என்னை காணவில்லை – 19 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 19 | தேவிபாலா

அத்தியாயம் -19

அந்த நாலு பேர், துவாரகா காரணமாக பாதிக்கப்பட்டு கம்பெனியில் வேலை இழந்தவர்கள், சேர்மனால் வெளியேற்றப்பட்டவர்கள், தொழில் துறை முழுக்க இது தெரிந்து வேறு எங்கேயும் வேலை செய்ய முடியாதவர்கள், அவர்கள் ஊழலில் கோடிக்கணக்கில் சம்பாதித்ததை, ஆதார பூர்வமாக துவாரகேஷ் நிரூபித்ததால், அவர்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அவர்களது வீட்டுக்கு ரெய்டு வந்து சகல டாக்குமென்டுகளையும் கைப்பற்ற, அவர்கள் வெளியே வாங்கிய நிலங்கள், பினாமி பேரில் தொழில்கள், தோட்டம் துறவு என சகலமும் கைப்பற்றப்பட்டது. வங்கி லாக்கர்கள் திறக்கப்பட்டு தங்க, வைர நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. ஏறத்தாழ சகலமும் பறிக்கப்பட்டு, இருக்கும் பெரிய வீடுகளை விட்டு விரட்டப்பட்டு, தெருவுக்கு வந்து விட்டார்கள். அதனால் வாழ்வாதாரம் குலைந்து நாளைக்கு என்ன என்ற கேள்வியுடன் நிற்கும் நிலை. பிச்சை எடுக்காத குறை தான். அதனால துவாரகேஷ் மேல் கொலை வெறியில் இருந்தார்கள். இவர்களது மாஸ்டர் மைண்ட் ஆராவமுதன். துவாரகேஷ் என்ன செய்து இவர்களது தோலை ஒட்டு மொத்தமாக உரித்து தொங்க விட்டான் என்பது இவர்களுக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் அவன் எலக்ட்ரானிக் எக்ஸ்பர்ட் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மின்னணு விஞ்ஞானம் மூலம் தான் இது நடந்திருக்க வேண்டும் என யூகித்து விட்டார்கள். இது தொடர்பான பல நிபுணர்களை சென்று ஆராவமுதன் பார்த்தார். யாராலும் கணிக்க முடியவில்லை. அப்படி செய்ய அவர்கள் கேட்கும் ஃபீஸை தர இவர்களிடம் பணமில்லை.

“டேய்! நம்மை தெருவுக்கு கொண்டு வந்துட்டான். அவனை விடக்கூடாது. குடும்பத்தோட அழிக்கணும். அவன் என்ன செஞ்சு நம்மை இந்த கதிக்கு ஆளாக்கினான்னு தெரியலை. அதை கண்டு பிடிக்கணும்.”

“தல! இவங்க ஃபார்முலாக்களை திருடி போட்டி கம்பெனிக்கு நாம விக்கப்போற நேரத்துல, இவன் அதை மோப்பம் புடிச்சு கையும் களவுமா பிடிச்சிட்டான். ஒரு வாரம் தாண்டியிருந்தா நம்ம கதையே வேற. நாம தனியா தொழில் தொடங்கி இந்த கம்பெனியை காலி பண்ணியிருக்கலாம். கெடுத்துட்டான்.”

“நம்ம ஆட்களை வச்சு, அவனோட வீடு, குடும்பம், இவனோட போக்குவரத்து, அவங்க நடமாட்டம் எல்லாம் கண்காணிக்கணும். நமக்கு அவன் குடும்பம் பற்றி அதிகமா தெரியாது. இது வரைக்கும் தெரிஞ்சுகற அவசியம் வரலை. இப்ப வந்தாச்சு. கண்காணிச்சு எனக்கு உடனுக்குடன் ரிப்போர்ட் வரணும். சந்தர்ப்பம் கிடைச்சா, அவனை போட்ருங்க.!”

அதன் விளைவாக காரை மடக்க, ஆளில்லாத கார் இவர்களை விரட்டி, மிரண்டு போய் வந்து சொல்ல,

“இது பில்லி சூன்யம் தான் தல.!”

“வாயை மூட்ரா. நிச்சயமா அவனோட விஞ்ஞான விளையாட்டு தான்.!”

