அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 16 | செல்லம் ஜெரினா

 அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 16 | செல்லம் ஜெரினா

அத்தியாயம்-16

மறுநாள்…..

ஏட்டையா வாசலில் நிற்பது அறியாமலே மருதவள்ளியை சத்தம்போட்டுக் கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா.

“சொல்றதைக் கேளுடி.மரியாதையா பெரியதனக்கார் வீட்டுக்குப் போயிடு. போதும் பண்ணுன கனக் காரியம். எவனுகளோ அடிச்சுக்கிட்டு நின்னா உனக்கென்னடி.?போனோமா வந்தோமான்னு இல்லாமா சமூக சேவை செய்யப் போயிட்டா.எவஞ்செத்தா உனக்கென்ன. ஆம்புலன்சைக் கூப்பிடுறேன் ஆமவடை சுடுறேன்னு செஞ்ச வேலைக்கு நேத்திக்கு போலிசு வந்து நிக்குது.

அக்கம்பக்கம் பேச மாட்டாளுங்களா. நானே உன்னை எப்படி கட்டிக் குடுத்து கரையேத்தப்போறேனோன்னு வவுத்துலே நெருப்பை கட்டிக் கிட்டுக் கிடக்கேன் நீயோ..”

“ஊட்லே யாரு “

பேச்சு தடைபட்டது

முடியை கொண்டை போட்டுக் கொண்டே வந்தவள்

“யாருங்க?”

என்று வெளியே வந்தவள் பம்மினாள்.

“என்னங்கய்யா…இன்னிக்கும் வந்திருக்கீக”

“உம் பொண்ணைக் கூப்பிடு விசாரிக்கனும்”

“அய்யா தினமும் இப்படி வந்து வாசல்லே நின்னா ஊரு உலகம் என்னய்யா சொல்லும்.”

“ஏம்மா அதுக்காக என் டூட்டியை பண்ண வேணாமா? “

“எதே உயிரைக் காப்பாத்த ஆம்புலன்சுக்கு போன் பண்ணது தப்பா. தினமும் இப்படி வர்ரது நல்லாயில்லேய்யா “

 “போம்மா போயி கொஞ்சம் தண்ணி கொண்டா. உம்பொண்ணுகிட்டே விசாரணையை முடிச்சுகிறேன்”

“தோ பாரு உன் பேரென்ன சொன்ன…ஆங்….வேதவள்ளி..”

“ஏட்டய்யா எம்பேரு மருதவள்ளி”

மருதவள்ளி சடைத்துக் கொண்டாள்.

“”சரிம்மா! நீ வேலை முடிஞ்சு வந்திட்டிருந்த சதாசிவம் தோட்டத்தை தாண்டறப்போ என்னவோ சத்தம் கேட்டுச்சு நீ போய்ப்பார்த்தப்போ எஸ் ஐ பலராமன் ரத்த வெள்ளத்துலே கிடந்தார். நீ யாரையும் காண்கலை உடனே ஆம்புலன்சுக்கு போன் பண்ணே.இதானே நடந்தது.”

குரலைத் தழைத்துக் கொண்டவர்

“அம்மிணி.  ஒரு கேடு கெட்டவனுக்கு நீ தந்த தண்டனை சரிதான் . ஆனா சட்டமும் நியாயம் கண்ணைக் கட்டிக்கிட்டு தான் நிக்கும். நீதி தேவதை கண்ணையே துணியாலே மறைச்சுருக்கோமே.  இப்போ இன்னொருத்தர் பெரிய அதிகாரி வருவாரு  . அவரு  மாத்தி மாத்திக் கேட்டாலும் நீ இதைத்தான் சொல்லனும். வேலை முடிஞ்சு வந்தப்போ ஒருஆளு ரத்த வெள்ளத்திலே கிடந்ததைப் பாத்தேன். பயமாருந்தது. முனகிட்டுக் கிடந்தாரு. ஆம்புலன்சுக்கு போன் செஞ்சேன். வேற எதுவும் பார்க்கலை. இதே மனப்பாடமா சொல்லனும். வர்ர அதிகாரி கொஞ்சம் ஏடாகூடமா  பேசுவாரு. நீ நாஞ்சொன்ன நாலே வார்த்தையத்தான் பேசனும் ..தடுமாறக்கூடாது.  புரிஞ்சுதா.”

