அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 18 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 18 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 18

ன்றுடன் மூன்று மாதமாகி விட்டது. அலமேலு செந்திலின் செல்வன் பிறந்து. இன்று ஆழியூர் கோட்டைக்கு போவதாக பேச்சு. பெரியவர் சிவநேசம் சக்ரவர்த்திதான் சொன்னார். இனிமேல் ஆழியூரை கவனிப்பதுதான் முறை என்று. குழந்தைகளுக்கும் அவர்களின் இருப்பிடம் பழக்கமாவதோடு அங்குள்ளோருக்கும் குழந்தைகள் மீது பிடிப்பு வரவேண்டும் என்றார்.

மகனுக்கு” சிவநேசச் செல்வன்” என்று பெயர் சூட்டினான் செந்தில். சின்னுவின் பெயர் என்ன என்று ரங்கநாயகிதான் விழாவில் வைத்து கேட்டார். சின்னு சின்னு என்றே பழகிவிட்டதால் அவளின் பெயரே தெரியாது.

“மரகதச் செல்வி “என்றதும் மரகதத்துக்கு அழுகையே வந்து விட்டது.

“மாமா அநியாயம் மாமா இப்படி உன் பிள்ளைகளுக்கே பெரியவங்க பேரை வச்சிட்டா நாளை க்கு நாங்க என்ன பண்றதாம்? “

யோசிச்சு வையுங்கடா! நான் தாத்தா பேரையும் எங்க அக்கா பேரை மட்டும் தானேடா எடுத்துக்கிட்டேன்.”

“அபய்க்கு வேற ட்வின்ஸாம். அவன் முந்திக்கிடுவானே நான் என்ன பண்றது “

நந்தன் அங்கலாய்க்க ஒரே சிரிப்புதான்.

ஸ்கேனிலும் ஹார்ட்பீட்டிலும் ரெட்டைக்குழந்தைகள் என்று தெரிந்ததுமே மஞ்சு வின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இத்தனை காலக் காத்திருப்புக்கு ஒற்றைக்கு ரெட்டையாக கடவுள் தந்த பரிசு என்று பூரிப்பு கொண்டாள்.

சிலவாரங்கள் பெரியவரும் ரங்கநாயகியும் செந்திலோடு இருந்து வருவருவதாக திட்டம். மரகதம் இவர்களை அங்கே விட்டுவிட்டு  இரண்டொருநாளில் திரும்பிவிடுவதாகப் பேச்சு. ரங்கநாயகிக்கும் சிவநேசத்துக்கும் நெஞ்சு கொள்ளா பெருமை.

பேர் சொல்லத்தானே பிள்ளை. பேரனுக்கு தன்னுடைய பெயர் என்றால் அதுவும் பூரண திருப்தியல்லவா அதிலும் செந்தில் தன் பிள்ளைக்கு  தன் பேரை வைத்தது சந்தோஷம் தந்தது. எல்லோரும் நல்ல நேரம் பார்த்துக் கிளம்பினர்.

மருதவள்ளியை நிலவழகி நேரடியாகப் பத்தாவது எழுதவைக்க ட்யூடோரியலில் சேர்த்திருந்தாள். அதனால் அவள் செந்திலுடன். போகவில்லை.

அன்றைக்கு அலமேலுவை ஆஸ்பிடலில் சேர்த்த அன்று

நந்தனை சந்தித்த ஏட்டையா…

“தம்பி! என்ன ஆஸ்பத்திரியிலே? யாருக்கு சுகமில்லே”

“செந்தில் மாமா சம்சாரத்துக்கு டெலிவரியாகப் போகுதுங்க. நீங்க சௌக்கியந்தானுங்களே “

“ஆமய்யா சுகந்தான். .நான் வந்தது. உங்க பங்காளி பலராமன் எஸ்.ஐயை பார்த்துட்டு போக. “

“அவருக்கென்னாச்சு “

“சஸ்பென்ஷனில் இருந்த மனுஷனை எவனோ காவாலிப்பய கண்டமேனிக்கு வெட்டிப்புட்டான்யா. “

குரலைத்தழைத்து

“அதுல பாருங்க இடுப்பு விலாஎலும்புல வெட்டு விழுந்ததினாலே  முக்யமான நரம்பு கட்டாயிட்டு. அதனாலே அவராலே   இனி பிள்ளை பெத்துக்க முடியாதுங்களாம்.. சின்னவயசு தானுங்களே. அவர் சம்சாரம் பெரிய ஆஸ்பத்திரியிலே காண்பிப்போம்னு அழைச்சிட்டு வந்து சேர்த்திருக்கு. என்னங்கய்யா பண்றது. தெய்வம் நின்னு கொல்லும்ன்னு சொன்னது பொய்யில்லையே.

