என்னை காணவில்லை – 27 | தேவிபாலா
அத்தியாயம் – 27
ஆராவமுதன் ஆள், ஆஸ்பத்திரியை அடைந்து விட்டான், ஒரு டாக்டரின் வேஷத்தில். ஆள் கொலை செய்ய வந்திருந்தாலும் கலராக, உயரமாக, கண்ணிய தோற்றத்தில் இருந்ததால் டாக்டர் வேஷம் நன்றாக பொருந்தியது. கையில் அவளை கொல்ல, விஷ ஊசி தயாராக இருந்தது. இன்னும் காஞ்சனாவை அறைக்கு மாற்றவில்லை. அதற்கான ஏற்பாடுகள் நடக்க, ஆராவின் ஆள் சூழ்நிலையை புரிந்து கொள்ள அவகாசம் எடுத்து கொண்டான். அடுத்த ஒரு மணி நேரத்தில் காஞ்சனாவை தனி அறைக்கு மாற்றினார்கள். கூடவே ஒரு டாக்டரும், நர்சும் போனார்கள். அதை ஆரா ஆள் கவனித்து கொண்டான். அங்கே காஞ்சனாவுக்கு ட்ரிப்ஸ் இணைத்து வெளியேற, வேறு ஏதோ வழக்குக்காக போலீஸ் நடமாட்டம் அங்கே அதிகமாக இருக்க, இந்த நபர் அவசரப்படவில்லை. தயங்கி நின்றான். இந்த நேரம் ஆஸ்பத்திரிக்குள் துவாரகா நுழைந்தான். ரிசப்ஷனில் பேசி விட்டு, பிரதான டாக்டரை கேட்க, காஞ்சனாவை கவனிக்கும் டாக்டர், நர்சிடம் துவாரகாவை கொண்டு போய் சேர்க்க,
“அட்மிட் செய்தது நான் தான் என அறிமுகம் செய்து கொண்டு, தனக்கு வேண்டிய பெண் என்க,
“இப்ப ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனா ரெண்டு நாள் இருக்கணும் இங்கே. போய் பாக்கலாம்.!”
அந்த அறைக்கு துவாரகா வந்து கதவை சாத்த, காஞ்சனா திரும்பினாள். அவனை பார்த்ததும், ஒரு பக்கம் சந்தோஷமாக, மறு பக்கம் பயம் வந்தது. துவாரகேஷ் அருகில் வந்து உட்கார்ந்து குரலை இறக்கி கொண்டான்.
“ நான் நினைச்சிருந்தா, கார்ல காமத்தோட ஏறின உன்னை, என்ன வேணும்னாலும் செஞ்சிருக்கலாம். ஆனா மயங்கின உன்னை காப்பாற்றத்தான் இங்கே சேர்த்தேன். நீ யார்னு எனக்கு தெரியும். கபாலியோட கமிஷன் ஏஜென்ட் நீ. உன்னை நம்பி முட்டாள் தனமா பின்னால வர்ற துளசிக்கு, துரோகம் செய்யப்போறே. ஆனா அவளுக்கு அது தேவை தான்.!”
“என்னை மன்னிச்சிடுங்க!”
கை கூப்பி விட்டாள் காஞ்சனா.
“ இத்தனை காலமா காசுக்காக நான் செய்யாத அக்ரமம் இல்லை. ஒரு சில நிமிஷங்கள் நீங்க காட்டின பயத்துல, வாழ்க்கைனைா என்னானு புரிஞ்சுகிட்டேன். துளசி எனக்கு எதிரி ஆயிட்டா. சாபம் விட்டுட்டு போறா. இனி என் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டா. நானும் கபாலியை சந்திக்க மாட்டேன். பணத்துக்காக யாரையும் கபாலி கிட்ட கூட்டிட்டு போக மாட்டேன்.!”
“நீ ஏன் துளசி கூட வரலைன்னு கபாலி தவிச்சு போயிருப்பான். நீ திரும்பவும் கபாலியை பார்க்கணும்.!”
