மரப்பாச்சி –17 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி –17 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 17

      பிருந்தாவை அதிர்ச்சியாய் பார்த்தவர் கேட்டார், “நீ சொல்லுறது செயற்கை முறை கருவூட்டல் பற்றிதானே?”

“ஆமாம் ப்ரியாவுக்கு தெரியாம யாராவது இதைச் செய்திருந்தா?”

“பிருந்தா நீ கதைகள், சினிமா பார்த்துட்டு இப்படிச் சொல்லுறன்னு நெனைக்கிறேன், அதெல்லாம் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி நெறைய பிராசஸ் பண்ணணும், நம்ம பொண்ணு நம்மை விட்டு எப்பவாவது நாட் கணக்கா பிரிஞ்சிருந்தாளா இல்லையே அப்புறம் எப்படி இது நடந்திருக்க முடியும்?”

      கணவனின் எதிர்வாதம் பிருந்தாவை யோசிக்க வைத்தது, சிந்தித்துப் பார்த்தாள் ‘மகள் எப்பொழுதாவது தங்களைவிட்டு இரண்டு மூன்று நாளாவது பிரிந்திருந்தாளா’ என்று. அவள் எண்ணத்தில் மின்னல் அடித்தது..

“ஏங்க ப்ரியா நம்மைவிட்டு நாலுநாள் பிரிஞ்சிருந்தா உங்களுக்கு ஞாபகம் இருக்குதா?”

“எப்போ?”

“ஸ்கூல் டூர்ல..”

“ஆமாம் ஊட்டி டூர் நாலு நாள் போயிட்டு வந்தா”

“அங்க எதாவது நடந்திருக்கலாம் இல்ல..”

“முட்டாள் மாதிரி பேசாத டீச்சர்கள் கண்காணிப்புல இருந்த பொண்ணை யாராவது கடத்திக் கொண்டு போய்தான் இந்த மாதிரி செய்திருக்கணும், அப்படி நடந்திருந்தா உடனே நமக்கு தகவல் வந்திருக்காதா? சரி அவ ஊட்டிக்குப் போய் எத்தனை நாள் ஆகுது?”

“நாலு மாசம்”

“இப்ப அவ வயிற்றுல இருந்தது 45 நாள் கரு, லாஜிக்காவே ஒத்துப் போகலை பாரு..”

“ஆமால்ல..”

“இப்பவும் சொல்லுறேன் தப்பு என் பொண்ணுட்டதான் இருக்குது அவ மறைக்கிறா..”

“சரிங்க இதைப்பற்றி நீங்க யோசிக்க வேண்டாம், அவகூட சகஜமா பழகுங்க இதுக்கு ஒரு விடையை நான் கண்டுபிடிக்கிறேன்” என்று அந்த சம்பாஷணைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள் பிருந்தா.

      பெயருக்கு மகளிடம் பேச்சுக் கொடுத்தார் மணிமாறன். அவர் மகளிடம் பழைய ஈடுபாட்டுடன் பழகவில்லை என்பதை அவர் உடல்மொழி பிருந்தாவிற்கு உணர்த்தியது, அப்பாவும், மகளும் ஒரு தோழனும், தோழியும் போல் வசித்து வந்த அந்த இல்லம் ஒரு நாடகக் கொட்டகை போல் மாறியிருந்தது.. மகளுடன் இணக்கமாக இருப்பது போல் அந்த தந்தை நடித்துக் கொண்டிருந்தார். பிருந்தா மனதில் சபதமேற்றாள், ஒரு பிஞ்சின் வயிற்றில் நஞ்சை விதைத்து, அவள் தாய் தந்தையருக்கு தீரா மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த முகம் தெரியாத மிருகத்தை கண்டுபிடிக்க வேண்டும், கண்டுபிடித்து அவனுக்கு மிகப் பெரிய தண்டனையை தன் கையால் கொடுக்க வேண்டுமென்று!

