என்னை காணவில்லை – 25 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 25 | தேவிபாலா

அத்தியாயம் – 25

காலை துளசி தாமதமாக எழுந்தாள். நள்ளிரவு தாண்டியும் உறங்கவில்லை. பல கவலைகள் அவளை ஆட்டி படைத்தது. என்றைக்கும் வராத பயம், பாதுகாப்பின்மை, தான் தனியாக நிற்பது போன்ற ஒரு உணர்வு, ஒரு அனாதைத்தனத்தை உணர்ந்தாள் துளசி. அதனால் கலக்கம் அதிகரித்தது. குளித்து முடித்து வர,

“ரொம்ப நேரமா உன் ஃபோன் அடிக்குது!”

துளசி ஓடி வந்து எடுத்தாள். காஞ்சனா தான். அந்த பேரை பார்த்து துவாரகேஷிடம் அம்மா சொல்லி,

“ அவ திரும்பவும் கூப்பிடறா. இவ திருந்தவே மாட்டாளா மாப்ளே?”

“விடுங்க அத்தே. அவ எடுத்து பேசினா, என்ன பேசறான்னு கவனிங்க. ஏன்னா என் எதிரிகளால துளசிக்கும் ஆபத்து இருக்கு!”

இதோ துளசி, ஃபோனை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு வர, அம்மா ரகசியமாக பின் தொடர்ந்தாள்.

“ என்ன வேணும் காஞ்சனா?”

“ஏன் கடுகடுன்னு பேசற துளசி? இன்னிக்கு உன்னை சந்திக்கறதா, கபாலி சொல்லியிருக்கான்னு நான் சொன்னதை மறந்துட்டியா? இன்னும் நீ கிளம்பளியா?”

“வேண்டாம். நான் கபாலியை பாக்கற மூட்ல, இப்ப இல்லை. என்னை ஆளை விடு.!”

“என்னடி உளர்ற? நடு ராத்திரி உன் வீட்டுக்கு வந்து அடி வாங்கி, ஜெயிலுக்கு போன கபாலி, உன்னை கொல்ற கோபத்துல இருந்தான். நான் பேசி சரி பண்ணி வச்சிருக்கேன். இப்ப வரலைன்னு நீ ஒதுங்கினா, கபாலியோட ஆத்திரம் அதிகமாகும்.”

“கிழிச்சான். இங்கே குழாய்ல, நான் திறந்தா ரத்தம் வருது. எங்கம்மா திறந்தா தண்ணி வருது. என்ன அர்த்தம்? எனக்கெதிரா ஏதோ என் வீட்ல நடக்குது. அதை கண்டு புடிக்க கபாலியை கூப்பிட்டா, ஒரு ஆணியையும் புடுங்க முடியாம உதை வாங்கிட்டு போச்சு அந்த நாய். அவனை எதுக்கு நான் பாக்கணும்?”

“தப்பு பண்றே துளசி. உனக்கெதிரா உன் புருஷன் ஏதோ செய்யறான்னு சந்தேகப்பட்டுத்தானே, நீ கபாலியை நாடினே?. இப்பவும் அது தானே நடக்குது? கம்பெனில நாலு பேர் வேலை இழந்து வீதிக்கு வந்திருக்காங்க. அதுக்கும் காரணம் துவாரகேஷ் தானாம். அவங்க கபாலியை நாட, என் உதவி கேக்கறாங்க. இந்த நேரத்துல உன் எதிரிகள் பட்டியலை கூட்டாதே. கபாலியை சந்திக்க வந்துடு.  எதிரிக்கு எதிரி நண்பன். துவாரகேஷ், சுஷ்மா, டாக்டர் பல்லவின்னு அழகான பொம்பளைங்க கூட உல்லாசமா இருக்கான். அதை தட்டிக்கேட்ட அசிங்கமான…மன்னிச்சிடு…அறிவாளி பொண்டாட்டியை அழிக்க, சூன்யம் வச்சிருக்கான் வீட்டுக்குள்ள. அதான் குழாய்ல ரத்தம். புரியுதா?”

“அப்படியா சொல்ற?”

துளசியின் பலவீனமான சந்தேக புத்தியில் இன்னும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றினாள் காஞ்சனா.

