அனாமிகா – குறுநாவல் -1 | திருமயம் பாண்டியன்

 அனாமிகா – குறுநாவல் -1 | திருமயம் பாண்டியன்

அத்தியாயம் – 1

அனாமிகா இறப்பதற்கு முன் நடந்த கதை இது:

அனாமிகா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகை. அவளின் பெயரை பச்சை குத்திக்கொண்ட ரசிகர்கள் இங்கே ஏராளம். ஒவ்வொரு ரசிகனும் அவளை தனது கனவு கன்னியாக கொண்டாடிக் கொண்டிருந்தான். முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் ரசிகர்களால் அவளது மார்க்கெட் கிடுகிடுவென நாலே வருஷத்தில் உயர்ந்துவிட்டது. அனாமிகா சம்பளமாக எவ்வளவு கேட்டாலும் கொட்டித்தர தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தார்கள்.

பெளர்ணமி நிலவு போல பளபளப்பாக மின்னும் கன்னம். மெழுகு போல வழுக்கும் கால்கள். ஏதேன் தோட்டத்தில் இருக்கும் திராட்சை போல மிதக்கும் காந்தக் கண்கள். கடுகு போல சிறுத்து இருந்தாலும் கவனத்தை ஈர்க்கும் மேலுதட்டு மச்சம். கடித்துத் தின்னலாம் போல  தேனூறும் உதடுகள். பால்குடம்போல ததும்பும் மார்பகங்கள்… என அனாமிகாவின் அழகை குமுதம்  இளைய ரவி, சபீதா ஜோசப் போல எழுதிக்கொண்டே போகலாம்.

ஷூட்டிங் முடித்து வீட்டுக்கு வந்த அனாமிகாவை உள்ளே நுழைந்ததும்,

“அனாமிகா…” என அழைத்தார் அவரது அப்பா சிவநாதன்.

அவர் சற்றுநேரத்திற்கு முன் கண்ணாடி அணிந்து, பேஸ்புக் பார்த்து நண்பர்களுக்கெல்லாம்  லைக்ஸ் போட்டுக்கொண்டிருந்தார்.தலைக்கு நரை வந்து இருபது ஆண்டுகளை பூர்த்தி செய்திருந்த அவர், அதை மறைக்க ‘டை’ போட்டுக்கொள்கிறார். சராசரி பெரிய மனிதர்களை போல தினசரி வாக்கிங் போய்கொண்டும், டாக்டர் தரும் சுகர் மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டும் வாழ்ந்துவருகிறார். அதோடு கார்மெண்ட் கம்பெனி ஒன்றை நடத்தி நூறு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுத்துக்கொண்டிருக்கிறார். மகளால் பெயரும், பெருமையும் அடையும் அவருக்கு இப்போது அதனாலயே சங்கடமும் வர ஆரம்பித்திருக்கிறது.

“அனாமிகா…” அவர் மறுபடி கூப்பிட்டதும், காதிலிருந்து இயர்போனை கழட்டிய அவள், அதன்வழியே வழிந்த சங்கீதத்தை ஆஃப் செய்தாள்.

“என்ன டாட்? கூப்பிட்டீங்களா? ” – டப்பிங் இல்லாத தன் குரலில் கேட்டாள்.

“ஷூட்டிங் இப்பதான் முடிஞ்சதாம்மா…?”

“எஸ் டாட்…” – காலையிலிருந்து, மாலை வரை ரிகர்சல் பார்த்து, லைட்டிங் பார்த்து, கேமரா கோணம் பார்த்து, டூயட் பாடி, நடனமாடி, காதல் நாடகமாடி, நடித்து வந்த களைப்பை முகத்தில் காட்டினாள்.

“உங்கிட்ட கொஞ்சம் மனம்விட்டு பேசணும். இப்ப ஃப்ரீயாம்மா..?”

“உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு. ஐ ஃபீல் வெரி டயர்ட். குளிச்சிட்டு வந்துடறேனேப்பா… ஏதாவது அவசர விஷயமா?”

