என்னை காணவில்லை – 23 | தேவிபாலா
அத்தியாயம் – 23
சுஷ்மா இரவு முழுக்க காரில் பயணித்து, காலை ஒன்பது மணிக்கு கொடைக்கானல் வந்து விட்டாள். பெரிய ஓட்டலில் அவளுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களது கம்பெனி அங்கே இருந்ததால், கம்பெனி அதிகாரிகள் அவளை வரவேற்று, மரியாதையுடன் வணங்கினார்கள். சேர்மனுக்கு துவாரகேஷ் வலது கை என்பதால், அவன் சுஷ்மாவை அனுப்பியிருந்ததால் கவனிப்பு நன்றாக இருந்தது. குளித்து, காலை உணவை முடித்தவள், குழந்தைகளின் பள்ளிக்கு ஃபோன் செய்து பேசினாள். உடனே புறப்பட்டாள்.
மறைந்திருந்த கதிர் பைக்கை எடுத்தான். ஆராவமுதன் ஆள் கதிர். காரை, பைக் பின் தொடர, சுஷ்மா பார்த்து விட்டாள்.
“டிரைவர் அண்ணே. இந்த ஜெல்லை நான் உங்க மேல பூசி விடறேன். ஒரு ஓரமா வண்டியை நிறுத்துங்க. காரணம் அப்புறமா!”
அவளுக்கும், டிரைவருக்கும் முழங்கைக்கு கீழே, முழங்காலுக்கு கீழே மட்டும் ஜெல் தடவாமல் உடம்பு முழுக்க தடவினாள். குணா கேவுக்கு போகும் மலைப்பாதையில் ஓரமாக வண்டியை நிறுத்தி, இதை செய்தாள். பின்னால் பைக்கில் வந்த கதிர், தள்ளி நிறுத்தினான். கறுப்பு ஷட்டர்கள் இருந்ததால் காருக்குள் தெரியவில்லை. பதினைந்து நிமிஷங்களாகியும் கார் நிற்க, கதிர் குழம்பினான். இப்போது ட்ரைவிங் பக்க கதவு திறக்க, கதிர் மறைந்து நின்று பார்க்க, மூச்சே நின்றது.
முழங்கைக்கு கீழேயிருந்த இரண்டு கைகள் மட்டும் ஸ்டியரிங்கை பிடித்திருக்க, மேலே கைகளே இல்லை. உடம்பு இல்லை. கழுத்து முகம் எதுவும் இல்லை. இரண்டு கைகள், கால்கள் மட்டும் தனியாக தொங்கி கொண்டிருந்தன. அந்தப்பக்கம் இருந்த பெண்ணுக்கும் அதே தான். அந்த கால்கள் வெளியே வந்து, கதவுக்கு கீழே கால்கள் மட்டும் தொங்கின. கண்களை கசக்கி கதிர் பார்க்க அது தான் நிஜம்.
‘ஒடம்பு எங்கே போச்சு?’
கதிருக்கு மயக்கமே வர, கார்க்கதவு சாத்தப்பட்டு கார் ஸ்டார்ட் ஆக, ஆளே இல்லாமல் இரண்டு கைகள் மட்டும் காரை ஓட்டிக்கொண்டு போனது. கதிருக்கு பயத்தில் வியர்த்து, நாக்கு ஒட்டி, விழிகள் தெறித்து விடும் நிலைக்கு வந்து விட்டது. இறங்கி நின்றவன், உட்கார்ந்து விட்டான் ரோட்டில். அடுத்த சில நிமிஷங்களில் அதே கார் வேகமாக திரும்பி வந்தது. கைகள் மட்டும் காரை ஓட்டி வந்தன. சீட் பெல்ட் குறுக்காக அந்தரத்தில் தவழ்ந்தது. கதிருக்கு மூச்சை அடைத்தது. கார் திரும்பி போக, கதிர் மிரண்டு பைக்கை எடுத்தான். வேகமாக திரும்பி, எப்படியோ தடுமாறி அரை மணியில் தன் இருப்பிடத்தை அடைந்தான். வியர்வையில் தெப்பமாக நனைந்து விட்டான். உடனே ஃபோன் செய்தான். செல்வம் எடுத்தான்.
