என்னை காணவில்லை – 18 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 18 | தேவிபாலா

அத்தியாயம் – 18

காஞ்சனா அவன் குரலை கேட்டு நடுங்கி விட்டாள்.

“பார்த்தியா? அவன் மந்திர சக்தி, தவிர நிறைய பணத்தை தள்ளி வெளில வந்துட்டான். அவன் உன்னை கொல்லாம விட மாட்டான்.”

“நானும் உன் கூட வர்றேன். என் மேல எந்த தப்பும் இல்லைனு நான் சொல்றேன் கபாலிக்கு.”

“வேண்டாம். முதல்ல நான் போய் என்னானு பார்த்துட்டு வர்றேன். நான் பேசிக்கறேன்.”

காஞ்சனா, கபாலியை பார்க்க வந்தாள். சிஷ்யன் கபாலியை படுக்க வைத்து ஒத்தடம் தர,

“போலீஸ் செமத்தியா அடிச்சாங்களா கபாலி?”

“வாயை மூடு. போலீஸ்ல நம்ம ஆள் இருக்கு. என்னை எதுவும் செய்ய மாட்டாங்க. அந்த துளசி, கூப்பிட்டு வச்சு நடு ராத்திரில அசிங்கப்படுத்திட்டா. அவளை நான் கொல்லாம விட மாட்டேன். அந்த உருட்டுக்கட்டை அடி, தானா பறந்து வந்து, படக்கூடாத இடங்கள்ள பதம் பார்த்திடுச்சு.  ம்மா, வலி தாங்கலை.!”

காஞ்சனா சிரிப்பை அடக்க கஷ்டப்பட்டாள்.

“கபாலி! நீ மந்திரவாதியாச்சே..அதை தடுத்து நிறுத்த முடியலியா உன்னால?”

“ கிண்டலா உனக்கு? உயிரோட நீ போக மாட்டே.!”

“கோவப்படாதே கபாலி. துளசியும்  இதே குழப்பத்துல தான் இருக்கா. அவ உன்னை அவமானப்படுத்த அழைக்கலை. அவ வீட்ல ஏதோ ஒரு செய்வினை, அவ அறைல இருக்குனு சந்தேகப்படறா.!”

“ நிச்சயமா இருக்கு. நான் பூஜைல பத்து நிமிஷம் இருந்திருந்தா அதை கண்டு பிடிச்சிருப்பேன்! இந்த அவமானத்துக்கு பதிலடி தராம நான் நிச்சயமா விட மாட்டேன் காஞ்சனா. நீ துளசியை கூட்டிட்டு வா. அவளை நான் கொல்ல மாட்டேன்.”

அதே நேரம் சேர்மன் அறையில் துவாரகா இருக்க,

“ ராத்திரி உங்க வீட்டுக்கு போலீஸ் வந்து, ஒரு நிர்வாண சாமியாரை, கைது பண்ணிட்டு போனதா தகவல்!”

“யாரு சார் சொன்னாங்க?”

“நம்ம எதிரிகள். உங்களால வேலை இழந்த சீனியர்கள்..சமீபத்துல உங்க விஞ்ஞான வேலையை காட்டி, அவங்க அனுப்பின அடியாட்களை, ஆள் இல்லாத காரை வச்சு ஓட ஓட விரட்டியிருக்கீங்க. அவங்க அடுத்த மூவ் என்னானு தெரியாம மிரண்டு நிக்கறாங்க. அவங்க ஒரு ஆளை வச்சு ராப்பகலா உங்க வீட்டை கண் காணிக்கறாங்க. அதுல ஒருத்தர் மூலமா வந்த தகவல். “

துளசியின் நடவடிக்கை காரணமாக அம்மா, குழந்தைகளை துவாரகா அப்புறப்படுத்தியது சேர்மனுக்கு தெரியும்.  invisible cloak device & solution ஐ வைத்து வீட்டிலும் அவன் நடத்தும் விஞ்ஞான விளையாட்டை வேறு வழியில்லாமல் அவரிடம் சொல்லியிருந்தான். வீட்டில் மந்திரவாதி வாங்கிய அடி, மற்றும் துளசிக்கு ஒரு கலவரத்தை உண்டாக்கியதை சேர்மனிடம் சொன்னான்.