      மகளின் கர்ப்பத்திற்கு காரணமானவனைக் கண்டெத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினாள் பிருந்தா. முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது. மகளிடம் கேட்டால் தனக்கு காதலன் யாரும் இல்லை என்று சூடம் அடித்துச் சத்தியம் செய்கிறாள். வீட்டிற்குத் தெரியாமல் இருக்கப் பொய் சொன்னாலும் ஆயிற்று. இனி மகளிடம் விசாரிக்கக் கூடாது. மகளின் சுற்றத்தை விசாரிக்க வேண்டும் எண்ணியவள் முதலில் அவளது நண்பர்களை விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். மனதிற்குள் படம் ஓட்டிப் பார்த்தாள் ப்ரியா அன்று அவளுடைய நெருங்கிய தோழிகள் என்று இருவர் பெயரை சொன்னாளே என்று.. இன்னும் சற்று நேரம் சிந்தனைக் குதிரை ஓடவும் அந்தப் பெயர்கள் நினைவுக்கு வந்தது அவளுக்கு, ஒருத்தி ஜானு, இன்னொருத்தி தீப்தி. அடுத்து நினைவுக்கு வந்தது ‘அட’ மகள்தான். இரண்டு பேர் செல் நம்பரையும் கொடுத்தாளே என்று.. செல்லில் அவர்களது எண்ணைத் தேடினாள் இரண்டு எண்ணும் இருந்தது. கணவன் அலுவலகத்திற்குக் கிளம்பியதும் தீப்தி, ஜானு இருவரையும் தொடர்பு கொள்ள வேண்டும்.. நான் அவர்களிடம் பேசப் போவது மகளுக்குத் தெரியக் கூடாது..

அன்று சனிக்கிழமை பள்ளிக்கூடம் விடுமுறை, கணவனுக்கு அலுவலகம் இருந்தது. கணவன் கிளம்பிய சிறிது நேரத்தில் மகளை படிக்கப் பணித்துவிட்டு, சுந்தரத்திடம் கூறினாள், “சுந்தரம் நான் வர கொஞ்சம் லேட் ஆகும், ப்ரியாவை பார்த்துக்க” என்று கூறிவிட்டு கிளம்பினாள். ரோட்டில் முதலில் வந்த ஆட்டோவை மறித்தவள் மாநகராட்சிப் பூங்காவிற்கு வண்டியை விடச் சொன்னாள்.

      பூங்காவில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அதில் ஓரமாகக் கிடந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவள் அந்தப் பெண்களை எப்படி அணுகுவது, எப்படிப் பேசுவது என்று மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள். விடலைப் பருவப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அவர்கள் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் வீட்டில் வைத்துப் பேச முடியாது என்ன செய்ய?’

      போனில் தான் பேச வேண்டும் எண்ணியவள் முதலில் தீப்தியை அழைத்தாள் செல்லில். சில ரிங்குகள் போய் எதிர்முனை செல் எடுக்கப்பட்டது.. எதிர்முனை..

“ஹலோ யாரு?” மெலிதாகக் கேட்டது அந்த தீப்தியின் குரல்..

“தீப்தி நான் ப்ரியாவோட சித்தி, பிருந்தா பேசுறேன்”

“சொல்லுங்க ஆன்டி, ப்ரியா உங்களைப் பற்றி நெறைய சொல்லுவா, ஆனா உங்களை நான் பார்த்ததில்லை, சொல்லுங்க ஆன்டி எதுக்கு போன் பண்ணியிருக்கறீங்க?”

“உங்கிட்டக் கொஞ்சம் பர்சனலாப் பேசணும், நேருல பேச முடியுமா?”

“வீட்டுக்கு வாங்க ஆண்ட்டி..”

“வீட்டுல அம்மா, அப்பா இருப்பாங்களே, உங்ககிட்ட தனியா பேசணும்”

“இல்லை ஆன்டி அம்மா, அப்பா ஒரு கல்யாணத்துக்கு வெளியூர் போயிருக்கறாங்க. வீட்டுல நான் தம்பி வேலைக்காரம்மா மட்டும்தான். தம்பி கிரிக்கெட் விளையாடப் போயிட்டான் வாங்க பேசலாம்”

“வீட்டு அட்ரஸ் சொல்லும்மா” பிருந்தா கேட்கவும் தீப்தி தன் வீட்டு முகவரியைக் கூறினாள். அதை மனதில் வாங்கியவள் பூங்காவை விட்டு வெளியே வந்தாள். ஆட்டோ பிடித்தாள் முப்பது நிமிட ஆட்டோ பயணம். ஆட்டோ அந்த குட்டி பங்களாவின் முன் நின்றது. பிருந்தாவின் மூளை உரைத்தது ’இது பணக்காரர்கள் ஏரியா’ என்று. சிறியதும் பெரியதுமாக பங்களா வீடுகளின் தொகுப்பாக இருந்தது அந்த இடம்.

