அனாமிகா – குறுநாவல் – 2 | திருமயம் பாண்டியன்

 அனாமிகா – குறுநாவல் – 2 | திருமயம் பாண்டியன்

அத்தியாயம் – 2

அனாமிகா கொலையான அன்று:

அனாமிகா கொலையான விஷயம் தெரிந்து அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வெளியே கணிசமாக கூட்டம் கூடிவிட்டது.

அதேநேரத்தில் நடிகை அனாமிகா கொலை. போலீஸ் விசாரணையை துவக்கியது. என்ற செய்தி, வாட்ஸ்அப்பிலும் , பேஸ்புக், டிவீட்டரிலும் ப்ளாஷாக தொடங்கியது.

‘தமிழின் முக்கிய நடிகைகளில் ஒருவரான நடிகை அனாமிகா வயது 30. சற்றுமுன் சென்னையில் அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு இரவு 8 மணி செய்திகளை காணத்தவறாதீர்.’ என்றது ஒரு டி.வி சேனல்.

சற்று நேரத்தில் எல்லா சேனல்களிலும் பரபரப்பான  ப்ளாஷ் நியூஸாக அது ஓடியது.

அன்றைய நாளின் மிக முக்கிய செய்தியாக அனாமிகா கொலை மாறியிருந்தது . திரையுலகினர் தங்களது அதிர்ச்சியையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் ஒரே மாதிரியாக கொலையாளியை விரைவாக கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும் என்றார்கள்.

அனாமிகா கொலை செய்யப்பட்டது எதனால்?  தொழில் போட்டியா ? கடன் தொல்லையா? காதல் தோல்வியா? என செய்தி சேனல்கள் சந்தேகம் எழுப்பி, சூடாக விவாதங்களை கிளப்பிவிட்டன.

அவர் நடிப்பில்  வெளியான சூப்பர் ஹிட் படங்களில் இருந்து சில காட்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களின் சோகத்தை மேலும் அவைகள் கூட்டிக்கொண்டிருந்தன.

ரசிகர்கள் செய்வதறியாது திகைத்து தீக்குளிக்கவும், மொட்டை போட்டுக் கொள்ளவும் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பரபரப்பாக இயங்கினார்.

“வெளியே கும்பலை குறைங்க ஏட்டு..ஆம்புலன்சுக்கு சொல்லியாச்சா கோகுல்…?” கேட்டுக்கொண்டே செயலில் இறங்கினார்.

நேரம் செல்லச்செல்ல கூட்டம் கூடிக் கொண்டே போனது. இன்ஸ்பெக்டர் சொன்னதும் கூட்டத்தை தடியடி நடத்தி காவலர்கள் கலைத்தார்கள். இருந்தும் கூட்டம் அடங்கவில்லை. நிருபர்களும், டி.வி ரிப்போர்டர்களும் கேமரா சகிதம் அந்த இடத்தை முற்றுகையிட்டு இருந்தார்கள்.

“நாம வர்றதுக்குள்ள மீடியாவுக்கு எப்படி நியூஸ் போச்சு…?” ரவீந்திரன் சந்தேகம் எழுப்பினார்.

“பக்கத்து மேன்சன்ல டெய்லி நியூஸ் ரிப்போர்ட்டர் ஒருத்தர் இருக்காராம். அவர்தான் கூட்டத்தை பார்த்துட்டு ப்ளாஷ் கொடுத்திருக்காரு…” சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் சொன்னார்.

“ஆஸ்பிட்டல்ல பாடிய போஸ்ட்மார்டம் பண்ணி வீட்டுக்கு கொண்டு போறவரைக்கும் ரசிகர்கள்  கூட்டம் குறையாது. பாதுகாப்புக்கு  போலீஸ் பத்தாது. நியர் பை ஸ்டேஷன்லயும் சொல்லி ஆள் ரெடி பண்ணிக்கங்க…” ரவீந்திரன் சொல்ல, “சரிங்க சார்..” என்றார் கோகுல்.

ரவீந்திரனும், கோகுலும் பிரேதம் கிடந்த அறைக்குள் போனார்கள்.

