மரப்பாச்சி –18 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி –18 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 18

      ட்டோ ட்ரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு சிந்தனை வயப்பட்டவாறே வீட்டினுள் வந்தாள் பிருந்தா. எதிரில் சுந்தரம் “வாங்கம்மா வெயில்ல வந்திருக்கறீங்க லெமன் ஜூஸ் கொண்டு வரவா?” என்றான். அவளுக்கும் தொண்டை வறண்டுதான் போயிருந்தது. லெமன் ஜூஸ் கொண்ணுவரப் பணித்தாள். பெரிய கண்ணாடிக் கப்பில் ஐஸ் துண்டம் மிதக்க லெமன் ஜூசை பிருந்தாவிடம் கொடுத்தான் சுந்தரம். ஜூசை உதட்டுக்குக் கொடுத்தவள் அதை ஒரே உறிஞ்சாக உறிஞ்சினாள் அவளிடம் கப்பை வாங்கிக்கொண்டு சமையல் அறைக்குத் திரும்பிய சுந்தரத்தை “ சுந்தரம் ஒரு நிமிஷம் நில்லுங்க” என்ற பிருந்தாவின் குரல் நிறுத்தியது..

“என்னம்மா?” என்றான் சுந்தரம்.

“கிளாசை கிச்சன்ல வச்சிட்டு வாங்க, இன்னும் சமையல் அறையில எதாவது வேலை இருக்குதா?”

“இல்லைமா சமையல் முடிச்சிட்டேன் எல்லாம் ஒதுங்க வைக்கணும்”

“சரி ஒதுக்கற வேலையை அப்புறம் பார்க்க்லாம் இப்ப கொஞ்சம் உங்க கூட பேசணும்”

“என்னம்மா கேளுங்க?”

“சுந்தரம் நீங்க என்னைவிட வயசுல மூத்தவர், உங்களை நாங்க குறிப்பா உங்க ஐயா ஒரு வேலைக்காரரா பார்க்கறதில்லை உங்க மேல நான் நல்ல மதிப்பு வச்சிருக்கறேன். இப்ப நான் கேட்கறதுக்கு நீங்க உங்க மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு உண்மையைச் சொலணும். உங்க பூர்வீகம் எது?”

“அம்மா என்னோட பூர்வீகம் நீலகிரி மாவட்டம் மசனகுடிங்கற கிராமம். அம்மா அப்பா ரெண்டு பேரும் பைக்காரா பவர் ஸ்டேஷனுல தினக்கூலியா வேலை பார்த்தாங்க.நான் பத்தாங் கிளாஸ் படிக்கும்போது நிலச்சரிவுல மாட்டிகிட்டு ரெண்டு பேரும் இறந்து போயிட்டாங்க.நான் வெளியில விளையாடப் போனதால தப்பிச்சேன்”

“இந்த ஊருக்கு எப்படி வந்தீங்க?’

“சொந்தக் கரங்க எல்லாரும் அப்பா அம்மாவ அடக்கம் பண்ணிட்டு கிளம்பிட்டாங்க. அனாதையா நின்னேன். என்ன செய்யிறதுன்னு தெரியலை. ரயிவே ஸ்டேஷன் போய் மொதல்ல கிளம்புன ரயுலுல ஏறினேன் அது சென்னையில நின்னுச்சு. பசிச்சுது ஒரு ஓட்டலுல போய் பசிக்குது வேலை குடுங்கன்னேன். சாப்பாடு குடுத்து டேபிள் தொடைக்கிற வேலை குடுத்தார்ஓட்டல் மொதலாளி. அதே ஓடலுல சுந்தரேசன்னு ஒரு கேரளாக்கரர் மாஸ்டரா இருந்தார். என் மேல பெத்த பையன் போல பாசம் காமிச்சார். கொஞ்சம் கொஞ்சமா அவர்கிட்ட சமையல் கத்துக்கிட்டேன். ஒரு நாள் ஒரு அட்டாக்குல சுந்தரேசன் மாஸ்டர் இறந்துட்டார். அப்புறம் அந்த ஓட்டலுக்கு நான் தான் மாஸ்டர். நம்ம ஐயா அப்பப்ப எங்க ஓட்டலுல சாப்பிட வருவாரு. சாப்பாடு டேஸ்ட்டா இருந்ததால ஒரு நாள் சமையல் மாஸ்டர் யாருன்னு எங்க ஓட்டல் முதலாளிட்ட கேட்டிருக்கார். மொதலாளி என்னை கூப்பபிட்டு அறிமுகப் படுத்தினார். ஒரு வயசான ஆளை எதிர்பார்த்த அவருக்கு ஒரு கொஞ்ச வயசு இளைஞனான என்னைப் பார்த்ததும் ஆச்சரியம். அப்புறம் சாப்பிட வரும்போதெல்லா என்னைப் பார்த்து பேசாம போகமாட்டார். ஓட்டல் மொதலாளி போனப்புறம் அவரோட பையன்கள் ஓட்டல் நடத்த விருப்பப்படலை. அந்த நேரம் ஐயா என்னைப் பார்த்தாரு என் நிலமையை பார்த்திட்டு என்னை கையோட வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திட்டாரு அன்னியில இருந்து ஐயாவோட இருக்கறேன்”

      சுந்தரத்தின் கதையைக் கேட்டு ஒரு கணம் பிருந்தாவின் மனம் கசிந்தது. அவள் என்ணினாள் ‘இப்படிப் பட்ட மனிதன் தன் முதலாளிக்கு துரோகம் செய்வானா?மறுகணம் இன்னொரு புறம் கேள்வி இப்படி வந்தது..காமம் எல்லாவற்றையும் ஒரு கணம் மறக்கடித்துவிடும். மனிதன் மிருகமாக ஒரு வினாடி போதும்’. எண்ணியவள் கேட்டாள்..

