மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 2 | லதா சரவணன்
இனிப்பான இரண்டாவது விளையாட்டு
வாசு…………. அங்கே என்னப்பண்றே ?
வாசு தன் மொபைல் போனின் தொடுதிரை மூடிவிட்டு ஏன் மாலி ஏதோ கொள்ளை போறமாதிரி கத்துறே ? என்னவிஷயம்
கன்டினியூவா மொபைல்ல பேசினாலோ அல்லது விளையாடினாலோ கண்லே ஒருவிதமான பிரஷர் வந்து பார்வை குறைபாடு ஏற்படுதாம், அப்பறம் நம்மோட ஞாபகச் சக்திகளை அழிக்கிறதாம். நீயூஸ் பேப்பரில் செய்தி வந்திருக்கு.
அது சரி அதுக்கு என்னையேன் கூப்பிட்டே ?
நீதானே எப்பப்பாரு மொபைலை கையிலே வைச்சிகிட்டே இருக்கே அதனால்தான் சொன்னேன்.
அடிப்பாவி காலேஜ் முடிச்சி ஒரு அரைமணிநேரம் அது பொறுக்கலையா உனக்கு ? நல்லா சொல்லும்மா நான் என்ன சொன்னாலும் காதிலேயே வாங்கிக்கொள்ள மாட்டேன்னு அடம்பிடிக்கிறான் என்று காப்பிக்கோப்பையோடு வீட்டில் தயாரித்த சில பண்டங்களையும் கொடுக்க,
ஏம்மா அவ ஏற்கனவே பனியாரம் மாறி உப்பித்தான் போயிருக்கா நீவேற இன்னும் எண்ணெய் பலகாரமாகவே கொடுக்கறே ? என்று சொல்லி மாலினியின் கையால் தலையில் ஒரு குட்டு வாங்கிக்கொண்டான் வாசு. ஏன் மாலி இத்தனை சொல்றீயே நீ மட்டும் என்ன சும்மாவா கோணையாய் வாயை வைச்சிக்கிட்டு நாளுக்கு பத்து செல்பி எடுத்துப் போடலை, என்னையும் மட்டும் மாட்டிவிடுறே ? அம்மா அந்தப் பக்கம் நகர்ந்ததும், திங்கிறதுக்கு கொஞ்சமாவது எக்ஸ்சைஸ் பண்ணு இல்லைன்னா கல்யாணத்திற்குள்ளே காத்ரெஜ் பீரோ மாதிரி ஆயிடுவே மாலி, யார்தான் மொபைல் பயன்படுத்தறது இல்லை, ஒலிம்பிக் ஜோதி மாதிரி கையிலே தூக்கிகிட்டு போறவங்களைத்தான் இப்போ சாலையில் பாக்குறோமே….
அதான் போனவாரம் ஜோதியோட வழுக்கிவிழுந்தியே ?
ஏண்டி ஒருத்தர் விழுந்தா காப்பாத்துவியா சிரிப்பியா ? இனிமே உன் கூட வரும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.
நான் என்ன செய்ய ? நமக்கு முன்னாடி அது விபத்தாகவே இருந்தாலும் முதலில் இப்போ என்ன பண்றாங்க ஆபத்தில்லைன்னா சிரிப்பு ஆபத்துன்னா வருத்தம். அடுத்தவனோட வலியை அனுபவச்சி சிரிக்கணுமின்னுதானே நாம் பார்த்த நகைச்சுவை காட்சிகள் கூட சொல்லியிருக்கிறது. இல்லைன்னா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்னு பேரு வடிவேலுக்கு வந்திருக்குமா சொல்லு, அதிலும் இப்போ நின்னா, நடந்தா, செத்தான்னு எல்லாத்துக்கும் செல்பி வந்திட்டது. ஐ ஹேவ் எ டெட்பாடி இன் மை ஹவுஸ்ன்னு ஸ்டேட்டஸ் போட்டவங்களையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.
வாயாடி உன் கிட்டே பேசி ஜெயிக்க முடியாது எதுக்கு என்னைக் கூப்பிட்டே அதைச் சொல்லு முதல்ல ?!
