“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 2 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 2 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 2

றுநாள் காலை சுந்தரி கடையைத் திறக்கும் முன்னாடியே வந்து காத்திருந்தாள் பங்கஜம்.  தீயவர்களின் இயல்பு என்னவென்றால், அடுத்தவரைக் கெடுப்பதென்று முடிவு செய்து விட்டால்… முழு மூச்சாய் இறங்கி அதை முடித்து விட்டுத்தான் ஓய்வர்.

சரியாக காலை ஐந்தே முக்காலுக்கு வந்து சேர்ந்த சுந்தரி அங்கே பங்கஜம் காத்திருப்பதைக் கண்டு ஆச்சரியமானாள்.  “என்ன பங்கஜம்… எனக்கு முன்னாடி வந்திட்டே?” கேட்டாள்.

 “எப்ப நீ என் கிட்டே உன்னோட மனக்குறையைச் சொல்லி மார்க்கம் கேட்டியோ… அப்பவே முடிவு பண்ணிட்டேன்… உன்னைச் சந்தோஷப் படித்து விட்டுத்தான் தூங்குவதென்று”

பங்கஜத்தை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் சுந்தரி.  மனம் கேட்டது.  “இவள் உண்மையிலேயே நல்லவளா?… இல்லை கெட்டவளா?… மத்த கடைக்காரங்கெல்லாம் இவளைப் பார்த்தாலே முகத்தைச் சுளிக்கறாங்க!.. இவ கூட பழகறதினால என்னையே ஒரு மாதிரிப் பார்க்கறாங்க!… ஆனா இவளோட பேச்சிலும்… நடத்தையிலும் கொஞ்சமும் குறையில்லையே… அப்புறம் ஏன்?”

மொத்த வியாபாரியின் மினி டோர் வண்டி வந்து கடை முன் நின்றது. அதிலிருந்து குதித்திறங்கிய ஒருவன் இவள் கடைக்கான பூ மூட்டைகள் மூன்றை எடுத்துக் கீழே வைத்து விட்டு, “சுந்தரியக்கா… மாலை… செண்டு… ஏதாச்சும் சொல்லியிருந்தீங்களா?” கத்தலாய்க் கேட்டான்.

 “அதெல்லாம் ஒண்ணுமில்லையப்பா”

அடுத்த நிமிடமே மினி டோர் பறந்தது.

பக்தர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வரத் துவங்கினர்.  ஆனால், எல்லோரும் கையில் அடுத்த தெரு வள்ளியம்மா கடையில் வாங்கிய பூவோடு சென்றனர்.

 “பார்த்தியா பங்கஜம்… நாம் கோயில் இருக்கற தெருவுல கடை வெச்சிருந்தும்… இங்க வராம எல்லோரும் அங்கியே பூ வாங்கிட்டு வந்திடறாளுக” வயிற்றெரிச்சலோடு சொன்னாள் சுந்தரி.

 “பார்த்திட்டுத்தான் இருக்கேன்” என்ற பங்கஜம், பூவோடு செல்லும் ஒரு பெண்மணியை அழைத்தாள்.  “சரோஜினி… ஏய் சரோஜினி”

 அந்தப் பெண் நின்று இவளைப் பார்க்க, “கொஞ்சம் இப்படி வாம்மா”

 “என்ன பங்கஜம்?” கேட்டவாறே வந்தவளிடம்,  “ஆமாம்…பூ எங்கே வாங்கினே?” கேட்டாள் பங்கஜம்.

 “வள்ளியம்மா கிட்டே”

 “ஆமாம்… உனக்கு மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கா?… இல்லையா?”

 “ஏன் இப்படிக் கேட்கறே பங்கஜம்?”

 “உம் புருஷன் ஆன்னா ஊன்னா போய் ஆஸ்பத்திரில படுத்துக்குவானே?… இப்ப எப்படி இருக்கான்?”

 “அதையேன் கேட்குறே?… இப்பவும் அதே கதைதான்!… நாலு நாளிக்கு முன்னாடி கூட ரத்த வாந்தி எடுத்திட்டு… ஆஸ்பத்திரிக்குப் போய் வைத்தியம் பார்த்திட்டு வந்து வீட்டோட கெடக்கறான்” என்றாள் அந்த சரோஜினி கவலையுடன்.

 “ம்ம்ம்… இப்பக் கூட நீ கோயிலுக்கு அவன் நல்லபடியா குணமாகணும்ன்னு வேண்டிக்கத்தானே வந்திருக்கே?” பங்கஜம் கேட்க,

 “ஆமாம்… சரியாய் சொல்லிட்டியே”

 “இங்க பாரு… நான் உன்னைய விட வயசிலேயும்… அனுபவத்திலேயும் மூத்தவ… எனக்கு உன்னை விடக் கொஞ்சம் அதிகமாகவே அனுபவமும்… அறிவும் இருக்கும்… அதை ஒத்துக்கறியா?”

 “ம்.. விஷயத்தைச் சொல்லு”

“உன் புருஷன் அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போறதுக்கும்… படுத்துப் படுத்து எந்திரிக்கறதுக்கும் காரணம் யாரு தெரியுமா?” தூண்டிலைப் போட்டாள் பங்கஜம்.

