மரப்பாச்சி – 20 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி – 20 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 20

      ன்ன செய்வது காளிராஜை.. விசாரிக்க வேண்டும், ஆனால் அவளால் முடியாது. வேறு யாரையாவது விட்டு விசாரிக்க வேண்டும். நம் குடும்பத்து ஆள் வேண்டாம். கணவனிடம் சொன்னால் நிச்சயம் செய்யமாட்டார். காளிராஜ் மீதும் அதீத பற்று வைத்திருக்கிறார். ‘காளிராஜ் இந்தக் காரியத்தை செய்யாமல் இருந்தாலும், சந்தேக வட்டத்தில் இருந்து அவனை விலக்கவாவது அவனை விசாரிக்க வேண்டும்’ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது தீர்வுதான் கிடைக்கவில்லை அவளுக்கு. நம்பிக்கைக்குரிய ஆள் ஒருவரை வைத்து காளிராஜை விசாரிக்க வேண்டும். நமக்கு யார் நம்பிக்கைக்குரியவர்?. எண்ணங்களை ஓடவிட்டாள். முடிவில் ஒரு பெயர் வந்து நின்றது அவள் மூளையில்.. ‘ராஜன். அவள் கூடவே படித்தவன், சிகப்புச் சிந்தனை கொண்ட ஒரு முரட்டு இளைஞன். ஆனால் நேர்மையானவன். இன்னும் திருமணமாகவில்லை. ஒரு பயாலஜிகல் புரொபசரின் ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வருகிறான். படிப்பு எம்.எஸ்.சி கெமிஸ்ட்ரி. அவனைத் துணைக்கழைப்போம்’ எண்ணியவள் செல்போனை எடுத்து ராஜனை அழைத்தாள்.

      மறுமுனையில் அந்த மெல்லிய பெண்மை கலந்த குரல்.. “என்னம்மா தாசில்தார் பொண்டாட்டி, என்னை எல்லாம் ஞாபகம் இருக்குதா? எடுத்த உடனே உரிமையுடன் எடக்காக வந்தது ராஜனின் குரல்..

“டேய் ரெண்டும் மாசம் முன்னாடி தானே உன் கூடப் பேசினேன்” உரிமையாய் தோழனுக்கு பதிலடி கொடுத்தாள்..

“ரெண்டு மாசம் அப்போ எதோ தேவைக்குப் பேசின, இப்பவும் எதோ தேவை அதானே போன் பண்ணியிருக்கற” தோழன் தன்னைப் படித்துவிட்டதை எண்ணி சற்று சங்கடப்பட்டாள்.. ஆனாலும் சமாளித்தவள் பேசினாள்..

“ஆமாண்டா இப்ப உன்னோட ஒரு சேவை எனக்கு தேவைதான், டேய் நான் ஒரு கல்யாணமான குடும்பப் பொண்ணு, ஒன்ன மாதிரி ஒரு மொட்டப் பையன் கிடையாது..”

“சரிம்மா குடும்ப இஸ்திரி இப்ப எதுக்குப் போன் பண்ணுன அதைச் சொல்லு..”

“நான் உன்னை நேருல பார்க்கணும், நீ எப்ப ஃபிரீ?”

“எங்க ஃபிரீ புரொபசர் 24 மணிநேரம் வேலை பார்த்தாலும் இன்னும் கொஞ்சம் வேலை இருக்குது முடிச்சிட்டுப் போன்னுதான் சொல்லுவார்.. அதனால நாம ஃப்ரீ பண்ணிக்க வேண்டியதுதான்..”

“நாளைக்கு ஒரு பதினோரு மணிக்கு வெளியே எங்கயாவது மீட் பண்ணிக்கலாமா?”

“ஓகே.. எங்க மீட் பண்ணலாம்னு நீயே சொல்லு..”

ராஜன் கூட்டமில்லாத ஒரு ரெஸ்ட்டாரண்டின் பெயர் சொல்லி அங்கே வரச் சொன்னான்.. “சரி” என்றவள் தொடர்பை அறுத்தாள்..

      மறுநாள் காலை ராஜன் கூறிய ரெஸ்ட்டாரண்டில் எதிரும், புதிருமாய் ராஜனும், பிருந்தாவும் அமர்ந்திருந்தனர். டேபுளில் சாம்பார் வடை காஃபி அமர்ந்திருந்தது..

“சொல்லு பிருந்தா எதுக்கு திடீர்னு என்னை பார்க்கணும் போன், எதோ அவசரம்  இல்லைனா கூப்பிட்டிருக்க மாட்டே”

“அவசரம்தான்டா, வேற யார்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாத ஒரு சங்கடம்”

“ஏன் புருஷன் கொடுமையா?”

“டேய் விளையாடாதே அவரு சொக்கத் தங்கம்”

“அப்ப என்ன?”