“அதெல்லாம் இல்லம்மா. அடிக்கடி ஷூட்டிங், ஷூட்டிங்ன்னு வெளியே போயிடுறியா, அதனால சாதாரணமா பேசக்கூட சந்தர்ப்பம் கிடைக்க மாட்டேங்குது. எனக்கும் உன்கிட்ட பேசாம இருக்கிறது லோன்லியா இருக்கு. ஒன்னும் அவசரமில்ல. குளிச்சிட்டு மெதுவா வாம்மா. சாப்பிட்டுட்டு பேசலாம்…” என்றார் சிவநாதன்.

“சரி. டாட்..” – ஒரே டேக்கில் சொல்லிவிட்டு, மாடியேறிய அனாமிகா தன் பிரத்யேக ரூமுக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டாள்.

உடைகளை ஒவ்வொன்றாய் கழற்றி போட்டுவிட்டு, ( இங்கே அவரவர் சென்சார் இல்லாமல், உங்கள் கற்பனைக்கேற்றவாறு அனாமிகாவின் அழகை ரசித்துக்கொள்ளவும்)  ஷவரில் உடல் நனைத்தாள். குளிர்ந்த நீர் மழையாய் அவள் மேனிதழுவி, ரசிகனாய் அவள் அழகில் கிறங்கி, கீழே இறங்கிக் கொண்டிருந்தது.

இதுபோல் எத்தனையோ படத்தில், எத்தனையோ சீன்களில்  நடித்து விட்டாள் அனாமிகா. குளோசப் ஷாட் வைத்து மழையில் நனைந்த அவளை முன்னும், பின்னும் கிளுகிளுப்பாய் படமெடுத்து, போஸ்டர் ஒட்டி, ரசிகனுக்கு ஆசையூட்டி படத்திற்கு வரவைத்து, ஹவுஸ்ஃபுல்லாக்கி எக்கச்சக்கமாய் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள் நிறைய பேர். பெட்டி, பெட்டியாய் பணம் சேர்த்து தங்களது பங்களாக்களில் பாதாள அறைகளில் கொட்டி கொட்டி நிரப்பி வைத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் அனாமிகா கேட்டதெல்லாம் கொடுக்கும் ஒரு காமதேனுபோல மாறியிருந்தாள்.

அவள் நடிக்க வந்தது ஒரு விபத்து. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில் அம்மா இறந்து போக தன் தனிமையை போக்கிக்கொள்ள மாடலிங் செய்தாள். விளம்பர படங்கள் பண்ணினாள். ஒரு சில விளம்பர படங்களிலேயே அவள் புகழ் வெளிச்சத்துக்கு வந்துவிட்டாள்.

“விளம்பரங்களில் நடித்தால் போதுமா? உங்கள் அழகுக்கு சினிமாவில் நடித்தால் நீங்கள் இன்னும் உயரம் போகலாம். பணம் கொட்டும். புகழ் கிடைக்கும். நடிக்கிறீங்களா ? என் படம்தான் உங்க முதல் படமா இருக்கணும். சம்பளம் இரண்டு கோடியோ மூன்று கோடியோ எவ்வளவு வேணாலும் தர்றேன். அட்வான்ஸ் 50 லட்சம் இப்பவே பிடிங்க…” என வீட்டிற்கே வந்து காத்திருந்து, விடாப்பிடியாக கால்ஷீட் வாங்கி கொண்டு போனார் தயாரிப்பாளர் ஏகாம்பரம்.

முதல்பட தயாரிப்பே நூறுகோடி பட்ஜெட். பெரிய இயக்குனர் என அமைந்தது அவள் அதிர்ஷ்டம்.

முதல்நாள் ஷூட்டிங்கில் தயங்கினாள்.

” ஹீரோயின்னா கிளாமர் காட்டணும். இதெல்லாம் இன்டஸ்டிரியில் சகஜம். நாங்க இருக்கும்போது இங்கே என்ன பயம்? சினிமாவுல ஜெயிச்ச ஹீரோயின் எல்லாம் இப்படித்தான் வளர்ந்தார்கள்…” டைரக்டர் சொல்ல, குட்டை பாவாடை அணிந்து கொள்ள தயக்கத்தோடு சம்மதித்தாள்.