      ஆட்டோவிலிருந்து இறங்கவும் சற்றே பூசினாற்போல் பாப் தலையுடன் பணக்காரச் செழுமையை உடலில் வாங்கிய அந்த தீப்தி வெளியே வந்து “வாங்க ஆன்டி” என்று அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். எர்திர்ப் பட்ட வீட்டு வேலைக்காரம்மா கேட்டாள்..

“யாரும்மா இவங்க?”

“என் ஃப்ரெண்ட் ப்ரியாவோட அம்மா நாங்க ரூமுல இருக்கறோம் ஆன்டிக்கு காஃபி கொண்டு வாங்க. ஏன் ஆன்டி காஃபி சாப்பிடுவீங்கல்ல?”

“ஓக்கேம்மா” என்று கூறிவிட்டு தீப்தின் பின் சென்றாள்.

“சொல்லுங்க ஆன்டி என்ன அவசரம் வீடு தேடி வந்திருக்கறீங்க?”

“நான் தான் சொன்னேனேம்மா ப்ரியா பத்தி பேசணும்னு”

“ஓ.. கேளூங்க ஆன்டி”

“க்ளாஸ்ல நீங்க யாரெல்லாம் க்ளோஸ்?”

“நான் ப்ரியா, ஜானு”

“வேற பாய்ஸ் யாரெல்லாம் உங்களுக்குப் ஃப்ரெண்ட்ஸ்?”

பிருந்தா கேட்கவும் அவளை ஒரு அதிர்ச்சிப் பார்வை பார்த்தவள் கூறினாள்..

“நோ ஆன்டி எங்களுக்கு நெருக்கமான ஃபாய் ஃப்ரெண்ட்ஸ் யாரும் கிடையாது. உங்களுக்குத் தெரியுமே எங்க ஸ்கூல் ரொம்ப ஸ்ட்ரிக்ட் . க்ளாஸ் பசங்க கேட்கிறத்துக்கு பதில் சொல்லுவோம் அதுவும் க்ளாஸ் ரூமுல மட்டும்தான்”

“சரி ஸ்கூலுக்கு வெளியே உங்களுக்கு குறிப்பா ப்ரியாவுக்கு பாய் ஃப்ரெண்ட் உண்டா?”

“ஆன்டி நீங்க ஏன் இப்படி கேட்கறீங்கன்னே எனக்குப் புரியலை? ஸ்கூல் விட்டதும் எங்க ட்ரைவர்கள் காத்திருந்து கூட்டிட்டுப் போயிடுவாங்க அப்புறம் நாங்க எப்படி பாய்ஸ் கூட பழகிறது. ஏன் ஆன்டி ப்ரியா யார் கூடயாவது பழக்கம் வச்சிருக்கறாளா?”

“அதைத் தான் நான் உங்கிட்ட கேட்க வந்திருக்கேன். மறைக்காமச் சொல்லு ப்ரியாவுக்கு யார் கூடயாவது பழக்கம் இருக்குதா மறைக்கமச் சொல்லிடு.நான் என் புருஷன்ட்ட சொல்லி அவரு வந்து உங்க அப்பா அம்மாக்கிட்டச் சொல்லி அந்த மாதிரி எதுவும் வேண்டாம் எதாவது உனக்குத் தெரிஞ்சா இப்பவே சொல்லிடு ” இப்பொழுது குரலில் சற்று கடுமையை ஏற்றியிருந்தாள் பிருந்தா.

