“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 3 (நாவல்) | முகில் தினகரன்

 “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 3 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 3

தினமும் சுந்தரியின் கடைக்கு வந்து, வள்ளியம்மா கடையில் வாங்கிய பூவோடு செல்லும் சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களையும் சரோஜினியிடம் பேசியது போல் பேசி… மூளைச்சலவை செய்வதை வாடிக்கையாகக் கொண்டாள் பங்கஜம்.

 “கொஞ்ச நாளாவே வீட்டுல நடக்கற விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு எதிராகவே இருக்குமே?” சும்மாவாகிலும் சொல்லுவாள்.

கேட்பவர் ஒரு சிறிய யோசனைக்குப் பின், “ஆமாம் பங்கஜம்… அது என்னவோ அப்படித்தான்” என்பர்.

அவ்வளவுதான், “கெடைச்சாடா இன்னொருத்தி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, வள்ளியம்மாவிடம் பூ வாங்குவதால்தான் அப்படியெல்லாம் நடக்குது!”ன்னு சொல்லுவாள்.

“இந்த சுத்தமான சுமங்கலி கிட்டே வாங்கிப் பாரு… எல்லாமே நல்லதா நடக்கும்” என்பாள்.

சுமாரான மனவுறுதி கொண்ட பெண்கள் எளிதாக அவள் வலையில் வீழ்ந்து, வள்ளியம்மாவை விட்டு விட்டு சுந்தரியிடமே பூ வாங்கத் துவங்குவர்.

 “என்ன சுந்தரி… இப்பவெல்லாம் வியாபாரம் நல்லா போகுது தானே?” ஒரு நாள் சுந்தரியிடம் கேட்டாள் பங்கஜம்.

 “முன்னைக்கு இப்ப பரவாயில்லை… பூக்கள் எதுவும் மீந்து போவதில்லை!… கையைக் கடிக்காமல் ஓடுது யாவாரம்”

 “அதுதானே நமக்கு வேணும்” என்றாள் பங்கஜம் வெற்றிலையை வாய்க்குள் திணித்தபடி.

 “அதெல்லாம் சரி… நீ பாட்டுக்கு எல்லோர் கிட்டேயும் அண்டப்புளுகு… ஆகாசப்புளுகு விட்டு வெச்சிருக்கியே… அது ஒரு நாள் பொய்யின்னு தெரியும் போது… நம்மளோட பீஸி கிழிஞ்சிடுமே?” பயந்தாள் சுந்தரி.

 “நான் என்ன அண்டப்புளுகு… ஆகாசப் புளுகு விட்டேன்?” தெரியாதவள் போல் கேட்டாள் பங்கஜம்.

 “வர்றவங்க கிட்டயெல்லாம் இங்க பூ வாங்கிப் பாருங்க…. நல்ல மாற்றம் வரும்ன்னு சொல்லி வெச்சிருக்கியே… கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு நீ அதைச் சொல்ல ஆரம்பிச்சு…. இதுவரைக்கும் அப்படி நல்லது நடந்ததா யாருமே வந்து சொல்லலையே?”

 “அதுக்காக யாரும் இங்கிருந்து மறுபடியும் அந்த வள்ளியம்மா கடைக்குப் போய் விடலையே?” திருப்பிச் சொன்னாள் பங்கஜம்.

 “அது… செரிதான்… ஆனாலும்….” கையைப் பிசைந்தாள் சுந்தரி.

 “சுந்தரி நான் அதுக்கொரு யோசனை வெச்சிருக்கேன்!… இன்னும் ரெண்டு மூணு நாள்ல இங்க ஒரு அதிசயம் நடக்கப் போகுது பார்த்திட்டே இரு” சொல்லி விட்டுத் தன் தலையை மேலும், கீழும் ஆட்டினாள் பங்கஜம்.

 “என்ன அதிசயம்?”

 “அது… சொன்னா புரியாது… நடக்கும் போது பார்த்தால்தான் புரியும்”

அன்று வெள்ளிக்கிழமை.  கோவிலில் பெண்கள் கூட்டம் அதிகமாயிருந்தது.

சுந்தரியின் கடையிலும் பெண்கள் கூட்டம்.  அந்த நேரம் பார்த்து ஒரு டாக்ஸி வந்து கடை முன் நிற்க, பூ வாங்கிக் கொண்டிருந்த பெண்கள் அதை ஆச்சரியமாய்ப் பார்த்தனர்.

