அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து..!
அமெரிக்க நீதிமன்றத்தின் லஞ்ச குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் முறைகேடாக பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம் அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.25 ஆயிரம் கோடி நிதியை அதானி குழுமம் திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சௌரவ் அகர்வால் உள்பட 7 பேரின் மீதும் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டை தொடர்ந்து இந்தியாவின் அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக ரத்து செய்து அறிவித்துள்ளார். கென்யாவில் 30 ஆண்டுகளுக்கு 736 மில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி ஒப்பந்தங்களை கவுதம் அதானியின் குழுமம் பெற்றிருந்த நிலையில் அனைத்தையும் ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.
லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கியதால் அதானியின் 2 திட்டங்களான மின் பகிர்மானம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து செய்துள்ளது. அதானி குழுமத்தின் முன்மொழிவை அரசாரங்கம் பரிசீலித்து வருவதாக கென்ய அதிபர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.