மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 16 | பெ. கருணாகரன்
உடைபடும் மௌனங்கள்
நான் நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டில் ஓர் அலுமினிய தட்டு உண்டு. பல இடங்களில் ஒடுக்கு விழுந்து, அந்த ஒடுக்குப் பள்ளங்களில் எல்லாம் லேசாகப் பச்சை நிறத்தில் பாசி படிந்திருக்கும். அதனைப் பார்க்கவே எனக்கு அருவருப்பாக இருக்கும். அந்தத் தட்டில்தான் மாதம்தோறும் மூன்று நாட்கள் வீட்டின் மூலையில் உட்கார்ந்துகொண்டு என் அம்மாவும் சின்னம்மாவும் உணவு உண்ணுவார்கள். அந்த நாட்களில் அவர்கள் வீட்டில் புழங்க மாட்டார்கள். வேண்டா வெறுப்பாக அவர்களுக்கு அந்த நாட்களில் உணவு அளிக்கப்படும்.
‘ஏன் அப்படி?’ என்று ஒருநாள் அம்மாவிடம் கேட்டேன். தீட்டு என்றார்கள். ‘என்ன தீட்டு?’ என்று கேட்டவுடன், ‘அதிகப்பிரசங்கி…’ என்று திட்டு விழுந்தது. தலையில் நறுக்கென்று குட்டும் விழுந்தது. அந்தக் காலகட்டத்தில் அம்மாவைத் தொடக் கூடாது. தொட்டால் அடி விழும். குளிர்காலமாக இருந்தாலும் கதறக் கதறக் குளிக்க வைப்பார்கள். அந்த மூன்று நாள் விஷயம் எனக்குக் கொஞ்சம் விவரம் புரியும்வரை ராணுவ ரகசியம் போலவே பாதுகாக்கப்பட்டது. என்றாலும் அந்தத் தட்டின் மீது இனம் புரியாத அருவருப்பு உணர்வு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒருநாள் அந்தத் தட்டு வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போய்விட்டது. எல்லோருக்கும் ஆச்சரியம். பிச்சைக்காரன் கூட அந்தத் தட்டை எடுத்துச் செல்ல யோசிப்பான். அந்தத் தட்டு காணாமல் போவதென்றால்?
அந்தத் தட்டைக் களவாடியவன் நான்தான் என்பதும் அதை வைத்து நான் பேரீச்சம் பழம் வாங்கித் தின்ற ரகசியமும் இதுவரை யாருக்கும் தெரியாதது. இப்போது யோசிக்கும்போது, அன்று அருவருப்பு காரணமாக நான் செய்த செயல், நியாயமானதாகவே தோன்றுகிறது. தீட்டு என்கிற பெயரில் நடந்த அந்த அராஜகத்துக்கு எதிர்வினையாகவே அதனைப் பார்க்கிறேன். அந்த அலுமினியத் தட்டு காணாமல் போனபிறகுதான் அந்த இடத்தை எவர்சில்வர் தட்டு ஒன்று வந்து இட்டு நிரப்பியது. மாதவிடாய் என்கிற இந்த உடல் நிகழ்வுக்குப் பின்னணியில்தான் எவ்வளவு அரசியல்கள்.
அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ சிறுகதை ஒரு பெண் பூப்படைதல் என்பது நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்வில் எவ்வளவு பெரிய சுமையான, அயர்ச்சியான நிகழ்வு என்பதை படம் பிடிக்கிறது. பூப்படைதல் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு மனரீதியாக அந்தப் பெண் தயாராவதற்குப் பக்குவப்படுத்தப்படுவதில்லை என்பதையும் தான் பூப்படைந்ததை ஒரு குழப்பமாக, தவிப்பாக ஒரு பெண் உணர்வதையும் கதை அழுத்தமாய் விவரிக்கும்.
