என்னை காணவில்லை – 24 | தேவிபாலா
அத்தியாயம் – 24
எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் துளசி படுத்து கிடந்தாள். குழாயில், ஷவரில் ரத்தம் பார்த்து மயங்கிய பிறகு, அதை யாரும் நம்பாமல், உறுதியாக அவளுக்கு மூளை கலங்கி விட்டது என விமர்சிக்க, துளசி நொறுங்கி போயிருந்தாள். நிச்சயமாக இந்த வீட்டுக்குள் துவாரகேஷ் அறையில் சூன்யம் இருக்கு. நடந்த அத்தனை சம்பவங்களும் நிஜம். பல்லவி அறையில் நடந்தது. கபாலியை தாக்கிய உருட்டுக்கட்டை. இப்போது குழாயில் ரத்தம். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அம்மா அவளை சாப்பிடுகிறாயா என கேட்கவில்லை. இரவு எட்டு மணிக்கு துவாரகேஷ் வந்தான். அவளை கண்டு கொள்ளவில்லை. மாமியார் அவனை சாப்பிட சொன்னாள்.
“பூரி பண்ணட்டுமா மாப்ளே? உங்களுக்கு பிடிக்குமே!”
“அத்தே! எதிலும் இனிமே என் சாய்ஸ் இல்லை. பசிக்கு சாப்பிடணும். !”
கணவரை, துவாரகேஷை உட்கார வைத்து டிபன் தந்தாள் அந்தம்மா. துளசியை கேட்கவில்லை.
“ சுஷ்மா கொடைக்கானல் போய் பசங்களை பார்த்திருக்கா. உங்க ரெண்டு பேரை, எங்கம்மாவை, ரெண்டு அத்தைகளை பசங்க ரொம்ப கேட்டாங்களாம்.!”
துளசி விசுக்கென தலை தூக்குவதை ஓரக்கண்ணால் பார்த்தான் துவாரகா.
‘ என்னை மட்டும் கேக்கலியா?’ என்ற ஏக்கம் கண்களில் இருந்தது.
“பூரியும், கெழங்கும் ரொம்ப ருசியா இருக்கு அத்தே.!”
“நல்லா சாப்பிடுங்க மாப்ளே. நீங்க தெம்பா இருந்தாத்தான் நாங்க நிம்மதியா இருக்க முடியும்.!”
அவன் சாப்பிட்டு கை கழுவிய பிறகு, சுஷ்மாவுக்கு வீடியோ கால் போட்டான். அது க்ரூப் கால். ஆசிரம அம்மாவும், அதில் உண்டு. இணைப்பில் குழந்தைகளும், அம்மாவும் வர, சுஷ்மாவும் இருந்தாள். இங்கே அத்தை, மாமா இணைய, குழந்தைகள் குதூகலமாக பேசியதை ஸ்பீக்கரில் போட்டான்.
“ நீ எப்ப வர்றே டாடி? வரும் போது தாத்தா, ரெண்டு பாட்டிகள் எல்லாரையும் கூட்டிட்டு வா. சுஷ்மா ஆன்ட்டியும் கூடவே வரட்டும். அவங்களை விடவே எங்களுக்கு மனசில்லை டாடி.!”
“வர்றேண்டா தங்கம். அப்பாவுக்கு நிறைய வேலைகள் இங்கே இருக்கு. உங்களுக்கு என்ன தேவைன்னாலும் சேவியர் அங்கிளை கேளுங்க. சரியா? வேற ஏதாவது பேசணுமா?”
‘தன்னை குழந்தைகள் கேட்பார்கள்’ என துளசி ஒரு நப்பாசையுடன் தலை தூக்க,
“ பேச எதுவும் இல்லை டாடி. குட் நைட்!”
வைத்து விட்டார்கள்.
“ குழந்தைங்க இங்கே நிம்மதி இல்லாம இருந்தாங்க. அங்கே சந்தோஷமா இருக்காங்க. ஆனா அவங்களை பிரிஞ்சு உங்களுக்குத்தான் கஷ்டம்!”
துளசி தாங்க முடியாமல் விசுக்கென எழுந்தாள்.
