“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 1

அன்று கிருத்திகை.

கோயில் வாசலில் கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது.

அதற்கேற்றாற் போல் கொஞ்சம் அதிகப்படியாகவே பூக்களைக் கொள் முதல் செய்து தனது பூக்கடையில் பரப்பி வைத்துக் கொண்டு காத்திருந்தாள் சுந்தரி.  அதிகாலையிலிருந்தே மக்கள் வருவதுவும், போவதுமாய் இருந்த போதிலும் விற்பனையென்னவோ மந்தமாய்த்தான் இருந்தது.

“ஏன்… என்னாச்சு ஜனங்களுக்கு… யாருமே பூ வாங்கறதில்லையா?… அட… சாமிக்கு வாங்கி சாத்தலேன்னாப் பரவாயில்லை… பொம்பளக தங்களோட தலைக்காவது வாங்கி வைக்கலாமே… நல்லாக் காசுக்கணக்கு பார்க்கறாளுகப்பா…” தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு துணையாக வந்து சேர்ந்தாள் கூடைக்காரக் கிழவி பொன்னம்மா.

“என்ன சுந்தரிம்மா… எப்படிப் போகுது எல்லாம்” வந்தவுடன் ஆரம்பித்தாள்.

“என்ன போகுது?… மானம் போகுது… காசு பணம் போகுது… அவ்வளவுதான்!… இப்படியே போனா கூடிய சீக்கிரத்துல நானும் போக வேண்டியதுதான் வியாபாரத்தை இழுத்து மூடிட்டு” சுந்தரி தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள்.

 “அட யாவாரம்ன்னா அப்படித்தான் இருக்கும் சுந்தரி!… ஒரு நாள் அமோகமா போகும் மறு நாள் அப்படியே கிடக்கும்…. இதெல்லாம் சகஜம்தானே?” என்ற பொன்னம்மா கிழவி, “சரி… வயித்துக்கு ஏதாச்சும் சாப்பிட்டியா இல்லையா?” கேட்க,

உதட்டைப் பிதுக்கிய சுந்தரி. “அது செரி… காலைல நாலு நாலரைக்கு எந்திரிச்சு…. அவசர அவசரமாய்க் கெளம்பி…. மொத்த வியாபாரியைப் போய்ப் பார்த்து… பூவுக்கு அட்வான்ஸ் கொடுத்திட்டு… அப்புறமா கடைல வந்து காத்திருந்து மொத்த வியாபாரியோட ஆளுங்க வந்து பூவை இறக்கிட்டுப் போகும் போது மணி ஆறாயிடும்… அந்த நேரத்துக்கு பக்தர்களும் வர ஆரம்பிச்சிருப்பாங்க… வியாபாரமும் ஆரம்பிச்சிடும்… அப்புறம் எங்க போய் சாப்பிடறது?” என்றாள்,

 “சரி… வா ரெண்டு பேரும் போய் அடுத்த தெரு மீசைக்காரரு மெஸ்ல ஆளுக்கு ரெண்டு இட்லி தின்னுட்டு வருவோம்” கூடையை கீழே வைத்து விட்டு, கிளம்ப ஆயத்தமானாள் பொன்னம்மா கிழவி.

 “ம்ஹும்… எனக்கு வேண்டாம் ஆயா… நீ வேணா போய்த் தின்னுட்டு வா…” என்றாள் சுந்தரி.

 “அட… எந்திரிச்சு வா…” என்று சொல்லி விட்டு, பக்கத்து சர்பத் கடைக்காரனைப் பார்த்து, “இந்தாப்பா… கொஞ்சம் நேரம் இந்தப் பூக்கடையை பார்த்துக்கோ… நானும் இவளும் போய் இட்லி சாப்பிட்டுட்டு வர்றோம்” என்றாள் கிழவி அவளாகவே.

அதற்கு மேலும் மறுத்துப் பேச விரும்பாத சுந்தரி, தானும் கிளம்பினாள்.  உண்மையில் அரைமணி நேரத்துக்கு முன்னாடியே அவளோட அடி வயித்தை பசி அரிக்க ஆரம்பித்திருந்தது.

