அனாமிகா – குறுநாவல் – 4 | திருமயம் பாண்டியன்

 அனாமிகா – குறுநாவல் – 4 | திருமயம் பாண்டியன்

அத்தியாயம் – 4 

ப்-இன்ஸ்பெக்டர் கோகுல், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன் விரைப்பாக நின்று சல்யூட் வைத்தார்.

“வாங்க கோகுல்…அனாமிகாவோட  செல்போன்ல லாஸ்ட் கால் யாருன்னு கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேனே பார்த்தாச்சா..?” கேட்டார்.

“பார்த்தாச்சு சார். அனாமிகா அப்பாதான் பேசியிருக்கார்…”

“பேசின நேரம்?”

“ஈவினிங் ஏழு மணியிலிருந்து 7.10 வரை…”

“அதன் பிறகு எதுவும் கால் வரலையா?”

“இல்ல சார்!”

“கால் ஹிஸ்டரியில அவர் நம்பர் மட்டும்தான் இருக்கு…”

“கால் ஹிஸ்டரியை டெலிட் பண்ணியிருந்தா நமக்கு தெரிய வாய்பில்லைதானே?”

“ஆமா சார்!”

“அவர், அனாமிகா எங்கே இருக்கான்னு போன்ல பேசி தெரிஞ்சுக்கிட்டு, அதன்பிறகு  ஹோட்டல் வந்து சண்டையாகி, அந்த ஆக்ரோஷத்துல கொலை பண்ணிட்டு போயிருக்கலாமா…?” யூகமாய் கேட்டார்.

“இருக்கலாம் சார்!”

 ராம்ஜி சேட்டோட சிசிடிவி புட்டேஜ் எடுத்துட்டீங்களா ?”

“எடுத்தாச்சு சார்…”

“போடுங்க. பார்க்கலாம்…”

சிசிடிவி காட்சிகள் அங்கிருந்த மானிட்டரில் ஓடத்தொடங்கியது.

“யோவ்! என்னய்யா இது?” வீடியோவை பார்த்து அதிர்ந்து ரவீந்திரன் கேட்க,

“ஸாரி சார்! ஃபோல்டர் மாத்தி ப்ளே பண்ணிட்டேன். இது என்னோட பேவரைட்  கலக்ஷன். ராம்ஜி சேட் பொண்ணுல இருந்து அனாமிகா, சன்னி லியோன் வரை இருக்கு. சோகமா இருக்கையில போட்டு பார்த்து மனசை தேத்திப்பேன்…” சிரித்துக் கொண்டே சொன்னான்.

“உன்னை திருத்தவே முடியாது. கேஸை மட்டும் முதல்ல ஸ்டெடி பண்ணு. கேர்ள்ஸை அப்புறமா ஸ்டெடி பண்ணலாம். காலாகாலத்துல வீட்டுல சொல்லி உனக்கு கால்கட்டு போடணும்யா…” செல்லமாய் கோபித்துக்கொண்டார்.

சரியான ஃபோல்டரை  ப்ளே பண்ணியவுடன், ராம்ஜி சேட்டின், வீட்டின் வெளிப்புறம் நடந்ததெல்லாம் தெளிவான காட்சிகளாக ஓடத்தொடங்கியது.

“சார்! இங்கே பாருங்க…” கோகுல் காட்டியதை பார்த்தார் ரவீந்திரன்.

ஜீன்ஸ், குர்தாவில் ஒரு அழகான பெண் தன் காதலனோடு தோள் சாய்ந்தபடி நடந்துகொண்டிருந்தாள்.

“யோவ்! என்னை கொலைகாரனாக்காதே…!”

“சார்! பொண்ணை ஏன் பார்க்கறீங்க. சைடுல பாருங்க. அனாமிகா அப்பா ஹோட்டல் உள்ளே போறார் பாருங்க…”

“அவர்தானா நல்லாப்பாருய்யா. ஜூம் பண்ணு…”

“முகம் சரியா தெரியல சார். ஆனா, பார்க்க அவர் போலத்தான் தெரியுது…”

“உள்ளே நுழையற டைம் என்ன?”