“எதுக்கு நான் போகணும்?”
“இத்தனை நாள் செஞ்ச பாவத்தை சரிக்கட்ட, நான் அனுப்பி, நீ கபாலியை சந்திக்கணும். ஒரு பெரிய குற்றத்தை தடுக்க, உன்னை நான் பயன் படுத்தப்போறேன். அதுக்கு நீ உதவி செய்வியா? மாட்டியா?”
“என்னை ஆஸ்பத்திரில சேர்த்து உயிரை காப்பாத்தினவர் நீங்க. உங்களுக்காக நான் நிச்சயமா, நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்.!”
“குட். முதல்ல டிஸ்சார்ஜ் ஆகி, நீ வெளில வா. உன் உடம்புல பலம் வரட்டும். அப்புறமா என்ன வேணும்னு நான் சொல்றேன்.!”
சிஸ்டர் உள்ளே வந்தாள்.
“ சார்! கொஞ்சம் வெளில இருங்க!”
துவாரகேஷ் வெளியே வந்தான். அந்த டாக்டர், இந்த அறைக்கு வெளியே நடமாடுவதை பார்த்தான். ஒரு டாக்டர் நோயாளியை பார்க்க தயங்காமல் உள்ளே வரலாம். காரிடாரில் கையில் போனுடன், திருட்டு முழி சகிதம் அவன் நடப்பது துவாரகேஷுக்கு சந்தேகத்தை விதைத்தது. அவன் பேசிக்கொண்டே நடக்க, துவாரகேஷ் இயல்பாக க்ராஸ் செய்ய,
“சூழ்நிலை சரியா இல்லைண்ணே. சட்டுனு புகுந்து போட்ர முடியுமா?”
சிஸ்டர் வெளியே வர, துவாரகேஷ் புகுந்தான். காஞ்சனா திரும்பி படுத்திருக்க, துவாரகேஷ் பூனை பாதங்களை பதித்து, பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான். ஜெல்லை எடுத்து தன் மேல் தடவிக்கொண்டு, டிவைசுடன் வெளியே வந்தான். அதை ஓரிடத்தில் பொருத்தி இயக்க, துவாரகேஷ் அரூபமானான். காஞ்சனா பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். இப்போது ஆராவின் ஆள் கதவை திறந்து மெல்ல பார்க்க, காஞ்சனா மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தாள். உள்ளே வந்து கதவை அவன் தாளிட்டான். காஞ்சனாவை நெருங்கினான்.
“ இந்த மருந்தை ஊசி மூலம் உள்ளே போட்டுர்றேன்.!”
நெருங்கி, ஊசியை கையில் எடுத்தான். துவாரகா எழுந்தான். ஊசியை சரி செய்து, காஞ்சனாவின் புறங்கையில் இருந்த நரம்புகளை இணைக்கும் அந்த மெல்லிய குழாயின் மூடியை திறந்தான். ஊசியை அதில் வைக்க, அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்டான். துவாரகேஷ் கொடுத்த உதையில் தூரப்போய் விழுந்தான். அவன் கையில் இருந்த ஊசி, துவாரகேஷ் கைக்கு வந்து விட்டது. ஊசி போட வந்த டாக்டர், திடீரென யாரோ உதைத்ததை போல தூரப்போய் விழுந்ததை பார்த்து காஞ்சனா அதிர, கீழே விழுந்த டாக்டர், மிரண்டு எழுந்தான். காஞ்சனா தவிர யாரும் இங்கே இல்லை. அவள் தான் என்னை உதைத்தாளா? எழுந்தவுடன் அடுத்த உதை விழுந்தது. காஞ்சனா இன்னும் அதிர, பந்தாடப்பட்டான் அவன். எதிரே ஆளே இல்லை. ஆனால் சரமாரியாக உதை. அவன் எழுந்து கதவை நோக்கி ஓடப்பார்க்க, துவாரகேஷ் அவனை இழுத்து போய் பாத்ரூமுக்குள் அடைத்தான். தன் ஜெல்லை துடைத்து டிவைசை அணைத்து வெளியே வந்தான். அந்த டாக்டர் மட்டும் உதை பட்டு உள்ளே போவதையும், சில நிமிஷங்களில் துவாரகேஷ் வெளியே வருவதையும் பார்த்த காஞ்சனாவுக்கு கண்களை இருட்டி கொண்டு வந்தது. வேகமாக வெளியே போன துவாரகேஷ், பிரதான டாக்டரிடம் புகார் செய்ய, பரபரப்பு தொற்றி கொள்ள, அங்கே ஏற்கனவே போலீஸ் இருக்க, காஞ்சனா இருந்த அறைக்கு அனைவரும் வர, ஊசி மருந்தை எடுத்து தந்தான் துவாரகேஷ். பாத்ரூம் கதவை திறந்து டாக்டர் வேஷத்தில் இருந்த அவனை இழுத்து வந்தார்கள்.