டூயட் சீனில் சின்ன உடை  தந்த கூச்சமும்,  ஹீரோவை கட்டியணைக்க இருந்த தயக்கமும் அவளை நடிக்க சிரமப்படுத்தியது. இரண்டு படம் நடித்த பிறகு அந்த கூச்சமும், வெட்கமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

அவளே,” என்ன டைரக்டர் சார்! சேலைகட்டி நடிக்கணுமா? அது எனக்கு பழக்கம் இல்லையே. கனமான டிரஸ் எல்லாம் வேணாம். சிம்பிளா காஸ்ட்டியூம் கொடுங்க…” டைரக்டருக்கு ஆலோசனை சொல்ல தொடங்கினாள்.

” அனாமிகா! இது முகூர்த்த புடவை. கல்யாண சீன். கண்டிப்பா கட்டித்தான் ஆகணும். ப்ளீஸ்… புரிஞ்சுக்கோ. பர்ஸ்ட் நைட் சீன் எடுக்கும்போது எல்லாம் கழட்டி போடலாம்…” டைரக்டர் குறும்பாக சொல்வார். யூனிட்டே சிரிக்கும்.

அந்த அளவுக்கு அனாமிகா மாறி இருந்தாள் அல்லது சினிமா உலகம் அவளை மாற்றியிருந்தது.

குளித்து முடித்தவள் டவல் எடுத்து துடைத்துக்கொண்டாள். இரவு நேர உடைக்கு மாறி, டைனிங் டேபிளுக்கு வந்தாள்.

வத்சலா காத்திருந்தாள். சமையலில் பயங்கர கெட்டி. விதவிதமாய் சமைத்து போட்டு வீட்டோடு மகளாய் இருந்து வரும் வேலைக்காரி. ஐந்து வருடமாக வீட்டின் விசுவாசமாய் இருக்கிறாள்.

செல்லமாக வத்ஸின் முதுகை தட்டினாள் அனாமிகா.  வத்ஸலா அவளை விட ஏழு வயது மூத்தவள். கொஞ்சம் மாநிறம். மடிப்பு விழாத இடுப்பு. மஞ்சள் பூசிக் குளிக்கும் முகம்.

“வத்ஸ் இன்னைக்கி என்ன டிபன்.?”

“நெய் ரோஸ்ட். ரவா இட்லி. சாம்பார், சட்னி. ஃப்ரூட் சாலட், கல்கண்டு பால்…”

“எல்லாமே பிடிச்ச ஐயிட்டம்தான். வெயிட் போடாம டயட்டா சாப்பிடறதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு…” சொன்னாள்.

நடிகையாக இருக்க உணவு தியாகம் செய்யவேண்டும். உடல் எடை கூடி விடாமல், எக்ஸ்ட்ரா கொழுப்பு இடுப்பில்  விழுந்துவிடாமல், அதே சமயம் மெலிந்தும் விடாமல் எப்போதும் ஃபிட்டாக, கவர்ச்சியாக தெரிய வேண்டும். அதற்கு நாள்தோறும்  ஜிம்மில் பயிற்சி செய்ய வேண்டும். நிறைய உழைப்பை தர வேண்டும்.

தினசரி ஷூட்டிங்கில் லைட்பாய்கள் வைக்கும் மின்பல்புகளின் அதிக வெளிச்சம் ஸ்கின்னை பாதிக்காதவாறு பாதுகாக்க வேண்டும். கூந்தல் பராமரிப்புக்கு, பற்கள் பளீச்சுக்கு, மேக்கப்புக்கு என பலவிஷயங்களில் மெனக்கெட வேண்டும். இதெல்லாம் செய்தால்தான் ஒரு நடிகை மார்க்கெட்டில் நிலைத்து நிற்க முடியும்.

இதெல்லாம் தவறாமல்  செய்துவருவதால்தான் அனாமிகா நம்பர்ஒன் நடிகையாக இருக்கிறாள்.