“எட்டு நாற்பது சார்…”

“திரும்பற நேரம்?”

” ஒன்பது மணி சார்!  இருட்டு அவருக்கு சாதகமா இருக்கு. சிசிடிவியில துல்லியம் இல்லை…”

“கொலை நடந்திருக்கலாம்னு  நாம சந்தேகிக்கற நேரம் என்ன..?”

“ஒன்பது டூ பத்து சார்…”

“ஸோ, டைம் மேட்ச் ஆகுது. மோட்டிவும் ஒத்துப்போகுது. ஆளை தூக்குங்க. கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம்…”

“சரிங்க சார்…”

சிவநாதனை அலேக்காக ஸ்டேஷனுக்கு தூக்கி வந்துவிட்டார் கோகுல்!

“சார்! சொன்னா நம்புங்க. நான் ஏன், என் பொண்ண  கொலை பண்ணப்போறேன்? பெத்த மகளை அப்பனே எங்கேயாவது கொல்லுவானா? காரணம் இருக்கா சொல்லுங்க…”

“உங்க பொண்ணு படங்கள்ல ஆபாசமா நடிக்கறது உங்களுக்கு பிடிக்கலை. மாதர் சங்கம் போராட்டம் பண்ணது. ஊர் முழுக்க இதே பேச்சா இருக்கு. உங்களை சுற்றியிருக்கும் நண்பர்கள் உங்களை கேலி பேசறாங்க. அதனால மனசு உடைஞ்சு போயிருக்கீங்க. மகக்கிட்ட ஆபாசமா நடிக்க வேணாம்னு சொல்லியிருக்கீங்க. மக கேட்கல. அந்த கோபத்துல இந்த கொலைய செய்திருக்கீங்க…” ரவீந்திரன் தன் யூகத்தைச் சொன்னார்.

“உங்க கற்பனை ரொம்ப சூப்பரா இருக்கு சார்…”

“குற்றத்தை நீங்களா ஒப்புக்கிட்டா உடம்புல சேதாரம் இருக்காது. இல்லைன்னா  போலீஸ் அடிவாங்கி அவதிப்படணும். எது வசதி?” ரவீந்திரன் கேட்டார்.

சிவநாதன் அழுதார்!

“சார்! நீங்களா ஒரு முடிவுக்கு வந்து என்னை, குற்றத்தை ஒப்புக்கச் சொல்றது நல்லாயில்லை.  அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொல்றேன். அதுக்குப்பிறகு நீங்க ஒரு முடிவுக்கு வாங்க…

அனாமிகா மாதவன்னு ஒருத்தனை  விரும்பறா. கல்லூரி படிக்கையில் இருந்து பழக்கம். அவ மாடலிங் செய்யறதும், விளம்பர படங்கள்ல, சினிமால நடிக்கறதும் என்னை போலவே அவனுக்கும் சுத்தமா பிடிக்கல.

சினிமாவில் நடிக்க வேணாம்னு பலமுறை  அவனும்  எச்சரித்திருக்கிறான். இதை அனாமிகாவே  சொல்லியிருக்கா. ஒரு பெண்ணை அவள் விருப்பம்போல்  இருக்க விடாமல்

ஆணாதிக்கம் செய்வதாகச் சொல்லி தர்க்கம் செய்திருக்கிறாள். இதில் அவர்களுக்குள் மனவருத்தம்.

ஒருவேளை, இந்த கொலையை செய்தது அவனா கூட இருக்கலாம். கொஞ்சம் அவனையும் விசாரிச்சுட்டு வந்து யாரும் கிடைக்கலைன்னா என்னையவே பலிகடா ஆக்குங்க சார்..

மனைவியும் இறந்துட்டா. மகளையும் இழந்துட்டேன். இனி நான் யாருக்காக வாழணும்? உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாம ஒரு நிரபராதியை தண்டித்துதான்  நீங்க பேர் வாங்கணும்னா அதை எப்ப வேணாலும் நீங்க செய்யலாம் சார்…” என்றார்.

