என்னை காணவில்லை – 26 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 26 | தேவிபாலா

அத்தியாயம் – 26

துளசி ஒரு மணி நேரமாக காத்திருந்தாள். அம்மா, அப்பாவிடம் வந்து விவரம் சொல்லி விட்டாள்.

“இவ அந்த காஞ்சனாவை பார்க்க புறப்பட்டாச்சு. எதுக்கு காத்திருக்கானு தெரியலை. அந்த அம்மண அயோக்யனை சந்திக்க போறாங்க.!”

“மாப்ளைக்கு தெரியுமா?”

“எல்லாம் தெரியும். அவர் அதி புத்திசாலி. அந்த அழகான மூளைக்காரரோட வாழ இவளுக்கு கொடுத்து வைக்கலை.”

துளசிக்கு ஃபோன் வந்து விட்டது.

“ காஞ்சனா ஆஸ்பத்திரில அட்மிட் ஆகியிருக்கா. நிலைமை சரியில்லை!”

எந்த ஆஸ்பத்திரி எனக்கேட்டு துளசி உடனே ஆட்டோ எடுத்து புறப்பட்டாள். காஞ்சனாவை, ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்த துவாரகேஷ், தேவையான பணத்தை கட்டி விட்டு, தன் நபரான ஒரு நர்ஸை நியமித்து, தனக்கு அவ்வப்போது அங்கு நடக்கும் விவரங்கள் வர வேண்டும் என உத்தரவிட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், காஞ்சனா மயக்கமான நேரம் அவள் செல்ஃபோனில் அந்த ஸ்பை ஆப்பை பொருத்தி, தன் டிவைசுடன் இணைத்து விட்டான். அவன் போன பதினைந்து நிமிஷங்களில், துளசி வந்து விட்டாள். விவரம் கேட்க, காஞ்சனா அவசர சிகிச்சை பிரிவில் இருப்பது தெரிந்தது. பதறி விட்டாள் துளசி.

“ சேர்த்தவங்க பேரென்ன?”

“துவாரகேஷ்னு இருக்கு. அவர் தான் பணமும் கட்டியிருக்கார்.!”

துளசிக்கு பலத்த அதிர்ச்சி.

‘ துவாரகேஷா? நான் காஞ்சனா மூலம் கபாலியை இன்னிக்கு பாக்கப்போறது இவருக்கு தெரியுமா? காஞ்சனாவுக்கு என்ன பிரச்னை? இவர் எப்படி ஆஸ்பத்திரில சேர்த்தார்?’

“ காஞ்சனாவுக்கு என்ன பிரச்னை?”

“பல்ஸ் டவுன்..லோ ஆக்சிஜன் லெவல். வைட்டல்ஸ் எதுவும் சரியா இல்லை. நிலைமை சீரியஸ் தான். இப்ப பாக்க முடியாது. அவங்க மொபைல் இங்கே தான் இருக்கு.!”

“நான் அவ தோழி தான். யாருக்கு சொல்லணுமோ, அவங்களுக்கு சொல்லிர்றேன்!”

அதை வாங்கி வந்தாள். உடனே அடித்தது. கபாலி தான். எடுத்தாள்.

“ காஞ்சனா எப்ப வர்றே நீ? அந்த துளசி வர்றாளா? மறக்காம அம்பதாயிரம் பணத்தோட வரச்சொல்லு. அவளையும் மயக்கி ஏதாவது செய்யணும்.உனக்கந்த அவசியமே இல்லை. நீ கூப்பிடாமலே வருவே. ஒக்கார சொன்னா படுத்துடுவே. அவளையும் எல்லாத்துக்கும் பழக்கு. அவ வீட்டுக்கு மட்டும் என்னை வரச்சொல்லாதே. அவ புருஷன் என்னை விட பெரிய சூன்யக்காரனா இருக்கான். அவன் எங்கே, எப்படி என்னை மாட்டி விடுவான்னு தெரியாது. எனக்கு தேவை நிறைய பணம், பொம்பளை சுகம்..எனக்குள்ள அரை குறை சூன்ய அறிவை வச்சு, அகப்பட்ட ஆசாமிகளை ஏமாற்றி, சில்லறையை தேத்த வேண்டியது தான். நீ பார்ட்டி புடிச்சு கொண்டு வந்தா, இருபது சதவீதம் கமிஷன். என்ன பேசாமலே இருக்கே காஞ்சனா? சரக்கடிச்சிருக்கியா. சீக்கிரம் வந்து சேரு. அந்த துளசி மாதிரி ஒரு லூசு யாரு? இத்தனை அழகான, எல்லாம் நிறைஞ்ச ஒரு புத்திசாலி புருஷன் இருக்க, என்னை மாதிரி அயோக்யன், உன்னை மாதிரி பொறம் போக்கு பொம்பளை உதவியை நாடறாளே. சரி, இவளை வச்சு முடிஞ்ச வரைக்கும் சில்லறையை தேத்தலாம். வந்து சேரு.!”

