மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 17 | பெ. கருணாகரன்

 மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 17 | பெ. கருணாகரன்

உடலோடு உரையாடு…

உடலோடு என்றாவது உரையாடியதுண்டா?
அதற்கு எப்போதாவது நன்றி சொல்லியிருக்கிறோமா?
உடல் உறுப்புகளிடம் மன்னிப்பு கேட்டதுண்டா? 

இதயத்தின் தாள லயத்தை அமைதியான தனிமையில் உட்கார்ந்து ரசித்திருக்கிறீர்களா? சுவாசப் பையான நுரையீரலின் ஆரோகண அவரோகண ஸ்தாயிகளை உள்ளுணர்வால் உணர்ந்திருகிறீர்களா?  இரைப்பையின் அரைவைச் சத்தத்தையும் வெள்ளையணுவின் கிருமிடனான யுத்தத்தையும் என்றேனும் உணர முயன்றிருக்கிறீர்களா?
நம்மிடம் ஒரு பைசா ஊதியமும் பெறாமல் சுயநலமின்றி நாம் பிறந்த தினத்திலிருந்து நம்முடனே இருந்து நமக்காக ஓய்வின்றி உழைத்து நம்முடனே அழிந்து போகும் அந்த விசுவாச ஊழியர்களைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறோமா?

நாலு குடம் தண்ணீர் அடிப்பதற்கே நாக்கு தள்ளி மூச்சு வாங்கி ஓய்வெடுக்கும் நாம், ஆயுள் முழுக்க ஒரு நொடி உறங்காமல், ஓய்வெடுக்காமல் லிட்டர் லிட்டராக ரத்தத்தை பம்ப் செய்யும்  இதயத்தை நினைத்து வியந்திருக்கிறோமா? மூளையை நினைத்துப் பிரமித்திருக்கிறோமா?

உடலோடு உரையாடுதல் உடம்பை நேசிப்பதன் அடையாளம். உடலை நேசிப்பவர்களே அதனைச் சரியாகப் பராமரிக்கவும் செய்கிறார்கள். இதயத்துக்கு உள்ளுணர்வால் முத்தம் கொடுத்துப் பாருங்கள். அது இதயத்தை உற்சாகப்படுத்தும். உங்கள் ரகசிய விரல்களால் உங்கள் கல்லீரலை வருடிக் கொடுங்கள். அது பதிலுக்கு உங்கள் கன்னத்தில் செல்லமாக  நக்கிக் கொடுக்கும். இதெல்லாம் பௌதீகமானதல்ல. ஆனால், மானசீகமானது. நுண்மையான உள்ளுணர்வானது.

உடலுடனான நம் உரையாடல் எப்படி இருக்கலாம்? சில உறுப்புகளோடு கொஞ்சம் உரையாடிப் பார்ப்போமா? முதலில் இதயத்தில் ஆரம்பிப்போம்.

இதயமே… என் கோப நேரங்களில் அதிகம் துடித்து, சந்தோஷ நேரங்களில் குதூகலமாய் குதித்துக் கொண்டாட்டம் போடும் சிவப்புத் தாமரையே. ஒரு நொடியும் ஓய்வின்றி லட்சக்கணக்கான லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்யும் இணையில்லா இயந்திரமே… உன் துடிப்பொலி உணர்ந்தேன். அதன் இசைநயம் அறிந்தேன். எனக்காக உழைக்கும் உன்னை உயிர் உள்ளவரை மறவேன்.