“ஐயோ ஆன்டி நான் சொல்லுறது ஹன்ரட் பர்சண்ட் ட்ரூ.. நாங்க மூணுபேரும் தான் ஃப்ரெண்ட் எங்களுக்கு எந்த் பாய்ஸ் கூடயும் பழக்கம் கிடையாது இது காட் ப்ராமிஸ்” உறுதியாய் வந்தது தீப்தியின் வாயிலிருந்து வார்த்தைகள்.

“நான் ஜானுவை பார்க்கப் போறேன் அவ உண்மையைச் சொன்னா உனக்கு நல்லதில்லை”

“வேணும்னா இப்பவே போன் போடுங்க கான்ஃபரான்ஸ்சுல பேசுவோம் அவளும் இதே பதிலைத் தான் உங்களுக்குச் சொல்லுவா”

      ஆணித்தரமான அவள் பதிலில் ஒரு சதவீதம் கூட பொய் கலப்பில்லை என்பது பிருந்தாவிற்கு புரிந்தது. மகள் கூறியது பொய் இல்லை.அவளுக்கு எந்த ஆண் நண்பர்களுடனும் பழக்கம் இல்லை. பள்ளிகூடம் வீடு ட்யூஷன் என்றிருக்கும் மகள் பின் எப்படி கர்ப்பம் ஆனாள்? யோசிக்க யோசிக்க தலை வெடிக்கும் நிலைக்கு வந்தாள் பிருந்தா.அந்த நேரம் வீட்டு வேலைக்காரம்மா காஃபியை கொண்டு வைத்தாள். காஃபியை பருகியவள் கேட்டாள்..

“ஏன் தீப்தி நீ சொல்றது உண்மைதானே?”

“ஆன்டி நான் சொல்லுறது பக்கா உண்மை. நீங்க எதோ பிரச்சனையாலதான் என் கிட்ட விசாரிக்க வந்திருக்கறீங்க. நான் அடிச்சு சொல்லுவேன் ப்ரியாவுக்கு தப்பான பழக்கம் எதுவும் கிடையாது”

“ஃப்ரெண்டை காப்பாத்தச் சொல்லுற வார்த்தை இல்லையே?”

“அவ யாரையும் லவ் பண்ணச் சான்சே இல்லை”

“சரிம்மா நான் கிளம்புறேன், நான் உன்னை வந்து விசாரிச்சதை நீ அவகிட்ட சொல்லக் கூடாது.சொன்னா அவ மனசு கஸ்டப்படும் ஓக்கேவா?”

“ஓகே ஆன்டி” என்றவளுக்கு விடை கூறி புறப்பட்டாள் பிருந்தா.

      ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தவள் மனம் சோர்வில் விழுந்தது. மகளின் தோழிகளிடம் விசாரித்தால் எதாவது துப்புக் கிடைக்கும்  பிரச்சனையின் மர்மம் விலகும் என்று நினைத்தவள்  நினைப்பில் மண் விழுந்தது.

     ‘மகளின் கர்ப்பத்திற்கு யார் காரணம்? பள்ளிகூடத்தில் இந்த விபரீதம் விதைக்கப்படவில்லை. வெளியே எங்கோதான் நடந்திருக்கிறது. மகளின் தொடர்பில் இருக்கும் ஆண்கள் யார் யார்? மனதில் லிஸ்ட் போட்டாள். வெளியில் யாரும் இல்லை. வீட்டில் தந்தை, சுந்தரம், தங்கையின் கணவனும் அவர்கள் ட்ரைவருமான காளிராஜ். சுந்தரம் நம்பிக்கையான விஸ்வாசமான வேலையாள். காளிராஜ் ப்ரியா கர்ப்பமான நேரம் கல்யாணம் ஆகாத பேச்சலர். இவர்களில் ஒருவராக இருக்குமா? இருக்கக்கூடாது ஆனாலும் சந்தேகப்பட இவர்களைத் தவிர வேறூ யாரும் இல்லை. வேறு வழியில்லை இவர்களை விசாரித்தே தீர வேண்டும்’.

      அவளின் எண்ணத்தை தடை செய்யும் விதமாய் ஆட்டோக்கார் குரல் “அம்மா நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு”!

(-தொடரும்…)

முந்தையபகுதி – 16 | அடுத்தபகுதி – 18

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...