தன் மகள் பூப்படைந்து விட்டால், சந்தோஷத்துக்குப் பதில் சோகமான மனோநிலைக்குச் செல்லும் பெற்றோரே இங்கு அதிகம். அதனை ஒரு பெரிய சுமையாக உணர்வதற்கான சூழலே இங்கு நிலவுகிறது. பருவமெய்தாத பெண்களையே பாலியல் வக்கிரத்துடன் பார்க்கும் பாலியல் அறிவில், பாலைவன வறட்சி நிலவும் சமூகத்தில் பருவமெய்துதலை பெண்ணின் உடலில் நிகழும் ஓர் இயல்பான மாற்றமாகப் பார்க்காமல் அது குறித்த ஏகப்பட்ட மூட நம்பிக்கைகளும் அச்சுறுத்தல்களுமே இங்கு நிலவுகின்றன. அந்த அச்சுறுத்தல் ஒரு சிலந்தி வலையாய்ப் பின்னப்பட்டு வலையில் சிக்கிய இரையாகவே அந்தப் பெண் கடைசி வரையில் இழைகளில் சிக்கி, மீள முடியாதவளாகவே முடிந்து போகிறாள்.
பூப்படைதல், ஒரு பெண்ணுக்கு உடல்ரீதியாக நிகழும் ஒரு மாற்றம். அந்த மாற்றம் குறித்த விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்கள் அந்தப் பெண் குழந்தைக்குச் சொல்லப்படுவதில்லை. தன் உடல் குறித்துத் தெரிந்து கொள்ளாமலே தனக்கு என்ன நிகழ்ந்தது என்பது அறியாமலேயே அந்தப் பெண் பருவமெய்துகிறாள். பெண்களுக்கு இந்த நிகழ்வு குறித்த தேவையற்ற அச்ச உணர்வும் வெட்க உணர்வும் ஏற்படும் விதமான சடங்குகளும் நடைமுறைகளுமே தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.
‘ராக்காயி வயசுக்கு வந்துட்டாள். இனி அவள் வெளியில் சகஜமாக வரக்கூடாது. ஆம்பளைப் பசங்க கூட பேசக் கூடாது. அவள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். அடக்கமான உடல்மொழி பேண வேண்டும்’ என்றெல்லாம் அந்தப் பெண்ணின் பாரம்பரிய மரபணுக்கள் தூண்டப்படுகின்றன. உடலின் சாதாரண அந்த நிகழ்வை எதிர்கொள்ளும் பெண்களுக்கு, அதனை ஓர் அருவருக்கத்தக்க விஷயமாய் உணர வைத்து, அதனை வெளியில் பேச விடாமல் மன அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் கொடுத்து அது ஒரு சங்கடமான, ரகசியமான சமாச்சாரமாகவே இங்கு ஆக்கப்பட்டு விட்டது. உடல் எவ்வளவு நேசத்துக்குரியது. போற்றுதற்குரியது. ஆனால், பெண்கள் தன் உடலை நேசிக்க முடியாத மனோபாவர்களாகவே இத்தகைய நிகழ்வுகளால் இங்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
பதின்ம வயது ஆடிக் களிக்க வேண்டிய பருவம். அந்தக் காலத்தில் ஆரோக்கியமான உணவு உண்டு, பூப்படைவது 16, 17 வயதுகளில்தான் நிகழ்ந்தன. அதன்பிறகு அவர்கள் வெளி உலகில் அதிகம் புழங்காமல் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டனர். அது அந்தக் காலம். இன்று? உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்குழந்தைகள் மனரீதியாகப் பக்குவமடைவதற்கு முன்பே 12 வயதுகளில் பூப்படைந்து விடுகிறார்கள். அதன்பிறகு, அவர்கள் 12 வயதிலேயே வீட்டுக்குள் அடைத்து வைக்கப்படும் நிலையில் அவர்களது வெளியுலகத் தொடர்புகள் முடக்கப்படுகின்றன. அனுபவ அறிவு குறைந்தவர்களாகவே அவர்கள் வளர்கிறார்கள். அவர்களது அனுபவ அறிவு என்பது குடும்ப எல்லையுடனே நின்று விடுகிறது.