      தயங்கித் தயங்கி ப்ரியாவிற்கு நடந்த கொடுமையை அவனிடம் கூறினாள் பிருந்தா. கேட்கக் கேட்க கண்கள் சிவந்து உதடுகள் துடிக்க ஆரம்பித்தது ராஜனுக்கு. இயற்கையிலேயே சமூகச் சீற்றம் கொண்டவன் ராஜன், ஒரு சிறு பெண்ணை இப்படிச் சீரழித்திருக்கிறார்களே என்றதும் கோபம் தலைக்கேறியது அவனுக்கு.

“சொல்லு பிருந்தா ஆளு யாருன்னு, அவன் இனி இந்த பூமியில இது போல ஒரு குழந்தைக்கு இப்படி ஒரு பாதகம் செய்யாம செஞ்சிடுறேன்..”

“அவன் யாருன்னு தெரியாது, அவன் யாருன்னு கண்டுபுடிக்கணும், அதுக்குத்தான் உன் உதவி வேணும்”

“சொல்லு என்ன உதவி வேணும்?”

“என்னோட சந்தேக லிஸ்ட்டுல இருக்கறவங்களை நான் விசாரிச்சிட்டு வர்றேன், இப்ப எங்களோட வீட்டு டிரைவரை விசாரிக்கணும்”

“ஏன் நீ அவனை விசாரிக்க முடியாதா?”

“முடியும், ஆனா அவன் வெறும் எங்க வீட்டு டிரைவர் மட்டும் இல்லை, என் தங்கச்சியோட புருஷன் வேற, அதனால அவனை நேரடியா என்னால விசாரிக்க முடியலை..”

“சரி நான் என்ன செய்யணும்?

“நீ அவனை விசாரிக்கணும், அவங்கிட்ட எதாவது பொய் இருக்குதான்னு கண்டுபிடிக்கணும்”

“சரி விசாரிக்கறேன், அவன் செல் நம்பர் குடு..”

      பிருந்தா கூற அவன் தன் செல்லில் பதித்துக் கொண்டான்..

“சரி பிருந்தா ஒன் ஆர் டூ டேஸ்ல உண்மையோட வர்றேன்” என்றவன் பில்லுக்கு பணத்தை வைத்துவிட்டு கிளம்பினான்.

      பிருந்தா கிளம்பியதும் உடனே செயலில் இறங்கினான் ராஜன். பிருந்தா கொடுத்த காளிராஜின் எண்ணிற்கு போன் செய்தான். மறுமுனையில் காளிராஜ்..

“ஹலோ யாரு வேணும்?”

“நான் ஒரு டிடெக்டிவ் பேரு ராஜன், உங்களை ஒரு சில விஷயம் கேட்கணும் ஃபிரியா இருக்கறீங்களா?”

“என்ன விஷயமா?”

“என்னன்னு உங்களுக்குத் தெரியாது?” தடாலடியாய் போட்டு வாங்கினான் ராஜன்.

“ஹலோ நீங்க என்ன பேசுறீங்கன்னே தெரியலை..”

“நேரே வாங்க சொல்லுறேன்”

“நான் இப்ப டூட்டியில இருக்கறேன்..”

“பர்மிஷன் போட்டுட்டு வந்தா உங்களுக்கு நல்லது, இல்லைனா போலீசோட வர வேண்டியிருக்கும்..”

      எதிர்முனையில் காளிராஜ் குழம்பினான், இது எதாவது ராங் காலாக இருக்குமோ.. சந்தேகத்தை நிவர்த்தி பண்ண வினவினான்..

“ஹலோ சார் நீங்க எதோ தவறான நபர்கிட்ட் பேசிட்டிருக்கறீங்க”

“இல்லை மிஸ்டர் காளிராஜ், மணிமாறன் சாரோட டிரைவர், பிருந்தாவோட தங்கச்சி புருஷன் காளிராஜ்தானே நீங்க..”

      எதிர்முனையில் அதிர்ந்தான் காளிராஜ் சரியாகத்தான் அழைத்திருக்கிறான் எதிர்முனை நபர்..

“சரிதான் சார் நான் என்ன பண்ணுனேன்னு என்னை விசாரிக்கணும்?”

“நீங்க பண்ணுன தப்பு என்னன்னு உங்களுக்குத் தெரியாது?”

“நான் எந்தத் தப்புக்கும் போற ஆளு இல்லை, நீங்க தப்பான ஆள்கிட்ட பேசிட்டிருக்கறீங்க”

“சரி நீங்க பண்ணுன தப்பை இப்ப நான் சொல்லுறேன், சொன்னா ஓடி வருவீங்க”

“நான் எந்தத் தப்பையும் செய்யலை, அதனால எனக்குப் பயம் இல்லை”

“சரி சிட்டி செண்டர் வாங்க கீழ் ஃப்ளோர்ல வெயிட் பண்ணுறேன்..”

      பிரமாண்டமான மால் சிட்டி செண்டர் உள்ளே நுழைந்த காளிராஜ் ராஜனின் எண்ணுக்குப் போன் செய்தான். செல்லை ஆன் செய்த ராஜன் திரும்பவும் அவன் எதிரே காளிராஜ்..

“நீங்க காளிராஜ்..”

“ஆமாம் நீங்க?”

“டிடெக்டிவ் ராஜன்..”