“முதல்ல காரை அவன் தானே ஓட்டிட்டு வந்தான். நாங்க தாக்கப்போனப்ப மாயமா மறைஞ்சிட்டான். அப்புறமா கார் முழுக்க நாங்க சோதனை செஞ்சோமே. ஆள் இல்லையே? எப்படி மறைஞ்சான்? ஆனா கார் ஓடுது. ரிவர்ஸ் எடுக்குது. எப்படி?”

“முட்டாள்! அவன் படக்குனு ஔிஞ்சு, ஏதாவது ரிமோட் வச்சு காரை ஆபரேட் பண்ணியிருப்பான்.”

“அப்படி நடக்கலை தல.”

இதன் பிறகு துவாரகேஷ் பற்றிய துப்பறியும் வேலைகளை வேகமாக செய்தார்கள். அதில் ஆளுக்கொரு விவரம் கொண்டு வந்தார்கள்.

“ தல! நிறைய விவரங்கள் ருசி கரமா கிடைச்சிருக்கு. அவனோட அம்மா முதியோர் இல்லத்துல இருக்கு.!”

“ஏன்? கம்பெனிக்காக உழைக்கறவன், எதுக்காக பெத்தவளை ஹோம்ல விட்டிருக்கான்?”

“இவன் பொண்டாட்டி ராட்சசி. அவளும், இவனும் இணக்கமா இல்லை. அக்கம் பக்கத்துல அலசினோம். அவ சந்தேகப்பூச்சி. இவன் நம்ம கம்பெனி சுஷ்மா கூட, கள்ள தொடர்புல இருக்கான்னு இவனை வறுத்து எடுக்கறா. வீட்ல இவன் சித்ரவதை அனுபவிக்கறான்.!”

“பிரமாதம்டா.உருப்படியான தகவல். அந்த சுஷ்மா ரசகுல்லா மாதிரி வெள்ளையா தளதளன்னு இருக்கா. எனக்கே அவளை ஒரு தடவை…!”

“தல, உங்களுக்கு வயசு அம்பத்தி ஆறு.”

“நாப்பதுக்கு பிறகு தாண்டா வேகம் அதிகமாகும். சரி, அதை விடு. விஷயத்துக்கு வா.!”

“அவ சந்தேகம் முத்திப்போய், வீட்ல அவ பேயாட்டம் ஆட, இவனால சமாளிக்க முடியலை. அம்மாவை ஹோம்லயும், ரெண்டு பசங்களை கொடைக்கானல் பள்ளிக்கூடத்துலயும் சமீபத்துல விட்டிருக்கான். இவனோட மாமனார், மாமியார் இருக்காங்க.”

“சூப்பர்டா. இதுக்கு மேல என்ன வேணும்? நீங்க என்ன பண்றீங்கனா, அவனோட  சந்தேகப்படற சம்சாரத்தை, அவளோட போக்குவரத்தை, ஒரு ஆள் தொடர்ந்து கண்காணிக்கணும். வீட்ல இருக்கற மாமனார், மாமியாரை ஒருத்தர்..ஆஸ்ரமத்துல இருக்கற தாய் கிழவியை..அப்புறமா கொடைல படிக்கற புள்ளைங்களை. சரியா?”

“என்ன செய்யணும்?”

“இரு! மனைவி கூட உள்ள உரசலால, குடும்பத்தையே ஏறத்தாழ கலைச்சிருக்கான்னா, இது பெரிய ரகளை தான். சந்தேகப்படற மனைவியை நாம சந்திக்கணும். அவளை ஊதி விட்டு பெரிசாக்கணும். சுஷ்மா கூட இவன் குடும்பம் நடத்தறான்னு பிரச்னையை ஊதணும். இது தான் முக்கிய புள்ளி நமக்கு.!”

“இதனால நமக்கென்ன லாபம்?”

“ஒரு பலமான மனுஷனுக்கு, பலமும் மனைவி தான்..பலவீனமும் மனைவி தான். அவனுக்கு பிரச்சனை வரும் போது தாங்கி அவ பிடிச்சிட்டா, அவனை யாராலும் அசைக்க முடியாது. அதே சமயம், குடும்பத்துல மனைவியால சித்ரவதைன்னா, அவன் துவண்டு போயிடுவான். இதை வச்சுத்தான் அடிக்கணும். முதல்ல அந்த ஏரியாவை பிடிங்க.!”