கபாலி வைத்து விட, துளசியின் உடம்பு ஆவேசத்தில் ஆடியது.

‘இவன் எல்லாம் தெரிந்த நிஜமான மந்திரவாதி இல்லையா? அரை குறை சூன்ய அறிவை வைத்து, அகப்பட்ட முட்டாள்களிடம் சுருட்டுகிறானா? பெண்கள் மாட்டினால், பணத்துடன் பாலியல் சுகங்களுமா? இவனுக்கு உள்ளூர் பிரதி நிதியா காஞ்சனா? இதெல்லாம் துவாரகாவுக்கு தெரியுமா? எப்படி? தெரிந்தால் ஒரு தப்பானவளை ஆஸ்பத்திரியில் சேர்த்து பணம் கட்டுவாரா? நான் இங்கே இருக்கணுமா? போயிடலாமா?’

‘ இவ கண் முழிச்சதும், இவ முகத்துல காறி துப்பி, உன்னை பற்றி, கபாலி பற்றி எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்னு சொல்லி, வெளில வரணும்.’

உட்கார்ந்து விட்டாள்.

‘ச்சே! இந்த பாவிகளை நம்பி நாலைந்து லட்சங்களை இழந்து விட்டேனே.’

கபாலியின் வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரம் செய்தது.

‘ இவ புருஷன் துவாரகேஷ், என்னை விட பெரிய சூன்யக்காரன்!’

அந்த உருட்டுக்கட்டை, பல்லவி க்ளீனிக்கில் நடந்தது, குழாயில் ரத்தம், சுஷ்மாவின் கொஞ்சும் குரல் எல்லாம் வந்து போனது. மேற் படி சம்பவங்கள் நடந்த எந்த இடத்திலும், துவாரகேஷ் நேரடியாக இல்லை.

அங்கே ஒரு பெண்ணை பிரசவத்துக்கு சேர்த்து விட்டு அவள் கணவன், அம்மா, குழந்தை காத்திருக்க, தன் அம்மா தான் வேணும் என அந்த குழந்தை அடம் பிடித்து அழ, கணவன் பதட்டமாகி,

“அம்மா! சித்ராவுக்கு டெலிவரி முடிஞ்சு வீடு திரும்ப ஏழு நாள் ஆகும். அது வரைக்கும் இதை சமாளிக்க முடியுமா?”

“சமாளிச்சுத்தாண்டா ஆகணும். நான் நாலு பெத்தேன். நீ மூணாவது. நீ அடிக்காத கூத்தா? குழந்தைங்களுக்கு யார் பாசத்தை காட்டினாலும் அம்மா தான் முக்கியம். அம்மாவை தேடாத குழந்தை உண்டா?”

துளசி அங்கு உட்கார முடியாமல் எழுந்து வந்தாள்.

‘ ஃபோன்ல கூட என்னை மட்டும் விசாரிக்காத நான் பெற்ற குழந்தைகள். அடுத்த முறை வரும் போது, சுஷ்மாவை கேக்கறாங்க. குழந்தைகளால வெறுக்கப்படும் தாய், இந்த உலகத்துல நான் ஒருத்தி தானா?’

நினைத்த போது, பெற்ற வயிறு பற்றி எரிந்தது.

‘ இதுக்கு யார் காரணம்?’