இன்றைய நிலையில் ஒரு பெண் பூப்படைதலுக்கும் பெரிய விழா. பேனர்கள், கட்அவுட்கள் என்று ஏக ரகளைகள். அந்தக் காலத்தில் மஞ்சள் நீராட்டு விழா என்று நிகழ்த்தப்பட்ட இந்த விழாக்கள் கல்யாணச் சந்தையின் ஒரு மார்க்கெட்டிங் உத்தியாகவே கையாளப்பட்டது. ‘இன்னார் மகள் வயசுக்கு வந்திருக்காள். அவங்க வீட்ல பொண்ணு இருக்கு’ என்பதை உலகுக்கு அறிவிக்கும் வைபவமாகவே இந்தச் சடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஒரு பெண் பூப்படைந்ததும் அடுத்து கல்யாணமே லட்சியம் என்று ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் ஏற்பாடுகளே அத்தகையச் சடங்குகள். ஆண் பிள்ளை என்றால் அவளை நல்ல வேலையில் அமர்த்தி விடவேண்டும் என்பதும், பெண் பிள்ளையாக இருந்தால் அவளை நல்ல மாப்பிள்ளை கையில் ஒப்படைத்து விடவேண்டும் என்பதே ஒரு பெற்றோரின் குறைந்தபட்ச திட்டமாக இருக்கிறது. அது அந்தக் காலத்தில் சரி. இன்று தகவல் தொழில் நுட்பம் பெருகிவிட்ட நிலையில் மேட்ரிமோனியல், மணமகன் தேவை போன்ற எண்ணற்ற வாய்ப்புகள் உள்ள நிலையில், இன்னும் கல்யாணத்தைச் சந்தையாகவும் பெண்ணை ஒரு விற்பனைப் பொருளாகவும் முன்னிறுத்தும் இத்தகைய சடங்குகள் தேவைதானா? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? இதன் பின்னே எத்தகைய மனோபாவம் ஒளிந்திருக்கிறது?
இதுகுறித்து நமது உளவியல் அறிஞரான நண்பர் ஒருவருடன் பேசியபோது, “இன்றையச் சூழலில் எதையும் கொண்டாட வேண்டும் என்கிற மனோபாவம் மக்களிடம் அதிகரித்து விட்டது. ஒரு காலத்தில் சொந்தக்காரர்களை மட்டும கூட்டி வைத்து நிகழ்த்தப்பட்ட மஞ்சள் நீராட்டு விழாக்கள் இன்று பேனர்கள் வைத்து விமர்சையாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணங்கள் அதுதான்…” என்றார்.
பெண் பூப்படைந்ததைக் கொண்டாடும் நாம் அந்தப் பெண்ணைக் கொண்டாடுகிறோமா என்றால் இல்லை. மாத விடாய் குறித்த இன்னும் ஏராளமான மூட நம்பிக்கைகள் கிராமங்களில் நிலவி வருகின்றன. மாத விடாய் வந்த பெண்ணைத் தீண்டத் தகாதவளாய் ஒதுக்கி வைக்கும் ‘முட்டு வீட்டுக் கலாச்சாரம்’ இன்னும் பல கிராமங்களில் நிலவி வருகிறது. ஊரின் ஒதுக்குப் புறத்தில் தனியே இருக்கும் இந்த முட்டு வீடுகளுக்குத் தனி கழிவறையோ, மின் இணைப்புகளோ கிடையாது. இரவில் பாம்பு போன்ற உயிரினங்களால் ஆபத்துகள் அதிகமிருக்கும் ஒரு சூழலில்தான் தங்கள் ‘மாதாந்திரக் கடனை’ பெண்கள் முட்டு வீடுகளில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த முட்டு வீட்டுக் கலாச்சாரமே ஒழிக்கப்பட வேண்டும் என்கிற குரல் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்க, முட்டு வீடுகளுக்கு மின் வசதி, கழிப்பறை வசதிகள் செய்து கொடுத்து அந்தப் பிற்போக்குத் தனத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று ‘பாரம்பரிய ஆணிய’ குரல்களும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இன்றைய நிலையில் கிராமங்களில் வசிக்கும் பெண்களின் நிலை இப்படி என்றால், நகரங்களில் வசிக்கும் பெண்களுக்கோ, பொது இடங்களில் மாத விடாய் காலங்களில் நாப்கினை அழிப்பதற்கான பிரத்யேக வசதியுள்ள பெண்களுக்கான கழிப்பறைகள் இல்லை. அப்படி அழிக்க முடியாத நிலையில் தாங்கள் கொண்டு செல்லும் உணவு டப்பாக்களில் அதை வைத்து ‘பத்திரமாக’ வீட்டுக்கு எடுத்து வந்து அதை அழிக்கும் அவலங்களும் இங்கு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பெண்களுக்கென்று பிரத்யேகமாக நாப்கினைப் பாதுகாப்பாகக் கையாளும் வசதியுள்ள கழிப்பறைகள் தேவையென்ற சில குரல்கள் ஒலித்தாலும் அதன் குரல் வலுவாக இல்லை என்றே கூற வேண்டும். காரணம், அதுகுறித்து வெளிப்படையாகப் பேசுவதில் பலருக்கும் இருக்கும் தயக்கங்களும், வெட்க உணர்வுமே. வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகளை மிக இயல்பாகவும் – இயல்பாக அணுக வேண்டிய, விவாதிக்க வேண்டிய விஷயங்களில் கள்ள மௌனம் பூண்டு, அது குறித்து பேசுவதே அவமானம் என்று நினைக்கிற ஆரோக்கியமற்ற மனோபாவத்துடனே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் வரும் ஆபாசக் காட்சிகளை குடும்பத்துடன் உட்கார்ந்து எந்தவித சங்கடங்களும் இன்றி ரசிக்க முடியும் ஓர் ஆணால், இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேசும் பெண்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை.