இட்லிக் கடையில் சாப்பிடும் போது சுந்தரி அந்த எண்ணத்தைக் கிழவியிடம் சொன்னாள்.  “எனக்கென்னவோ இந்தப் பூக்கடையை மூடிட்டு, உன்னைய மாதிரி கூடையைத் தூக்கிட்டு வேற ஏதாச்சும் கொய்யாப்பழ வியாபாரமோ…. இல்லை நெல்லிக்காய் வியாபாரமோ பண்ணலாம்?ன்னு தோணுது ஆயா”

“அடி ஏண்டி இப்படிச் சொல்லுறே?… உங்க அப்பன் தாத்தா காலத்திலிருந்தே உங்க குடும்பத்துக்கு பூக்கடை வியாபாரம்தானே?” என்ற கிழவி, இட்லிக்கடைக்காரர் பக்கம் திரும்பி, “இங்க இன்னொரு இட்லி வையி… அவளுக்குக் கொஞ்சம் மொளகாய்ச் சட்னி வையி” என்றாள்.

“நீ சொல்றது வாஸ்தவம்தான் ஆயா… ஆனா காலம் மாறிப் போச்சு ஆயா!… எங்க அப்பன் தாத்தா காலத்துல ஜனங்க தாராளமாய்ப் பூ வாங்கி சாமிக்குப் போட்டாங்க… பொம்பளைங்களும் முழம் முழமா வாங்கித் தலைல வெச்சுக்கிட்டாங்க!… இப்ப

அப்படியா?.. அவனவன் சாமிக்குப் பூ வாங்கறதிலேயே கணக்குப் பார்க்கறானுக…. அப்புறம் எங்க போயி பொண்டாட்டிக்கு முழம் முழமா பூ வாங்கித் தரப் போறானுக?” சுந்தரி நீளமாய்ப் புலம்ப,

“ம்ம்ம்… அப்படிச் சொல்ல முடியாது சுந்தரி… இப்பவும் சாமிக்கு கணக்குப் பார்க்காம வாங்கிப் போடறவங்க இருக்காங்க….”

இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு அந்த மெஸ்ஸை விட்டு வெளியேறி தெருவில் இறங்கி நடை போட்டனர்.

பத்தடி நடந்ததும் சட்டென்று நின்றாள் பொன்னம்மா கிழவி. முன்னே சென்று விட்ட சுந்தரி உடன் வந்து கொண்டிருந்த கிழவியைக் காணாது தானும் நின்று திரும்பிப் பார்த்தாள்.

 “என்ன ஆயா… நின்னுட்டே?” அங்கிருந்தே கேட்டாள் சுந்தரி.

 அவளை நெருங்கி வந்த கிழவி, “அங்க பாரு” என்று எதையோ காட்ட, அவள் காட்டிய திசையில் பார்வையைச் செலுத்தினாள் சுந்தரி. அங்கேயிருந்த ஒரு சிறிய பூக்கடையில் ஜனங்கள் கூட்டமாய் நின்று பூ வாங்கிக் கொண்டிருந்தனர்.  அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒரே ஆளாய் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

“என்னமோ சொன்னே…. மக்கள் யாருமே இப்பப் பூ வாங்கறதில்லை… சாமிக்கும் போடறதில்லை”ன்னு பார்த்தியல்ல இங்க எப்படி வியாபாரம் ஆகுது!ன்னு?” கிழவி கேட்க,

 “ஆமாம்… ஆயா!… எனக்கும் அதான் ஆச்சரியமாயிருக்கு…” வியந்து போய்ச் சொன்னாள் சுந்தரி.

“ஆக…. பூ வியாபாரமெல்லாம் சரியாத்தான் ஒடிக்கிட்டிருக்கு… உன் கிட்டேயோ… இல்லை…. உன் கடையிலேயோ தான் ஏதோ தவறிருக்கு” என்றாள் கிழவி.