“கதிர்! அண்ணன் சக்கையா மாட்டியிருக்கார். முன் ஜாமீன் எடுக்க போயிருக்கார். கொலை முயற்சி வழக்கு.!”
“நான் அவர் கிட்ட உடனே பேசணும்!”
“சுஷ்மாவை போட்டுட்டியா?”
“சரியா பேசு. அவ பொம்பளை. வேற அர்த்தம் வருதுடா நாயே. அண்ணனுக்கு கான்ஃபரன்ஸ் கால் போடு.!”
அந்த நேரம், வக்கீலுடன் ஆராவமுதன் காரில் பதட்டமாக பயணிக்க,
“சார்! முன் ஜாமீன் கிடைச்சிடுமா?”
“ஒரு நாளைக்கு பத்து பேருக்கு நான் வாங்கறேன். பயப்படாம வாங்க!”
பழமுதிர் சோலையில் வெங்காயம், தக்காளி வாங்குவதை போல வக்கீல் அசால்ட்டாக பேச, அழைப்பு வந்தது. கதிர் கான்ஃபரன்சில் இருக்க,
“என்னடா? என்ன நடக்குது அங்கே?”
“என்னை ஆளை விடுங்கண்ணே.!”
எனத்தொடங்கி சகலமும் சொன்ன கதிர்,
“அண்ணே! காருக்குள்ள ஏதோ மந்திர சக்தி இருக்கு. கை, கால்கள் மட்டும் அந்தரத்துல தொங்குது. பயத்துல முழி வெளில வந்து பர்முடாஸ் நனைஞ்சு போச்சு அண்ணே. எனக்கு உயிர் முக்கியம். உன் பணம் வேண்டாம். ஃபோனை வை.!”
இணைப்பு துண்டானது. ஆராவமுதன் பதட்டமானான்.
‘ இங்கே காட்டின கார் ஜாலத்தை கொடைல காட்டறான். ஆனா இவனுக்கு பதிலா சுஷ்மா. இதை கண்டு பிடிச்சே ஆகணும். ‘
திரும்பவும் ஃபோன் வர, லைனில் துவாரகேஷ்.
“ என்ன ஆரு..உங்காள் கதிர், நடுங்கி ஓட்டம் புடிச்சிட்டானா? தலையில்லாத முண்டத்தை அவனுக்கு கொடைக்கானல்ல காட்டட்டுமா? உனக்கு முன் ஜாமீன் வேண்டாம். ஏன்னா, உன்னை கைது செய்ய வேண்டாம்னு நான் சொல்லிட்டேன். நீ வெளில வந்தாத்தானே இந்த மாதிரி தரமான, பல சம்பவங்களை பார்த்து ரசிக்க, ஸாரி..வியர்க்க முடியும்? வாடீ..தினமும் உனக்கு தினுசு, தினுசா படம் காட்டறேன். வச்சிடவா?”
ஆராவமுதனுக்கு பதட்டம் இன்னும் அதிகமானது. புத்தியால விளையாட்டு காட்டறான். என்ன தொழில் நுட்பம்னு புரியலை. அது தெரியாம இவனை எதிர்க்க முடியாது.
சுஷ்மா பள்ளிக்கூடத்துக்கு வந்து விட்டாள்.