“ நான் யூகிச்சேன் துவாரகா. இந்த எலக்ட்ரானிக் சங்கதில நம்ம கம்பெனில நடந்த ஊழலை தோலுரிச்சு, கோடிக்கணக்கான பணத்தையும், பெரிய ப்ராஜக்டுகளையும் எதிரிகள் கிட்டேயிருந்து காப்பாத்தி குடுத்துட்டீங்க!”

“அது கம்பெனி மேல நான் வச்ச விசுவாசம் சார்.!”

“இதனால வெளில போன எதிரிகள், உங்களை அழிக்கப்பாக்கறாங்களே?”

“சார்! வீட்ல, கட்டின மனைவியே என்னை காலி பண்ண முயற்சி செய்யறா. அதை விடவா? சார், அவ கூட பல வருஷங்களா போராடி நான் தோத்தாச்சு. அவளை விவாகரத்து பண்ணவோ, பலவந்தமா மென்டல் ஆஸ்பத்திரில சேர்க்கவோ என்னால முடியும். நான் அவளை பயப்படலை. என் ரெண்டு குழந்தைங்க எதிர் காலத்தை நினைச்சு கவலைப்படறேன். துளசியை பயப்படுத்த வீட்ல டிவைசை நான் பொருத்தலை. என்னை தற்காத்துக்க, வீட்ல என்ன நடக்குது எனக்கெதிரானு தெரிஞ்சுகத்தான் பொருத்தினேன். ஆனா பல விபரீத எல்லைகளுக்கு துளசி போறான்னு தெரிஞ்சு, நானே அதிர்ந்து போயிருக்கேன். தொடங்கின விளையாட்டை இப்ப நிறுத்த முடியலை சார்.!”

“அந்த மந்திரவாதி ஏதாவது செஞ்சிட போறான் துவாரகா. அவன் வெளில வந்துடுவான். தன் மாந்த்ரீக சக்தியால உங்களை முடக்கிட போறான்.”

“சார், நான் விஞ்ஞானத்தை நம்பறவன்.  இந்த கண் கட்டு வித்தையை கண்டு நான் மிரளலை. விஞ்ஞானத்தை ஜெயிக்க விதியால மட்டும் தான் முடியும்னு நம்பறவன் நான். அது மட்டுமில்லை, தான் செய்யற தப்புக்களுக்கு, தன் மோசமான சந்தேகத்துக்கு, கடுமையான எதிர் வினை உண்டுனு துளசிக்கு உணர்த்தத்தான் இந்த எலக்ட்ரானிக் யுத்தம் தொடருது. மற்றபடி யாரையும் பழி வாங்கற எண்ணம் எப்பவுமே எனக்கு இல்லை சார்.”

“உங்களை பற்றி எனக்கு தெரியாதா துவாரகா. நீங்க எங்க சொத்து. அதை உங்க மனைவி புரிஞ்சுகலை. கவனமா இருங்க துவாரகா, குறிப்பா நம்ம கம்பெனியை விட்டு வெளில போனவங்க கிட்ட.  அவங்க ரொம்ப மோசமான கிரிமினல்கள்.”

“நான் கவனமா இருக்கேன் சார்.!”

துவாரகாவுக்கு சுஷ்மா ஃபோன் செய்தாள்.

“ சொல்லு சுஷ்மா. நான் சேர்மன் ரூம்ல தான் இருக்கேன். வெளில வர்றேன். உன் கேபினுக்கு வர்றேன்.!”

அவள் காத்திருந்தாள். அங்கு வர,

“ டாக்டர் பல்லவி உங்க லைன் கிடைக்கலைன்னு டென்ஷனா இருக்காங்க.”

“நான் அங்கே தான் போறேன் சுஷ்மா.!”

“ஏன் துளசி, இத்தனை அசிங்கமான எல்லைகளுக்கு போறாங்க?”

“அவ நிறுத்த மாட்டா. இன்னும் அதிகமா செய்வா. மந்திரவாதி பணத்தை தந்து வெளில வந்தாச்சு.!”