ஊரிலே ஒரு பொண்ணை விடறது இல்லை சின்னப்பொண்ணு  கல்யாணம் ஆனது ஆகாதது…கர்ப்பிணி பொண்ணை.கூட விடறதில்லைன்னு அலைஞ்சா சாமி பெரிசா ஆப்பு வச்சிட்டார். குடும்ப வாழ்க்கைக்கே லாயக்கில்லைன்னு முக்யமான நரம்பை வெட்டிக் கடாசிட்டார். இவர் செய்த பாவம் அவர் பொஞ்சாதியை சுத்துது. சின்னவயசு தானே இன்னும் பூச்சி புழு இல்லே. அது கண்ணுலே தண்ணி விடுது. காணச் சகிக்கலே. “

என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். மனதில் பாரம் கவிந்தது. பெண்ணை போகப் பொருளாய் எவனும் நினைத்தவன் வாழ்ந்ததில்லை. எப்படியெல்லாம் இவனிடம் சிக்கிய போதில் புலம்பினார்களோ? எந்தப் பெண்ணின் சாபம் பலித்ததோ?

போன ஏட்டைய்யா  அதே வேகத்திலே திரும்பி வந்தார்.

“அய்யா! இந்தப் பொண்ணு மருதவள்ளி தானே “

திரும்பிப் பார்த்தபோது மருதவள்ளி சின்னுவோடு நின்றிருந்தாள்.

“ஆ..ஆமாம்”

“அய்யா! அது உங்க வீட்டுலேதான் வேலை செய்றதா சொல்லுச்சு.  இந்த பொண்ணு பலராமன் கண்ணுல விழுந்திடக்கூடாதய்யா. அய்யா …ஒரு விசயம் சொல்றேன் மனசோடு வையுங்க. பலராமனை வெட்டிட்டாங்கன்னு சொன்னேனே அது …அது…இந்தப் பொண்ணு தான். “

“என்ன “

“தனியாயிருந்த பொண்ணுகிட்டே வாலாட்டிருக்கான். கையிலிருந்த அரிவாளாலே போட்டுருச்சு. குத்துயிரும் குலையுயிருமாக் கிடைந்தவனை காணப் பொறுக்காம ஆம்புலன்சுக்கு போன் பண்ணி சொல்லிட்டுது. போன் நம்பரை வச்சு கண்டு பிடிச்சுட்டோம். நான்தான் விசாரிக்கிறேன். ஆனா எனக்கு மனசு கேட்கலை. கல்யாணம் ஆகவேண்டிய

சின்னபொண்ணு. இந்த ஊரு வாயை அடைக்க முடியுங்களா. அதான்

‘யாரோ அலறுகிற சத்தம் கேட்டுச்சு. ரத்தகாயத்தோடு கீழே கிடக்கிறதைப்பார்த்தேன். ஆம்புலன்சுக்கு போன் பண்ணினதா சொல்லச் சொன்னேன்.

அவரும் ஒன்னும் நல்லவரில்லையே. தற்காப்புக்கு செஞ்சேன்னு சொல்லலாம். ஆனா ஊரு நாலுவிதமா பேசும். அவரும் பணம்பதவின்னு மிரட்டினா. இந்தப்புள்ளே தாங்காதுங்களே. அதான். அவரு டிஸ்சார்ஜ் ஆகறமட்டும் இந்தப்புள்ளே கண்ல படாம காபந்து பண்ணனும்யா. இதையும் உங்க காதுல போட்டுடலாம்னுதான் அந்தப்புள்ளையைக் கண்டதுமே ஓடி வந்தேன்.”

நந்தன் தான் கவனித்துக் கொள்வதாக உறுதி கொடுத்து அனுப்பினான். மருதவள்ளியை நினைத்து ஆச்சரியப்பட்டான். மனைவியிடம் பகிர்ந்து கொள்ள நிலவழகியும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி விட்டு அலமேலு வீடு வரும் வரை அவளை மஞ்சுவுக்குத் துணை என்பது போல் நிறுத்தி வைத்தாள். அதன் பிறகு மருத்துவ மனைக்கு அவளை அனுப்பவில்லை.

பேச்சு வாக்கில் மருதவள்ளியின் படிப்பு ஆசையை அறிந்தவள் உடனே செயலிலும் இறங்கி விட்டாள். வீட்டிலும் சொல்லிக் கொடுத்ததுடன் ட்யூடோரியலிலும் சேர்த்தாள்.

படிப்பு ஒருபுறம் நகர மஞ்சுவுக்கு நாளும் நெருங்கியது.

ஏழாம் மாதம் சீமந்தம் கனஜோராக நடந்து முடிய தாய்வீடு போனாள்.