நம்ம காலேஜ் கல்சுரல்ல மறந்து போன பழைய விளையாட்டுக்கள் பற்றிய ஒரு தலைப்பில் நான் பேசப்போறேன் அதை டிஸ்கஸ் பண்ணத்தான் கூப்பிட்டேன்.
அவ்வளோதானே உடனே பண்ணிடலாம்.
ஆமாம் வாசு நீயே கழுத்தை சாச்சிக்கிட்டு குடிக்கிறது காப்பியா தண்ணியான்னு தெரியாம பப்ஜி விளையாடறவன் உன்கிட்டே நான் என்னத்தை கத்துக்க முடியும்.
ஆளைப் பார்த்து எடைபோடாதே இன்னைக்கு நாகரீகம் நாகரீகம்ன்னு எதை நோக்கிப்போனோமோ அது நம்மை எந்தளவுக்கு பாதிக்கிறதுன்னு ஒரளவிற்கு நாம தெரிஞ்சிகிட்டோம். முன்னைமாதிரி இல்லாம இப்போ உணவுகளில் கூட சிறுதானியங்களை கடைபிடிக்கிறோம். ஆரோக்கிய உணவுமுறைக்கு மாறிட்டு வர்றோம். மாற்றங்கள் மட்டும்தான் மாறாதது மாலி.
ஏய் இது அன்புமணி சொன்னதுதானே ?! சரி தொலை இப்போ என்ன கட்டுரைக்கு களம் அமைக்கலாமா ?
ம்… நான் ரெடி எழுதிக்கோ ஐய்யா வாயில இருந்து அப்படியே அருவி மாதிரி கொட்டும்
பரவாயில்லை நான் சமயத்திலே அணை கட்டிடறேன்
உனக்காவது அந்த எண்ணம் வந்ததே சரிதான் இன்னும் அலட்சியமா இருந்தா நாமெல்லாம் ஒரு டம்ளர் தண்ணிக்கே கஷ்டப்படத்தான் வேணும் விளையாட்டைப் பற்றி கேட்டே இல்லை, இப்போ நாம பேசப்போற விளையாட்டு ஓணப்பந்து
பார்த்தியா ஏதோ தெரிந்தவனாச்சேன்னு உன்னைக் கேட்டா இப்படி பண்டிகைப் பேரையெல்லாம் சொல்லி விளையாட்டுன்னு காது குத்தறியா ?
உன் தலை… ஓணப்பந்துங்கிறது நம் பழைய விளையாட்டுகளில் ஒன்று!
தமிழர்களின் பழமையான வீர விளையாட்டுகளில் ஓணப்பந்தும் ஒன்று. கடல் கொண்ட கன்னியாகுமரியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விளையாட்டில் மொத்தம் 7வீரர்கள் கொண்ட இரண்டு அணியாகப் பிரிந்து, முதல் அணி கைகளால் பந்தை அடிக்க இரண்டாவது அணி பந்தை கால்களால் திருப்பி அடிப்பார்கள் இதுதான் ஓணப்பந்துன்னு சொல்றது
கிட்டத்தட்ட புட்பால் மாதிரின்னு சொல்லு,
விளையாட்டுக்கள் மட்டுமல்ல, மருத்துவம், அறிவியல், வீரம், செயல்பாடுகள் எல்லாமே தமிழர்கள் கற்றுத் தந்ததுதான். விதிமுறைகள் தான் மாறுபடுமே தவிர விளையாட்டு ஒன்றுதான் ஓணப்பந்து எப்படி தயாரிப்பதும் ஒரு சிறப்புதான். எருமைத் தோலை எடுத்து தேங்காய் நாரை இறுக்கமா வைத்து தைத்து பந்தை தயாரிப்பாங்க. கிரிக்கெட் பந்தைக் காட்டிலும் சின்னதாகதான் இருக்கும். விலைகூட 200ரூபாய்க்குள்ளதான் இருக்கும். தேங்காய் நாருக்குப் பதில் துணியைக் கூட பயன்படுத்துவாங்க.
ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே எங்கே விளையாடுவாங்க ? மைதானத்திலா ?