மூளையே… உடலின் தலைமைச் செயலகமே… புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியமே… பல்லாயிரம் கோடி நியூரான்களாலும் பலப்பல ஆயிரம் கோடி செல்களாலும் நிர்மாணிக்கப்பட்ட உலகின் முதல் நுண்கணினியே… பல்லாயிரம் நிகழ்வுகளையும் கவிதைகளையும் நட்பையும் பகையையும் நன்றியுணர்வையும் ஏந்தி நிற்கும் நினைவுத் தட்டே… முடிவெடுக்கவும் நல்லதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லதை நிராகரிக்கவும் உத்தரவிடும் தலைவனே…  உனக்கு நான் நன்றி சொல்வது எனக்கே நான் நன்றி சொல்லிக் கொள்வது போலல்லவா? நான் எழுதும் கதைகளும் கவிதைகளும் நீ எழுதுவதல்லவா? நீ நினைப்பதை எழுதி முடிக்கும் கருவியன்றோ நான். என் சந்தோஷம் கோபம் அனைத்தும் உன் உத்தரவுகள் அல்லவா. நினைவுகளின் சேமிப்புக் கிடங்கே. துக்க நினைவுகளை அழித்துவிட்டு, துரோகங்களை மறக்கச் செய்து சந்தோஷ நினைவுகளையும் மற்றவர்கள் செய்த நன்மைகளையும் மட்டுமே சேமித்து வை. உனக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அதற்கான வார்த்தைகளை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்.

கல்லீரலே… ஒன்றரை கிலோ எடையுள்ள உயிர் நண்பனே… உடலின் ரசாயனத் தொழிற்சாலையே… உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்பார்கள். என் உடலுக்குத் தேவையில்லாத உப்பை அழிக்கும் உன்னையும் என் உயிர் உள்ளவரை மறவேன். இதயம், சிறுநீரகத்தின் சிநேகிதனே… நலம் விரும்பியே… ரத்தத்தில் கலந்துவரும் நச்சுக்களை வெளியேற்றும் சுத்திக்கரிப்பாளனே… எனது வலப்புறத்தின் இன்னொரு இதயமே… உன் பணிகளை நினைத்து வியக்கிறேன். உனக்கு மென்மையான என் நன்றிகள்.

சிறுநீரகங்களே… ரத்தத்தின் சுத்திகரிப்பு ஆலைகளே…  சிவப்பணுக்களின் உற்பத்திக் கூடமே… ஒவ்வொரு மணி நேரத்துக்கும் உடலின் ஒட்டுமொத்த ரத்தத்தை இரண்டுமுறை சுத்தம் செய்து அனுப்பும் உங்கள் சுறுசுறுப்பில் பத்து சதவிகித்தையாவது எனக்குக் கொடுங்கள்.  உடலுக்குத் தேவையான தாதுக்களைச் சமச்சீராய் நிர்வகிக்கும் கண்காணிப்பாளனே… 140 கிராம் எடையே இருந்தாலும் உடலில் சேரும் கூடுதல் தாதுக்களுக்கு நீ போடுவது 144. நாங்கள் வலதுசாரி, இடது சாரி என்று பிரித்துக் கொண்டு மோதிக் கொள்கிறோம். நீங்களோ வலது, இடது என்று பிரிந்து தனித்தனியாக இருந்தாலும் கருத்தொற்றுமையுடன் எனக்காக உழைக்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டது ஒற்றுமை… சண்டை போட்டுக் கொள்ளாமல் சமர்த்தாக ஒன்றுபட்டு என் உடல்நலம் பேணும் உங்களுக்கும் என் நன்றிகள்.

நுரையீரலே… காற்றிலுள்ள கார்பன்டை ஆக்சைடைப் பிரித்து உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டுமே பிரித்தெடுத்து வழங்கும் அன்னப் பறவையே… இரும்புப் பட்டறையில் உலைநெருப்பை காற்றை அனுப்பி உசுப்பி விடும் துருத்திபோல், உடலின் இயக்கத்துக்குக் காரணமான திருப்பூந்துருத்தியே… சுருங்கி விரியும் சதைப்பூவே… அரை கிலோ எடையில் இருந்தாலும் எவ்வளவுதான் மாசுபட்ட காற்றை உள்ளே அனுப்பினாலும் சலித்துக் கொள்ளாமல் அதைச் சலித்து சுத்தம் செய்து ஆக்சிஜனை மட்டுமே ரத்தத்துக்கு அனுப்பும் வடிகட்டியே… வேறென்ன? உன்னை வணங்குகிறேன்.