 “தவறா… அப்படி எதுவும் இருக்கற மாதிரி தெரியலையே”

 “வெளிப் பார்வைக்குத் தெரியாது… ஆனா இருக்கு!… எதை வெச்சு சொல்றேன்னா… அந்தக் கடையில் வாங்கி வெச்ச பூவெல்லாம் தீர்ந்து போற அளவுக்கு வியாபாரம் ஆகுது… அதே அடுத்த தெருவுல இருக்கற உன் கடை ஈயோட்டுது!… இத்தனைக்கு உன் கடை அந்தக் கடையை விட பெரிசு… சரக்குகளும் ஜாஸ்தி…. எல்லாத்துக்கும் மேலா கோயிலுக்குப் போற வழி மேலேயே இருக்கு!…” கிழவி சொல்லிக் கொண்டே போக,

கோபமான சுந்தரி, “த பாரு ஆயா!… சும்மா “வள…வள”ன்னு பேசி என்னைக் கடுப்பாக்காம… அதே மாதிரி வியாபாரம் இங்கேயும் ஆகணும்!…. அதுக்கு ஏதாச்சும் வழி இருந்தா சொல்லு…. இல்லேன்னா… அப்படியே இடத்தைக் காலி பண்ணு” என்றாள்.

“த பாரு… வெத்துக் கோவம்… நித்திரைக்குக் கேடு!… யோசி… நல்லா யோசி… நல்ல முடிவா எடு… “பூக்கடையை மூடிட்டு கூடையைத் தூக்கிக்கலாம்!”ங்கற எண்ணத்தையெல்லாம் விட்டுட்டு உருப்படியா எதையாச்சும் யோசி” சொல்லியவாறே கிழவி தன் கூடையைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தாள்.

அவள் சென்ற பின்னும் நீண்ட நேரம் அவள் வார்த்தைகள் சுந்தரியின் மனதிற்குள் ஓடிக் கொண்டேயிருந்தன.  “என்ன காரணம்?… ஏன் அந்தக் கடைக்கு மட்டும் எல்லோரும் போறாங்க… நம்ம கடைக்கு வருவதில்லை!… “

அந்தக் கேள்வி அன்றைய இரவு உறக்கத்தையும் கெடுத்தது. புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தவள், அதிகாலை நேரத்தில் அவளையுமறியாமல் உறங்கிப் போனாள்.

கனவில், கூடையை இடுப்பில் சுமந்து கொண்டு, “மீன் வாங்கலையோ?… மீன் வாங்கலையோ?” எனக் கத்திக் கொண்டு சென்ற சுந்தரியை போலீஸ்காரன் வழிமறிக்க,

திடுக்கிட்டுக் கண் விழித்தவள் “மலங்க மலங்க” விழித்தாள்.  “என்ன கண்ராவிக் கனவு இது?… கடவுளே… உன் கோயில் பாதைல பூ வியாபாரம் பண்றவளை இப்படியா சோதிப்பே?” இறைவனைக் கேட்டாள்.

“சுந்தரி… எலேய் சுந்தரி” வாசலில் குரல் கேட்க, எழுந்து போய்ப் பார்த்தாள்.

பக்கத்துக் குடிசைக்காரி பங்கஜம் நின்றிருந்தாள். “இன்னிக்கு மதியம் ரெண்டு போலீஸ்காரங்க உன்னைத் தேடி வந்திட்டுப் போனாங்க” என்றாள்.

திடுக்கிட்ட சுந்தரி, “போலீஸ்காரங்களா?… என்னைத் தேடியா?… எதுக்கு?” குழறலாய்க் கேட்டாள்.

“கேட்டேனே?…. அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாதும்மா… சுந்தரி வந்ததும் ஸ்டேஷனுக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லும்மா”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க… அவ்வளவுதான்!… அது செரி… போலீஸ் வரைக்கும் போற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை சுந்தரி?” என்றாள் பங்கஜம்.

“அதான் எனக்கும் புரியலை!…” என்று யோசித்தவள், “ஒருவேளை காணாமல் போன என் புருஷனைப் பத்திக் கேட்பாங்க” என்றாள்.

“அது செரி… உம் புருஷன் காணாமல் போயி ஏழெட்டு வருஷமாச்சு… இத்தனை வருஷமா கண்டுபிடிக்க முடியலை… இப்ப வந்திட்டாங்க… விசாரிக்க… அதுஇதுன்னு” பங்கஜம் கழுத்தை நொடித்துச் சொன்னாள்.