மருதவள்ளி முகம் ப்ரகாசிக்க தெளிவுடன் சரி என்று தலையாட்டினாள்.

“அம்மா சூடா காபித்தண்ணீ வச்சு கொண்டா “

“ஏட்டையா! நான் செஞ்சது தப்புதான் அந்தாளும் போடற காக்கிச் சட்டைக்காவது மரியாதை தரணுமில்லே. வேலியே பயிரை மேஞ்ச கதை. போலிசே இப்பிடியிருந்தா ஆருகிட்ட பாதுகாப்பு கேக்கிறது. .”

“போகட்டும் போ! அவனாலேயும் பொம்பளைப்புள்ளை கையாலே குத்து பட்டேன்னு  வெளியே சொல்ல முடியாது. முடியவும் இல்லை  நீ சூதானமாயிரு. “

“ஆமா..அப்படியேயிருந்திட்டாலும்! .ரெண்டு நாளு இருந்துட்டு  போடின்னதுக்குதான் ஊருல  ஓரண்டைய இழுத்துட்டு வந்திருக்கா . எவன் எப்படிப் போனா நமக்கென்ன. இவ ஆம்புலன்ஸைக் கூப்பிட்டாளாம். காப்பாத்தினாளாம். இப்பப்பாரு. நம்மூட்டு வாசலுக்கு தெனமும் மோலிசு வருது.நேவையாயிது? “

அம்மா சலித்துக் கொண்டாள். அம்மாவுக்கு நடந்தது எதுவும் தெரியாது.

“மருதவள்ளி  அவசரம்னா கூப்பிட்டு விடுறேன். ஒருநடை வந்திட்டு போ. அந்தாளு நிலைமை கொஞ்சம் கவலையாத்தானிருக்கு. பார்ப்போம். நான் சொன்னதை நினைப்புலே வச்சுக்கோ.எப்பவுமே தடுமாறாம சொல்லனும். .”

ஏட்டைய்யாவிடமும் யார் தன்னைக் காயப்படுத்தியது என்று மயக்கம் தெளிந்த பின்பும் கூட வாயை விடவில்லை பலராமன். ஆம்புலன்ஸ் வந்து அவனை அள்ளிக் கொண்டுபோய் ஹாஸ்பிடலில் போட்டுவிட்டது. அவனுடைய சகலைக்குத் தெரிந்தவர்கள் இவனைப் பார்த்து விட்டு தகவல் சொல்ல மாமனார் வீடு வந்தது அலறிப் புடைத்துக் கொண்டு.

ஏதோ பலராமனுக்கு ஆகாதவன் செய்த வேலையென்று தான் எண்ணிக் கொண்டனர்.

ஏட்டைய்யாவுக்கு விஷயம் வர

அவராகவேதான் விசாரித்துக் கொண்டு வந்து ஒரு யூகத்தில் மருதவள்ளியைக் கார்னர் செய்தார். அவருக்கும் பலராமனைப் பற்றி தெரியுமாதலால் இந்தச் சிறு பெண்ணைக் கண்டதுமே ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்குப் போட்டார். அவனுக்கு இது தேவைதான் என்ற முடிவிலிருந்தவர் எப்பாடு பட்டாவது மருதவள்ளியைக் காப்பாற்றிவிடவும் எண்ணங் கொண்டார். அதனாலேயே படித்து படித்து சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் கிளம்பி விட மருதவள்ளியை பெரிய வீட்டுக்கு பத்திவிடுவதிலேயே முனைப்பாய் நின்று ஜெயித்தாள் அம்மா. மருதவள்ளியும் புறப்பட்டு விட்டாள்.