தன் ஐடி காட்டி அனுமதி பெற்று உள்ளே வர, குழந்தைகளுக்கான ஹாஸ்டல் உள்ளேயே இருந்தது. அந்த நாட்கள் அவர்களுக்கு லீவு. சுஷ்மாவை கண்டதும் இரண்டு குழந்தைகளும் தன் அம்மாவை பார்த்ததை போல ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். அவர்களை நலம் விசாரித்த சுஷ்மா, அவர்கள் தங்கும் அறை, இன்ன பிற வசதிகளை பார்வையிட்டாள். அங்கே அவர்களை கவனிக்க அங்குள்ள கேர் டேக்கர் என ஒரு பெண்ணை நியமித்திருந்தான் துவாரகா. வீட்டில் இருப்பதை விட சந்தோஷமாக குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் நன்றாக படிப்பதாக தகவல் வந்தது. நல்ல உணவு, தங்கும் வசதி என எல்லாமே சரியாக இருந்தது. அவர்கள் சுஷ்மாவை கொஞ்சினார்கள். அப்பாவை நிறைய மிஸ் செய்வதாக அழுதார்கள். பாட்டியை நிறைய விசாரித்தார்கள். அம்மா வழி தாத்தா பாட்டியை கேட்டார்கள். ஆனால் அம்மா பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. சுஷ்மா அனுமதி பெற்று, அவர்களை தன்னுடன் வெளியே அழைத்து வந்தாள். காரில் கொடைக்கானலில் பல பகுதிகளை சுற்றி பார்த்தார்கள். குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கி தந்தாள். தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்றாள். வீடியோ காலில் அப்பாவுடன் பேச வேண்டும் என்றார்கள். துவாரகேஷ் அந்த நேரம் வெளியே இருந்தான். வீட்டுக்கு வந்ததும் பேசுவதாக சொன்னான். சுஷ்மாவிடம்,
“சாயங்காலம் வரைக்கும் குழந்தைகளை உன்னோட வச்சிட்டு, அப்புறமா ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்ரு. அங்கே தான் அவங்களுக்கு பதுகாப்பு அதிகம். நீ ஓட்டலுக்கு திரும்பிடு. நாளைக்கு மறுபடியும் அவங்க கூட இருந்துட்டு, அவங்களை ஹாஸ்டல்ல விட்டுட்டு ராத்திரி சென்னைக்கு புறப்படு.”
சுஷ்மா சம்மதித்தாள். இங்கே துவாரகேஷ் சேர்மன் எதிரே இருந்தான். சகலமும் சொல்லி முடித்தான்.
“கடவுளே! நீங்க அங்கே இல்லைன்னா, உங்கம்மாவை கொன்னிருப்பாங்க. ஆதாரங்கள் வலுவா இருக்கே துவாரகா. அந்த ஆராவமுதனை புடிச்சு உள்ளே போடுங்க. !”
“அவனும் முன் ஜாமீனுக்கு அலையறான். குடுக்க விடாம தடுக்க முடியும். ஆனா நம்ம போட்டி கம்பெனி ராஜேந்திரன் கூட சேர்ந்து இவன் அடுத்த கட்டத்துக்கு போறான். அவனையும் வேரோட புடுங்கணும். அதுக்கு இவன் வெளில இருக்கணும் சார்.!”
“கம்பெனியோட பாதுகாப்பு, நன்மைக்காக நீங்க ரொம்ப பாடு படறீங்க துவாரகா. உங்க குடும்பத்தையே குறி வச்சு காயை நகர்த்தறாங்க. எனக்கு கவலையா இருக்கு. உங்களுக்கு ஒரு ஆபத்துனா, முதல்ல பாதிப்பு எனக்குத்தான்.!”
“நான் கவனமா இருக்கேன் சார். இந்த ஆடு புலி ஆட்டம் இப்பத்தான் சூடு புடிச்சிருக்கு. பாத்துடலாம்.!”
துவாரகேஷ் புறப்பட்டான். அதே நேரம் முன் ஜாமீன் வாங்கி கொண்டு ஆராவமுதன் நேராக ராஜேந்திரனை பார்க்க வந்தான்.
“ சார்! துவாரகேஷ் ஓப்பனா சவால் விடறான். அவனை கொல்லணும்!”
“இரய்யா. இப்படி பகிரங்கமா மாட்டிட்டியே. சரியா எதையும் செய்ய மாட்டியா? உன்னை ஜெயிலுக்கு அனுப்பாம அவன் ஏன் தடுக்கறான் தெரியுமா? ஒட்டு மொத்தமா என்னை முடக்கினா, அவங்க கம்பெனியை எதிர்க்க ஆளே இல்லை. இங்கேயுள்ள பிசினசும் அந்த பக்கம் திரும்பிடும். அவன் மூளைக்காரன். அவனை முடக்க, அவனோட சம்சாரத்தை அடுத்த படியா கையில எடுக்கணும். அவளோட சந்தேகம்ங்கற சாவியை போட்டுத்தான் துவாரகேஷோட பூட்டை திறக்கணும்.”