“தல! எனக்கொரு யோசனை தோணுது. கொடைல இருக்கற இவன் புள்ளைங்க ரெண்டு மேலயும் கை வச்சா?”

“அங்குள்ள பள்ளிக்கூடம் பாதுகாப்பான, பணக்கார பள்ளிக்கூடம். கட்டுக்காவலும், பந்தோபஸ்தும் நிறைய இருக்கும். மாட்டினா, நமக்கு ஜெயில் தான். ஏற்கனவே சேர்மன் குடுத்த புகார்ல நாம ஜெயில்ல தான் இருந்திருக்கணும். துவாரகா அதை தடுத்த காரணமா தப்பிச்சோம்.!”

“நம்மை சட்டம் தண்டிக்காம காத்தவனை பழி வாங்கலாமா?”

“நீ என்னடா, ராமாயண விபீஷணனா? நம்மை தெருவுக்கு கொண்டு வந்தது அவன் தானே? ரொம்ப சோஷல் மீடியால கம்பெனி பேர் அடி பட்டா, பிசினஸ் பாதிக்கும்னு செஞ்சான். அவன் குடும்பத்தோட அழியணும். கொடைல நம்ம கதிர் இருக்கான். அவனுக்கு தகவல் தந்து பார்க்க சொல்லலாம். முதல்ல பசங்க மேல கை வைக்க வேண்டாம். கொஞ்சம் நோட்டம் விட்டுட்டு முடிவு பண்ணலாம். அவன் குடும்பம் மொத்தமும் அழியப்போறது நம்மால தான். முதல்ல சம்சாரம். அவளை பற்றி தெரிஞ்சுகிட்டு நாம சந்திக்கணும்.!

ஆராவமுதன் வலையை விஸ்தாரமாக விரிக்க ஆரம்பித்தான்.

இங்கே டாக்டர் பல்லவியிடம் தன் திட்டத்தை சொல்லி விட்டு, துவாரகேஷ் புறப்பட்டான். நேராக வீட்டுக்கு வந்து விட்டான். துளசி வீட்டில் இல்லை. காஞ்சனாவை பார்க்க போயிருந்தாள். துவாரகா வந்து சாப்பிட உட்கார, மாமியார் பரிமாற,

“மாப்ளே! நீங்க சூன்யம் வச்சிருக்கீங்க..பெட்ரூமுக்கு போகவே பயம்மா இருக்குனு உங்க மேல குற்றச்சாட்டுகளை அடுக்கறா துளசி. எங்களுக்கு இந்த வீட்ல அவளை பார்க்கத்தான் பயம்மா இருக்கு மாப்ளே. தயவு செஞ்சு மன நல மருத்துவர் கிட்ட அவளை காட்டுங்க.”

“அத்தே! கூப்பிட்டதும் துளசி, டாக்டர் கிட்ட வந்துடுவாளா? பெரிய ரகளை பண்ண மாட்டாளா?”

“நீங்க, யார் டாக்டர்னு சொல்லுங்க. நாங்க அவளை கூட்டிட்டு போக முடியுமான்னு பாக்கறோம்.!”

“வேண்டாம் அத்தே. தேவையில்லாம அவமானப்படுவீங்க. அவளை குணப்படுத்த எந்த டாக்டராலும் முடியாது. இது நோய் இல்லை. என்னை சித்ரவதை செய்யற வெறி. இப்பக்கூட அந்த காஞ்சனா கூடத்தான் அவ சுத்தறா. இத்தனை கடந்தும் அவ வெறி அடங்கலையே அத்தே?”

“ அதில்லை மாப்ளே..ஒரு நிர்வாண மந்திரவாதியை நடு ராத்திரி வீட்டுக்கு  வரவழைக்கறான்னா, அவ புத்தி பிசகியிருக்குனு தானே  அர்த்தம்? அவ கூட நீங்க வாழணும்னு நாங்க ஒரு நாளும் சொல்ல மாட்டோம். ஆனா அவ கேவலப்பட்டு நாதியில்லாம போறதை தடுக்க முடியுமான்னு பாக்கறேன்.”

