என்னை காணவில்லை – 22 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 22 | தேவிபாலா

அத்தியாயம் – 22

பாலுடன் கதவுக்கு வெளியே நிற்கும் ஆயாவுக்கு ஃபோன் அடிக்க, பாலை வைத்து விட்டு ஃபோனை எடுத்தாள். அங்கு கேட்கவில்லை. தள்ளி வந்து பேசினாள். எதிரே ஆராவமுதன்.

“ பாலை கிழவிக்கு குடுத்துட்டியா செண்பகம்?”

“குடுக்கப்போறேன்.!”

“அந்தம்மா குடிச்சு முடிச்சதும், நீ டம்ளரை வாங்கிட்டு உடனே எஸ்கேப் ஆயிடு. அங்கே நீ மாட்டினா, கதை கந்தலாகும்.!”

“நான் பாத்துக்கறேன்.!”

ஆயா கட் பண்ணி விட்டு அறை வாசலுக்கு வர, பால் டம்ளரை காணவில்லை. பதறி விட்டாள். கண்கள் அலை பாய,

“ஆயாம்மா. பால் இங்கே இருக்கு. உள்ளே வாங்க.!”

துவாரகேஷ் வெளியே வந்து அழைக்க, ஆயா முகத்தில் பீதி.

“நீங்க யாரு?”

“அவங்க மகன். இப்ப பாலை குடுங்க.!”

“இ..இல்லை..நீங்களே குடுங்க. நான் போறேன்.!”

“அத்தனை சீக்கிரம் நீ போக முடியாது. பேச வேண்டியது நிறைய இருக்கு. இப்ப எல்லாரும் வருவாங்க. அறிமுகப்படுத்தறேன். இரு.!”

அந்த கிழவி பாய்ச்சலாக கதவை திறக்க, உள்ளே நுழையும் நிர்வாகி மேல் மோதிக்கொள்ள, அவர்கள் பிடிக்க,

“இந்தம்மா இங்கே வேலை பாக்கறாங்களா?”

“இல்லை சார். இவங்களை நாங்க பார்த்ததே இல்லை. நீங்க கேட்ட சிசிடீவி ஃபுட்டேஜ் இதோ.!”

அந்த பென் ட்ரைவை அம்மா அறையில் இருந்த டீவியில் செருக, பால் கை மாறி, பொடி கலக்கும் காட்சி. அந்த லஞ்சம் வாங்கிய பெண்ணை அழைக்க,

“எனக்கும் இவங்க யாருன்னு தெரியாது. பணம் தந்து, பாலை கேட்டப்ப குடுத்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க.”

 உடனே அவள் வேலை நீக்கம் செய்யப்பட, ஆயா மிரண்டு நிற்க, போலீஸ் வந்தது. நேர்மையான பெண் அதிகாரி.

“இவ கிட்ட உண்மையை வாங்குங்க. அவ ஃபோனை பறி முதல் செஞ்சு, கடைசியா பேசின கால் எதுன்னு பார்த்து, அதை ட்ரேஸ் பண்ணுங்க. இந்த இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு குடுங்க. உண்மை வெளில வரணும். நிறைய முதியோர் இருக்கற இடம் இது.!”

“ஸாரி சார். இனிமே இந்த மாதிரி நேராம பாத்துக்கறோம். உங்கம்மாவுக்கு தனி கேர் டேக்கர் நியமிக்கறோம்.!”

அம்மாவின் உடல் பயத்தில் நடுங்கியது.

“ அம்மா! நீ பயப்படாதே. இனி எந்த ஆபத்தும் இல்லை.!”

“எனக்கு என்னை பற்றி பயமில்லைப்பா. உன் அம்மானு என்னை குறி வச்சிருக்காங்க. உன்னை சுற்றி எதிரிகள் சூழ்ந்தாச்சு துவாரகா.”

“எனக்கு எதுவும் ஆகாதும்மா. நீ தைரியமா இரு. நான் புறப்படறேன்.!”

இரவு பத்து மணியாகி விட்டது. சுஷ்மா புறப்பட்டு விட்டதாக தகவல் வர, துவாரகா வீட்டுக்கு புறப்பட்டான். அந்த ஆயா ஃபோன் பேசும் நேரம் ஜன்னலை திறந்ததால் சகலமும் தெரிந்தது. இல்லா விட்டால் அம்மாவின் உயிர்  போயிருக்கும். அந்த பால் டம்ளரை போலீஸ் எடுத்துப்போனது.