இப்போதெல்லாம் பெரும் மாற்றம் அவளிடத்தில். வயிற்றில் வந்த தாய்மையோ அபய் தந்த தண்டனையோ எதுவோ அவள் அமைதியோடு கூடிய அன்பு வடிவமாகி விட்டாள். தன்குழந்தைகளோடு பேசுவதும் அபய்யோடு நேரத்தைப் போக்குவதுமாயிருந்தாள்.எடுத்தெறிந்து பேசுவதோ முள்ளாய் குத்தும் இடக்குப் பேச்சுகளோ எதுவுமே இல்லை.தாய்மைக்

கனிவில் வதனம் கமலப்பூவாய் மலர்ந்திருந்தது.

நாட்கள் நிலவழகிக்கு ‘உயிர்த்துளி’யிலும் அமுதசுரபியிலுமாக பறந்தது.

ரோட்டரி சங்கம் அவளை கௌரவித்தது.

அவ்விழாவில் அவளுடைய பேச்சும் உன்னதமாயிருந்தது.

தாய்ப்பாலின் நன்மை மேன்மை பற்றி பேசிவிட்டு அதன் முக்யத்துவத்தை குறிப்பாக குறைமாதத்தில் பிறக்கும் சிசுக்களுக்கு எத்தனை அவசியம் என்று விவரித்தாள். பழையகாலத்தில் குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் தரமுடியாத நிலையில் உள்ள தாயின் பச்சிளங்குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்த்ததையும். பணக்காரர்கள் வீட்டில் தாய் இறந்து போனாலோ நோய்வாய் பட்டாலோ வேறு ஒரு தாயின் பாலை புகட்டி வளர்த்ததையும் குறிப்பிட்டாள்.

2014 ம் ஆண்டு தமிழகத்தின் முதல் தாய்ப்பால் வங்கி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வரால்  துவங்கப்பட்டதையும் தற்போது 22 இடங்களில்  சிறப்பாக செயல் படுவதையும் கூறிவிட்டு தங்கள் ஊரிலும் முறையாக செயல்பட்டு பயன்பாட்டில் உள்ளதையும் சொல்ல கைத்தட்டல் பலத்தது.

பெரியதனக்காரரின் மருமகளே சொல்லுது என்று இன்னும் பலரும் முன்வந்ததில் மருத்துவமனை நிர்வாகம் உடல்தானம் கண்தானம் உடல் உறுப்பு தானம்  என்று மேலும் தன் சேவையை நீட்டியது. லோக்கல் சேனல் பேட்டியெடுத்து ஒளிபரப்பியது. யாரோ சோஷியல் மீடியாவில் இதை கொளுத்திப்போட நகரத்திலிருந்து வெளிவரும் பிரபல பெண்கள் பத்திரிகை நிலவழகியை கௌரவித்து பேட்டியை வெளியிட ஊர்பெயரும் சேர்ந்து பிரசித்தம் கண்டது.

நிலவழகியின் பெயர் பிரசித்தமாக நந்தனுக்கும் தனிப்பெருமிதம்.

மருதவள்ளியும் கவனத்துடனும் விருப்பத்துடனும் படித்தாள்.

மஞ்சுவுக்கும் அழகான குழந்தைகள் ஆணும் பெண்ணுமாக…..

அபயும் மஞ்சுவுமாக யோசித்து ரங்கவாசன் என்றும் சிவமலர் என்றும் பேர்சூட்டினர்.

செந்திலும் அலமேலுவும் குழந்தைகளோடு வந்து போயினர். செந்திலின் கல்யாணம் குறித்து எழுந்த கிசுகிசுப்புகள் கசகசப்பின்றி நசுங்கிப்போய் விட்டன. பெரியவீட்டின் அடுத்தடுத்த விசேஷங்களினால்.

அன்று

நடுஇரவு….

நந்தன் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பினான்.

பாதித் தூக்கத்தில் எழுந்தவள்

“எ..என்னங்க…”

“இங்க வாயேன்! ரொம்பவே அர்ஜென்ட்!”

என்னவோ ஏதோ என்றெழுந்தவள் முன்பு மெழுகுவர்த்தி ஒளிரும் கேக் வைக்கப்பட்டதும் ….கூடவே கணவனின் “ஹாப்பி பர்த்டே மைடியரஸ்ட் அழகிக்குட்டி ” ஹஸ்கிக் குரலும் தூக்கத்தை விரட்டியடித்தது.

கேக்கின் மீது ஹாப்பி பர்த்டே நிலா என்ற எழுத்தோடு

ஹாப்பி அனிவர்சரியும் இருக்க மனம் குதுகலத்தில் விம்மியது.