“ எனக்கந்த கஷ்டம் இல்லையா? அம்மா கிட்ட பேசறீங்களானு யாராவது ஒருத்தர் அவங்களை கேட்டீங்களா?”
“யாரு அம்மா?”
துளசியின் அப்பா கேட்க,
“பத்து மாசம் சுமந்துட்டா, எல்லாரும் அம்மா ஆயிட முடியுமா? அந்த உறவை தந்த புருஷனை, படுத்தி வச்ச பாடு கொஞ்சமா? இங்கே இருந்த வரைக்கும் உன் பேய்த்தனத்தை பார்த்து, பயத்துலேயே குழந்தைங்க வாழ்ந்தாங்க. அதனால தான் மாப்ளை அவங்களை கொடைக்கானலுக்கு அனுப்பி வச்சார். ஏன்? நீ அதை தடுத்திருக்கலாமே! என் குழந்தைகளை என்னை விட்டு பிரிக்காதீங்கனு சொன்னா, அவர் கேக்க மாட்டாரா? அவரை பெத்த தாயை, உன்னை பெத்த எங்களை, கட்டின புருஷனை, நீ பெத்த குழந்தைகளை இப்படி யாரையும் நீ நிம்மதியா வாழ விடலை. ஒரு நாள் கூட எங்களையெல்லாம் தூங்க விடலை. அப்புறமா உன்னை பற்றி எப்படி உன் பசங்க கேப்பாங்க? அவங்களை பெறாத அந்த சுஷ்மா, காட்டற பாசத்துல, நூறுல ஒரு பங்கை கூட பசங்க கிட்ட நீ காட்டலியே?”
“சுஷ்மா இவர் கூட படுத்தவ. அதனால பசங்க கிட்ட பாசம் வச்ச மாதிரி நடிக்கறா.!”
“அத்தே விடுங்க. அம்மாங்கறவ புனிதமானவ. அசிங்கம் புடிச்ச யாரும் அம்மாவா இருக்க முடியாது. குழந்தைகளே ஒதுக்கின பிறகு, நிஜமான தாயா இருந்தா, உயிரை விட்டிருப்பா. விடுங்க அத்தே.!”
“காலை முதலே நான் சாப்பிடலை. யாராவது கேட்டீங்களா?”
“கத்தாதேடி. எங்களை பொறுத்த வரைக்கும் நீ செத்தாச்சு. பசங்க உன்னை மறந்தாச்சு. உன் மாமியார், நாத்தனார்கள் உன்னை வெறுத்தாச்சு. இன்னமும் உன்னை முழுசா கை விடாதவர் மாப்ளை ஒருத்தர் தான். அதுக்காக அவரை கேள்வி கேட்காதவங்க இல்லை. அவர் என்னிக்கு உன் கழுத்துல உள்ள தாலியை பறிக்கறாரோ, அன்னிக்கு உன் கடைசி நாள். எழுதி வச்சுக்கோடி.!”
“அத்தே! ஒருத்தரை பட்டினி போட்ட பாவம் உங்களுக்கு வேண்டாம். ஏதாவது சாப்பிட குடுங்க. சாப்ட்டு முடிச்சிட்டு, தெம்பா எங்கிட்ட சண்டை போடட்டும்.”
“நான் குடிக்க தண்ணி குடுத்தாக்கூட இவ ரத்தம்னு கத்துவா மாப்ளே. நீங்க சொல்றதுக்காக தர்றேன்!”
பேருக்கு சாப்பிட்டு துளசி படுக்க, உள்ளே அப்பா அறையில் துவாரகேஷ்.
“ மாப்ளே! உங்கம்மாவை கொல்ல நடந்த முயற்சிக்கு பிறகு எங்க பயம் ரொம்ப அதிகமாகி இருக்கு.!”
“நீங்க ரெண்டு பேரும் கவனமா இருங்க.”
“ என்ன மாப்ளே..பசங்க கேக்கலைன்னு திடீர்னு கேள்வி வருது? அம்மாங்கற ஞாபகம் அவளுக்கு இருக்கா?”