“அதுக்கு நான் விட மாட்டேன் அத்தே. அவளோட இந்த வெறியால பாதிக்கப்பட்டது நம்ம குடும்பம் மட்டும் தான். ஆனா வெளியுலகத்துக்கு அவ என் மனைவி தான். அவளை காப்பாத்தறது ஒரு புருஷனா என்னோட கடமை அத்தே.!”

“ இடுப்புக்கு கீழே உலகம்னு அவ நம்பறா. ஆனா மனசும், இதயமும் தான் வாழ்க்கைனு சொல்ற உங்களை அவ தொலைக்கப்பாக்கறா. விதி மாப்ளே.!”

அவனை பாசமாக கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் மாமியார். அந்த நேரம் துளசி உள்ளே நுழைந்தாள். கை தட்டினாள்.

“ பிரமாதம். மாமியார்..மாப்ளை காதல் நடுக்கூடத்துல பகிரங்கமா அரங்கேறுதா? அடுத்தது என்னது?”

“ பாசத்தை, ஆபாசப்படுத்தறியா பாவி! உன்னை இப்பவே முடிச்சிர்றேன்!”

பாய்ந்து போய் அருவா மணையை கையில் எடுத்து பாய, துவாரகேஷ் குறுக்கே வந்து தடுத்தான். அதை பறித்தான்.

“என்னத்தே இது? எத்தனை வருஷமா நான் சித்ரவதை அனுபவிக்கறேன்? எங்கம்மா கேக்காத பேச்சா? விடுங்க அத்தே!”

“முடியலை மாப்ளே. பெத்த தாயையே…இவளை பைத்தியக்கார ஆஸ்பத்திரில விடுங்க. பச்சை ட்ரஸ் போட்டு, இவளை சங்கிலியால கட்டி போடணும். பண்ணின பாவத்துக்கு ஒவ்வொரு நாளும் இவ கதறணும்.!”

அப்பா எதுவும் பேசாமல் நொந்து போய் உட்கார, துளசி பெட்ரூமுக்கு போகாமல் சமையல் கட்டுக்கு போனாள்.

“ என்ன வச்சிருக்கே? பசிக்குது.!”

“உனக்கு நான் சமைக்கலை. நீயே சமைச்சு சாப்பிடு.”

“ இது என் வீடு. என் பொருட்கள். எனக்கே இல்லைன்னு சொல்றியா?”

“அவர் வருமானத்துல மூணு வேளை தின்னுட்டு, அவர் வீட்ல, அவர் வாங்கி தந்த துணிகளை உடுத்தி, அவர் பணத்துல ஊர் சுத்தி, அவர் வாங்கி தந்த நகைகளை வித்து, அந்த பணத்தை, அந்த நிர்வாண அயோக்யனுக்கு தாரை வாக்கற நீ, என்னை கேள்வி கேக்கறியா?”

துளசிக்கு ஃபோன் வர,

“யாரு? அந்த அவிசாரி காஞ்சனாவா?”

 துளசி அதை பொருட்படுத்தாமல்,யாரென கேட்க,

“உன்னை பைத்திய பட்டம் கட்டி, அசிங்கப்படுத்த ஏற்பாடு நடக்குது. மனநல மருத்துவர் டாக்டர் பல்லவிக்கும், உன் புருஷனுக்கும் தப்பான உறவு இருக்கு. இது சுஷ்மா ஏற்பாடு. ஜாக்ரதை.!”

“நீங்க யாரு?”

இணைப்பு துண்டானது. பல்லவி ஆவேசமாக எழுந்தாள். உடை மாற்றி புறப்பட தயாரானாள்.

“ எங்கே போறே நீ?”

அம்மா கேட்க,

“ நீ ஆசைப்பட்டியே..அந்த மன நல மருத்துவரை பார்க்க போறேன். சிகிச்சைக்காக போகலை. உன் மாப்ளை கூட கள்ள உறவு வச்சிருக்கற அந்த டாக்டர் பல்லவியை, நாறடிக்க போறேன். நீயும் வர்றியா?”

வேகமாக, ஆவேசமாக துளசி வெளியேற,

அப்பா, அம்மா இருவரும் அதிர்ந்து எழுந்தார்கள்.

“ என்ன மாப்ளை இது விபரீதம்?”

துவாரகாவின் உதட்டோரம் ஒரு விஷம புன்னகை அரும்பியது.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 18 | அடுத்தபகுதி – 20

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...