“தன்னை அவமானப்படுத்தின துவாரகேஷை கபாலி சும்மா விட மாட்டான். அந்த கம்பெனி ஆள்,  வீதிக்கு வந்தவன்,  கொதிச்சு போயிருக்கான். நீ துவாரகேஷ் மனைவி..காதல் மன்னன் உன் புருஷன். நீ அவனை தண்டிக்கலைன்னா, உன் வீட்டுக்கு  வர்ற பெண்கள் கூட்டம் அதிகமாகும். அப்புறமா நீ அதுங்க துணியை தோச்சு போடணும்.!”

“நிறுத்தூாாாாாாாா!”

துளசி கூச்சலிட்டது வாசல் வரை கேட்டது. சட்டென அடங்கினாள். மாடி பைப்பை திறந்து முகத்தில் தண்ணீரை ஊற்றி கொண்டாள்.

“ துளசி..லைன்ல இருக்கியா?”

“இருக்கேன்..இருக்கேன்..கபாலியை பார்க்க நான் எப்ப வரணும்?”

“இப்பவே புறப்படு. தெருக்கோடில நான் காரோட நிக்கறேன். அம்பதாயிரம் பணத்தோட வா துளசி.!”

“எங்கிட்ட இப்ப பணம் இல்லை.!”

“நகை இருந்தா கொண்டு வா. போற வழில அடமானம் வச்சோ, வித்தோ பணம் பண்ணிக்கலாம். சீக்கிரம் வா.!”

துளசி உள்ளே வந்தாள். அதற்கு முன் அம்மா வந்து விட்டாள். துளசி பீரோ திறந்தாள். ஏற்கனவே லாக்கரிலிருந்து ஒரு அஞ்சு சவரன் நகையை எடுத்து வந்து பீரோவில் வைத்திருந்தாள். அதை எடுத்து கொண்டாள். அவள் புடவை மாற்றப்போக, அம்மா துவாரகேஷிடம் ஓடி வந்தாள்.

“மாப்ளே! இவ பேசினது மட்டும் தான் கேட்டது. அந்த காஞ்சனா பேசினது கேக்கலை.  ஆனா பீரோல உள்ள நகையை கொண்டு போகப்போறா. அஞ்சு சவரன் மாப்ளே. தடுத்துடுங்க.”

“அத்தே, விட்ருங்க. காஞ்சனா பேசினது, அதுக்கு துளசி சொன்ன பதில் எல்லாமே என் ஃபோன்ல பதிவாகியிருக்கு.!”

“எப்படி மாப்ளே?”

“அதுக்குனு ஒரு ஆப் இருக்கு. நேத்து ராத்திரி துளசி தூங்கினதும் அதை அவ ஃபோன்ல இன்ஸ்டால் பண்ணியாச்சு. இனி, துளசி யார் கிட்ட பேசினாலும், என்னுதுல அது ரெக்கார்ட் ஆயிடும்.!”

“இத்தனை புத்திசாலியா இருக்கற ஒரு நல்ல புருஷனை புரிஞ்சுகலையே இந்த பாவி மகள்? நகை போகுதே மாப்ளே?”

“ஏற்கனவே அவ வித்ததை நான் மீட்டாச்சு. பெண் குழந்தைக்கு அப்பா நான். விட்ருவேனா? அன்னிக்கு இவ கொண்டு வந்த அஞ்சு சவரனை எடுத்து அதே மாதிரி கவரிங் நகையை நான் வச்சாச்சு.  துளசி எடுத்துட்டு போறது டூப்ளிகேட். “

மாமியாருக்கு அடுத்த ஆச்சர்யம்.

“ அத்தே! நான் கிளம்பறேன். நிறைய வேலை இருக்கு!”

துவாரகேஷ், துளசிக்கு முன்னால் கிளம்பி, தெருக்கோடிக்கு வந்து தன் காரில் ஏறி அமர்ந்தான் தயாராக. அடுத்த பத்தாவது நிமிஷம் காஞ்சனா ஒரு காரில் வந்தாள். ஓரமாக அதை நிறுத்தி, துளசிக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.  துவாரகேஷ் இதை கவனித்தான். குழாயில் ரத்தம் பார்த்த பிறகு துளசி அதிகமாகவே மிரண்டு போயிருந்தாள். குழந்தைகள் அவளை கேட்காமல் வீடியோ அழைப்பிலும் அவளை புறக்கணிக்க, பெற்றவர்கள் அவளை மதிக்காமல் ஒதுக்க, துளசிக்கு ஒரு தனிமை பயம் உண்டாகி, ஒரு சின்ன மாற்றம் உள்ளே ஆரம்பமானது நிஜம். ஒற்றை  ஃபோனில் இவள் அதை கெடுத்து விட்டாள். இவளை ஆட்டம் காட்டி, கதறடிக்க வேண்டும். என்ன செய்யலாம்?