கல்லூரியில் என் பேராசிரியர் ஒருவர் கூறியது இது. மாதவிடாய் காலங்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது இன்றைய நிலையில் மூட நம்பிக்கையாக இருந்த போதும், அந்தப் பழக்கம் ஏற்படுவதற்குப் பின்னணியில் அறிவியல் பூர்வமான ஒரு காரணம் இருந்ததையே அவர் விளக்கினார். வேட்டைச் சமுதாயமாய் இருந்தபோது, பெண்ணின் தலைமையில்தான் ஆண்களும் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். வேட்டையாட பல மைல்கள் தங்குமிடம் தாண்டி, காட்டில் சுற்றி வருவார்கள். அங்குச் செல்லும் இடங்களில் தங்க நேர்ந்தபோது, இரவு நேரங்களில் புலி போன்ற கொடிய விலங்குகள் வந்து மனிதர்களைத் தாக்கியிருக்கிறது. ஒதுக்குப்புறமாய் ஒதுங்கிப் படுத்திருந்த போதிலும் கூட இந்த விலங்குகள் எப்படி நம்மைக் கண்டு பிடித்துத் தேடி வருகின்றன என்று யோசித்த போதுதான் மாத விடாயின் குருதி வாடையை வைத்தே மனிதர்களை அது இனம் கண்டு வருகிறது என்பதைக் கண்டறிந்தார்கள். அதன் பிறகுதான் இத்தகைய பெண்களை மாதவிடாய் காலத்தையொட்டி வீட்டிலேயே விட்டு விட்டு பாதுகாப்புக்குப் பெரிய கட்டைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு வேட்டைக்குக் கிளம்பினார்கள்.
பெண்கள் மாத விடாய் சமயங்களில் ஒதுக்கப்பட்டதன் உண்மை இதுதான். அவர்களுக்குக் குறுக்கே போடப்படும் அந்தப் பெரிய கட்டைதான் இன்று உலக்கை ஆகியிருக்கிறது. இந்தப் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுதான் வேட்டைச் சமுதாயம் நாகரிகமடைந்து வேளாண் சமுதாயமாக, நிலவுடைமைச் சமுதாயமாக மாறிய பிறகு, பெண் என்பவள் தன் சொத்துக்குரிய ‘ஒரிஜினல்’ வாரிசைப் பெற்றெடுத்துக் கொடுக்கும் ஓர் இயந்திரம் மட்டுமே என்கிற அளவில் பெண்களைக் கையாளத் தொடங்கினார்கள் ஆண்கள். இதன் அடிப்படையில்தான் மாதவிடாய் என்பது பெண்களை நிரந்தரமாக வீட்டிலேயே தங்கும்படியான சதிவலைப் பின்னலர்ய் மாறியது.
அந்தக் கால கட்டத்தில் இந்தமுறை சரிதான். ஆனால், இன்றைய கால கட்டத்திலும் மாதவிடாய் சமயத்தில் பெண்ணைத் தனித்து ஒதுக்கி, உலக்கையைக் கொடுப்பது, அராஜகத்தின் உச்சம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?