‘இது ஆராவமுதன் வேலை தான். அவன் தெருவுக்கு வந்தாலும், பலன் பெற இருந்த போட்டி கம்பெனி, ரகசியமாக அவனுக்கு பணம் தந்து உதவுகிறது. செல்வாக்குள்ள, இவர்களுக்கு இரண்டாவது இடத்தில் உள்ள கம்பெனி. அதனால் அவர்கள் இவனை வைத்து முதலிடத்துக்கு வர, முயற்சி நடக்கிறது. பிரச்னை பெரிதாகிறது.

எதற்கும் கலங்காத துவாரகாவுக்கு, அம்மா உயிருக்கு ஆபத்து என்ற போது பதட்டம் வந்தது.

‘ஏன்,என் குடும்பத்தை குறி வைக்க தொடங்கி விட்டார்கள். இனி ஒவ்வொரு நாளும் முள்ளின் மேல் நடந்தாக வேண்டும். முதுகிலும் கண் வேண்டும். சின்ன அசைவுகளை கூட கூர்ந்து கவனிக்க வேண்டும். மனசுக்குள் சில திட்டங்களை வகுத்துக்கொண்டு காரை ஓட்டினான். அதே நேரம், ஆராவமுதனுக்கு அந்த ஆயா கொலை முயற்சியில் கைதானது தெரிய வர, பதறி விட்டான்.

“ சார்! கிழவியை அரெஸ்ட் பண்ணியாச்சு. அந்த பால் டம்ளர் லேபுக்கு போயாச்சு. கை ரேகை எடுத்துடுவாங்க. சிசிடீவி ஃபுட்டேஜ்ல அவ பால்ல பொடி கலக்கற ஷாட் தெளிவா இருக்கு. அவ ஃபோனை பறி முதல் செஞ்சாச்சு. அதுல கடைசி கால் உங்க நம்பர். இப்பவே போலீஸ் தேடலை தொடங்கியிருக்கும்.”

ஆராவமுதன் உடனே தகவல்களை கூகுளுக்கு மாற்றி, சிம் கார்டை உடைத்தெறிய,

“சார் இதனால நீங்க தப்பிக்க முடியாது. டெக்னாலஜி வேற ரூட்ல வந்து உங்களை கவ்வி பிடிக்கும்.!”

“மிரட்டறியா? நீ என் ஆளா? இல்லை உளவாளியா?”

“சார் என்ன பிரச்னை வரும்னு உங்களை எச்சரிக்கறது என் கடமை இல்லையா?”

“மூடிட்டு போடா.!”

ஆராவமுதன் உடனே யாருக்கோ ஃபோன் செய்து, சகல தகவல்களையும் சொன்னான்.

“அந்த ஆயா கண்டிப்பா என் பக்கம் விரலை நீட்டுவா.!”

“அதிகாரிகள் பல பேர் பணத்துக்கு மயங்கற பார்ட்டிகள் தான். நான் பாத்துக்கறேன். நீ அரெஸ்ட் ஆனாலும், நான் உன்னை உடனே வெளில எடுத்துர்றேன். வேரை வெட்டணும். அதுக்கு உன் உதவி வேணும்.!”

துவாரகேஷ் வீடு திரும்பி விட்டான். அப்பா சாப்பிட, அம்மா பரிமாறி கொண்டிருந்தாள். துளசி ஒரு ஓரமாக நின்று ஃபோனில் பேசி கொண்டிருந்தாள். மாமியார் துவாரகா அருகில் வந்து சன்னக்குரலில்,

“காஞ்சனா கூட பேசறா. மந்திரவாதி பேர் அடி படுது. இவ திருந்தலை மாப்ளே. அடுத்த தப்புக்கு தயார் பண்றா. நீங்க சாப்பிடறீங்களா மாப்ளே?”

“வேண்டாம் அத்தே.!”

“பாலாவது தரட்டுமா?”

“பால்னாலே பயம்மா இருக்கு அத்தே!”

என தொடங்கி, நடந்த சகலமும் சொல்ல, பெரியவர்கள் ஆடிப்போனார்கள்.