ரவீந்திரன் குழம்பினார்.

“அனாமிகா கடைசியா பேசினது உங்கக்கிட்டதான். பேசினதுக்கப்புறம் நேர்லயும் போய் சந்திச்சிருக்கீங்க… அது எதுக்காகன்னு சொல்லமுடியுமா?”

“வீட்டுல இருந்து 5 லட்சம் கேஷ் எடுத்துட்டு உடனே வரும்படி அனாமிகா கூப்பிட்டதால போனேன்…”

“எதுக்கு அந்த பணம்?”

“மாதவனுக்கு அந்த பணத்தை கொடுத்து, அவனை கழட்டிவிடறதுக்காகன்னு சொன்னா…!”

“மாதவ் போட்டோ இருக்கா. ஆள் எப்படி இருப்பான்?”

“அனாமிகா செல்லுல இருக்குமே. அது உங்கக்கிட்டதானே இருக்கு?”

 “போன் எங்கக்கிட்டதான் இருக்கு. என்கொயரி முடிஞ்சதும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது பாஸ்வேர்டு போட்டு லாக்காகியிருந்தது. அன்லாக் பண்ணினதுல எல்லாம் அழிஞ்சு போச்சு…” என்றார்.

“அவன் வடபழனியில இருக்கிறதா கேள்வி சார்.  வேளச்சேரி ஏ டி ஏ என் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறதா அனாமிகா சொல்லியிருக்கா…”

“இந்த தகவல் போதும். விசாரித்து விடலாம்..” சொன்னவர் உடனடியாக அங்கே கிளம்பினார்.

                        ***

வேளச்சேரியில் ஒரு பரபரப்பான வீதியில் அந்த கம்பெனி இயங்கிக்கொண்டிருந்தது.அழகான இருபது வயது பெண் ஒருத்தி ரிசப்ஷனில் இருந்தாள். லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். முகத்தில் நிரந்தரமாக  சிரிப்பு குடியிருந்தது. காலையில் குளித்த சோப்பிலிருந்து, பவுடர் சென்ட் வரை அனைத்தும் கலந்த ஒரு வாசம் வாசல்வரை வந்தது. இந்த அழகுக்கு குறைந்தபட்சம் நூறு பேராவது ஐ லவ் யூ சொல்லியிருப்பார்கள் என எண்ணிக்கொண்டார்.

 யாராவது டைரக்டர்கள் மனது வைத்தால், அனாமிகா இடத்தை இவள் எளிதாக அடையலாம்.  ரசிகர்கள் நெஞ்சில் நிரந்தர கனவுகன்னியாக குடியேறலாம். என மனசு சொல்வதைக் கேட்டார். கண்கள், உதடுகளென மேலும்,உன்னிப்பாய் கவனித்தார்…  ‘வேண்டாம்! மனதை கண்ட்ரோல் செய்..’ நல்ல மனசு சொல்ல, சொன்னதை செய்தார் ரவீந்திரன்.

நல்லவேளை கோகுல் அருகில் இல்லை. இருந்திருந்தால்… கண்களாலயே தழுவி கற்பனையில் குடும்பம் நடத்தியிருப்பான்.

“குட் ஆஃப்டர்நூன் சார்! மே ஐ ஹெல்ப் யூ?” ரிதமாக கேட்டாள்.

“எஸ்.!” மிடுக்காக சொன்னவர், “ஒரு வழக்கு விசாரணை. மானேஜரை சந்திக்கணும்…” சொன்னார்.

இன்டர்காமில் பேசி அனுமதி வாங்கி, அவரை மானேஜர் ரூம்க்கு அனுப்பி வைத்தாள்.

அவர் ரூம் ஏசியில் குளிர்ந்து, ரூம் ஸ்பிரேயில் மணந்து கொண்டிருந்தது.

“நடிகை அனாமிகா கொலை விஷயமா ஒரு என்கொயரி. உங்க ஸ்டாப் மாதவனை விசாரிக்கணும்…” சொன்னார்.