அனாமிகா குட்டி டவுசரும், டீ- சர்ட்டும் அணிந்த நிலையில் மல்லாந்திருந்தாள். விழிகள் மூடாமல் திறந்து கிடந்தன. முகத்தில் நிறைய அதிர்ச்சி தெரிந்தது. பெட் முழுக்க பியர் கொட்டி காய்ந்து போயிருந்தது.

“அனாமிகா ட்ரிங்க்ஸ் சாப்பிடுவாங்களா…?” கோகுல் கேட்டார்.

” ட்ரிங்க்ஸ் சாப்பிடாத நடிகையும் இருக்காங்களா கோகுல்..?” ரவீந்திரன் சின்னகேலியோடு கேட்டார்!

புகைப்பட கலைஞர் பிரேதத்தை பல கோணங்களில் படம் எடுத்தார். இதையே அனாமிகா உயிருடன் இருந்து போஸ் கொடுத்திருந்தால் பல லட்சங்கள் சம்பாதித்திருப்பார்.

தடயவியல் நிபுணர் தடயங்களை தேடினார்.

“கொலையை யார் முதலில் பார்த்தது..?” வழக்கமான முதல் கேள்வியை ரவீந்திரன் கேட்டார்.

“நான்தான் சார்!” -ஒரு நாற்பது வயது நபர் முன்வந்தார்.

“உன் பேர் என்ன..?”

“காளிதாஸ் சார்! “

” நீ இங்கே என்னவா இருக்கே?”

” சர்வர் சார்!”-கொலையை பார்த்ததில் திகிலடைந்து போயிருந்தார். பேச்சு வராமல் திணறினார்.

“அம்மாவுக்கு இங்கே நிரந்தரமா ஒரு சூட் உண்டு. ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு போக நேரமில்லைன்னா அல்லது விருப்பமில்லைன்னா இங்கேயே தங்கிடுவாங்க. ஸ்டோரி டிஸ்கஷனுக்கும், புதுப்படத்துக்கு கதை சொல்றதுக்கும் டைரக்டர், புரொடியூசர்ஸ் இங்கே வருவாங்க சார்!”அந்த நட்சத்திர ஹோட்டலின் மேனேஜர் அமுதன் விவரம் சொன்னார்.

“அவங்க இங்கே தங்கினா சர்வ் பண்ண  காளிதாஸைதான் கூப்பிடுவாங்க. அவங்களை அது வேணுமா? இது வேணுமான்னு கேட்டு அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. அவங்க  கூப்பிட்டா மட்டும் போகணும். அவங்களை பார்க்க யாராச்சும் வந்தா அவங்க திரும்பி போறவரைக்கும் நாம தொந்தரவு கொடுக்கக்கூடாது. நிறைய பிரைவசி எதிர்பார்ப்பாங்க. டிப்ஸும் அள்ளிக்கொடுப்பாங்க..”என்றார் அமுதன்.

” ஓ.கே மேனேஜர்! நான் காளிதாஸ்கிட்ட பேசிக்கறேன். நீங்க குறுக்க குறுக்க பேசவேண்டாம்…”

“சரிங்க சார்! அவரு கொஞ்சம் பயந்தது மாதிரி இருந்ததால நான் குறுக்கிட்டு பதில் சொல்ல வேண்டியதாப்போச்சு. ஸாரி சார்…!” என்றார் அமுதன்.

“எவ்ளோ நாளா இங்கே வேலை செய்றீங்க காளிதாஸ்?”

“நாலு வருஷமா சார்!”

“குட். இப்படிதான் தைரியமா பேசக் கத்துக்கணும். போலீஸைக் கண்டு பயப்படத் தேவையில்லை. கேட்கற கேள்விக்கு டக்டக்னு பதில் சொல்லணும்.ஓ.கே.?”

“ஓ.கே.சார்!”

“நீங்கதான் கொலையப் பார்த்துட்டு மேனேஜர்கிட்ட சொன்னீங்களா..?”

“ஆமா சார்!”