“ உன் ஐடி காட்டு.!”
அவன் திருட்டு முழி முழிக்க,
“ அவன், இந்த ஊசியை போட்டு, இந்த பெண்ணை கொல்ல பார்த்திருக்கான். இவனை லாக்கப்ல வச்சு பிரிச்சு எடுங்க. ஏவி விட்டது யாருன்னு உண்மை வெளில வரும். இவன் ஃபோனை பறி முதல் பண்ணுங்க.!”
விஷ மருந்து உடனே லேபுக்கு அனுப்பப்பட்டது.
அவனால் துவாரகாவிடம் பட்ட உதையால், நகரக்கூட முடியவில்லை. அவனிடமிருந்து செல்ஃபோன், பைக் சாவி என அனைத்தும் பறி முதல் செய்யப்பட்டு, அவனை அடித்து இழுத்து போனது போலீஸ். உயர் அதிகாரியுடன் துவாரகேஷ் நடந்தான்.
“விவரம் தெரிஞ்சதும் இவனை வெளில எடுக்க வேலை நடக்கும். அல்லது லாக்கப்ல இவனை போட நினைப்பாங்க. கவனமா இருங்க சார்.!”
“உங்களுக்கு எல்லா அப்டேட்டும் வரும் துவாரகேஷ்.!”
விவரம் வெளியே வர, ஆஸ்பத்திரியே தீப்பற்றி கொண்டதை போல ஆனது. ஊடக ஆட்கள் மூக்கு வியர்த்து காமிராவுடன் வந்து விட, யாரையும் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.துவாரகேஷ் சில நிமிஷங்கள் கழித்து உள்ளே வர, பேச நாக்கு அசையாமல் பயத்தில் இருந்தாள் காஞ்சனா. காரை தொடர்ந்து இங்கும் சில மாயா ஜால காட்சிகள். ஆளே இல்லாமல் உதை படும் நபர். அவன் மட்டும் உள்ளே செலுத்தப்பட, வெளியே வரும் துவாரகேஷ். அருகில் வந்தான் துவாரகேஷ்.
“ விஷ ஊசி போட்டு, உன்னை கொல்ல முயற்சி நடந்திருக்கு!”
“யாரவன்? என்னை ஏன் கொல்ல வரணும்?”
அவள் குரல் நடுங்க,
“ நான் உன்னை காப்பாத்தியாச்சு. நீ இத்தனை நாள் செஞ்ச பாவத்துக்கு, எமன் உன் படுக்கை வரைக்கும் வந்தாச்சு. இதை நீ மட்டும் புரிஞ்சுகிட்டா போதாது. முடிஞ்சா துளசிக்கும் புரிய வை. நான் நாளைக்கு வர்றேன்.!”
‘இவன் உயிர் காத்த தோழனா? தேவ தூதனா? மந்திரவாதியா? விஞ்ஞானியா? இல்லை சூன்யக்காரனா?’