காரிலிருந்து இறங்கிய ஒரு மூத்த பெண்மணி, நேரே சுந்தரியிடம் வந்து, “தாயி… நீ தெய்வப்பிறவி தாயி” என்று சொல்ல,

சுந்தரிக்கு எதுவுமே புரியவில்லை.  “யாரிந்தப் பெண்?.. இவ எதுக்கு என்னைய தெய்வப்பிறவி அதுஇதுன்னு சொல்றா?”

மெல்லத் தலையைத் திருப்பி பங்கஜத்தைப் பார்த்தாள்.  அவள் கண்ணசைவில்,  “அமைதியாயிரு” என்று சொல்லி விட்டு, அந்த மூத்த பெண்மணி பக்கம் திரும்பி, “அம்மா… நீங்க ஒரு மாசமா நம்ம சுந்தரி கடையில்தானே பூ வாங்கிட்டுப் போய் சாமிக்குப் போடுவீங்க!… உங்க புருஷனுக்குக் கூட “பக்கவாதம்… படுத்த படுக்கையா இருக்காரு”ன்னு சொன்னீங்களே?… இப்பப் பரவாயில்லையா?” கேட்டாள்.

 “நானும் ஆறு மாசமா அந்த வள்ளியம்மா கடைலதான் பூ வாங்கிட்டுப் போய் தெனமும் அந்த சாமிக்குப் போடுவேன்!… சாமி கண்ணைத் திறக்கவேயில்லை… என் புருஷனைக் குணப்படுத்தவே இல்லை!… அன்னிக்கொரு நாள் நீ அந்த விஷயத்தைச் சொன்னதுக்குப் பிறகு நான் இந்த சுந்தரி கடைலதான் கடந்த ஒரு மாசமா பூ வாங்கிட்டுப் போய் சாமிக்குப் போடறேன்!…ஆறு மாசமா கண்ணைத் தெறக்காத சாமி… இப்பத் திறந்திடுச்சு!” என்ற அந்த மூத்த பெண்மணி, மெல்ல டாக்ஸி அருகே சென்று அதன் பின் கதவைத் திறந்து விட, உள்ளிருந்து இறங்கினார் ஒரு மூத்த மனிதர்.

 “பாருங்க இவர்தான் என் புருஷன்… ஒரு வருஷமா பக்கவாதத்துல விழுந்து படுத்த படுக்கையாய் இருந்தவர்… இப்ப பத்துப் பதினஞ்சு நாளா எழுந்து நடக்கறார்!… இதெல்லாம் யாராலே?” கூட்டத்திலிருந்த பெண்களைப் பார்த்துக் கேட்டாள் அந்த மூத்த பெண்மணி.

அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்க,

 “இதோ இந்த சுந்தரியால…. இவ கையால பூ வாங்கிட்டுப் போய் சாமிக்குப் போட்டதினால….”

அங்கிருந்த பெண்கள் அனைவரும் உடனே சுந்தரியைப் பார்க்க, அவள் கையெடுத்துக் கும்பிட்டாள்.

அப்போதுதான் வந்து அந்தப் பெண்கள் கூட்டத்தோடு இணைந்து கொண்ட வேறு சில பெண்கள் அங்கு நடப்பதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர்.

 “இன்னும் சொல்லப் போனால்… அந்த வள்ளியம்மா விதவைங்கற விஷயம் தெரியாமல் நான் ஆறு மாசமா அவ கையால பூ வாங்கிட்டுப் போய் சாமிக்குப் போட்டிருக்கேன்!… எந்தப் பிரயோஜனமுமில்லை!… நல்லவேளையா இந்த பங்கஜம் வந்து சொன்னா… அதுக்குப் பின்னாடி சுந்தரி கையால வாங்க ஆரம்பிச்சதும்… ஒரே மாசத்துல என் புருஷன் எழுந்து நடமாட ஆரம்பிச்சிட்டார்!” அந்தப் பெண்மணி பேசிக் கொண்டே போக,

பங்கஜம் தானாகவே எழுந்து ஐந்து முழம் சாமி பூ எடுத்து அதை அவள் கையில் கொடுக்க, வாங்கிக் கொண்டு, “அப்ப நான் வர்றேன்.. தாயி” சொல்லி விட்டு மீண்டும் டாக்ஸியில் ஏறி அமர்ந்தாள்.

