மரப்பாச்சி –19 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 19
ஒரு கணம் பேசுவது பிருந்தா தான என்று தன் கையை தானே கிள்ளிப் பார்த்தான் சுந்தரம். ‘நான் என் ஐயாவின் மகளை கெடுத்தேனா? என்ன இது அபாண்டம். எண்ணியவன்..
“ஏம்மா எப்படி எங்கிட்ட உங்களால இப்படி ஒரு கேள்வியை கேட்க முடிஞ்சுது மொதல்ல பிரியா கண்ணுக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க?
பிருந்தா நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் அவனிடம் கூறினாள். கூறி முடித்தவள் சுந்தரத்திடம் கூறினாள்
“ஆமாம் விச்சாரிச்சவரை நீங்க மட்டும் தான் சந்தேக வட்டத்துல வர்றீங்க?”
“பிரியா அப்படிச் சொல்லிச்சா?”
“இல்லை இது அவளுக்கே தெரியாம நடந்திருக்குது”
“உடனே வீட்டுல இருந்த என்னை சந்தேகப்பட்டீங்க?”
“உடனே எல்லாம் இல்லை எல்லார்க்கிடயும் விசாரிச்சோம்”
“முடிவுல பழியை என் மேல போட்டுட்டீங்க”
“ஏன் பிருந்தாம்மா யாரை சந்தேகப்படணும்னு ஒரு வரைமுறை இல்லையாம்மா?”
“நாட்டுல நடக்குறதை நீ செய்தியில பத்திரிக்கியில படிக்கிறதில்லை? எழுபது வயசுக் கிழவன் நாலு வயசு குழந்தையை சீரழிக்கறான்”
“ப்ரியா நான் தூக்கி வளர்த்த குழந்தைமா. நான் அப்படிச் செய்வேனா?”
“”அப்ப நீ எதுவும் செய்யலை?”
“கனவுல கூட நான் அப்படி ஒரு பாதகத்தைச் செய்யமாட்டேன்”
“நீ உண்மையைச் சொல்லலைனா நான் ஐயா வந்ததும் உன்னை போலீஸ்ல ஒப்படைச்சிடுவேன்”
“அதைச் செய்யுங்க மொதல்ல” என்ற சுந்தரம் அடுக்களைக்குள் புகுந்தான்.
பிருந்தா சமநிலைக்கு வர சமயம் ஆனது. இப்பொழுது யோசித்தாள்.. சற்று நிதானமாக நடந்திருக்கலாமோ? ஒரு வேளை உண்மையில் சுந்தரம் இந்தக் காரியத்தைச் செய்யாவிட்டால் எப்படி இவர் முகத்தில் விழிப்பது. ஆத்திரத்தில் அவரை அவன் இவன் என்று வேறு விளித்தாகி விட்டது. மறுகணம் இப்படியும் சமாதானம் செய்து கொண்டாள் இப்படி விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும். கணவான் வரட்டும் கணவனுடன் கலந்துகொள்வோம். மகளின் கர்ப்பத்திற்கு காரண்மானவனைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க நான் எந்த லெவலுக்கும் செல்வேன். மனதினில் கறுவிக்கொண்டாள்.
மாலை ஆறுமணிக்கு மணிமாறன் வீட்டிற்கு வந்திருந்தார். வந்தவர் சோஃபாவில் அமர்ந்தவாறே “சுந்தரம் ஒரு காஃபி என்றார்” சில நிமிடங்களில் கையில் காஃபிக் கோப்பியயுடன் பிருந்தா வெளியே வந்தாள்..மணிமாறன் புருவங்கள் உயர்ந்தது.
“சுந்தரம் எங்கே நீ காஃபி எடுத்துட்டு வர்றே?’
“சுந்தரம் கார் ஷெட்டுல இருக்கறார்”
“ஏன்?”