“எனக்கு பயம்மா இருக்கு துவாரகா. உங்களுக்கு அவனால ஆபத்து வருமோன்னு கலக்கமா இருக்கு.!”

“நீ தைரியமா இரு சுஷ்மா. இந்த வாரம் எனக்கு இங்கே வேலை நிறைய இருக்கு. கொடைல உள்ள என் குழந்தைகளை நீ போய் பார்த்துட்டு வர்றியா? அங்கிருந்து வீடியோ கால் பண்ணு. நான் பசங்க கூட பேசறேன்.”

“பாவம் குழந்தைங்க!”

“அவங்க, அம்மானு ஒருத்தியை தொலைச்சிடக்கூடாதுன்னு தான் இத்தனை பாடு படறேன் நான். எனக்கு இனி மனைவி தேவையில்லை. ஆனா அவங்களுக்கு அம்மா வேணும். அவளை மீட்க முடியுமான்னு நான் முயற்சி செய்யறேன் சுஷ்மா.!”

“இதை துளசி புரிஞ்சுகாம, மேலும் மேலும் தப்பு செய்யறாங்க. கணவனை ஒரு மனைவி வெறுக்கலாம். ஆனா குழந்தைகளை விட்டு ஒரு தாய் விலக முடியுமா?”

“என் போராட்டம் ஜெயிக்குமான்னு பாக்கலாம்.!”

துவாரகா நேரடியாக புறப்பட்டு டாக்டர் பல்லவி க்ளீனிக் வந்தான். ஏற்கனவே டிவைசை பொருத்தி விட்டான். அதை மறுபடியும் சோதனை ஓட்டத்துக்கு தயார் செய்தான்.

“ எப்ப ரெடியாகும் துவாரகேஷ்?”

“ரெடி தான். நாளைக்கு இயங்கும்.”

“என்ன சொல்றாங்க துளசி? இங்கே கூட்டிட்டு வர்றீங்களா?”

“மனநல மருத்துவர் கிட்ட வான்னா, அவ வருவாளா? அவளை இங்கே வரவழைச்சு, அடுத்த கட்ட  ட்ரீட்மென்டை இங்கே நான் ஆரம்பிக்க போறேன்!”

“துவாரகா! இது என் க்ளீனிக். இங்கே நான் டாக்டரா? இல்லை நீங்க டாக்டரா?”

“ஸாரி டாக்டர். அவ மன நோயாளியா இருந்தா, நிச்சயமா நீங்க தான் அவளுக்கு சிகிச்சை தரணும். ஆனா அவ மன நோயாளி இல்லை. ஸோ, உங்க க்ளீனிக்ல வச்சு, உங்க மூலமா அவளுக்கு நான் சில ஷாக் ட்ரீட்மென்டுகளை தரப்போறேன். இந்த என்னோட மின்னணு  டிவைசை நான் இங்கே பொருத்த சம்மதிச்சதும் அதுக்காகத்தான். இதனால அவளை இங்கே வரவழைக்க நான் ஆடப்போற ஒரு நாடகத்துக்கு நீங்க ஒத்துழைப்பு தரணும். அது என்னானு நான் சொன்னா, உங்களுக்கு கோபம் வரும். என் கழுத்தை பிடிச்சு நீங்க தள்ளலாம்.!”

“நீங்க  சொன்னாத்தானே தெரியும் துவாரகேஷ்?”

அவன் சொன்னான். டாக்டர் பல்லவி யோசித்தாள்.

“ உங்க மேல எனக்கு நிறைய மரியாதையும், நம்பிக்கையும் இருக்கு. உங்களை முழுக்க உடல் பரிசோதனை செஞ்ச டாக்டர் நான். நீங்க ப்ரொசீட் பண்ணுங்க துவாரகேஷ். நான் ரெடி.”

“தேங்க்யூ டாக்டர்.”

துவாரகேஷ் வீட்டுக்கு வந்த சமயம், துளசி வீட்டில் இல்லை. மாமா, அத்தை தான் இருந்தார்கள்.