“மாதவன் வேலையை ரிசைன் பண்ணிட்டுப்போய் ஆறு மாசமாச்சு. வெளிநாடு போகப்போறதா சொல்லிக்கிட்டு இருந்தான் சார்…” என்றார் அவர்.

“மாதவனோட  நெருக்கமான பிரண்ட்ஸ் யாருன்னு சொல்லுங்க.. அவங்கக்கிட்ட விசாரிச்சுக்கிறேன்…” என்றார் ரவீந்திரன்.

ராஜேஷ் நம்பர் கொடுத்தார் மானேஜர்!

“ராஜேஷுக்கு இன்னைக்கு ஆஃப் டூட்டி. நாளைக்கும், நாளை மறுநாளும் லீவு கொடுத்திருக்கான். கோவில் திருவிழாவுக்கு, சொந்த ஊருக்கு போறதா சொன்னான் சார்…!”

இரண்டு தினங்களும் ராஜேஷ் நம்பர் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது

மூன்றாம் நாள் மறுபடி ஏடிஏஎன் சாப்ட்வேர் கம்பெனிக்கு வந்தார். ரிஷப்சனில் வேறு பெண் இருந்தாள். அவர் ரசனைக்கு ஒத்துவரவில்லை. ஜொள்விடாமல் ராஜேஷை விசாரித்தார்.

ராஜேஷ் வந்தான். வணக்கம் சொன்னான். இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு பதிலும் சொன்னான்.

“சார்! ஊர்ல டவர் பிராப்ளம். சிக்னல் கிடைக்காது. அதுவுமில்லாம ஆபீஸ்ல இருந்து அடிக்கடி போன் பண்ணி தொல்லை பண்ணுவாங்க. அதுக்கு  பயந்து போனை சுவிட்ச் ஆப் பண்ணியிருந்தேன் …” விளக்கம் சொன்னான்.

” சரி! உன் பிரெண்ட் மாதவன் இப்ப எங்கே இருக்கான்? அட்ரஸ், போன் நம்பர் தர முடியுமா?”

“எதுக்கு சார்…? என்ன விஷயம்?”

“கேட்டா கொடுய்யா.  ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காதே. நடிகை அனாமிகா கொலை வழக்கில் அவனை சந்தேகப்படறோம். நீயும் அவனுக்கு உடந்தையா சொல்லு..?”  ரிஷப்சன் பெண் தந்த ஏமாற்றம் ரவீந்திரனிடம் கோபமாக வெடித்தது.

“இல்ல சார்… இல்ல சார்..! இங்கே வேலை செய்யும்போது மாதவன் நெருக்கம்தான். ஆனா, இப்ப ரொம்ப பேசறதில்ல சார்..! போன் நம்பர் இருக்கு. தர்றேன். விசாரிச்சுக்கோங்க..!” பதறினான்.

” ஆள் எப்படி டைப்..? கொலை பண்ற அளவுக்கு மூர்க்கமானவனா?”

“ரொம்ப சாது சார்! அதிர்ந்து கூட பேசமாட்டான்…!”

“சாதுதான் கொலை பண்ணிட்டு தலைமறைவா இருக்கானா? அவனோட சேர்ந்து எடுத்துக்கிட்ட  போட்டோ, செல்ஃபி ஏதாவது உன்கிட்ட  இருக்கா?”

“இருக்கு தர்றேன் சார்…” கொடுத்தான்.

வாங்கிக்கொண்டு சப் இன்ஸ்பெக்டர் கோகுலை போனில் தொடர்பு கொண்டார்.

“கோகுல்! உங்க போனுக்கு ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன். அனாமிகா கொலையில் சந்தேகப்படற நபர்…”

“அவனோட லவ்வரா சார்?”

“ஆமா! அந்த போட்டோவை வைத்து நமக்கிட்ட இருக்கற சிசிடிவி புட்டேஜ்ல செக் பண்ணுங்க. நான் மாதவனை வீட்ல போய் சந்திச்சுட்டு வர்றேன். ஏதாவது முக்கியமான விஷயம்னா போன்ல கூப்பிடுங்க…”

“சரிங்க சார்! ரிஷப்சன்ல அதே பொண்ணா சார்? சைட் அடிச்சீங்களா?” கோகுல் கேட்டார்.