 “இல்லை பங்கஜம்… போன வருஷம் ஒரு தடவை வந்து என்னைக் கூட்டிட்டுப் போயி, “ஏழு வருஷத்துக்கு மேலாச்சும்மா… கேஸைக் குளோஸ் பண்ணிடலாமா?”ன்னு கேட்டாங்க… நான்தான் எப்படியும் என் புருஷன் கிடைச்சிடுவான்!ங்கற நம்பிக்கைல  “இல்லை தேடுங்க”ன்னு சொல்லிட்டு வந்தேன்!… இப்பவும் அதுக்குத்தான் கூப்பிடறாங்க!ன்னு நெனைக்கறேன்” மேலோட்டமாய் எதையோ சொல்லிச் சமாளிச்சாலும், உள்ளுக்குள் பதைபதைப்பாயிருந்தது சுந்தரிக்கு. “என்னடா வம்பாயிருக்கு!… நேத்திக்கு கனவுல “திடு…திப்”ன்னு போலீஸ் வந்தாங்க!… இப்ப நிஜத்திலேயும் போலீஸ் வந்திட்டுப் போயிருக்காங்க!… இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” குழம்பினாள் சுந்தரி.

அவளது கலவர முகத்தைப் பார்த்தே அவள் உள்மனக் குழப்பங்களைப் புரிந்து கொண்ட பக்கத்துக் குடிசை பங்கஜம், “ஆத்தாடி… ஏம்மா உம் மூஞ்சி இப்படி பேயைப் பார்த்த மாதிரி இருக்கு?… என்ன பிரச்சினை?” கேட்டவாறே சுந்தரியை நெருங்கி வந்து அவள் தோள்களைத் தொட,

 “வந்து… வந்து…”என்று சுந்தரி இழுத்தாள்.

 “அதான் வந்திட்டேனே… சொல்லு” என்றாள் பங்கஜம்.

தன் பூக்கடையில் வியாபாரமே ஆகாதது பற்றியும், அதே நேரம் அடுத்த தெரு பூக்கடையில் வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போவதைப் பற்றியும் கலங்கிய கண்களுடன் சுந்தரி சொல்ல,

சில நிமிடங்கள் யோசித்த பங்கஜம், “அடுத்த தெரு…. கடைன்னா…. “

“அந்த மீசைக்காரர் இட்லிக் கடைக்குக் கொஞ்சம் தள்ளி….”

“ஓ… அந்த வள்ளியம்மாவைச் சொல்றியா?” தலையை மேலும், கீழுமாய் ஆட்டிக் கொண்டு கேட்டாள் பங்கஜம்.

“அது வள்ளியம்மாவோ… தெய்வானையம்மாவோ… எனக்குத் தெரியாது!… அவ கடைல ஆகிற மாதிரி யாவாரம் என் கடையிலும் ஆகணும்… அதுக்கு ஏதாச்சும் மார்க்கமிருந்தா சொல்லு… அவ்வளவுதான்” கூடைக்காரக் கிழவி பொன்னம்மாவிடம் வைத்த அதே கோரிக்கையை இந்த பங்கஜத்திடமும் வைத்தாள் சுந்தரி.

அந்த பொன்னம்மா எப்போதுமே நல்லதை மட்டுமே பேசி, நல்லதை மட்டுமே நினைத்து, அடுத்தவர்களுக்கு நல்ல… நேர்மறையான வழிமுறைகளை மட்டுமே சொல்லித் தரும் நியாயமான கிழவி.  ஆனால், இந்தப் பங்கஜம் அவளுக்கு நேர் எதிர்.  அடுத்தவர்கள் மனதைக் குழப்புவதிலும், மோசமான அறிவுரைகளைக் கூறுவதிலும், கைதேர்ந்தவள்.

தன்னிடம் வலிய வந்து, வியாபாரத்தைப் பெருக்குவதற்கு வழிமுறை கேட்கும் சுந்தரியை விடுவாளா?