“அவங்கள இன்னைக்கு யார் யாரெல்லாம் பார்க்க வந்தாங்க? கடைசியா யார் வந்து பார்த்துட்டு போனாங்க தெரியுமா?”

“அவங்க காலையில அஞ்சுமணிக்கெல்லாம் ஷூட்டிங் கிளம்பிபோயிட்டு சாயங்காலம் ஆறுமணி போலதான் வந்தாங்க. கொஞ்சம் முன்னாடி அவங்க அப்பா வந்திருந்தார் சார். அவங்களுக்குள்ள காரசாரமா, ரொம்ப கோபமா ஏதோ பேசிக்கிட்டாங்க…எனக்கு தெரிஞ்சு வேற யாரும் வரலை சார்!”

“கொலையாளி யாரா இருக்கும்னு ஏதாவது கெஸ் பண்ண முடியுதா?”

“தெரியலை சார்! ஆனா, அவங்க அப்பா கூட ஏதோ தகராறு இருக்கறது மட்டும் தெரியும் சார். அதனாலதான் அவங்க வீட்டுக்கு போகாம பதினைந்து நாளா இங்கேயே தங்கியிருக்காங்கன்னு தெரியுது…”

“என்ன பிரச்சனை?”

“அதெல்லாம் தெரியாது சார். ஆனா, அம்மா எப்பவும் இப்படி நாள் கணக்காக ஹோட்டல்ல தங்கமாட்டாங்க. அதைதான் சந்தேகமா உங்கக்கிட்ட சொல்றேன்…”

“ஓ! மேலே சொல்லு…”

“எப்பவும் அம்மா வந்ததும் என்னை கூப்பிடுவாங்க. இன்னைக்கு கூப்பிடல. தற்செயலா அவங்க தங்கியிருந்த சூட்டுக்கு பக்கத்து ரூமுக்கு சர்வீஸ் பண்ண போனப்ப, இவங்க ரூம் திறந்து கிடந்ததை பார்த்துட்டு டோரை சாத்தப்போனேன். அப்ப அவங்க மல்லாந்து படுத்திருந்த பொஸிசனைப் பார்த்ததும் ஏதோ விபரீதமாப்பட்டது. பதறிப்போய் மேனேஜரை கூப்பிட்டு வந்து பார்த்தா அம்மா இறந்து கிடக்கறாங்க…” என்றான் காளிதாஸ்.

“உங்க ஹோட்டல்ல சி.சி.டிவி கேமரா இருக்கா மேனேஜர்..?”

“இல்ல சார்!”

“ஏன்?”

“இங்கே தங்கறவங்க எல்லாம் பெரிய பெரிய விஐபிங்க. சிலபேர் பொண்ணுங்க கூட வருவாங்க. சிலபேர் டிரிங்க்ஸ்காக வருவாங்க. சிலருக்கு தனிமை வேண்டியிருக்கும்.

இந்த மாதிரி வர்றவங்களுக்கு சிசிடிவி கேமரா ஒரு தொல்லை. தன்னோட பிரைவஸி பாதிக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்களும், கண்காணிப்பு இல்லாது ஆல்டைம் சுதந்திரமா இருக்க நினைக்கிறவங்களும் மட்டும்தான் இங்கே வந்து தங்கறாங்க. கெடுபிடி காட்டினா யாரும் வர்றதில்லை. அதனால நிர்வாகத்துல சிசிடிவி வைக்கல சார்…!” என்றார் மானேஜர் அமுதன்.

“இது ரொம்ப அநியாயம். கொலையானது லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்ட தமிழ்நாட்டோட ஒரு முன்னணி நடிகை. பிரஸ், மீடியா எல்லாம் கேள்வி கேட்டு, கிழிகிழின்னு கிழிக்கும். என்ன பதில் சொல்றது?  சிசிடிவி கேமரா இல்லைனு ரொம்ப சிம்பிளா சொல்றீங்க. நாங்க எப்படி கொலையாளிய கண்டுபிடிக்கிறது?”  ரவீந்திரன் கோபப்பட்டார்.