“எப்படி சார்? அவ அந்த மந்திரவாதி கபாலி பின்னால அலையறா.!”
“கபாலியை வெளில எடுத்ததே நம்ம லாயர் தான்.!”
“என்ன சார் சொல்றீங்க?”
“அந்த கபாலிக்கு கொஞ்சம் மாந்த்ரீகம், சூன்ய சங்கதிகள், நிறைய ப்ளாக் மேஜிக் தெரியும். ஆனா துவாரகேஷ் விஞ்ஞானத்துக்கு முன்னால அது எடுபடலை. அதனால அடுத்தது நம்ம டார்கெட் வேற.”
“காஞ்சனானு ஒருத்தி. எதுக்கும் துணிஞ்சவ. அவ வழியால கபாலியை பார்க்க போறேன்.!”
“நான் சொல்ற மாதிரி செய்!”
சில ஆலோசனைகளை வேகமாக ராஜேந்திரன் சொல்ல, ஆரா கேட்டு கொண்டான்.
“ என் பேர் எந்த காரணத்தை கொண்டும் வெளில வரக்கூடாது. கபாலியை உடனே நீயே போய் பாரு. நான் சொன்னதை சொல்லு.”
“கொடைல இவன் காரை வச்சு, நம்ம கதிரை பயப்படுத்தி, கதிர் ஓடிட்டான் சார். அந்த குழந்தைகளை குறி வச்சேன் நான்.!”
“இப்ப குழந்தைகளை விட்ரலாம். ஏன்னா பாட்டியை போட நினைச்சு பிரச்னை உன்னை அரெஸ்ட் பண்ற அளவுக்கு வந்தாச்சு. ஆறப்போடணும். கபாலி வழியால வரலாம். நீ புறப்படு.!”
“ சார்! உங்க கிட்ட மின்னணு எக்ஸ்பர்ட் யாருமே இல்லையா?
“நான் அந்த மாதிரி ஒரு நபரை தேடறேன். லட்சக்கணக்கா சம்பளம் தரத்தயார். துவாரகேஷ் என்ன செஞ்சு கம்பெனியை மீட்டான்னு தெரியணும். சேர்மன் ரூம், அவங்க ஸ்ட்ராங் ரூம் ரெண்டையும் அலசணும். அதுக்கான வழியை யோசிக்கறேன். கிடைக்கும். நீயும் உருப்படியா ஏதாவது செய்.!”
ஆரா தலையை சொறிய, ஒரு கட்டு பணத்தை எடுத்து போட்டான் ராஜேந்திரன்.
“ வாங்கற பணத்துக்கு ஒழுங்கா வேலை செய். போ.!
ஆராவமுதன் வெளியே வந்து ஆட்டோவை அழைத்து ஏறினான். தன் ஆளுக்கு ஃபோன் செய்து,
“நாளைக்கு காலைல காஞ்சனாவை கூட்டிட்டு வா. கபாலியை நானும் பாக்கணும். உடனே செய்!”
“சரி தலைவா. சொல்லியாச்சு.!”
கம்பீரமாக அயல் நாட்டு காரில், பெரிய பதவியில் ராஜா போல பவனி வந்ததை இழந்து, இப்போது ஆட்டோவில் பயணிப்பது அவமானமாக இருந்தது. சகலமும் இழந்து ஒரு பிச்சைக்காரனை போல ராஜேந்திரனிடம் கை கட்டி நிற்பது அவமானமாக இருந்தது. இத்தனைக்கும் காரணம் துவாரகேஷ். ஒரே ராத்திரியில் என் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டான். அவனை ஒழித்தால் தான் இழந்த சாம்ராஜ்யத்தை திரும்ப பெற முடியும். அதற்கு என்ன வழி?
கொலை வெறியில் இருந்தான் ஆராவமுதன்.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 22 | அடுத்தபகுதி – 24