அப்பா சாப்பிட்டாச்சா..?”

“சாப்பிட்டாரும்மா. நீங்க சாப்பிட்டதும் உங்களை அவர் ரூமுக்கு வரச்சொன்னார்…”

“ஓ.கே. எனிதிங் ஸ்பெஷல் நியூஸ்?”

“தெரியலைம்மா…”

“வழக்கமா ஆரம்பிக்கற கல்யாண மேட்டரா இருக்காதே..?”

“வேறென்னம்மா அவருக்கு கவலை இருக்கப்போகுது?”

சாப்பிட்டு முடித்தவள் அவர் ரூம்க்கு போனாள்.

“டாட்…” கதவை தட்டி உள்ளே நுழைந்தாள்.

“வாம்மா… உட்கார்…” ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தவர், எதிரே ஷோபாவை காட்டினார்.

அமர்ந்தாள். கால்மேல் கால்போட்டுக்கொண்டாள்.

“என்னம்மா.. சினிமா சூட்டிங் எல்லாம் எப்படிப் போகுது?”

“இட்ஸ் கோயிங் ஸ்மூத்லி அண்ட் ஹேப்பி டாட்… எனிதிங் இம்பார்டன்ட் நியூஸ்?”

“எஸ். ஆனா அதை எப்படி ஆரம்பிக்கறதுன்னுதான் தெரியல…”

“நமக்குள்ள என்ன டாட் தயக்கம்? எதுவா இருந்தாலும் சொல்லுங்க…”

“இப்ப படங்கள்ல ரொம்ப கிளாமரா நீ நடிக்கறதா கேள்விபடறேனேம்மா…”

அந்த கேள்வியை சற்றே அதிர்ச்சியோடு எதிர்கொண்ட அனாமிகா, நிதானித்து கவலை எதுவுமின்றி  சிரித்தாள்.

“சினிமா நிஜ உலகம் இல்லப்பா. அது ஒரு கனவு உலகம். அங்கே ஹீரோயின்கள் ஜெயிக்கணும்னா கிளாமர் காட்டிதான் ஆகணும். அது தவிர்க்கமுடியாது.

பலகோடி பிசினஸ் நடக்கற சினிமால என் பங்குக்கு நான் எவ்வளவு தயாரிப்பாளருக்கு சம்பாதிச்சு கொடுக்கறேன்கறதுதான் முக்கியம். வயதும், இளமையும், அழகும், இருக்கறவரைக்கும்தான் எங்க மார்க்கெட்.

இப்படியெல்லாம் நடிச்சாதான் இங்கே ஜெயிக்க முடியும். பணம் பார்க்க முடியும். கிளாமர் இல்லைன்னா ஹீரோவுக்கு அக்காவா, அம்மாவாதான் நடிக்க கூப்பிடுவாங்க.  ரசிகன் மனசுல இடம்பிடிக்க முடியாது…”

“நீ நடிச்சு பணம் கொண்டு வந்தாதான் குடும்பம் நடத்த முடியும்னு நினைக்கறியாமா?  இங்கே சூழ்நிலை அப்படியா இருக்கு. உங்க அப்பா சம்பாதிச்ச  சொத்து ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்மா. அப்புறம் எதுக்கு இப்படி நடிச்சு ஊர்ல  கெட்டபேர் வாங்கணும்…?”

“டாட்…! முதுகுக்கு பின்னால ஆயிரம்பேர் ஆயிரம் பேசுவாங்க. அதெல்லாம் காதுல வாங்கக்கூடாது. உங்களைப் போல நானும் என் சொந்த கால்ல நிக்கறது எனக்கு பெருமையா இருக்கு. டாடி..! உங்கள,  உங்க கம்பெனி சார்ந்த நூறு பேருக்கும், உறவுக்காரங்க ஆயிரம் பேருக்கும் மட்டும்தான் தெரியும். ஆனா, என்னை  எட்டு கோடி பேருக்கு மேலே தெரிஞ்சு வச்சிருக்காங்க.