கண்களே… என் உடலின் காமிராக்களே… தாயின் முகத்தை  அறிமுகப்படுத்தி, பந்தங்களையும் சொந்தங்களையும் நண்பர்களையும் எனக்கு அடையாளப்படுத்தி என் வாழ்வை வெளிச்சமாக்கிய ஒளிப்பூக்களே. உதயம், அஸ்தமனம், வானவில், மழை, மலை என்று பலதையும் காட்டி இந்த உலகமே ஓர் அழகின் சிரிப்பு, இதில் கவலை கொள்ள என்ன இருக்கு என்பதை உணர்த்தினீர்கள். நீங்கள் இல்லையேல் என் வாழ்க்கை இரண்டு போயிருக்கும். உங்களுக்கு என் கண் கசியும் நன்றிகள்.

காதுகளே…  சத்தங்களை அறிமுகப்படுத்திய ஒலி வாங்கிகளே… அன்று தொட்டிலில் அம்மாவின் தாலாட்டில் ஆரம்பித்த இசைப்பயணம் இளையராஜா, ரஹ்மான் என்று இன்று உங்கள் தயவால் இனிதே தொடர்கிறது. ஒளி மாசு யுகத்திலும், டென்ஷன் செய்யும் அதிக டெஸிபல் அளவுகளிலும் சகித்துக் கொண்டு எனக்கு நன்மை செய்யும்  செயல் வீரர்களே… காது கொடுங்க… உங்களுக்கு ‘சவுண்டான’ நன்றிகள்.

மூக்கே… உயிர்க்காற்றை உள்ளே அனுப்பும் முதல்மடையே… உணவு, மலர்கள், நறுமணப் பொருட்கள் என்று அனைத்து வாசங்களையும் உணர்ந்து என்னை உசுப்பேற்றி உற்சாகப்படுத்தும் புடைத்த உறுப்பே. கைகலப்புகளின்போது, அதிகம் அடிபடுபவனே…. அதனை மனதில் வைத்துக் கொண்டு வேலை நிறுத்தம் செய்யாமல் கடமையைத் தொடர்ந்து செய்பவனே… உன் நுனி தரையில் பட, உன்னை வணங்குகின்றேன்.

சுவை அரும்புகளின் நந்தவனமே… நாக்கே… வாய்க்குள் அமைந்த சாஃப்ட்வேரே… நான் பேசும் வார்த்தைகளின் நாற்றங்காலே…  நீ இல்லாதிருப்பின் சுவையற்றுப் போயிருக்கும் இந்த வாழ்க்கை. மெல்லும் பற்களுக்கு உணவை ஒதுக்கித் தரும் உன் சேவை இல்லாதிருந்தால் அந்தப் பற்கள் பலநேரங்களில் தடுமாறிப் போயிருக்கும். நெகிழும் நன்றிகள் உனக்கு.

பற்களே… வாய்க்குள் பாடி வீடமைத்து வரிசையாய் நிற்கும் போர் வீரர்களே… வாய்க்குள் அமைந்த ஹார்வேர் தொழிற்கூடமே… கடினமான உணவையும் மென்று இரைப்பையின் சிரமத்தைக் குறைப்பவர்கள் நீங்கள்… உங்களுக்கும் நன்றிகள்.

கால் முளைக்கும் முன்னே கால்களாய் எனைத் தாங்கிய கைகளே.  அன்னையின் விரல் பிடித்து நடக்க உதவிய என் பற்றுகோளே. மோதலில் வாள் பிடிக்கவும், காதலில் மலர் கொடுக்கவும் இன்னும் எத்தனையோ விதங்களில் எனக்குத் தோள் கொடுத்து உதவும் தோழர்களே… உங்களுக்கும் உங்கள் போர் வீரர்களான விரல்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

கால்களே… மீட்டருக்குமேல் போட்டுக் கொடுக்கச் சொல்லாத என் பயண  வாகனங்களே… நடப்பதற்கும் ஓடுவதறகும் ஆடுவதற்கும் நீங்கள் இல்லையென்றால் என்னால் இயன்றிருக்காது. மொத்த உடலின் எடைதாங்கி, சத்தமின்றி உழைக்கிறீர்கள். சிலநேரங்களில கவனக் குறைவால் முட்களின் மீதும் கற்களின் மீதும் நடக்க வைத்து உங்களைத் துன்புறுத்தியிருக்கலாம். மன்னித்து விடுங்கள். உங்களைக் கால் தொட்டு வணங்குகிறேன்.

