அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 17 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 17
பெரியவர்கள் எல்லோருமே மருத்துவர் சொன்னதைக்கேட்டு ஆனந்தக் கூத்தாடதக் குறைதான். இது அத்தனைக்கும் காரணமான நாயகியோ ஜூர வேகத்திலும் மருந்தின் தாக்கத்திலும் உறங்கிக் கொண்டிருந்தாள்.
“நாளைக்கே காய்ச்சல் குறைஞ்சிடும் நாளைமறுநாள் ஹாஸ்பிடல் வாங்க ஃபர்தரா டெஸ்ட் பண்ணிடலாம். அபய் கவனமா பார்த்துக்கிடுங்க. ரொம்ப வீக்காயிருக்கிறாங்க. வரேன்மா “
என்று விடைபெற்றவருக்கு ஸ்வீட்டோடு சிற்றுண்டி காபியைத் தந்து வழியனுப்பினாள் நிலவழகி.
எல்லோர் மனமும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது ரங்கநாயகி பொன்னியிடம் மஞ்சு விழித்ததுமே திருஷ்டி சுற்றிப் போடைச் சொன்னார். மரகதம் ஸ்வீட் செய்யும் கூறினார். வீடே திடீரென ஆனந்தக் கோலம் கொண்டது.
அபய் மனைவியின் அருகில் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டான். உடம்பே நடுக்கம் கொண்டது.
எத்தனை வருட எதிர்பார்ப்பு..
எத்தனை வருடக் கனவு… ஒவ்வொரு மாதமும் ஏமாந்து விரக்தியோடு நிற்கையில் வெறுமை சுழட்டியடிக்கும். மற்றவர் பார்வையில் தலை கவிழ்ந்தாலும் மளைலியை எந்த இடத்திலும் விட்டுத்தர மாட்டான். தன் கவலையை மறைத்துக் கொண்டு அவளைத் தேற்றுவதும் அவனே.
இந்த விஷயம் தெரியாமலே இவளைக் கஷ்டப்படுத்திட்டேனே! .சொகுசாகவே இருந்தவளுக்கு களத்து வேலை ஏன் சமையல்கூட தெரியாதே …ரொம்பவே படுத்தி விட்டேனோ. ஆயினும் அவள் செய்ததும் மிகப் பெரிய தவறுதானே. குழந்தையை அடிக்கலாமா? அப்படி பேசலாமா? அப்படியென்ன ஆங்காரம். பெரியவர் ன்ற மட்டுமரியாதை வேண்டாமா? அந்த நிகழ்வை நினைக்கையில் மனமும் முகமும் கசங்கிப் போனது.
கைகளில் பூசிவிட்டிருந்த களிம்பு பிசுபிசுவென இவன் கைகளில் அப்பியது. சிவந்த உள்ளங்கை ஆங்காங்கே கொப்பளித்து தோலுரிந்து சிவப்பாக பொக்கித்தும் இருந்தது.
அவள் நெற்றியில் லேசாக வியர்த்திருக்க துடைத்து விட்டான். ஏசியை மிதமாக வைத்தான்.
அவனுக்கு மனைவியை ரொம்பவே பிடிக்கும். அவளுடைய சில குணங்கள்தான் பிடிக்காமல் போனது. எப்படியும் மாறிவிடுவாள் என்றெண்ணியவனுக்கு ஏமாற்றமே பரிசாக வர அன்று கண்மண் தெரியாமல் கோபம் வந்துவிட்டது.
மதிய உணவு வேளைக்கு ஆண்களை வரச் சொல்லியனுப்பினார் ரங்கநாயகி.
வந்தவர்களிடம் விஷயம் சொல்லப்பட அனைவரும் அபய்க்கு வாழ்த்து சொல்ல கர்வப்பூரிப்போடு முகஞ்சிவந்தான் அவன். ஆண்மகனுடைய வெட்கமும் காணக் கிடைக்காத பேரழகு அல்லவா ! செந்திலும் அலமேலுவும் கூட சந்தோஷமாய் வாழ்த்த சின்னுவின் கேள்விகளோ ஏராளமாயிருந்தது. ரங்கநாயகியும் மரகதமும் ஆயிரம் ஜாக்கிரதை சொல்லி அவனை ஒரு வழியாக்கினர். காத்திருந்து கிடைத்த பொக்கிஷம் ஆயிற்றே!
மெதுவாக கண்விழித்த மஞ்சுவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை இது …இது ..தன் படுக்கையறை அல்லவா அதிலும் எதிரே கணவன் அமர்ந்திருக்க உள்ளுக்குள் பயம் மொட்டு விட்டது.
“நான்…நானா வரவேயில்லைங்க உள்ளே. எப்படி இங்கே வந்தேன்னு தெரியலை”
என்று முணங்க
“நான்தான் தூக்கி வந்தேன் மஞ்சு. “
அவள்”ஹான்” என்று மலங்க மலங்க விழித்தாள்.