“அதுக்குக் காரணம் இருக்குது நீங்க மொதல்ல காஃபியைக் குடிங்க”
மணிமாறன் காஃபியை குடித்து முடிக்கவும் மதியம் சுந்தரத்தை தான் விசாரித்தது. சற்று கடினமாகப் பேசியது அனத்தையும் அவரிடம் கூறினாள் பிருந்தா. அவள் கூறி முடிக்கவும் மணிமாறன் ஒரு கணம் ஆடிப்போனார்.
“என்ன பிருந்தா ஒரு வார்த்தை என் கிட்டக் கேட்காம என்ன காரியம் செஞ்ச்சு வச்சிருக்கற?”
“பிரியாவோட இந்த நிலைக்குக் காரணமானவனை நான் கண்டு புடிச்சே தீரூவேங்க அதுக்கு நான் எந்த லெவலுக்கும் இறங்குவேன்”
“சரி பிருந்தா அதுக்கு ஒரு அப்பாவியையா சந்தேகப்படுறது?”
“யார் அப்பாவி யார் வில்லன்னு விசாரிச்சத்தானே தெரியும்”
“என்கிட்ட மொதல்ல நீ சொல்லியிருந்தா சுந்தரத்தை விசாரிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது”
“இல்லை உங்க முன்னாடி நான் அவரை விசாரிக்கணும்”
“அதுக்கு அவசியமே இல்லை”
“அதான் ஏன்னு கேட்கறேன்”
“ஏன்னா ஒரு பெண்ணை கர்ப்பமாக்க அவனால முடியாது”
“அதான் ஏன்னு கேட்கறேன்”
“யெஸ் ஹி இஸ் இம்பொடெண்ட்..சின்ன வயசுல கபடி விளையாடும்போது படாத இடத்துல அடி பட்டு ஆண்மையை இழந்தவன் சுந்தரம். அப்படிப் பட்ட அவன் எப்படி நம்ம குழந்தையை கெடுத்திருக்க முடியும்?”
அதிர்ச்சியில் உறைந்தவள் கேட்டாள்..
“இது எப்படி உங்களுக்குத் தெரியும்?’
“அவனை நான் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வர்புறுத்துறப்ப எல்லாம் வேண்டாம் வேண்டாம்னு தட்டிக் கழிச்சிட்டே வந்தான், என்னோட தொந்தரவு அதிகமாக ஒரு நாள் உண்மையைச் சொல்லிட்டான். நான் அதுக்கு தீர்வு காணலாம்னு ஊருல பிரபலமான செக்சியாலஜிஸ்ட்ட அவனைக் கொண்டு போய் காட்டினேன், அவரு தீர்மானமாய் சொல்லிட்டார் சுந்தரத்தால தாம்பத்ய வாழ்க்கை வாழ முடியாது, அவன் முழுவதுமான ஒரு ‘இப்பொட்டெண்ட்’ அப்படின்னு, இப்பச் சொல்லு சுந்தரம் இந்தச் செயலை செய்திருப்பானா?”
பிருந்தாவின் கண்கள் கண்ணீரை சிந்தியது.. அவள் வாய் முணுமுணுத்தது..
“நான் தப்புச் செய்திட்டேன்.. தப்புச் செய்திட்டேன்..”
“கண்டிப்பா நீ செய்தது தப்பு, சுந்தரம் ஒரு அற்புதமான மனுஷன், அவன் மனசை நொறுங்கடிச்சிட்ட நீ, அதுக்குப் பரிகாரம் அவன் காலுல விழுந்து நீ மன்னிப்புக் கேட்கணும்”
அழுதவாறே கூறினாள் பிருந்தா.. “கண்டிப்பாங்க எனக்கு அது எந்த வருத்தமும் கிடையாது.. கார்ஷெட்டுல உக்கார்ந்திருக்கிறவர் காலுல விழுந்து நான் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்..”