“ மாப்ளே! சாப்பாடு ரெடி. வர்றீங்களா? நாளைக்கு பொங்கல். உங்கம்மா, குழந்தைங்க எல்லாரும் இருந்தா, வீடே கல கலன்னு எத்தனை நல்லா இருக்கும்? இப்ப இவளால எழவு விழுந்த வீடு மாதிரி இருக்கு!”

“இருக்கற பிரச்னைல நானும் பொங்கலை மறந்துட்டேன். பசங்களுக்கு ட்ரஸ் வாங்கி அனுப்பணும். சகோதரிகள் ரெண்டு பேருக்கும் சீர் செய்யணும். அம்மாவை போய் பாக்கணும். அத்தே, லன்ச்சை முடிச்சிட்டு நீங்களும், மாமாவும் என்னோட கடைக்கு வாங்க. துணிமணிகள் எடுத்து அவரவர் வீட்ல போய் சேர்த்துடலாம். வர முடியுமா?”

“கண்டிப்பா வர்றோம் மாப்ளே. இதையெல்லாம் உங்க கூட இருந்து துளசி செய்யணும். அவ தறி கெட்டு போறாளே.”

சுஷ்மா ஃபோன் செய்தாள்.

“ துவாரகா! நாளைக்கு பொங்கல். குழந்தைகளுக்கு செய்ய வேண்டாமா?”

“அதுக்குத்தான் அத்தை, மாமா கூட கடைக்கு புறப்படறேன் நான்.!”

“குழந்தைகளுக்கு நான் வாங்கியாச்சு. ட்ரெயினுக்கு டிக்கெட் போட்டாச்சு. ராத்திரி பாண்டியன்ல போறேன். காலைல கொடைக்கானலுக்கு போயிடுவேன். குழந்தைங்க கூட ரெண்டு நாள் இருந்துட்டு வர்றேன். நீங்க கவலைப்பட வேண்டாம்.!”

“ரொம்ப தேங்க்ஸ் சுஷ்மா.”

“எத்தனை நல்ல பொண்ணு! இவ உங்க வாழ்க்கை துணையா வந்திருந்தா, உங்க வாழ்க்கையே வெளிச்சமா இருந்திருக்கும்?”

பெண்ணை பெற்ற எந்தஒரு தாயும் பேசாத பேச்சு இது. இருவரும் அவனோடு கடைக்கு வந்து துணிமணிகள் வாங்கி, சகோதரிகளுக்கு தாம்பூல சகிதம், இனிப்பு பழங்கள் என வைத்து சீர் செய்தான்.

“ எதுக்குடா தம்பி? உனக்குள்ள மண்டை வெடிக்கற பிரச்னைகளுக்கு மத்தில எங்களுக்கு சீர் செய்யலைன்னா என்ன?”

சகோதரிகள் அழுது விட்டார்கள்.

“ எல்லார் மனசையும் குளிர வைக்கற நீ, எப்பவும் நெருப்புல நிக்கறியேடா!”

அங்கிருந்து அம்மாவை பார்க்க போனான் ஒரு சேலை, அம்மாவுக்கு பிடித்த மாதுளம் பழங்களுடன். கூடவே மாமனார், மாமியார். அம்மா கதறி விட்டாள்.

“ என் பிள்ளைக்கு என்னிக்கு விடியும் சம்பந்தியம்மா?”

“எங்க பொண்ணு சாகற அன்னிக்கு.!”

“அம்மா, உன் இடத்துல இருந்து, நீ என்னல்லாம் செய்வியோ அதை அத்தை செய்யறாங்கம்மா. மாமாவும் தான்!”

அம்மா அவர்களை கையெடுத்து கும்பிட்டாள்.

“ எங்க பொண்ணை,  கழுத்தை பிடிச்சு வெளில தள்ள சொல்றோம். மாப்ளை கேக்க மாட்டேங்கறார். அவ திருந்த மாட்டா.!”

“என் பிள்ளை ஜெயிப்பான் சம்பந்தியம்மா. எனக்கந்த நம்பிக்கை இருக்கு.!”

(-தொடரும்…)

முந்தையபகுதி – 17 | அடுத்தபகுதி – 19

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...