“சிசிடிவி கட்டாயம் என்று இருந்தவரை இதுபோன்ற கொலைகளில் துப்புதுலக்க எளிதாக இருந்தது. அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது. அடுத்தவர் அந்தரங்கத்தை கண்காணிக்கிறது என நீதிமன்றத்தில் வழக்குப்போட்ட பிறகு, சிசிடிவி கேமரா வைக்க புதிய நிபந்தனைகளை விதித்துவிட்டது கோர்ட். அதன்படி எல்லோரும் சிசிடிவி வைத்துக்கொள்ள முடியாது. துப்பாக்கி வைத்திருப்பவர்போல லைசென்ஸ் வாங்கி வைத்துக்கொள்ளலாம்..இதுதான் நடைமுறை…” கோகுல் ஞாபகமூட்டினார்.

தெளிவான ரவீந்திரன்,” இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு யார் ஓனர்?” கேட்டார்.

“எக்ஸ் மினிஸ்டர் விவிதன் சார்!”

“தகவல் சொல்லியாச்சா?”

“ம்…சார் இப்ப தாய்லாந்துல இருக்கார். அவரோட சன் உங்களை வந்து மீட் பண்ணுவார் !”

ரவீந்திரன் பக்கத்து அறைக்கு போனார்.

“இங்கே எத்தனை பேர் இருக்காங்க..?”

“ஒருத்தர்தான் சார்…”

“கூப்பிடுங்க…”

பக்கத்து அறையில் இருந்து ஒரு வாலிபன் வெளிப்பட்டான். முழு போதையில் இருந்தான். கண்களை கசக்கி கொண்டு ரவீந்திரனை பார்த்தான்.

“அந்த சூட்டுல நடிகை அனாமிகா  கொலையாகி இருக்காங்க. உங்களுக்கு தெரியுமா ?”

“ஷ்ளாரி. தெர்ல. கூ?” போதை குறையாமல் குழறினான்.

“இங்கே எத்தனை நாளா தங்கியிருக்கீங்க?”

“மூணு…”

“இந்த மூணு நாள்ல யாராவது அவங்க ரூமுக்கு வந்து சண்டை போட்டதை பார்த்தீங்களா?”

“சண்ட…? நோ…சார்..!”

“சார். அவர்ஃபுல் போதையில இருக்கார். இப்ப விசாரிக்கறது வேஸ்ட். தெளியட்டும். நானே ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வர்றேன். அப்புறம் என்கொயரி பண்ணலாம்…”அமுதன் சொல்ல,

ஓ.கே சொன்ன ரவீந்திரன் பாடியை போஸ்ட்மார்டம் அனுப்ப ஆயத்தமானார்.

தடயவியல் நிபுணரிடம் வந்து, “ஏதாவது தடயங்கள் சிக்கியதா?” எனக்கேட்டார்.

“எதுவுமில்லை சார்!” -என்றார் அவர்.

பிரேதத்தை மறுபடி பார்த்தவர், “அனாமிகா சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தகவல் சொல்லி விடுங்கள் கோகுல்..” என்றார்.

” அனாமிகாவுக்கு அப்பா மட்டும்தான். அம்மா கிடையாது. கூட பிறந்தவர்களும் இல்லை. ஒரே பொண்ணுதான் சார்…” என்றார் கோகுல்.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?”

“அவங்க சம்பந்தமான இன்டர்வியூஸ் நிறைய யூ-டியூப்ல கொட்டிக்கிடக்கு சார். அதுல பார்த்தேன்…”

“வெரிகுட். கேஸ்க்கு இதெல்லாம் தேவைப்படும் விஷயங்கள்தான். பை த பை எல்லாம் முடிஞ்சதும் அனாமிகா அப்பாவை என்கொயரி பண்ண வேண்டியிருக்கும் கோகுல். நோட் இட்…!” என்றார்.

“ஓ.கே.சார்!”

அனாமிகா தங்கியிருந்த சூட்டை சீல் செய்துவிட்டு, அவளை மார்ச்சுவரி வேனுக்கு அனுப்பினார் ரவீந்திரன்.

அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் உண்டாக நெற்றியை சுருக்கினார். அப்போது குறுக்கிட்ட சப்- இன்ஸ்பெக்டர் கோகுல்,

“சார்! இந்த ஹோட்டல் பக்கத்துலதான் ராம்ஜி சேட் பங்களா இருக்கு. அங்கே சிசிடிவி கேமரா இருக்கலாம். அதுல ஏதாவது புட்டேஜ் கிடைக்குதுதான்னு செக் பண்றேன் சார்…”  சொல்ல,  சந்தோஷமானார் ரவீந்திரன்.

உடனே அங்கே விரைந்தார்கள்.

இந்த மாதிரியும் வீடு இருக்குமா என வீடு அவர்களை ஆச்சரியப்படுத்தியது. அத்தனை கிராண்ட்டாக கிரானைட் கொண்டு செதுக்கி, செதுக்கி கட்டியிருந்தார் சேட்.

“ராம்ஜி ஒழுங்காக ஜி.எஸ்.டி. கட்டறாரான்னு விசாரிக்கணும் கோகுல்…” என்றார் ரவீந்திரன்.

“சார்! இந்த ஒரு பங்களாவுக்கே நீங்க வாயப்பிளந்தா எப்படி? ஹைதராபாத், மும்பை, டெல்லின்னு இன்னும் இதைவிட பிரமாண்டமான பங்களா எல்லாம் அவருக்கு இருக்கு…”

“அங்கே எல்லாம் யாருய்யா இருக்கா?”

“அவர் வொய்ஃப்ங்கதான் சார்!”

“என்னய்யா பன்மையில சொல்றே?”

“ஆமா சார்! அவருக்கு மூணு சம்சாரம். எல்லாரையும் கண்கலங்காம வச்சிருக்கார்!”

“ஆள் எப்படி? ஷாரூக், சல்மான் மாதிரி இருப்பாரா?”

“நீங்க வேற. முன் வழுக்கை. பான்பராக் பல்லு. பானை வயிறு. பார்க்க சகிக்காது…”

“அப்புறம் எப்படிய்யா ?”

“எல்லாம் பணம் சார்! சமீபமா பாலிவுட்ல ஒரு நடிகைகூட லிங்க்ல இருக்கறதா வேற கிசுகிசு…”

“என்னய்யா பிஸினஸ் பண்றார்?”

“டைமண்ட் வியாபாரம்…”

சேட் வீட்டில் இல்லை. மனைவிதான் இருந்தார். அவரே ஒரு சினிமா ஸ்டார் போல இருந்தார்.

“வாங்கோ…” என தமிழ் பேசினாள்.

விஷயத்தைச் சொன்னதும், கணவரை போனில் கூப்பிட்டாள்.

ரவீந்திரன் அவரிடம் பேசினார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே கூல்டிரிங்ஸ் வந்தது. குடித்தார். கோகுல், சுவரில் போட்டோவாக மாட்டியிருந்த   சேட்டின் மகளை ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்தார்.

“நாளைக்கு வாங்க. உங்களுக்கு தேவையான உதவியை செய்ய நான் காத்திருக்கிறேன்…”  போனிலேயே ராம்ஜி சொன்னார்.

“சார்! இந்த வேலைய நானே பர்சனலா நின்னு முடிக்கறேன். நாளைக்கு நீங்க வரவேணாம்…” என்றார் கோகுல்.

“நீ சேட்டு பொண்ணை ஜொள்ளு விடும்போதே நினைச்சேன். உனக்குன்னு உன் அத்தை பொண்ணு ஊர்ல காத்திருக்குய்யா. ஊரான் சொத்து வேணாம்.  அது மேக்கப் செலவுக்கு கூட நீ சம்பாதிக்கறது பத்தாது. மைண்ட் இட்…” ஞாபகப்படுத்தினார்.

“கவனிச்சிட்டீங்களா? நீங்க பயங்கர கில்லாடி சார்…” இருவரும் சிரித்தபடியே ஜீப் ஏறினார்கள்.

                            *****
(- தொடரும்…)

முந்தையபகுதி – 1 | அடுத்தபகுதி – 3

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...