“ எனக்கு மூணு எதிரிகள் அத்தே. முதல் எதிரி வீட்ல துளசி. அடுத்தது கபாலி. மூணாவதா ஆராவமுதன் க்ரூப். இந்த கம்பெனி எதிரிகளால இன்னிக்கு அம்மா கதை முடிஞ்சிருக்கும். தப்பிச்சாங்க.!”

“கொடைக்கானல்ல உள்ள நம்ம குழந்தைங்க மாப்ளே?”

“நிச்சயமா அவங்களையும் எதிரிகள் குறி வைப்பாங்க!”

துளசி படக்கென திரும்பினாள்.

“நீ காஞ்சனா கிட்ட பேசி, நிர்வாண பொறுக்கியை சந்திக்க நேரம் குறி. உனக்கு என் குழந்தைங்க இருந்தா என்ன? செத்தா என்ன?”

துளசி பலமாக அடி பட்டாள்.

“ ஆனா ஒண்ணை தெரிஞ்சுகோ. நீ ஆளை வச்சு என்னை கொல்லக்கூட நினைக்கலாம். வெளியுலகத்துக்கு நீதான் என் மனைவி. அதனால எதிரிகளால உனக்கும் ஆபத்து இருக்கு. எந்த நேரமும் உன்னையும் எமன் நெருங்குவான்.!”

“மாப்ளே! இவளை காப்பாத்த அம்மணக்காரன் தயாரா இருப்பான். ஆனா இவளை பார்த்தா, அவனுக்கு எந்த உணர்ச்சியும் வராது. இந்த ஜடத்தால காலம் முழுக்க உங்களுக்குத்தான் ஆயுள் தண்டனை.!”

அம்மாவின் ஒவ்வொரு சொல்லும் ஊசியாக உள்ளே இறங்கியது துளசிக்கு.

“ நான் அப்புறமா பேசறேன் காஞ்சனா.!”

துவாரகேஷூக்கு அந்த பெண் போலீஸ் அதிகாரி பிரபாவதி, ஃபோன் செய்தாள்.

“ சார்! இன்வஸ்டிகேஷன் நடக்குது. ஆயா உண்மையை சொல்லித்தான் ஆகணும். குற்றவாளியை நாங்க அரஸ்ட் பண்ணிர்றோம்.!”

“வேண்டாம். அவனும் அதைத்தான் எதிர் பாக்கறான். ஃப்ரீயா விடுங்க. உள்ளே போனா சுலபமா வெளில வந்துடுவான். அவனுக்கு பயம் வரணும். அதை நான் செய்யறேன். நாளைக்கு உங்களை பார்க்க நான் வர்றேன்.!”

துவாரகேஷ் தன்னறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான்.  அப்பா, அம்மா உள்ளே போக, துளசி தனியாக கூடத்தில். பயம்மாக இருந்து.

‘ எந்த நேரமும் உன்னையும் எமன் நெருங்குவான்.’

“பெட்ரூமுக்கு போனாலும் பயம். ஹாலில் தனியாக இருந்தாலும் பீதி. அப்பா, அம்மா என்னை உள்ளே சேர்க்க மாட்டார்கள். அத்தையை கொல்ல நினைத்தவர்கள் எனக்கு எப்படி, எப்போது குறி வைப்பார்கள்? அது வீட்டில் நடக்குமா? வெளியிலா?”

ஃபோன் அடிக்க, அதை எடுக்கவே பீதியாக இருந்தது. காஞ்சனா அழைப்பு. தைரியமாக எடுத்தாள்.

“நாளைக்கு மந்திரவாதி உன்னை பார்க்க வரச்சொல்லியிருக்கான்!”

“அவனால என் உயிருக்கு ஆபத்து வருமா?”

“இல்லைனு உத்தரவாதம் தந்துட்டான். தைரியமா வா. ஆனா உன் வாயை வச்சிட்டு துவாரகா கிட்ட பேசற மாதிரி பேசிடாதே. அப்புறமா உன்னை காப்பாத்த என்னால கூடமுடியாது.”

“நிறைய பேசணும் காஞ்சனா. என் உயிருக்கு ஆபத்து இருக்கு.!”