“அப்படின்னா உங்க ஐயா உங்களுக்கு ஒரு தெய்வம் மாதிரி அப்பாடித் தானே?”

“அதுல என்னம்மா சந்தேகம்?”

“சரி நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?”

“கல்யாணம் பண்ணிக்கத் தோணலைமா.இப்டியே ஐயாவுக்கும் ஐயாவோட ஃபேமிலிக்கும் சேவகம் செஞ்ச வாழ்கையை முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”

“தப்பாச்சே சுந்தரம் உங்க ஐயாவுக்காக நீங்க கல்யாணம் வேண்டாம்னு வச்சது சரியில்லை உங்களுக்கு ஒரு கல்யாணம் நடக்கணும் அதுதான் சரி”

“அந்தக் காலம் எல்லாம் கடந்திட்டுதும்மா எனக்கு இப்ப நாப்பது வயசு”

“இதெல்லாம் ஒரு வயசே இல்ல”

“இல்லைமா எனக்கு கல்யாணம் செஞ்சுக்கற ஆசையே இல்லை”

“ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“வேண்டாம்மா ஒவ்வொருத்தர் மனசுல ஆயிரம் ரகசியங்கள் புதைஞ்சிருக்கும் அதை எல்லார்க்கிட்டயும் சொல்ல முடியாது. இந்தப் பேச்சை இத்தோட முடிச்சுக்குவோம்”

“சரி நான் கொஞ்சம் ஓப்பனா கேட்கறேன் ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஒரு துணை வேணும் அது அவங்களோட செக்ஸ் தேவைக்கு. அதுக்குத்தான் கல்யாணம்ங்கற வரைமுறைக்குள்ள அடைக்கிறாங்க. உங்களுக்கும் அந்தத் தேவை வரும் அதுக்கு ஒரு கல்யாணம் தேவையில்லையா?”

சுந்தரம் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் திணறினான்.

“சொல்லுங்க சுந்தரம் உங்க ஐயாவாவது உங்களுக்கு கால காலத்துல ஒரு கல்யாணத்தை செய்து வச்சிருக்கணும் அவரும் சுயநலமாய் இருந்திட்டாரு”

“அம்மா?” சிறிது சத்தத்தை உயர்த்தினான் சுந்தரம்.

“என்ன சுந்தரம் ஐயாவைப் பத்தி சொன்னதும் கோபம் வருதோ அது உண்மை தானே?”

“அம்மா ஐயா என்னைக் கல்யாணம் பன்ணிக்கச் சொல்லி நச்சரிசிட்டே தான் இருந்தார். நான்தான் வாழ்க்கையில கல்யாணம் வேணாம்னு இருந்துட்டேன்”

“அது தான் ஏன்னு கேட்டேன்?”

“அதைத்தான்  உங்ககிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் அவங்க அவங்கவகளுக்குனு பல ரகசியங்கள் இருக்கும் அதை எல்லார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாதுன்னு”

“சரி இப்ப  நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறீங்க அப்படிங்கறதுக்கு நான் பதில் சொல்லட்டா?”

பிருந்தா கேட்கவும் சுந்தரம் அதிர்ச்சியில் பேச்செழாமல் நின்றான். பிருந்தா தொடர்ந்தாள்.

“நீங்க பேச மாட்டீங்க நானே சொல்லுறேன்..கல்யாணம் பன்ணிக்கிட்டா ஒரு பொண்ணோட மட்டும் தான் வாழணும் அப்படி இல்லைனா மிருகம் மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம கிடைக்கிற இடத்துல எல்லாம் வாய் வைக்கலாம் அதானே?”

“அம்மா” அலறி விட்டான் சுந்தரம். பிருந்தா தொடர்ந்தாள்

“அதான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணியிருக்கற நீ. அவுத்து விட்ட பொலிகாளை மாதிரி திரியத்தான் கல்யாணம் வேண்டாம்னுட்டுத் திரியற அதனாலதான் வாழ்வு குடுத்த மொதாலிளி பொன்ணையே கெடுத்து நாசம் பன்ணியிருக்கற?” தன்னிலை இழந்த பிருந்தா கோடை மழையாய் வார்த்தைகளை கொட்டித் தீர்த்தாள். மகளுக்கு இப்படி நடந்து விட்டதே என்ற ஆற்றாமையில் என்ன சொல்கிறோம் ஏது செய்கிறோம் என்று புரியாமல் வெடித்துச் சிதறினாள் பிருந்தா. அந்த வெடிப்பில் காயம்பட்டு பேச்செழாமல் ஒடுங்கிப் போய் நிறிருந்தான் சுந்தரம்!

(- தொடரும்…)

முந்தையபகுதி – 17 | அடுத்தபகுதி – 19

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...