என்றவள் விறுவிறுவென்று நடந்தாள் கார்ஷெட்டை நோக்கி, வினாடிகளில் கார்ஷெட்டை அடைந்தாள். அங்கு தரையில் சம்மனமிட்டு அமர்ந்திருந்தான் சுந்தரம், அங்கு சென்றவள் தடாலென்று தரையில் விழுந்தவள், அவன் கால்களைப் பற்றிக் கொண்டாள். தன் எஜமானி தன் காலில் விழுந்ததைக் கண்டு பதறியவன் விருட்டென்று எழுந்து நின்றான்..
“என்னம்மா இது நீங்க போய் என் காலுல விழுந்துக்கிட்டு..”
“அதுல தப்பு இல்லை சுந்தரம், தடித்த வார்த்தைகள் பேசும் போது நல்லா விசாரிச்சிட்டுப் பேசணும், அதுவும் இல்லாம உங்களை நான் ரொம்ப நோகடிச்சிட்டேன், என்னைவிட வயசுல மூத்த உங்க காலுல விழுறதுல தப்பே இல்லை, நீங்க என்னை மன்னிச்சிட்டேன்னு சொன்னாத்தான் நான் எழுந்துக்குவேன்..”
“அம்மா நான் மன்னிக்க நீங்க ஒரு தப்பும் பண்ணலையே, ப்ரியாவுக்கு இவ்வளவு பெரிய கொடுமை நடந்திருக்குது, ஒரு சித்தியா இல்லாம ஒரு தாயா அவளை இந்த நெலமைக்கு கொண்டு வந்தவன் யாருன்னு கண்டுபுடிக்கப் பாடாப்படுறீங்க, அந்த நேரம் என்கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டீங்க. உங்க நிலையில இருந்து பார்த்தா அது சரியாத்தான் படுது.. எழுந்திருங்க..”
“இல்லை நீங்க மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னாத்தான் நான் எழுந்துக்குவேன்…” பிருந்தா அடம்பிடிக்கவே..
“சரிம்மா.. நான் மனசில ஒண்ணும் வச்சுக்கலை, மன்னிச்சுட்டேன்..”
அவள் கூறியதும் பிருந்தா எழுந்தாள்.
“வா சுந்தரம் ஐயா காத்துட்டிருக்கறார்” என்றாள் அவள் பின்னே நடந்தான் சுந்தரம்!
படுக்கையில் கிடந்த பிருந்தாவின் மனம் குழப்பத்தில் தத்தளித்தது.. தான் எடுத்து வைத்த முதல் அடி மாபெரும் தப்பாகி விட்டது.. அனியாயமாய் சுந்தரத்தின் மேல் குற்றத்தைச் சுமத்தி ஒரு நல்ல ஜீவனை காயப்படுத்திவிட்டேன். அடுத்த நாம் விசாரிக்க நினைத்தது டிரைவர் காளிராஜை. காளிராஜ் இப்பொழுது தன் வீட்டு டிரைவர் மட்டும் அல்ல, தன் தங்கையின் கணவன் கூட.. அவனிடம் எப்படி விசாரிப்பது குழம்பித் தவித்தாள்.. காளிராஜ் அப்படிச் செய்யக் கூடியவன் போல் தெரியவில்லை, ஆனால் மகளின் கர்ப்பத்திற்கு ஒரு சூத்ரதாரி இருந்து தானே ஆகவேண்டும். ஒரு மாபாதகத்தைச் செய்தவன் இந்தப் பூமியில் எங்கோ ஒரு இடத்தில் ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி போல் நடந்து கொண்டு இதே போல் இன்னொரு குழந்தைக்கு இந்த மாபாதகச் செயலை செய்யப் போகிறான் அதற்கு முன் அவனைக் கண்டுபிடித்து அவனுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும், அதற்காக அவனை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். மனதிற்குள் கூறிக் கொண்டாள், ‘அடே மாபாதகனே விரைவில் வருகிறேன் உன்னிடத்தில்’ என்று!
(-தொடரும்…)
முந்தையபகுதி – 18 | அடுத்தபகுதி – 20