“உனக்கு காய்ச்சல் அதிகமாகி மயக்கம் வந்திடவே டாக்டர் வந்து பார்த்தார். பாட்டி உன்னை இங்கே படுக்க வைக்க சொல்லவே தூக்கிட்டு வந்தேன் “
லேசான சிவப்பு கதுப்பில் எட்டிப்பார்க்க கண்ணீரும் குபுக்கென்று வழிந்தது.
“ஏய் எதுக்கு இப்போ அழறே “
“நான்…நான் ரொம்பத் தப்பு பண்ணிட்டேனுங்க. நீங்க கொடுத்த தண்டனை சரிதான். ஆனா…ஆனா… நான் இதே ரூம்லேயே ஓரமா இருந்துகிடறேனுங்க. நீங்க சொன்னாப்போல வேலைக்கு போறேன். எனக்கு உங்களைப் பார்க்காம கஷ்டமாயிருக்கு.”
அபய்க்கு அவள் அழுவதைக்கண்டதும் வருத்தமாயிருந்தது. அவனுடைய காதல் மனம் தவித்தது. நெஞ்சோடு அணைத்துக் கொள்ள விரும்பியது. கண்ணீரைத் துடைத்து செல்லம் கொஞ்சத் தூண்டியது.ஆனால் கண்ணில் உறுத்தும் மணலாய் அவளின் குணம். அது இப்போதும் நெருடத்தான் செய்தது.. அதிலும் இப்போதைய அவளுடைய நிலையில் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவே விரும்பினான்.
அதே சமயம் முறையான பரிசோதனைகளுக்குப் பின்பே டாக்டர் மூலமே அவள் அந்த மகிழ்ச்சியான. செய்தியை கேட்க வேண்டும். கேட்டதும் அவள் உணர்வுகளை ரசிக்க வேண்டும் என்று விரும்பினான். எனவே எது குறித்தும் பேசாமல் அன்றும் மறுநாளும் அடைகாத்தான் அவளை.
மருத்துவமனைக்கு கிளம்பினர் இருவரும்.
காய்ச்சலும் விட்டிருக்க நல்ல ஓய்விலிருந்ததால் முகமும் தெளிவிட்டிருந்தது.
அவன் வெளியே அமர்ந்து கொள்ள அவளை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தான்.நாற்பத்தைந்து நாட்கள் தள்ளிப்போயிருப்பதாக டாக்டர் தெளிவு படுத்த மஞ்சு திக்குமுக்காடிப்போனாள்.
தேவையான மருந்துகளை எழுதித்தந்து பக்குவமாக நடந்து கொள்ளவும் சொன்னார்.
அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது. கண்களை மூடி அந்த உணர்வை உள்வாங்கியவள் காரில் கணவன் அருகில் அமர்ந்ததுமே அவன் கையை தன் வயிற்றின் மீது வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.மூடிய இமைவழியே கண்ணீர் வழிந்தது.
“மஞ்சு ஏன் அழறே “
“என்னங்க… என்னங்க… சந்தோசமாயிருக்குங்க. நமக்கே நமக்குன்னு ஒரு குட்டி பாப்பா வரப்போவுது. நாம் அம்மா அப்பா ஆகிட்டோமு ங்க”
முகம் பூரித்து விம்மியது. ஏக்கம் தொலைந்து பெருமிதம் கூடித் தெரிந்தது. அவளை அணைத்துக் கொண்டான்.
“நாற்பத்தைந்து நாளாயிடுச்சாம்ங்க”
அவளும் அவனை இறுக்கிக் கொண்டாள். விம்மித்தணிந்தது நெஞ்சம்.பெரிய காரியத்தை சாதித்து விட்டாற் போல நிறைவு .
அவனும் அவள் வாய்மொழியை உள்வாங்கி ரசித்து ருசித்தான். அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவளும் தாளமாட்டாதவளாய் அவன் முகமெங்கும் இதழ்களைப் பதித்தாள்.
வீடு திரும்பும் போது வழியில் கோயிலுக்கும் போய் கும்பிட்டு வந்தனர். இனிப்பு வாங்கி வந்து முதலில் இருவரும் பெரிய தம்பதியின் காலில் விழுந்து வணங்கினர். மரகதம் இனிப்பை ஊட்டிவிட்டார். ஸ்வீட்டுக்காக கை நீட்டிய சின்னு இவளைக் கண்டு பயத்துடன் பின்வாங்கி நகர மஞ்சுவுக்கு உயிர்வரை வலித்தது.
சின்னுவைப் பிடித்து அணைத்துக் கொண்டாள்.அவளை மடியிலமர்த்தி ஊட்டிவிட அதுவும் எல்லாம் மறந்து சிரித்தது. அவளுக்கும் ஊட்டி விட்டது. கண்கள் பனிக்க வாங்கிக் கொண்டவள். சுடுநீர் கொப்புளத்தால் நிறம்மாறிப் போயிருந்த பிஞ்சுப் பாதங்களைத் தடவினாள். அதுவோ கிளுக்கிச் சிரித்தது.