பல கேள்விகள் புறப்பட்டு காஞ்சனாவை பீதிக்கு உள்ளாக்கியது.
அதே சமயம் வீட்டுக்கு வந்த துளசி, தன் அறைக்குள் போக பயந்து, உடை மாற்றி, பின் கட்டுக்கு வந்து விட்டாள். அப்படியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். நடந்த சகலமும் கண் முன் ஓட, இனம் புரியாத கலக்கம் அவள் மனதுக்குள் புகுந்து ஆட்டி படைத்தது.
தான் தப்பான பாதையை தேர்ந்தெடுத்திருப்பது ஏற்கனவே புரிந்தது. அதில் வெகு தூரம் பயணப்பட்டு வந்து விட்டதால், திரும்பி போக முடியுமா என தெரியவில்லை. அத்தனை பேரும் தனக்கு எதிராக மாறி விட்டது தெரிந்தது. அப்பா, அம்மா அவளை கண்டு கொள்வதேயில்லை. அவளுக்கு தலை வலித்தது. எழுந்து வந்தாள். அம்மா குறுக்கே போக,
“அம்மா! கொஞ்சம் காஃபி தர்றியா?”
பதிலே பேசாமல் அம்மா நடக்க,
“நான் கேட்டது உன் காதுல விழலையா? காபி தர மாட்டியா? இது என் வீடு. இங்கே வந்து தங்கியிருக்கறது நீங்க.”
“என்னது, உன் வீடா? இது மாப்ளை வீடு. இதுல உனக்கென்ன உரிமை இருக்கு?”
“நான் அவரோட மனைவி. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.!”
“புருஷனை சந்தேகப்பட்டு எல்லா வகை டார்ச்சர்களையும் தந்துட்டு, அவரோட அம்மா, அவர் குழந்தைகளை விரட்டி விட்டுட்டு, அவருக்கு எதிரா, நினைக்கவே நெஞ்சு கூசற, ஒரு குடும்ப பெண் செய்யக்கூடாத எல்லா தப்புக்களையும் செஞ்சுட்டு, நான் அவரோட மனைவினு சொல்ல உனக்கு கூசலை?”
துளசி மௌனம் சாதிக்க,
“உங்கிட்ட பேசவே எனக்கு அசிங்கமா இருக்கு. கேவலமான அந்த நிர்வாண மந்திரவாதியை பார்க்க, அந்த வேசி காஞ்சனாவை துணை சேர்த்துட்டு காலைல போயிருக்கே. எதுக்கு? நிச்சயமா மாப்ளைக்கு எதிரா என்னவோ ஒரு சதியை செய்யத்தான். இதுக்கு அவரை ஒரேடியா கொன்னு போட்ரேன். அதை நீ செய்ய மாட்டே. ஏன்னா, அவன் போடற சோறு, அவன் தர்ற துணிகள், அவனோட வீட்ல இருந்து, அவனுக்கு எதிரா சதி! வௌங்குவியாடீ நீ? சீக்கிரம் நீ நாசமாத்தான் போகப்போறே. அதை என் கண்ணால நான் பாக்கணும்.”
ஒரு மகளை, எந்த ஒரு தாயும் இந்த அளவுக்கு சாபம் இட்டதில்லை.
நிமிர்ந்து பார்த்தாள் துளசி. எந்த ஒரு பெண்ணுக்கும் இரு நிலைகள் பிரதானம். தன்னை பெற்ற தாய். தான் தாயாக காரணமான குழந்தைகள். இங்கே என்னை வெறுத்து ஒதுக்கிய மேற் படி இரண்டு உறவுகளும்.
அம்மா அழுது கொண்டே உள்ளே போக, துளசி அப்படியே மடிந்து உட்கார்ந்தாள்.
(-தொடரும்…)
முந்தையபகுதி – 26 | அடுத்தபகுதி – 28