உள்ளிருந்து ஒரு குரல் ஆவேசமாக புறப்பட்டது. அது அவளது மனதின் குரல் என்பது அவளுக்கே தெரிந்தது. ஆனால் இப்போதும் தன் குற்றங்களை முழுமையாக மனது ஏற்கவில்லை. துவாரகேஷின் மேலுள்ள தன் சந்தேகம் தான், குழந்தைகளை தான் கவனிக்காமல் செய்தது என மனசு வக்காலத்து வாங்கியது.

கபாலி, காஞ்சனாவுக்கு ஃபோன் செய்து, காஞ்சனாவிடம் பேசுகிறோம் என நினைத்து துளசியிடம் உளறிய சகலத்தையும், தன் டிவைசில் கேட்டு, அதை பதிவும் செய்தான் துவாரகேஷ். ஏற்கனவே ஜோசியம், ஜாதகம் என கையில் எடுத்து கொள்ளையடிக்கும் போலிகள் காரணமாக, துவாரகேஷூக்கு அந்த ஏரியாவில் நம்பிக்கை இல்லை. மந்திரம், தந்திரம், ப்ளாக் மேஜிக் போன்றவைகளும் மோசடிகள் என தெரியும். தன் வசதிகளை பெருக்க, காமத்தை தணிக்க, இவர்கள் போடும் வேஷம் இது என துவாரகேஷ் நன்றாக அறிவான்.

‘ துளசியிடம் இனி கபாலியும், காஞ்சனாவும் எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது. அவனை இப்ப நினைச்சா கூட உள்ளே தள்ள முடியும். அவனை வச்சு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. ஆராவமுதன் கோஷ்டிகளை, போட்டி கம்பெனி ராஜேந்திரனை வேரோடு பறிக்க வேண்டும். அந்த ஆட்டத்துக்கு நான் இறக்கப்போகும் துருப்பு சீட்டு கபாலி தான். காஞ்சனா கண் திறக்கட்டும்.’

இரண்டு மணி நேரம் கழித்து காஞ்சனாவுக்கு நினைவு திரும்பி விட்டது. அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கவனமாக சிகிச்சை செய்து, ஆக்சிஜனை சரி செய்து, நாடி துடிப்பையும் சீர் செய்து விட்டார்கள். ஆனால் ரத்த அழுத்தம் குறையவில்லை.

“உங்களை பார்க்க துளசின்னு ஒரு பெண் ரொம்ப நேரமா காத்திருக்காங்க!”

“ என்னை இங்கே சேர்த்து பணம் கட்டினது யாரு?”

“துவாரகேஷ்னு ஒருத்தர்.”

“எப்ப நான் வீட்டுக்கு போகலாம்?”

“டென்ஷன் ஏறாம இருந்தா, ரூமுக்கு மாறலாம். வீட்டுக்கெல்லாம் போக விட மாட்டாங்க.!”

“துளசியை ரூமுக்கு வந்த பிறகு பாக்கறேன்! என் மொபைல், ஹேண்ட் பேக் எங்கே இருக்கு?”

“துளசி கிட்டத்தான் இருக்கு.!”

“அதை உடனே வாங்குங்க.”

அதை வெளியே வந்து துளசியிடம் சொல்ல, துளசி கடுப்பானாள்.

“ ஒரு நிமிஷம் பார்த்துட்டு போறேன். நான் தொந்தரவு பண்ண மாட்டேன்.!”

“சரி வாங்க!”

அவளை நர்ஸ் உள்ளே அழைத்து வர, பல படுக்கைகள் இருக்க, காஞ்சனா அருகில் துளசி வந்தாள். நர்ஸ் விலக,

“ இந்தா, உன் பேக், மொபைல் ரெண்டும். நீயின்னு நினைச்சு, அந்த நிர்வாண நாய் கபாலி, எங்கிட்ட சகலத்தையும் உளறிட்டான். நீங்க ரெண்டு பேரும் யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. உங்களை நான் சும்மா விட மாட்டேன். நீ செய்யற பாவங்களுக்கு இந்த ஐ.சி.யூ.வை விட்டு உயிரோட வெளில வர மாட்டே. உன் சாவுக்கு கூட நான் வர மாட்டேன். நாசமா போ.!”