தன் காரில் டிவைசை பொருத்தினான். ஜெல்லை எடுத்து தன் மார்புக்கு  கீழே கால் வரை தடவி கொண்டான். சகலமும் சரி பார்த்து விட்டு வெளியே  வந்தான். காஞ்சனா இருந்த காரை நெருங்கினான்.

“காஞ்சனா. எப்படி இருக்கீங்க?”

அவள் சடாரென திரும்பினாள். பளிச்சென தன் எதிரே மன்மதனாக நிற்கும் துவாரகாவை பார்த்து சொக்கி போனாள். அடுத்த நிமிஷமே பல அதிர்ச்சிகள் காஞ்சனாவுக்கு. அவளும், துவாரகேஷூம் நேரடியாக இது வரை சந்தித்ததில்லை. அழகாக பேரிட்டு அழைப்பது எப்படீ?

“என்னை எப்படி உங்களுக்கு..?”

“அழகான பெண்களை யாரும் எனக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை காஞ்சனா!”

காஞ்சனா ஒரு மாதிரி கிறுகிறுத்து போனாள்.

“நிறைய பேசணும் உங்க கிட்ட. அதான் வந்தேன். வாங்க என் காருக்கு!”

“அய்யோ இல்லை..நான் ஒரு வேலையா…”

“துளசி இன்னும் வீட்டை விட்டு கிளம்பலை காஞ்சனா. அவளை அரை மணி நேரம் தாமதமா வரச்சொல்லு.!”

கண்களை இருட்டியது காஞ்சனாவுக்கு.

“ துளசி இங்கே வர்றது உங்களுக்கு  எ..எப்படீ?”

“நான் முக்காலமும் உணர்ந்தவன். அவளை தாமதமா வரச்சொல்லிட்டு, என் கார்ல வந்து ஏறு காஞ்சனா!”

அவனது கனமான குரலில் கட்டளை இருக்க, காஞ்சனாவுக்கு அது பிடித்திருந்தது. அவளது ஆசை நாயகன், தானே தேடி வந்து அழைப்பது காஞ்சனாவை சிலிர்க்க வைத்தது. உடனே ஃபோனை போட்டாள்.

“நான் வாசல்ல இறங்கிட்டேன்  காஞ்சனா.!”

“ஒரு சின்ன பிரச்னை. நான் வந்து சேரலை. நான் திரும்பவும் கால் பண்ணின பிறகு புறப்படு துளசி. ஸாரிடா.!”

காஞ்சனா, துவாரகேஷின் காருக்கு வந்தாள். அவன் டிரைவிங் இருக்கையில் அமர்ந்திருந்தான். வெளியிலிருந்து பார்ப்பவருக்கு அவன் மார்பு வரை தான் தெரியும். அதற்கு கீழே முழுமையாக ஜெல். முன் கதவை திறந்து விட்டான்.

“ ஒக்காரு காஞ்சனா. சீட் பெல்ட்டை நான் போட்டு விடவா?”

காஞ்சனாவுக்கு தான் காண்பது கனவா என புரியவில்லை. துவாரகேஷை அடையும் ஆசை, இத்தனை சீக்கிரம் பலிக்கும் என அவள் நினைக்கவில்லை. ஆனாலும் தன் காமத்தை உடனே அவனிடம் காட்டிக்கொள்ள கூடாது என நினைத்தாள்.

“வேண்டாம். நானே சீட் பெல்ட் போட்டுக்கறேன்.!”

“வண்டியை எடுக்கலாமா காஞ்சனா?”

“தாராளமா. “

அவன் டிவைசை இன்னும் ஆன் பண்ணவில்லை.

“ நமக்கு அறிமுகம் கூட இல்லை. எப்படி துளசி என்னை சந்திக்க வர்றது உங்களுக்கு தெரிஞ்சது? காலைல ஃபோன்ல அவ பேசறதை ஒட்டு கேட்டீங்களா?”