அப்பப்போ போய் செந்திலண்ணன் வீட்டை பெருக்கி மெழுகி வையும்மா என்று உத்திரவு போட்டுவிட்டே போனாள்.

ஏட்டையா சொன்னது போல் நிலாக்காவிடம் மட்டும் உண்மையை சொல்லிடலாமா என்று எண்ணிக் கொண்டே நடைபோட்டாள்.

                  ************

விடிந்தும் வெளியே வராமல் இருந்த மஞ்சுவை அழைக்க வந்தாள் பொன்னி. அறைக்கதவைத் தள்ள உள்ளே அனத்திக் கொண்டிருந்தாள் மஞ்சு.

முகமெல்லாம் சிவந்து போயிருந்தது.இந்த அறைக்கு குடியேறிய நாளாய் கணவனை பார்க்கவேயில்லை அவள்.மனம் நொந்து போயிருந்தது. தன் மீது அவனுக்கு அத்தனை கோபமா என்று தவித்தது.

தனிமையில் மனசு ஒவ்வொன்றாய் யோசித்தது. தன் பேச்சு தன்னுடைய நடத்தை என்று எண்ணிப் பார்க்கையில் தன்மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது.தினமும் வேலை முடிந்து வந்ததுமே அசதியில் படுத்து விடுவாள். பொன்னிதான் சாப்பாடு தருவாள்.

“அம்மா இது நான் தனியா சமைச்சதும்மா. சாப்பிடுங்கம்மா” என்று மல்லுகட்ட இவளும் முடியாமலே ஏற்றுக் கொள்வாள். பின்னே உடம்பே புண்ணாகிக் கிடக்கே! எங்கே சமைக்க? சாப்பிட?

பொன்னியின் கையில் காசை திணித்தாள்.பொன்னி இதை நிலாவிடம் சொல்ல

இதே பெரிய மாற்றம் தான் என்றெண்ணிக் கொண்டாள் நிலா.

பொன்னி ஓடிப்போய் ரங்கநாயகியிடம் விஷயத்தைச் சொன்னாள்.அவரும் வந்து பார்க்க மஞ்சுவின் முகமே ஜ்வர வேகத்தில் சிவந்து கிடந்தது. மருமகளின் உதவியோடு மஞ்சுவை வீட்டின் ஹால் சோபாவில் படுக்க வைத்து விட்டு மருத்துவரை அழைக்கச் சொன்னார்

ஆண்கள் எல்லோருமே கிளம்பிவிட்டிருக்க பெரியவர் மட்டுமே வீட்டில் விச்ராந்தியாய் ஈஸிசேரில் உடலைக் கிடத்தியபடி தினசரியை படித்துக் கொண்டிருந்தார்

மருத்துவர் சோதித்துக் கொண்டிருக்கையிலேயே மறந்துபோன கோப்பு ஒன்றைஎடுப்பதற்காக வீட்டிற்குள் வந்த அபய்  சக்ரவர்த்தி ஹாலில் இருந்த பரபரப்பு காரணமாய் என்னவோ ஏதோ வென்று நிலாவைக் கூப்பிட்டான்.

அவளும் மஞ்சுவுக்கு காய்ச்சல் டாக்டர் பார்த்துட்டிருக்கிறார் எனவும் இரண்டெட்டில் அங்கே வந்து விட்டான்.

