வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (சனிக்கிழமை) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில்,இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை தீவிரமாக இருக்கும் என்றும், வரும் டிசம்பர் 2-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (சனிக்கிழமை) உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனினும் சுமத்ரா கடலோரப் பகுதிகளில் நேற்றே இந்த தாழ்வுப்பகுதி உருவாகிவிட்டதாக தனியார் வானிலை ஆய்வு மையங்கள் கூறியுள்ளன. எனவே காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று தெளிவாக விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி எப்படி நகரும் என்றால், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு வந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்… பின்னர் 25-ந் தேதி (திங்கட்கிழமை) மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை வட இலங்கை மற்றும் டெல்டா கடற்கரையை நோக்கி செல்லும், பின்னர் அங்கு நிலவும் வானிலை காரணிகளான அரேபிய மற்றும் பசிபிக் உயர் அழுத்தங்கள் காரணமாக அதே இடத்தில் 48 முதல் 60 மணி நேரம் வரை நிலை பெறக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்
ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிலைத்திருப்பதால், இது தீவிர தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக கணித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், இதன் காரணமாக 25-ந் தேதி மாலையில் இருந்தே நாகப்பட்டினம் தொடங்கி சென்னை வரை தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதன்படி, வருகிற 26, 27 மற்றும் 28-ந் தேதிகளில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் இந்த மழை குறுகிய காலத்தில் தீவிர மழைக்கும், பெருமழையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி 26, 27 மற்றும் 28-ந் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சென்னை நாகப்பட்டினம் இடையே நிலைக்கொள்ளும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ மாறி, வருகிற 28-ந் தேதி இரவு புதுச்சேரிக்கும், கோடியக்கரைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும், சென்னை முதல் தஞ்சாவூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.. புயல் அல்லது தாழ்வு மண்டலம் கரையை கடந்தாலும். 29-ந் தேதியில் இருந்து உள், மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை இருக்கும் என்பதால், வருகிற 25-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்த முறை சென்னை பகுதிக்கு மழை பெய்யத்தவறினால், ஏரிகள் வறண்டு மார்ச் முதல் ஜூன் மாதம் குடிநீருக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான வீடுகள் போர்களை நம்பியே உள்ளதால், பருவ மழை பொய்த்துப்போனால், தண்ணீருக்கு பெரும் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனினும் நல்ல மழை பெய்யும் என்றே வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.