“சரி சார் எனக்கு நேரம் இல்லை, ஒன் அவர் பெர்மிஷன் கேட்டுட்டு வந்திருக்கறேன், மணிமாறன் சார் ஒரு மணிக்கு ஒரு இடம் போகணும், சீக்கிரம் சொல்லுங்க..”

தடாலடியாய் ஆரம்பித்தான் ராஜன்..

“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண எப்படிங்க மனசு வந்துச்சு உனக்கு?” ஒருமைக்கு தாவினான்..

“ஹலோ சார் கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திறீங்களா? மணிமாறன் சார் எனக்கு தெய்வம் அவங்க குடும்பத்துக்கு நான் ரெண்டகம் செய்தேனா, யார் சொன்னா உங்களுக்கு?”

“ஆங்.. உங்க அண்ணிதான்..”

ஒரு நிமிடம் உள்ளுக்குள் நொறுங்கியவன் கேட்டான், “யாரு பிருந்தா அண்ணியா?”

“அவங்களேதான், எப்படிய்யா உனக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய மனசு வந்துச்சு?”

“சார் நீங்க சுத்தி வளைச்சு பேசிட்டிருக்கறீங்க, அப்படி நான் என்ன துரோகம் செய்தேன் சொல்லுங்க?”

“உன்னோட மொதலாளி பொண்ணை கெடுத்து அவ வயிற்றுல நீ குழந்தையைக் குடுக்கலை?”

ராஜன் சொன்ன அபாண்டம் புரிபட சட்டென எட்டி அவன் சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்தான் காளிராஜ். அந்தப் பிடிப்பே ராஜனுக்கு உணர்த்தியது இவன் செய்யவில்லை.. இவன் இந்தக் குடும்பத்தின் விசுவாசி என்பதை.. காளிராஜ் உறுமினான்..

“இது பொது இடம் இல்லாம இருந்தா உன்னை இங்கயே கொண்ணு பொதச்சிருப்பேன், எங்க ஐயா பொண்ணை நான் கெடுத்தேனா, அது பச்சைக் குழந்தைடா?”

“அந்தக் குழந்தையைத்தான் சீரழிச்சிருக்கறாங்க, அந்த குழந்தையை தினமும் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போறது நீதான், நீ ஏன் செய்திருக்க கூடாதுன்னுதான் இந்த விசாரணை..

      சற்று கோபம் தணிந்தான் காளிராஜ்… “சார் நீங்க சொல்லுறது உண்மையா? ப்ரியாக்குட்டிக்கு இப்படி ஒரு கொடுமை நடந்துச்சா?”

“அதை நீதான் சொல்லணும்”

“சார் நீங்க ஒரு டிடெக்டிவ் உங்களுக்குப் பார்த்தவுடனே தெரியும் குற்றம் செய்யிறவங்களைப் பற்றி, என்னைப் பார்த்தா ஒரு குற்றவாளியாவா தெரியுது?”

“இப்பல்லாம் யாரையும் நம்பமுடியலை..”

“பிருந்தா அண்ணி சொல்லியா நீங்க என்னை விசாரிக்கறீங்க?”

“இல்லை இது பொதுவான இன்வெஸ்டிகேஷன்” ராஜன் உண்மையை மறைத்தான்..

“சார் மணிமாறன் சார் எனக்குத் தெய்வம் மாதிரி, பிருந்தா அண்ணியும் அதுபோலத்தான், ஒரு டிரைவர்னு பார்க்காம அவங்க தங்கச்சிய நான் லவ் பண்ணுனதும் எனக்கு கட்டி வச்சாங்க, அந்தக் குடும்பத்துக்கு நான் துரோகம் செய்வேனா?”

      ராஜன் உள்மனம் கூறியது ஆள் இவன் இல்லை, இவன் இந்தக் குடும்ப விஸ்வாசி, இவனிடம் குற்றம் இல்லை..

“சாரி மிஸ்டர் காளிராஜ், இது ஒரு ஃபார்மல் எங்கொயரி, நீங்க இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது, குறிப்பா மணிமாறன் சார்கிட்ட, நான் குற்றவாளியை கண்டுபுடிச்சது அப்புறம் சொன்னாப் போதும்..”

“சார் என்னால இதை நம்ப முடியலை..”

“நம்பித்தான் ஆகணும் ஒரு படுபாதகச் செயல் நடந்திருக்கு குற்றவாளி சீக்கிரம் மாட்டுவான், நீங்க ரகசியம் காக்கணும்..”

“சரி சார்.. கண்டுபுடிச்சதும் அவனை, எங்கிட்டக் குடுங்க, அவனை சித்திரவதை பண்ணி என் கையாலேயே சாகடிக்கிறேன்”

“மொதல்ல அவன் சிக்கட்டும், சாரி.. இது ஒரு எங்கொயரி இதை நீங்க இங்கயே மறந்துடணும்” என்று காளிராஜின் கைப்பற்றிக் குலுக்கினான் ராஜன். அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கிளம்பினான் காளிராஜ்.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 19 | அடுத்தபகுதி – 21

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...