தன் வஞ்சக மூளையைக் கிளறி, ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்தாள். “ஆங்… இது ஒண்ணு போதும் அந்த வள்ளியம்மா கடையைக் காலி பண்ண” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, “ஏய்… சுந்தரி,,,, இன்னும் பத்தே நாள்ல அந்த வள்ளியம்மா கடையைத் தூக்கிட்டுப் போற மாதிரிப் பண்ணிடறேன்… போதுமா?” கேட்டாள்.

 “த பாரு பங்கஜம்… நான் உன் கிட்டே என்ன கேட்டேன்?… வள்ளியம்மா கடையைக் காலி பண்ணச் சொல்லியா கேட்டேன்?… என்னோட கடைல அந்த அளவுக்கு யாவாரம் ஆக ஏதாச்சும் வழி சொல்லு!ன்னு தானே கேட்டேன்…?”

 “அட மூளை கெட்ட மூதியே!… அவ கடை செழிப்பா இருந்திட்டிருக்கும் போது எத்தனை வருஷமானாலும் உன் கடை மேலே வராது!… அதனால மொதல்ல அவ கடைக்கு மூடு விழா நடத்துவோம்… அப்புறம் உன் கடைக்கு வருவோம்!… மொதல்ல எதிரியை ஒழிப்போம்… அப்புறம் நாம வளருவோம்… என்ன நான் சொல்றது புரியுதா?” பங்கஜம் கொத்து வெற்றிலையை வாயில் திணித்தபடி கேட்க,

“புரியுது… இருந்தாலும்… பாவம் அவ யாவாரத்தை நாம ஏன் கெடுக்கணும்?”

“ம்ஹும்… நீ செரிப்பட்டு வரமாட்டே…!…இந்தக் காலத்துல ஒருத்தன் மேலே வரணும்ன்னா நாலு பேர் தலைல காலை வெச்சு மிதிச்சுத்தான் ஏறணும்” சொல்லியவாறே அந்த பங்கஜம் கிளம்பத் தயாராக,

 “அட எங்க கிளம்பிட்டே… உட்காரு” என்று சொல்லி அவளை மீண்டும் அமர வைத்த சுந்தரி, “சரி… நீ சொல்ற மாதிரியே மொதல்ல அவ கடையைச் சாத்துவோம்… அதுக்கு என்ன வழி?” கேட்டாள்.

 சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மெல்ல நகர்ந்து சுந்தரியின் காதருகே வந்து கிசுகிசுத்தாள் பங்கஜம். “யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நான் உன் கிட்ட சொல்றேன் கேட்டுக்கோ… அந்த வள்ளியம்மா இருக்காளே?… அவ தாலியறுத்தவ… அவ புருஷன் செத்துப் போய் ஏழெட்டு வருஷமாச்சு”

 “அப்படியா?… இந்த விஷயம் இத்தனை நாளு எனக்குத் தெரியாதே?” இரு கைகளையும் விரித்துச் சொன்னாள் சுந்தரி.

 “உனக்கு மட்டுமல்ல… ஊர்ல பல பேருக்குத் தெரியாது… எப்படித் தெரியும்?… அவதான் கலர் கலரா சேலை கட்டிக்கிட்டு… பூவும் பொட்டும் வெச்சுக்கிட்டு… சுமங்கலியாட்டாம் வேஷம் போட்டுக்கிட்டு யாவாரம் பண்றாளே”

“சரி… அதுக்கு?”

 “அந்த ஒரு விஷயம் போதாதா அவ கடையைக் காலி பண்ண…?”

 “ம்ஹும்… பங்கஜம் நீ என்ன சொல்ல வர்றே?… எனக்கு எதுவுமே புரியலை” தலையைப் பிய்த்துக் கொண்டாள் சுந்தரி.

“உனக்கு ஒண்ணும் புரிய வேண்டாம்… நாளையிலிருந்து ஒரு வாரத்துக்கு நான் உன் கடைக்கு வந்து உன் கூட இருக்கேன்”

 “இருந்து…?”

 “ப்ச்… இதுக்கு மேலே எதுவும் கேட்காதே… என்ன நடக்குது?ன்னு வேடிக்கை மட்டும் பாரு” என்றாள் பெண் நம்பியார் பங்கஜம்.

(- தொடரும்…)

அடுத்தபகுதி – 2

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...