வெயிலில் பிடுங்கிப்போட்ட கீரைத் தண்டாய் துவண்டு போய் நிறம் மங்கிக் கிடந்தவளைக் காணவும் மனசு அலமந்து போனது. அவளை அவன் விரும்பித்தான் மணந்து கொண்டான். சொந்தம் என்பதால் குடும்பவிழாக்களில் அழகாக வலம் வருபவளை சொந்தமென கட்டிப்போட தாத்தா கைகாட்ட பெரும் மகிழ்வுடனே பந்தமாக்கிக் கொண்டான். நாளாக நாளாக அவளின் குணக்கேடு அவன் கவனத்துக்கு வந்தாலும் எப்படியும் சின்னப்பெண் தானே திருந்தி விடுவாள் என்று நினைத்து அன்போடுதானிருந்தான். மனைவியென்பவளை அவளுடைய குற்றம் குறைகளுடனும் நிறைகுறையோடும் ஏற்றுக்கொள்ள அவன் காதல்மனம் அங்கிகரித்தது. அவ்வப்போது கண்டிப்பதையுமே மேற்கொண்டான்.

ஆனால்

மஞ்சுளா அவன் சொல்லுக்கு வசப்பட்டாளில்லை.  பெரிய குடும்பத்து மருமகள் என்ற லேபிள் பிடித்த அளவு  பெரியவளின் கட்டுப்பாட்டை விரும்பவில்லை அவள் மனது. பெரிய குடும்பம் என்ற பாரம்பரியம் அவள் மனதை தொடவில்லையோ என்னவோ? எப்போதுமே கர்வத்தோடு வலம் வருவாள். திமிரோடு  எதிர்ப்படுவோரை எடுத்தெறிந்து பேசும் குணமும் அகலாமல் இன்னுமே பரவியது வைரஸ் போல.

பொறுத்து பொறுத்து பொறுமை மீறிப்போய்த்தான் அவன் அவளுக்கு தண்டனை வழங்கியதும். அதிலும் செந்திலை தரக்குறைவாகப் பேசியதை தாங்கவே முடியவில்லை அவனால். கணவனின்  தாய்மாமா என்பதையும் மனதில் வைக்காமல் வயதில் பெரியவர் என்றும் பாராமல் பேசியதும் குழந்தையை ஏசியதும் அவனுக்கு கண்மண் தெரியாத கோபத்தைத் தர வார்த்தைகளை விளாசி விட்டான். ஆனாலும் அவளை கண்பார்வையில் தான் வைத்திருந்தான். நிலா மருதவள்ளி மூலம் செய்கிறவைகளையும் பார்த்தாலும் தடுக்கவிலை.

ஆயினும் இப்படி இழுத்து விட்டுக்கொள்வாள் என்று எதிர்பார்க்க வில்லைதான். மிஞ்சிப்போனால் ஒருவாரம் …இல்லை நாலைந்து நாட்கள்? அதற்கே இப்படியா  என்று எண்ணியவன் தனக்குள் நகைத்துக் கொண்டான்.

வைத்தியர் காயத்திற்கும் காய்ச்சலுக்குமாய் ஊசியை செலுத்தியவர் அபயைக் கண்டதுமே சீறினார்.

மருத்துவர் சொன்னதைக் கேட்டதும் அபய்க்கு தலையே சுழன்றது.

மரகதமும் ரங்கநாயகியும் கோபத்துடன் இவனை விழித்துப் பார்க்க நிலவழகி மகிழ்வாய் பார்த்தாள். கொஞ்சம் கேலியுமிருந்ததோ? அபய் சக்ரவர்த்தியோ  அவர்களின் பார்வை வீச்சைத் தாளமாட்டாமல் சங்கடத்துடன் நெளிந்தான்.

மருத்துவர் சொன்னதற்கும் கேட்டதற்கும் தலையை ஆட்டிக் கொண்டேயிருந்தான்.

அப்படியோர் அதிர்ச்சியைத் தூக்கி விசிறியிருந்தார் டாக்டர். குடும்பமே ஸ்தம்பித்து நின்றது.

அபயின் மீது குற்றச்சாட்டை வைத்தது.

(-சஞ்சாரம் தொடரும்… )

முந்தையபகுதி -15 | அடுத்தபகுதி – 17

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...