பின்னே இப்போ மாதிரி ஐந்து ரூபாய் சிப்ஸ் பாக்கெட் ஐம்பதுரூபாய், தண்ணீர் பாட்டில் இருபது ரூபாய், பொருட்களை வாங்க க்யூ, மைதானத்தில் சியர்ஸ் கேர்ள்ஸ், நக்கலான வர்ணணையெல்லாம் அப்போ கிடையாது, வெறும் மண் தரையை சீர்படுத்தி மாட்டுச்சாணத்தால் முழுவதும் மெழுகி நான்கு மூலைகளிலும் 65அடி உயரமுள்ள கமுகு மரங்களை எல்லைக் கம்பங்களாக வைக்கப்பட்டு இருக்கும்.
ஒருபக்கம் அடித்தாடும் பக்கம், மற்றது தடுத்தாடும் பக்கம் அடித்தாடும் பக்கத்தில் இரு கம்பங்களின் நடுவில் 65அடி உயரத்தில் கயிறு மூலம் பட்டுத்துணி கட்டப்பட்டு இருக்கும்.
சரி எப்படி விளையாடுவது ?
ஏழு வீரர்கள் போல விளையாட்டில் ஏழு கட்டங்கள் உண்டு. ஒரு கட்டத்திற்கு 3 பந்து வீதம் மொத்தம் 21 பந்துகள். தடுப்பாடுபவர்களை சமாளித்து 21 பந்துகளையும் சரியான முறையில் செலுத்தும் அணி வெற்றியடையும். உனக்கு ஒன்னு தெரியுமா இந்த விளையாட்டிற்கும் டாஸ் உண்டு. யார் அணி வெற்றி பெறுதோ அவங்கதான் முதலில் கைகளால் பந்தை அடித்தாட வேண்டும். எதிரணியில் உள்ளவர்கள் கைகளால் அடிக்கும் பந்தை கால்களால் தடுத்தாட வேண்டும்.
ம்..ரூல்ஸ் எல்லாம் இருக்கா ?
பந்தை கைகளால் மட்டும் பிடிக்கணும், தரையிலோ உடம்பிலோ படக்கூடாது. கால்களால் திரும்பி அடிக்கும் போது ஒரு வீரர் ஒருமுறைதான் செலுத்த முடியும், பந்து வேகமாக வரும்போதே அடிக்கவேண்டும் வேகம் குறைந்தால் அடிக்கக் கூடாது.
பந்தை பிடிக்கும்போது யார் கையை உயர்த்திப் பிடிக்கிறாரோ அவரே தகுதியுடையவர். பந்து வீரர்களின் கால் மூட்டின் மேல் பட்டால் அவர் பந்தை தவறவிட்டதாகும். பந்து எல்லைக் கம்பத்தின் மீது பட்டாலும் வெளியே சென்றதாகத்தான் எடுத்துக்கொள்வார்கள்.
இதுக்குன்னு நடுவர்கள் தீர்ப்பு ஆட்டநாயகன் விருதுன்னு எல்லாம் உண்டு தெரியுமா ? நம்ம டி-டூவன்டி மாதிரி கால் இறுதி அரையிறுதி, இறுதிப்போட்டின்னு கூட கட்டங்கள் உண்டு. 25க்கும் மேற்பட்ட அணிகள் இதில் பங்கேற்பார்கள். 65அடி உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் பட்டின் மீது கால்களால் பந்தை அடிக்கும் வீரருக்கு சிறப்பு பரிசும் உண்டு.
சூப்பர்….
இரு இன்னமும் இருக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் மாவட்ட அளவிலான ஓணப்பந்து போட்டி நடைபெறும் திருமணம் ஆனவர்களுக்கும் ஆகாதவர்களுக்கும் நடைபெறும் நட்புறவு ஓணப்பந்து விளையாட்டின் சிறப்பு. தகவல்கள் எப்படி புதுமையா இருந்தா டீசர்ட்டில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்
சரி அடுத்தக் கட்டுரைக்கு தகவல் சேரு போ… போ.. என்று சொல்லிவிட்டு அத்தை மறுபடியும் வாசு போனை கையெடுத்துட்டான் என்ற கூக்குரலோடு அவன் கையில் அகப்படாமல் பாய்ந்து ஓடினாள்.
(- தொடரும்…)
முந்தையபகுதி – 1 | அடுத்தபகுதி – 3