உடலின் சுரப்பிகளே… சிறிய உருவத்துடன் இருந்தாலும் மிகப்பெரும் செயல்களைச் செய்பவர்களே…உடல் வெப்பத்தைச் சீராக்கி, நீர் அளவைச் சமச்சீராக்கி, நோய்த்தொற்றுக்களை அழித்து, ருசியையும், பசியையும் தூண்டி, காமத்தையும், காதலையும் தூண்டி, உடல் வளர்ச்சியைத் தீர்மானித்து, பல்வேறு உணர்வுகளின் காரணகர்த்தர்களாகிய உங்களுக்கும் நன்றிகள்.

டலுடன் பேசி விட்டோமா? இத்தகைய உரையாடலை சத்தங்களற்ற  தனிமையில் மன ஒருமையுடன் முழு ஈடுபாட்டுடன் நிகழ்த்த வேண்டும். அற்புதமான அனுபவம் அது. நீங்கள் கேட்கலாம், உடலுடன் நம்மால் பேச முடியும். ஆனால், அது ஒருவழிப் பேச்சுதானே? உடல் நம்முடன் பேசுமா?

நல்ல கேள்வி… அதன்படி ஒருவேளை உடல் நம்முடன் பேச ஆரம்பித்தால்? அவை என்னவெல்லாம் பேசும்?

இதயம் பேசினால், ‘கண்ட எண்ணெயையும், புலால் உணவையும் தின்று ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரித்து என்னை ஏன் சிரமப்படுத்துகிறீர்கள்? கொழுப்பைக் குறையுங்கள்… என்னால தாங்க மிடில…’ என்று புலம்புமோ?

கல்லீரல், ‘தினமும் கடைக்குப் போகலேன்னா தூக்கம் வராதா? ஒவ்வொரு துளி ஆல்கஹாலும் என் மேலே ஊற்றப்படும் திராவகம் போல. என்னைச் சுற்றி கொழுப்பு படியுது… டெய்லிக்கு நீ மட்டையானால் ஒரு நாள் நான் மட்டையாகி, நீ கட்டைக்குப் போக வேண்டி வரும்…’ என்று குடிமகன்களிடம் கடிந்து கொள்ளுமோ?

‘ஏம்பா… சிகரெட் பிடிச்சு காசையும் கரியாக்கறே… கூடவே என்னையும் கரியாக்கறே… எனக்கு மூச்சு திணறுது…’ என்று நுரையீரல் புகைப்பழக்கம் உள்ளவர்களிடம் முறையிடுமோ?

சிறுநீரகம் நீரிழிவு நோயாளியிடம் ‘வாயைக் கட்டு பிரதர்… தினமும் வீட்டுக்குத் தெரியாம ஸ்வீட் சாப்பிட்டு என்னை ஏன் இம்சை பண்ணுறே? தினமும் வாக்கிங் போய் உடம்பின் கலோரியையும் சர்க்கரை அளவையும் குறைங்க பிரதர்…’ என்று புலம்புமோ?

  கண்கள், ‘ரொம்ப நேரம் ஃபேஸ்புக்கை நோண்டாதே… நான் ரொம்பச் சிரமப்படறேன். மணி பத்தாச்சு… போய் தூங்குப்பா…’ என்று கண்ணீர் விட்டுக் கதறுமோ?

இப்படி ஒவ்வொரு உறுப்பும் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லி நம்மைத் தூங்க விடாமல் செய்திருக்கலாம். நல்லவேளை, அவற்றுக்கு சிந்திக்கும் ஆற்றலும் வாயும் இல்லை.

(- தொடரும்…)

முந்தையபகுதி – 16 | அடுத்தபகுதி – 18

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...