வேகமாக துளசி வெளியேற, காஞ்சனா மொபைல் எடுத்து பார்க்க, கபாலி பேசிய கால், இரண்டு மணி நேரம் முன்பு. இன்னும் நாங்கள் வரலை என்பதால் திரும்பவும் கூப்பிடுவான். நர்ஸ் வந்து செல்ஃபோனை வாங்கி கொண்டாள். சார்ஜை இழந்து அது அணைந்திருந்தது.

“ சார்ஜ் போட்டு வைங்க சிஸ்டர்!”

‘கபாலி என்ன பேசியிருப்பான்? நான் என நினைத்து சகலமும் உளறியிருப்பான். இவள் கேட்டு, மனசு உடைந்து சாபம் போடறா. இனி இவ மனசை திருப்ப முடியாது’

கண்களை காஞ்சனா மூட, அந்த கார் காட்சி வந்தது. கால்களும், கைகளும் மட்டும் கார் ஓட்ட, சகலத்தையும் புட்டு வைத்த துவாரகேஷ்.

‘ இடுப்புக்கு கீழே உள்ளதை கழட்டி வச்சிட்டேன்!’

‘இது சாத்தியமா? ஒரு மனிதனால் தன் உடம்பில் உள்ள பாகங்களை கழட்ட முடியுமா? எந்திரனில் சிட்டி அதை செய்தது. காரணம் அது மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோட். பயிற்சியளிக்கப்பட்ட ஆன்ட்ராய்டு. இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லையே? துவாரகேஷ் நிச்சயமா மனுஷன் தான். ஆனா ஏதோ வித்தை காட்டறான். சூன்ய மந்திரக்காரனையே அடித்து, தெருவில் ஓட விட்டவன். என்னை கலவரப்படுத்தி, மயக்கமாக்கி, இங்கே சேர்த்து பணமும் கட்டியிருக்கான். பயப்படுத்தறது மட்டுமே நோக்கம்னா, மயங்கின என்னை தெருவுல தூக்கி போட்டுட்டு போயிருக்கலாமே! ஏன் துவாரகேஷ் அதை செய்யலை’

பயத்தோடு அவளிடம் பல கேள்விகள் புறப்பட்டன. அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். அதே நேரம் இவர்களை காணாத கபாலி, இனி பொறுக்க முடியாது என காஞ்சனாவுக்கு ஃபோன் செய்ய, அது அணைக்கப்பட்டு சார்ஜில் இருக்க, கபாலி பொறுமை இழந்து, வேறு வழியில்லாமல் துளசிக்கு ஃபோன் செய்தான். துளசி ஆட்டோவில் வீட்டை நெருங்கினாள். இறங்கி பணத்தை தந்து விட்டு பார்க்க, கபாலியின் அழைப்பு. முதலில் தன்னை ஏமாற்றியவன், இப்போது அடைய துடிப்பவன் என்பதால் ஆவேசம் வந்தது. ஆத்திரப்பட்டு கூச்சல் போட நினைத்ததை, அவசரமாக அடக்கி கொண்டாள்.

‘ இவனை வசமாக சிக்க வைத்து, தோலை உரிக்க வேண்டும்.’

“இப்ப கோவத்துல, யோசிக்காம பேசினா தப்பா வரும். யோசிச்சு இவனை லாக் பண்றது எப்படி?”

தொடர்ந்து கபாலி முயல, அவள் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, வீட்டை நோக்கி நடக்க,

அதே நேரம், ஆராவமுதனின் ஆள், மூச்சிரைக்க ஆரா எதிரே நின்றான்.

“ காஞ்சனாவை ஆஸ்பத்திரில துவாரகேஷ் சேர்த்திருக்கான். காஞ்சனா இப்ப ஐ.சி.யூ.ல”

“காஞ்சனாவை,ஆஸ்பத்திரில துவாரகேஷ் சேர்த்திருக்கானா? எதுக்கு? சரி எதுக்கா வேணும்னாலும் இருக்கட்டும். ஆஸ்பத்திரில வச்சு அவளை போட்ரு. உடனே போ!”

(-தொடரும்…)

முந்தையபகுதி – 25 | அடுத்தபகுதி – 27

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...