அலமேலுவும் பூரண கர்ப்பிணியாய் மிகுந்த சிரமத்தோடே எழுந்து வந்து வாழ்த்தினாள். இன்றோ நாளையோ பிரசவம் என்ற நிலையில் லேசாய் துவண்டிருந்தாள் அலமேலு.
மஞ்சுவுக்குள் ஏதோ ஒரு உணர்வு ஓடி கிளைபரப்பி நின்று சந்தோஷத்தைத் தந்தது. இதுதான் தாய்மையுணர்வா….
அவள் திகைத்தாள்.
ரங்கநாயகி அபய் மஞ்சு இருவரிடையேயும்
“இந்த வீட்டோட முதல் வாரிசு வரப்போகுது. பார்த்து பதனமா இருந்துகிடனும். நீ வீக்காயிருக்கேன்னு வேற சொன்னாங்க டாக்டர். நல்லா சத்தான உணவா சாப்பிடனும் மரகதம் பொன்னி நாஞ் சொல்றாப்புல சமைச்சு மஞ்சுவை சாப்பிட வச்சு தேத்திட வேண்டியது உங்க பொறுப்பு.”
குடும்பமே அவளையும் வரப்போகும் வாரிசை வரவேற்கும் கொண்டாட்டத்திலும் மூழகியது.
செந்திலும் ஏன் ஆதித்யாவும் கூட மஞ்சுவை மனமார வாஞ்சையோடு வாழ்த்தி பெருமையோடு பார்த்து செல்ல மஞ்சு தான் குற்ற உணர்வில் குமைந்தாள். செந்தில் அவளின் தலையை வாஞ்சையோடு வருடி ஆசிர்வதித்து அபய்யை தன்னோடு அணைத்துக் கொண்டார்.
தன் குற்றவுணர்வைத் தனிமையில் கணவனிடம் சொல்லவும் செய்தாள்.
“நாற்பத்தைந்தே நாள் தான் ஆகிருக்கு. ஆனா எனக்கு இப்பவே என் குழந்தைன்னு பிடிப்பும் என் மனசிலே நிறைய மாற்றமும் வந்திருக்கு அபய். நான் ரொம்ப கெட்ட பொண்ணு அபய். நான் எல்லாருடைய மனசையுமே உடைச்சிருக்கேன் இல்லை…மோசமான முறையிலே பேசியிருக்கேன். நான் செந்திலப்பாகிட்டே கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும்”
என்று கதறிய மனைவியை மார்பில் சாய்த்துக் கொண்டான் அபய்
“ஏய் ஏய் இங்க பாருடீ. மாமாவே இதையெல்லாம் விரும்ப மாட்டாங்கடி. எப்போ நீ உன் தப்பை உணர்ந்திட்டியோ அது போதும். எல்லாத்தையும் உதறிப் போட்டுட்டு புது மஞ்சுவா ஜென்மமெடு. “
“………”
“நம்ம பாப்பா பூமிக்கு வர்ரதுக்குள்ளேயே எம் பொண்டாட்டியை மாத்திட்டாடோய்”
என்று சிரிக்க அவள் அவன் சிணுங்கலாய் அவன் மார்பில் குத்தினாள்.
மஞ்சுவின் தாய் வீட்டுக்கும் செய்தி போக. அந்த வீடும் குதூகலமாய் அவளைப்பார்க்க வந்தது. அவளுடைய அண்ணியும் மாசமாயிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக்கூடாதென்பதால் அவள் வீட்டிலிருக்க தாயும் தந்தையும் மகனோடு வந்திறங்கி வாழ்த்தினர்.
அடுத்து வந்த நான்காம் நாளே அலமேலுவுக்கு இடுப்புவலி வந்துவிட. ஹாஸ்பிடலுக்குபுறப்பட்டனர்.
மஞ்சுவும் ரங்கநாயகியும் வீட்டிலிருக்க நந்தன் தான் வண்டியோட்டினான்.நிலவழகி மரகதம் அலமேலுவுடன் ஏறிக்கொள்ள செந்திலுக்கு சேதி போனது.
அலமேலுவை உள்ளே அழைத்துப்போய்விட மரகதமும் நிலவழகியும் அங்கேயே அமர்ந்தனர்.
நந்தன் காரிடாரில் நின்று அபய்க்கு சொல்ல அவனும் வந்து கொண்டேயிருப்பதாகக் கூறினான்.
கவலையோடு நின்றுகொண்டிருந்த நந்தனை அணுகினார் ஒருவர். வெகுநேரம் நீளமாய் பேசிக் கொண்டிருந்தார்.அவர் சொன்னவை உவப்பாக இல்லை என்றாலும் மனதுள் பாரமும் வியப்பும் ஏறியது.
மனைவியைத் தேடியது விழிகள்.
(-சஞ்சாரம் தொடரும்…)
முந்தையபகுதி – 16 | அடுத்தபகுதி – 18