போராட்டம்… அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் செய்ய வேண்டி இருக்கும். நேரம் காலம் பார்க்காம உழைக்கணும். எனக்கு அனாமிகா போட்டிதான். ஆனா, எதிரி இல்லை. அவமேல எனக்கு எந்த கோபமும் பொறாமையும் இல்ல.

எனக்கு தமிழ்ல வாய்ப்பு குறையிறது தெரிஞ்சதும் தெலுங்கு பக்கம் போயிட்டேன். நம்பர் ஒன்,  நம்பர் டூ இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ரசிகர்கள் மனசுல இருக்கற மாதிரி ஒன்னு, ரெண்டு படம் பண்ணினா போதும்னு நினைக்கறேன்…”நீளமாக பேசி மூச்சு வாங்கினாள்.

“அனாமிகாவோட நீங்க பிரண்ட்ஷிப்பா இல்லையா..?”

“இல்ல சார்! சூட்டிங், டப்பிங் குடும்பம்னு ஓடிக்கிட்டே இருந்தாச்சு. நின்னு நிதானிச்சு  பேச, பழக நேரமில்லை. எங்கேயாவது பார்த்தா சின்னதா ஒரு ஸ்மைல்.ஒரு ஹலோ அவ்வளவுதான் எங்க இரண்டு பேருக்கும் இடையே உள்ள நெருக்கம்…”

“அனாமிகா கொலையானதுல உங்களுக்கு உள்ளூர சந்தோசம்தானே..?”

” பாவம் சார்!  அந்தப்பொண்ணு. அது பாலிவுட், ஹாலிவுட்ன்னு பெருசா போகவேண்டிய பொண்ணு. அதோட இறப்பு திரையுலகத்துக்கு பெரிய இழப்பு. ரசிகர்கள் தவிச்சு போயிருக்காங்க… உண்மையா அவங்களோட சேர்ந்து நானும் வேதனைபடறேன். எனக்கு அவ இறப்பு பயத்தை உண்டு பண்ணியிருக்கு. புகழும், பணமும் சேர,சேர சுதந்திரமும், பாதுகாப்பும் குறைஞ்சிடுது. என்னை இந்த கொலையில சந்தேகப்படறீங்களா சார்..?” அப்சரா கேட்டாள்.

“கொஞ்சமா..! கொலை நடந்த சனிக்கிழமை இரவு நீங்க எங்கே இருந்தீங்க?”

“தாய்லாந்து ஷூட்டிங்ல. பாஸ்போர்ட் பார்க்கறீங்களா?”- எடுத்துவந்து காட்டினாள்.

“கொலைய நீங்களே செய்யணும்கறது இல்லையே… கூலிப்படைய ஏவி கூட செய்திருக்கலாமே..?”

” அந்த அளவுக்கு நான் மோசமானவ இல்ல சார்! என்னைபத்தி நல்லா விசாரிங்க. புரியும். ஒரு ஈ, எறும்புக்குக் கூட துரோகம் நினைக்காதவ நான். என்னை சந்தேகப்படறீங்களா?” அப்சரா அழுதாள்.

“இது ஒரு பார்மலான என்கொயரிதான். இதுக்கு ஏன் அழறீங்க? நீங்க செய்யலைன்னா ஏன் பயப்படறீங்க?” ரவீந்திரன் கேட்டார்.

“ஓ.கே சார்! குற்றமுள்ள நெஞ்சுதான்  குறுகுறுக்கணும். நான் ஏன் பயப்படணும்? கடவுளுக்கும், மனசாட்சிக்கும் மட்டும்தான் பயப்படணும். நீங்க எப்ப விசாரணைக்கு  கூப்பிட்டாலும் நான் வரத் தயாரா இருக்கேன். எனக்கு தெரிஞ்ச பதிலை சொல்லக் காத்திருக்கிறேன்…” சொன்னாள்.

ரவீந்திரன் குட்பை சொல்லி எழுந்து கொண்டார்.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 2 | அடுத்தபகுதி – 4

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...