“நீதானே மத்தவங்களை கொல்ல தயாரா இருக்கே. உன்னை ஒருத்தரால கொல்ல முடியுமா? காலைல சீக்கிரமா வா.”

துவாரகா இருந்த அறையில் தடாலென யாரோ விழுந்ததை போல ஓசை கேட்க, மிரண்டு போய் கதவை தட்டினாள் துளசி.

‘அத்தையை குறி வைத்த எதிரி, இவரை கொல்ல வந்து விட்டானா?’

மறுபடியும் கதவை தட்ட, அது திறக்க, உள்ளே பார்த்தாள் துளசி. துவாரகா திறக்கவில்லை. அது தானாக திறந்து கொண்டது. துவாரகா போட்டிருந்த உடைகள் மொத்தமும் கட்டில் மேல் கிடந்தது. பாத்ரூமில் தண்ணீர் விழும் ஓசை. பயத்துடன் துளசி, அடி மேலடி வைத்து உள்ளே வந்தாள். யாருமே அறையில் இல்லை.

‘இந்த நேரத்துல இவர் ஏன் குளிக்கறார்?’

மூச்சை பிடித்து குளியலறையை துளசி நெருங்க, உள்ளே யாருமில்லை. அடுத்த நொடியில் அவள் கண்ட காட்சியில் மூச்சே நின்றது. திறந்த குழாயிலிருந்து கொட கொடவென சிகப்பாக ரத்தம் கொட்ட, மேலேயிருந்த ஷவரிலிருந்து ரத்தம் பூப்பூவாக சிதற, குளியலறை தரை முழுக்க சிகப்பு. துளசியால் நிற்க முடியாமல் கண்களை இருட்ட, அவள் மயங்கி கீழே விழப்போக, அரூபமாக மறைந்திருந்த துவாரகா, அவளை தாங்கி பிடித்தான். படுக்கையில் படுக்க வைத்தான்.

“ இது ரத்தமில்லை துளசி. அனலின்னு ஒரு ரசாயனம். தனி தந்துகி குழாய் வழியால அதை கனெக்ட் பண்ணிட்டேன்.”

குளியலறையை நன்றாக கழுவி, அந்த சுவடே இல்லாமல் செய்தான். அந்த கேப்பில்லரி ட்யூபை வெளியில் எடுத்தான். தடயங்களை அழித்த பிறகு, துளசிக்கு முகத்தில் தண்ணீர் தெளித்தான். பிறகு மாமா படுத்திருந்த அறைக்கதவை தட்டினான். அவர் பதறி திறக்க,

“துளசி மயக்கமா இருக்கா. வாங்களேன்.!”

“அவ நடிப்பா மாப்ளே. நம்பாதீங்க.!”

“அவர் கூப்பிடற மரியாதைக்கு வாடி!”

மூவரும் வந்து துளசிக்கு மயக்கம் தெளிவிக்க, துளசி மலங்க மலங்க விழித்த படி எழுந்தாள்.

“என்னடீ ஆச்சு? நீ மயக்கமாயிட்டேனு மாப்ளை பதறிப்போய், எங்களை எழுப்பினார். நடிக்கறியா?”

“இல்லைம்மா. பைப்பை திறந்தா ரத்தம் கொட்டுது. ஷவர்ல ரத்தம் ஊத்துது!”

“என்னடீ உளர்ற?”

“நான் உளறலை. நீயே வந்து பாரு.!”

இருவரும் வந்து திறக்க, தெளிவாக தண்ணீர் வந்தது. துளசி திறந்தாலும் தெளிந்த நீர் தான்.!”

“இல்லை. யாரோ விழுந்த சத்தம். கதவு தானா திறந்தது. இவர் இல்லை. உள்ளே வந்து பார்த்தா குழாய்ல ரத்தம்.!”

“மாப்ளே! நிச்சயமா இவளுக்கு மூளை கலங்கியிருக்கு. இதுக்கு மேலயும் நீங்க சும்மா இருந்தா, உங்களை இவ கொல்லுவா!”

“இல்லை..இல்லை..நான் பொய் சொல்லலை. கண்ணால பார்த்தேன். என்னை நம்புங்க!”

துளசி மடிந்து உட்கார்ந்து கதறி அழத்தொடங்கினாள்.

(-தொடரும்…)

முந்தையபகுதி – 21 | அடுத்தபகுதி – 23

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...