“யோவ்! வைய்யா போனை…!” செல்லமாக திட்டி சிரித்துக்கொண்டார்.

வடபழனியில் மாதவனின் பத்துக்கு பத்து அறை  பூட்டிக்கிடந்தது. பக்கத்து வீட்டில் விசாரித்தார்.

“இந்த பையனா சார்? இவன் ரூமைக் காலி பண்ணிப்போய் பத்து நாளாச்சே..” என்றார்கள்.

போலீஸ் சந்தேகிப்பது தெரிஞ்சு எஸ்கேப் ஆகிட்டானா? போனில் தொடர்பு கொண்டார். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்றது.

அப்போது கமிஷனரிடமிருந்து போன் வரவே, எடுத்து காதுக்கு கொடுத்தார்.

“என்ன ரவீந்திரன்… கேஸ் எப்படி போயிட்டிருக்கு? கொலையாளியை நெருங்கிட்டோமா?” கேட்டார்.

“நெருங்கிட்டோம் சார். ஆனா, நாம விசாரிக்கறது தெரிஞ்சு, ஆள் எஸ்கேப் ஆயிட்டான்..”

“ஆள் யாரு?”

“அனாமிகா லவ்வர் மாதவன் சார்!”

“ஒன் சைடு லவ்வா? போத் அட்ராக்டிவ்வா?”

“மனமொத்த காதலர்கள்தான் சார்! கல்லூரி படிக்கையில் இருந்தே லவ்…”

“கொலைக்கான மோட்டிவ்?”

“அனாமிகா சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிக்கறது அவனுக்கு பிடிக்கலை. தான் மட்டுமே பார்த்து ரசிக்க வேண்டிய அழகை ஊர், உலகமே பார்த்து ரசிக்கறது பிடிக்காம அவக்கிட்ட சொல்லி பார்க்கறான். அவ கேட்கல. ஆத்திரம் வருது. கொன்னுடறான்…”

“மோட்டிவ் சரியா இருக்கு. எப்படி நிரூபிக்கப் போறீங்க..?”

“சிசிடிவி புட்டேஜ் பார்க்க கோகுல்கிட்ட சொல்லியிருக்கேன் சார். மேட்ச் ஆச்சுன்னா ஆள தூக்கிடவேண்டியதுதான்…”

“சரி! பார்ட்டி ஃபாரின் எதுவும் தப்பிப்போயிடாம ஏர்போர்ட்டில் பிளாக் பண்ணிடுங்க…”

” ஓ.கே சார்! நல்ல நியூஸோட மறுபடி வர்றேன்…”

ரவீந்திரன் போனை கட் செய்ததும் கோகுலிடமிருந்து போன் வந்தது.

“சார்! ஒரு குட் நியூஸ்…”

“சொல்லுங்க கோகுல்…”

“மாதவன், அனாமிகாவை சந்திக்க  ஹோட்டலுக்கு வந்து போயிருக்கான் சார்…”

“இசிட்! எப்ப…?”

” 9.10க்கு…”

“திரும்பினது?”

” 9.20க்கு! “

“கொலை நடந்த டைம் மேட்ச் ஆகுது. சூப்பர்!  இனி மாதவனை பிடிக்க வேண்டியதுதான்…”

“தலைமறைவாய் இருக்கிறவனை எப்படி சார் பிடிக்கப் போறோம்..?”

இருவரும் யோசித்தார்கள்!

மறுநாள் மாதவின் படம் போட்டு அனாமிகா கொலை வழக்கில் சந்தேகப்படும் முக்கிய குற்றவாளியான இவனைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு காவல் துறையால் மதிப்புமிகு பரிசு வழங்கப்படும் என செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்திருந்தார் ரவீந்திரன்.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 3 | அடுத்தபகுதி – 5

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...