“இல்லை காஞ்சனா. எனக்கு ஞான சக்தி உண்டு. துளசி பைப்ல ரத்தம் வந்ததை சொல்லியிருப்பாளே? கபாலி கிட்ட போற காரணமா அவனால என்ன செஞ்சு அதை தடுக்க முடியும்? திரும்பவும் எங்க வீட்டுக்கு கபாலி வந்தா, “அதை” அறுத்து வீசறதா யோசனை. மானங்கெட்டவனுக்கு, இந்த மாதிரி திரியறவனுக்கு அது தான் தண்டனை. என்ன சொல்ற காஞ்சனா?”

காஞ்சனாவுக்கு வியர்த்தது. துவாரகேஷ் பிரதான சாலைக்கு வர,

“வேற..வேற..என்ன பேசணும் உங்களுக்கு?”

“நிறைய பேசணும் காஞ்சனா. என்னால பாதிக்கப்பட்ட எல்லாரும் ஒண்ணு கூடி, என்னை அழிக்க திட்டம் போடறாங்க. அவங்களை ஒண்ணா இணைக்கற பாலமா, நீ இருக்கப்போறே. அம்பாசடர். சரியா?”

“இல்லை துவாரகேஷ். நான் அப்படி எதுவும் உங்களுக்கு எதிரா…செய்ய மா..மாட்டேன்!”

கார் நெடுஞ்சாலை போக்குவரத்தில் கலக்க, துவாரகேஷ் டிவைசை இயக்கினான்.

“பெல்ட்டை சரியா போடு காஞ்சனா!”

திரும்பிய காஞ்சனா, தீயை மிதித்தது போல ஆனாள். துவாரகேஷின் மார்புக்கு கீழே உடம்பே இல்லை. கால்கள் இல்லை. மார்புக்கு மேல் சகலமும் இருந்தது. அரை குறை முண்டம் காரை ஓட்ட, தலையை சிலுப்பி, காஞ்சனா பார்க்க, அது தான் நிஜம். அவளுக்கு நாக்கு ஒட்டிக்கொண்டது. இதை நம்ப முடியவில்லை.

“ஏன் காஞ்சனா பேசலை? மார்புக்கு கீழே எதுவுமே இல்லையேனு பாக்கறியா? அதான் துவாரகேஷ். உனக்கும், உன் தோழிக்கும் எப்பவுமே இடுப்புக்கு கீழே தானே யோசனை? அதான், அந்த சங்கதிகள் இனி வேண்டாம்னு கழட்டி வச்சிட்டேன். துளசியும் அது இருந்தாத்தானே என்னை சந்தேகப்படுவா? என்ன சொல்ற?”

‘கழட்டி வைத்தானா? என்ன பேசறான் இவன்?’

காஞ்சனாவுக்கு கண்களை இருட்ட,

“ கேடு கெட்டவங்களுக்கு துணை போறியாடீ? இங்கே நடந்ததை, உன் துளசி கிட்ட போய் சொல்றியா? காரை திருப்பட்டுமா?”

காஞ்சனா மயக்கமாகி சீட்டில் சாய்ந்திருந்தாள். துவாரகேஷ் காரை நிறுத்தி அவளை பரிசோதிக்க ஆழமான மயக்கம். தன் மேல் ஸ்ப்ரே தெளித்து முழு உருவம் பெற்றான். நேராக ஆஸ்பத்திரிக்கு வந்தான். ஸ்ட்ரெச்சரில் அவளை உள்ளே எடுத்து போனார்கள். பரிசோதித்தார்கள்.

“பல்ஸ் ரொம்ப டௌனா இருக்கு. ஆக்சிஜன் இறங்கியிருக்கு. அட்மிட் பண்ணிக்கறோம் சார்.!”

துவாரகேஷ் முகத்தில் புன்னகை மலர, யாருக்கோ ஃபோன் செய்தான்.

“ காஞ்சனா ஆஸ்பத்திரில சீரியசா இருக்கானு துளசிக்கு இன்ஃபார்ம் பண்ணிடுப்பா. என் பேரு இதுல வராம பேசு.!”

‘மூணு பேர் கூட்டணி சேர்ந்து என்னை அழிக்க முயற்சியா? ஒரே கல்லுல மூணு மாங்காயை நான் அடிக்கறேண்டா!”

(தொடரும்…)

முந்தையபகுதி – 24 | அடுத்தபகுதி – 26

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...