பெண்ணிய செயல்பாட்டாளரான கீதா இளங்கோவன் இயக்கிய ‘மாத விடாய்’ ஆவணப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். மாதவிடாய் குறித்த பொய்யான நம்பிக்கைகள், வெட்கம், அவமானம், பாசாங்கு, அறியாமை போன்ற பல்வேறு காரணங்களால் வெளிப்படையாய்ப் பேசப்படாமல் தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமாசாரத்தை, அதுகுறித்துப் பொதுவெளியில் பெண்களைக் கொண்டே பேச வைத்திருக்கிறார் கீதா. அது குறித்த விவாதங்களையும் எழுப்பியிருக்கிறார். இதனாலேயே இந்த ஆவணப்படம் முக்கிய கவனம் பெறுகிறது.
தங்கள் தளைகளையே நிலைகளாக அறியாமையுடன் ஏற்றுக் கொள்ளும் ஒரு பாலினம், அந்த அறியாமையையே தங்களது அனுமதியாக அங்கீகரித்துக் கொள்ளும் இன்னொரு பாலினம். இந்த இரண்டுக்குமான மையப்புள்ளியில் மன இறுக்க மவுனத்தில் அரங்கேறுகிறது பாலின அரசியல்.
பெண்களுக்கெதிரான விலங்குகளை உடைப்பதற்கு முன் முதலில் உடைக்கப்பட வேண்டியது தலைமுறை தலைமுறையாக அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் மௌனத்தை. இந்தப் பணியை கன கச்சிதமாய் முன்னெடுத்துச் செல்கிறது மாத விடாய் ஆவணப்படம்.
மாதவிடாய் பற்றி விளிம்பு நிலை மனிதர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசுப் பணியாளர்கள், பெண்ணியவாதிகள் என்று எந்தவொரு தரப்பையும் விட்டு விடாமல் முழுமையாக மாத விடாய் பிரச்சினைளை அவர்களே கூறுவது வலி மிகுந்த அவமானத்தை உடைப்பதாக உள்ளது. படத்தின் ஆரம்பத்தில் ‘மாத விடாய் என்றால் என்ன?’ – இந்தக் கேள்விக்கு அந்தப் பள்ளி மாணவி பதில் பேசாமல் வெட்கத்துடன் சிரிக்கும் அந்தச் சிரிப்பு, பல தலைமுறைகளாக அழுகி இறுகிப் போன ஓராயிரம் அழுத்தங்களைச் சொல்லிச் செல்கிறது. அந்த வெட்கச் சிரிப்பு நம்மை வெட்கித் தலைகுனியக் கோருகிறது. 38 நிமிடங்கள் ஓடும் ‘மாத விடாய்’ ஆவணப்படம் ஒரு மகத்தான முயற்சி. இந்தப் படத்தில் பிரச்சாரமாக எதுவும் சொல்லப்படவில்லை. பெண்கள் மாதவிடாய் குறித்த தங்கள் பிரச்சினைகளைப் பேசிவிட்டுச் செல்கிறார்கள். விளிம்பு நிலை மனிதர்களையும் பேச வைத்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளும் பேசுகிறார்கள்.
பார்வைத் திறனற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் படிப்பறிவில்லா பெண்களும் பெண்ணியவாதிகளும், கல்வியாளர்கள், பெண்ணியவாதிகள், அரசுப் பணியாளர்கள் என்று சமூகத்தின் சகலத் தட்டுகளிலும் நுழைந்து அனைவரின் அவஸ்தைகளையும் பிரச்சினைகளையும் பதிவு செய்திருப்பதோடு ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வுகளும் கூறப்பட்டிருக்கிறது.
இன்று பெண்களைச் சுற்றி இறுகப் பின்னப்பட்டிருக்கும் மௌனச் சங்கிலிகள் உடைபட வேண்டுமானால் இன்னும் இதுபோன்ற பேசப்படாத சங்கதிகளையெல்லாம் வெளிப்படையாகப் பேசுகின்ற ஆவணப் படங்கள் நிறைய வெளிவர வேண்டும். வெட்கங்களும் தயக்கங்களும் தவிடு பொடியாக வேண்டும். மௌனங்கள் உடைபடும்போதுதான் உரிமைகள் மீட்கப்படும்.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 15 | அடுத்தபகுதி – 17