ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 5 டெஸ்ட்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று பெர்த் நகரில் தொடங்குகிறது.
கேப்டன் ரோகித் சர்மா, தனது மனைவியின் 2வது மகப்பேறுக்காக விடுப்பு எடுத்துள்ளார். எனவே பும்ரா முதல் டெஸ்ட்டில் இந்தியாவை வழி நடத்த உள்ளார். பார்டர்-கவாஸ்கர் தொடர்களில் கடந்த சில தொடர்களாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் இந்தியாவில் 2, ஆஸியில் 2 என கடைசியாக நடந்த 4 தொடர்களை இந்தியா கைப்பற்றி உள்ளது.
அதிலும் தொடர்ந்து 32 ஆண்டுகளாக ஆஸி தோற்காத பிரிஸ்பேனிலும் 2020/21 தொடரில் இந்தியா வென்றது. அப்போது வெற்றிக்கு காரணமான கேப்டன் ரகானே, தடுப்புச் சுவர் புஜாரா, ஹனுமா விகாரி, மாயங்க் அகர்வால், அறிமுகமான டெஸ்ட்டில் அசத்திய நடராஜன், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இல்லை. எனினும் சமீபத்தில் நியூசிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன அவலத்தில் இருந்து மீள வேண்டிய இக்கட்டில் இந்தியா இருக்கிது. அதனால் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் ‘ஆட’ வேண்டிய கட்டாயத்தில் இருப்பது இந்தியாவுக்கு பலன் தரலாம்.
சுழல்கள் அஷ்வின், ஜடேஜா என பந்து வீச்சாளர்களின் திறமை நியூசி தொடரிலும் அதி அற்புதமாக தான் இருந்தது. ஆஸியில் விளையாடி அனுபவம் உள்ள சிராஜ், பும்ரா ஆகியோருடன் இன்னொரு வேகம் நிதிஷ் ரெட்டி அறிமுகமாக உள்ளார். அதே நேரத்தில் சொந்த மண்ணில் தொடர்ந்து இந்தியாவிடம் தோற்கும் நிலையை மாற்ற வேண்டிய நெருக்கடியில் பேட் கம்மின்ஸ் தலைமயைிலான ஆஸி அணியும் உள்ளது. ஸ்மித், கவாஜா, லபுஷேன், அலெக்ஸ், மார்ஷ், இங்லீஸ் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தும் வாய்ப்பு அதிகம்.
கூடவே, லயன், ஹசல்வுட், மிட்செல், போலண்ட் ஆகியோர் பந்து வீச்சிலும் மிரட்டவும், வழக்கம் போல் இந்தியர்களுக்கு காயம் ஏற்படுத்தவும் காத்திருக்கின்றனர். எப்படி இருந்தாலும் இந்த தொடரில் வெல்வதின் மூலம் நியூசியிடம் இழந்த பெருமையை இந்தியா மீட்பதுடன், ஐசிசி உலக கோப்பை பைனலுக்கு மீண்டும் முன்னேறும் வாய்ப்பையும் பெறலாம்.