“பயம், பாசத்தை கொண்டு வருது. தன்னை உணர, இது அவ மனசுக்குள்ளே விழுந்த சின்னப்புள்ளி. இது பெரிசாகும் மாமா.!”
“குழாய்ல ரத்தம்..பல்லவி ஆஸ்பத்திரில நடந்தது, கபாலியை தாக்கினதுன்னு பேசறாளே. நாங்க எந்த சூன்யத்தையும் உணரலியே மாப்ளே? மூளை கலங்குதா?”
“ இல்லை மாமா. துளசியை விட திடமான பெண்ணை யாரும் பார்க்க முடியாது. அவளுக்கு மூளையெல்லாம் கலங்கலை. அவளோட ஒடம்புல இருக்கற சில ஹார்மோன்கள், செய்யற வேலை. சதா பாலுணர்ச்சியோட நினைப்பு தான் சந்தேகமா வெடிக்குது.!”
“நீங்க பேசறது விஞ்ஞானம் மாப்ளே. ஆனா நீங்க அழகா, எல்லா தகுதிகளோடயும் இருக்கீங்க. சுஷ்மா அழகு. பல்லவி லட்சணமா இருக்கா. நான், உங்கம்மா எல்லாரும், உங்களை சுற்றி நெருக்கமா இருக்கற எல்லாரும் களையா இருக்கோம். இவ மட்டும் அவலட்சணமா இருக்கா. இவளை நீங்க கல்யாணம் செஞ்சு கிட்டது தப்பு. தன்னை விட அழகான ஆம்பளையை ஒரு பெண்ணும், தன்னை விட அதிகமா சம்பாதிக்கற பெண்ணை ஒரு ஆணும், கல்யாணம் செஞ்சுகவே கூடாது. அழகு சந்தேகப்பட வைக்கும். பெண்ணோட பண தகுதி, ஆண்களை பணம் சம்பாதிச்சு, என் மனைவியை விட நான் உயரணும்னு, தப்பான பாதைல போக வைக்கும். இது தாம்பத்யத்தை உடைக்கும். மத்தவங்க பேசறதை புரிஞ்சுக முடியாம துளசி, ரொம்ப தூரம் போயிட்டா. விட்ருங்க மாப்ளே!”
“அந்த நிர்வாண சாமியார், உங்க ரூம்ல நடு ராத்திரில சூன்யம் வச்சிட்டு போயிருப்பானா?”
துவாரகேஷ் சிரித்தபடி எழுந்தான்.
“போய்ப்படுங்க மாமா. குட்நைட்.!”
மறு நாள் காலை காஞ்சனாவை அந்த ஆள் ஆராவமுதனிடம் அழைத்து வந்தான்.
“ நீங்க யாரு? இந்த ஆள் என்னை மிரட்டி இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்தான்?”
ஆரா, காஞ்சனாவை தன் கண்களால் முழுக்க அளக்க,
“ எதுக்கு இந்த மாதிரி என்னை பாக்கற? இது தப்பு.!”
ஆரா சிரித்தான்.
“ நீ ஒண்ணும் பத்தினி இல்லை..பஜாரினு எனக்கு தெரியும். நிர்வாண மந்திரவாதியோட அந்தரங்க ‘காரிய’ தரசின்னு எனக்கு தெரியும்.!”
“என்னா, பொடி வச்சு பேசறே?”
“பொடியெல்லாம் இல்லை. நேரா விஷயத்துக்கு வர்றேன். துவாரகேஷ் காரணமா எல்லாம் இழந்து வீதிக்கு வந்தவன் நான். இன்னும் மூணு பேர் உண்டு. அடுத்தபடியா கபாலி அவங்க வீட்டுக்கே நடுராத்திரி போய், உருட்டு கட்டைல அடி வாங்கி, போலீஸ் வந்து உள்ளே புடிச்சு போட்டு, என்னால வெளில வந்தவன். மூணாவதா எப்பவும் துவாரகேஷ் காரணமா பிரச்னைகளை அனுபவிக்கற அவன் மனைவி துளசி.!”
“இதுல ஒரு திருத்தம்!”
“என்ன திருத்தம்?”