 “யாரு?”

 “நீதான்… நீயேதான்”

 சட்டென்று கோபமான அந்தப் பெண், “என்ன பங்கஜம்… உனக்கு இன்னிக்கு வேற ஆள் கிடைக்கலையா?.. என்னைக்  கிண்டறே?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்டாள்.

 “நீ சாமி கிட்ட வைக்கற எந்த வேண்டுதலையும் சாமி ஏத்துக்காது!… ஏன்னா….” என்று சொல்லி விட்டு பங்கஜம் நிறுத்தினாள்.

 “ஏன்?… ஏன்?  ஏத்துக்காது?”

“பின்னே… தாலியறுத்தவ கைல பூ வாங்கிட்டுப் போய்… “என் தாலியக் காப்பாத்து சாமி”ன்னு தெனமும் கும்பிட்டா… சரியாயிடுமா?… த பாரு… இந்த சுந்தரி… சுத்தமான சுமங்கலி…. இவ கைல ஒரு பதினஞ்சு நாளைக்கு பூ வாங்கிட்டுப் போய் சாமிக்குப் போட்டுப் பாரு… உன் புருஷன் சும்மா ஜல்லிக்கட்டுக் காளையாட்டம் துள்ளிக் கிட்டு ஓடுவான்… சொல்ல முடியாது உன்னைய இன்னொரு புள்ளை பெக்க வெச்சாலும் வெச்சிடுவான்” பங்கஜம் சரியான நேரத்தில், சரியான இலக்கில் அஸ்திரத்தை எய்த மௌனமாய் யோசிக்க ஆரம்பித்தாள் அந்த சரோஜினி.

அவள் மடங்கி விட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட பங்கஜம், “இந்தா சுந்தரி சரோஜினிக்கு நாலு முழம் சாமி பூவும் ரெண்டு முழம் மல்லைகைப் பூவும் குடு” என்றாள் சுந்தரி பக்கம் திரும்பி.

 “அய்ய… நாந்தான் பூ வாங்கிட்டேனே” சரோஜினி மறுக்க,

 “அதைக் குடு இங்கெ” என்று சொல்லி சரோஜினி கையிலிருந்து பூவை பலவந்தமாய்ப் பறித்து விட்டு, சுந்தரி கொடுத்த பூவைத் திணித்தாள் பங்கஜம்.

 “காசு… இப்ப….இல்லையே” அவள் இழுக்க,

 “உன் கிட்ட யாரு காசு கேட்டா… ஏதோ உன் புருஷன் நல்லா இருக்கட்டும்ங்கற நல்ல எண்ணத்துலதான் பூவைக் குடுத்தோம்!… “சொன்ன பங்கஜம், வள்ளியம்மா கடைப் பூவை, பக்கத்துக் குப்பைத் தொட்டியில் வீசினாள்.

”இங்க பாரு சரோஜினி… நீ சுமங்கலிதானே… அப்புறம் ஏன் தலைல நீ பூ வெச்சுக்கலை”

 “அது…வந்து…”

 “எதுவும் வரவும் வேண்டாம்… போகவும் வேண்டாம்” என்றவாறே சரோஜினியை நெருங்கி வந்து அவள் கையிலிருந்த மல்லிகைப் பூவில் கொஞ்சம் பிய்த்து, அவள் தலையிலேயே வைத்து விட்டு, “இப்பப் போய் சாமியைக் கும்பிடு…” என்று சொல்லி அனுப்பி வைத்தாள் பங்கஜம்.

கோவிலுக்குள் சென்று, சாமி தரிசனம் முடித்து விட்டுத் திரும்பிய சரோஜினியை மீண்டும் வழிமறித்த பங்கஜம், ”சரோஜினி… நான் சொன்னதை நல்லா ஞாபகம் வெச்சுக்கோ… ஒரு பதினஞ்சு நாளைக்கு இங்க வந்து பூ வாங்கிப் பாரு… உனக்கே நல்ல மாற்றம் தெரியும்” ஞாபகமூட்டி அனுப்பினாள்.

அவள் சென்றதும் சுந்தரியிடம், “நீ வேணா பாரு… இனிமே இந்த சரோஜினி உங்கிட்டத்தான் வருவா” என்றாள்.

 “அதெல்லாம் சரி… பதினஞ்சு நாள் இங்க வாங்கிப் பாரு… உனக்கே நல்ல மாற்றம் தெரியும்”ன்னு சொன்னியே?… அதெப்படி… ஒருவேளை நல்லது எதுவும் நடக்கலேன்னா… அந்தப் பெண் மறுபடியும் அந்தப் பக்கம் போயிடுவாளே?” சுந்தரிக்குத் தன் கவலை.

 “அட…நீ ஏன் அப்படி நெனைக்கறே?… நல்லது நடக்கும்ன்னு நினை!… நடக்கலேன்னாலும் எதையாச்சும் பேசி சமாளிப்போம்!… எல்லாம் நம் வாய் சாமார்த்தியத்துலதான் இருக்கு”

(- தொடரும்…)

முந்தையபகுதி – 1 | அடுத்தபகுதி – 3

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...