எல்லாம் சினிமா தந்த புகழ். எங்கே போனாலும் ஆயிரம் பேர் சுற்றி வளைச்சிடறாங்க. ஆட்டோகிராஃப் கேட்கறாங்க. ரசிகனோட குழந்தைக்கு பேர் வைக்கறேன். ராத்திரி அவங்க கனவுல வந்து கவலை தீர்க்கறேன். நகைக்கடை திறப்பு விழாவுக்கு வரணும். என் அடுத்த படத்தில நடிக்கணும்னு என் கால்ஷீட்டு வாங்க வருஷக்கணக்குல பல பேர் காத்துக்கிடக்காங்க. இந்த புகழ் எனக்கு பிடிச்சிருக்கு. அதனால…”

“அதனால?” சிவநாதன் கவலையாகக் கேட்டார்.

“என்னை கண்ட்ரோல் பண்ற வேலைய விட்டுட்டு, உங்க வேலைய மட்டும் பாருங்க டாட்…”

அந்த பதிலில் கலங்கிப்போனவர் சுதாரித்துக்கொண்டு, “சொந்தப்படம் வேற எடுக்கப்போறதா சொல்றாங்களேம்மா…உண்மையா?” கேட்டார்.

“ஆமா! மூவாயிரம் கோடி பட்ஜெட். இதுவரை சம்பாதிச்ச சொத்தை எல்லாம் அடமானமா வச்சு, கடனுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். ஜெயிப்பேன்…”தீர்க்கமாக சொன்னாள்.

“இது ரொம்ப ஆபத்து. நீ கத்திமேல நடக்கறே…நீ போகும் பாதை சரியில்லை…!”

“உங்க அட்வைஸ் தேவையில்லை டாட்..!”

“இறுதியா என்னதான் சொல்றேம்மா..?” கேட்டார்.

“இது என்னோட வாழ்க்கை. இதுல எது சரி? எது தவறு? ன்னு எனக்கு நல்லா தெரியும். உங்க அட்வைஸ் வேணாம். என் வழிய நானே பார்த்துக்கறேன்…!” கறாராகச் சொன்னாள்.

அந்த பதிலைக் கேட்டதும் திகைத்துப் போனார். எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப்போய் நின்றார். கிளி சிறகு முளைத்து பறக்க தொடங்கிவிட்டதை உணர்ந்தார்.  பிறகு தன்னைத்தானே சமாளித்துக்கொண்டவர்,

“அப்போ… திருமணமும் அப்படித்தானா? நான் ஒருத்தரை காதலிக்கறேன். இவரைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீ சொன்னாலும் அதுக்கு நான் சம்மதிக்கணுமா..?” வேதனையோடு கேட்டார்.

“உங்க சம்மதத்தை நான் எதுக்கு எதிர்பார்க்கணும் டாட்…? பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிட்டு தனிக் குடித்தனம் போயிடுவேன். உங்களுக்கு தொந்தரவு தரமாட்டேன். கவலைப்படாதீங்க…”என்றாள்.

நிலச்சரிவில் உதிரும் மண்போல  மனம் சரிந்து விழ, தடுமாறினார்.

சினிமா நிரந்தரமல்ல. அனாமிகாவிற்கு  ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டும். அவளின் கவர்ச்சி காட்டும் படங்கள் அதற்கு இடையூறாக அமைந்துவிடக்கூடாது. அவள் சரியான வழிபோக பாதை அமைத்துத் தரவேண்டும் என எண்ணினார்.  அவளின் விருப்பத்தை அறிந்து அவளுக்கு பிடித்தமான வரனை தேடவேண்டும். என்ற அக்கறையில்தான் சிவநாதன் பேசினார். ஆனால், அனாமிகா அதை புரிந்துகொள்ளவில்லை.

“அம்மா இல்லாத பொண்ணுன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்ததுக்கு இதுதான் நீ காட்டுற மரியாதையாம்மா?” கண்கலங்கினார்.

அனாமிகா அவரின் கண்ணீரை பொருட்படுத்தாமல், தன் ரூமுக்கு மாடியேறினாள்…

(தொடரும்…)

அடுத்தபகுதி – 2

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...