எம்பி கணவனின் நெற்றியில் இதழ் ஒற்றி ஹாப்பி அனிவர்சரி என்றாள்.

இன்று மூன்றாம் வருடம் அவளின் திருமண நாளும் பிறந்தநாளும் ஒன்று தானே.

அவன் மேஜையிலிருந்துவெல்வெட் பெட்டியிலிருந்து  மோதிரம் ஒன்றை அவள் விரலில் இட்டு விரலை முத்தமிட்டான்.

“என்னடி பொண்டாட்டி! எனக்கெதுவும் கிப்ட் இல்லியா “

“அச்சோ எதுவும் வாங்கலைங்க சாயந்திரமா உங்களையே கூட்டிப்போய் வாங்கலாம்ன்னு இருந்தேன்.”

“ஹ்ம் நான் கொடுத்து வச்சது அவ்ளோ தான் வா கேக் கட் பண்ணலாம்.”

கேக்துண்டை அவளும் அவனும் மாறி மாறி ஊட்டிக் கொள்ள

சில நிமிடங்களிலேயே நிலவழகி ஓடிப்போய் குளியறைக்குள் வாந்தியெடுத்தாள்.பின்னேயே வந்து அவளின் தலையைப் பிடித்தவன்

“என்னடா?  என்னாச்சு? கேக் ஒத்துக்கிடலையா?”

என்று அவளின் வாய் முகம் எல்லாமும் சுத்தம் செய்து டவலால் துடைத்தான். கைத்தாங்கலாய்  படுக்கையில் உட்கார வைத்தான்.

“என்னடி செய்து. அம்மாவை எழுப்பட்டுமா? டாக்டர்கிட்டே போலாமா”

அவள் தலையசைத்து மறுத்து விட்டு  அவன் காதருகில் குனிந்து

“குட்டி நந்தன் வரப்போறான் “

என்றாள்.

“ஏ..எ..என்ன சொன்னே?நிஜமா? “

அவள் ஆம் என்று தலையசைக்க

இறுக அணைத்துக் கொண்டான்.

“இதைவிட ஒசத்தியான கிப்ட் என்னடி இருக்கு அழகிக்குட்டி …எனக்கு புரோமோஷன் தந்திட்டியே”

அவள் வெட்கத்துடன் சிரிக்க

“எப்படி..எப்போ  தெரியும்”

“சாயந்திரம் தான். டாக்டர்கிட்டே தாய்ப்பால் தானம் பற்றி ஒரு கூட்டம் போட்டு பேசினா நல்லாயிருக்கும்ன்னு பேசிட்டிருந்தேன். அப்போதான் யதேச்சையா கையை பிடிச்சவங்க சந்தேகப்பட்டு டெஸ்ட் எடுத்துட்டு சொன்னாங்க. இன்னும் வீட்டுல கூட சொல்லலை. முதலில் உங்ககிட்டே சொல்லனும்னு. நீங்க லேட்டா வரவும் தூங்கிப்போயிட்டேன்.”

அவள் திரும்பி கட்டிலோரமிருந்த பக்கமேஜையில் இருந்த கவரையெடுத்து நீட்டினாள்.

அவள் நீட்டிய கவரில் லேவண்டர் நிறச் சட்டையிருந்தது.

“வாங்கி வச்சுட்டுத்தான் வாய் பேசினியா? ஆனாலும் இதைவிட இந்த கிப்ட் தான்மா பிடிச்சிருக்கு. “

அவள் வயிற்றில் அவனுடைய கை உலாவியது.

“இனிமே எல்லாம் என் பொண்ணுக்கு தானா? “

“பொண்ணு இல்லே பையன்”

“இல்லையில்லே முதலில் அப்பா செல்லமா ஒரு பொண்ணு”

என்றபடியே அவளைத்தன்னோடு சாய்த்துக் கொண்டவன்

“இந்த நெஞ்சத்துலே ஓரமாவாச்சும் மகாராணியும் இளவரசியும் இடம் தருவீங்களா?”

“இந்த நெஞ்சோரமா சஞ்சாரம் எதுக்கு இந்த நெஞ்சகமே உங்களுக்குத்தான். பிறகுதான் இளவரசன் இளவரசிக்கு”

“ஒன்னு பண்ணுவோமே ஏனிந்த சண்டை நமக்குள்ளே

அபய் மாதிரி  ட்வின்ஸ் பெத்துக்கிடலாமே!”

அவளின் பூந்தளிர் விரல்கள் அவனை அடித்தன.அவனோ பலமாகச் சிரித்தான்.

அழகி…நிலவழகி

அவனுடைய வாழ்க்கையை அழகாக்கித் தந்த அழகியவள்.

முற்றும்.

முந்தையபகுதி – 17

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...