“துளசியோட சந்தேக புத்தி உச்சிக்கு போய்த்தான் பிரச்சனை. அவளை துவாரகேஷ் டார்ச்சர் பண்ணலை. அவ தான் சித்ரவதை பண்றா புருஷனை!”
“உனக்கு துவாரகேஷ் மேல கண் இருக்கா?”
“துவாரகேஷை பிடிக்காத பொம்பளை யாரு? அ..ஆங்..அழகான ஆம்பளையை பார்த்தா எவளுக்குத்தான் ஆசை வராது? கபாலி கூட வெள்ளையா, குண்டா, செழிப்பா இருப்பான். உனக்கென்ன வயசு? நீ கூட நல்லாத்தான் இருக்கே?”
ஆரா மிரண்டான்.
‘ இப்படி ஒருத்தியா? விட்டா என்னை உள்ளே இழுத்துட்டு போய்…யம்மாடி..நான் செத்தேன்’
“இதப்பாரு! உன் காம கண்களை பார்க்க உன்னை நான் கூப்பிடலை. அந்த துவாரகேஷை அழிக்கணும். அதுக்கு அவனோட எதிரிகள் ஒண்ணு சேரணும். திட்டமிடணும். அவன் சாகணும். அப்பத்தான் நாங்க எல்லாரும் வாழ முடியும்.!”
“சரி, என்னை எதுக்கு கூட்டிட்டு வந்தே?”
“கபாலி கிட்ட என்னை நீ கூட்டிட்டு போகணும், இப்பவே.!”
“அப்படியெல்லாம் உடனே நடக்காது. உன்னை சந்திக்க கபாலி சம்மதிக்கணும். நான் பேசறேன். கபாலி ஜெயில்லேருந்து வெளில வந்த காரணமா, கோபத்துல இருக்கான். துளசியை சந்திக்கணும்னு சொல்றான். தன் வீட்ல சூன்யம் இருக்கு..அதை கண்டு பிடிக்கத்தான் நடு ராத்திரில துளசி, கபாலியை வரவழைச்சா. துவாரகேஷ் அப்ப வீட்ல இல்லை. ஆனா பலமா தாக்கப்பட்டு, போலீஸ்ல மாட்டினான். நிர்வாண கபாலியை, நடுராத்திரி போலீஸ் கைது பண்ணி கூட்டிட்டு போனதை தெருவே பார்த்தது. அந்த நேரம் வீட்ல ஏதோ ஒரு தீய சக்தி இருந்திருக்கு. கபாலி, துளசியை கொல்ற ஆத்திரத்துல இருந்தான். நான் சொல்லி புரிய வச்சிருக்கேன். அதனால உடனடியா துளசியை சந்திக்க, கபாலி விரும்பறான்.!”
“குட். நீ முதல்ல துளசியை கூட்டிட்டு போ. என்னை பற்றி, துவாரகேஷ் காரணமா நானும் பாதிக்க பட்டிருக்கேன்னு சொல்லு. மூணு பேருமா சேர்ந்து துவாரகேஷூக்கு சமாதி கட்டிடலாம். சந்திப்புக்கு உடனே ஏற்பாடு செய் காஞ்சனா.!”
“சரி! வியாபாரத்தை முதல்ல பேசிடலாம். எனக்கு எவ்ளோ பணம் தருவே? இப்ப என்ன முன் பணம்?”
ஆராவமுதன் அவளை நெருங்கி தோளில் கை போட முயல, காஞ்சனா தட்டி விட்டாள்.
“ நான் தப்பான பொம்பளை தான். ஆனா முதல்ல காசு முக்கியம். அப்படி காசே இல்லாம யாராவது ஆம்பளையை நான் தேர்ந்தெடுக்கணும்னா, அது துவாரகேஷை மட்டும் தான்.!”
ஆராவுக்கு ஆத்திரம் அதிகமானது. தன் எதிரி துவாரகேஷ் எல்லா விதத்திலும் உயர்ந்து நிற்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் மேலிருந்த கொலை வெறி இன்னும் கூடியது.
(-தொடரும்..)
முந்தையபகுதி – 23 | அடுத்தபகுதி – 25