அந்த மூத்த மனிதரையும் ஏற்றிக் கொண்டு கார் நகர்ந்ததும், புதிதாய் வந்து இணைந்திருந்த பெண்கள் பங்கஜத்திடம் வந்து, “நெசமா அந்த வள்ளியம்மா விதவையா?” கேட்டனர்.

“அதிலென்ன சந்தேகம்?” என்றாள் பங்கஜம்.

 “பார்த்தா அப்படித் தெரியலையே!…”

 “எப்படித் தெரியும்?… தாலியறுத்தவ பூ வைக்காம… பொட்டு வைக்காம… வெள்ளைப் புடவையோ… காவிப் புடவையோ கட்டியிருந்தாள்ன்னா தெரியும்!… அவதான் கலர் கலரா… டிசைன் டிசைனா சேலை கட்டிக்கிட்டு… மேனாமினுக்கியாட்டம் வந்து பூ யாவாரம் பண்றாளே!… அவளைத்தானே நம்ம முட்டாள் பெண்களும் நம்பறாங்க” பங்கஜம் அடுக்கிக் கொண்டே போக,

 அந்தப் பெண்கள் அனைவரும் தாங்கள் அந்த வள்ளியம்மாள் பூக்கடையிலிருந்து வாங்கி வந்திருந்த பூக்களையெல்லாம் அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, சுந்தரியிடம் போய் அவள் கையால் பூ வாங்கிக் கொண்டனர்.

 “இனியாவது எங்க பிரச்சினைகள் தீரட்டும்” என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டும் சென்றனர்.

அவர்கள் சென்றபின் பங்கஜத்திடம் சன்னக் குரலில் கேட்டாள் சுந்தரி, “ஏய் பங்கஜம்.. இங்க என்ன நடக்குது?.. எனக்கு ஒண்ணுமே புரியலை!… தலை சுத்துது”

 “நான் அன்னிக்கு என்ன சொன்னேன், “இன்னும் ரெண்டு மூணு நாள்ல இங்க ஒரு அதிசயம் நடக்கப் போகுது”ன்னு சொன்னேனல்ல?… அது இதுதான்”

 “ஆமாம்… டாக்ஸியில் வந்த அந்தப் பெண்மணி யாரு?…அவங்களை நான் முன்னப்பின்ன பார்த்ததேயில்லையே?…அதுல அவங்க வேற ஒரு மாசமா என் கையாலதான் பூ வாங்கிட்டிருக்கறதா சொல்றாங்க!”

 “ஏய்… கிறுக்கி…. இதெல்லாம் என் வேலைதான்!… நான்தான் காசு கொடுத்து அந்தப் பொம்பளையையும்… அந்த ஆளையும் இப்படி நடிக்கச் சொன்னேன்!… பரவாயில்லை வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாமத்தான் நடிச்சிருக்காங்க… அவங்க ரெண்டு பேரும்” என்றாள் பங்கஜம்.

 சில நிமிடங்கள் பங்கஜத்தின் முகத்தையே கூர்ந்து பார்த்த சுந்தரி, “ஏய் பங்கஜம்… இதெல்லாம் தப்பில்லையாடி?… அப்பாவிப் பெண்களை பொய் சொல்லி ஏமாத்தறது நியாயமாடி” நடுங்கும் குரலில் கேட்க,

 “அய்யோ… இதெல்லாம் வியாபார தந்திரம்!…”

 “இருந்தாலும்…. மனசாட்சி உறுத்துதே” சுந்தரி நெளிந்தாள்.

 “என்னது?… மனசாட்சி….. உறுத்துதா?… அடிப் போடிப்போடி இவளே!… மார்க்கெட்டுல முன்னாடி ஒருத்தன் நாட்டுக்கோழி முட்டை வித்திட்டிருக்கானே?… அதெல்லாம் உண்மையிலேயே நாட்டுக் கோழி முட்டைன்னா நினைக்கறே?… இல்லவே இல்லை எல்லாம் சாயம் போட்ட சாதா முட்டைகள்!… அவனுக்கு மனசாட்சி உறுத்தலையே?”

சுந்தரி வைத்த கண் வாங்காமல் பங்கஜத்தையே பார்க்க,

“நோய்ல செத்துப் போன கோழிகளையெல்லாம் கோழிப் பண்ணைக்காரன் குழி தோட்டிப் புதைக்காம வேற ஒருத்தனுக்கு குறைஞ்ச ரேட்டுக்கு விக்கறானே… அவனுக்குத் தெரியாதா வாங்கறவன் எதுக்கு வாங்கிட்டுப் போறான்?ன்னு….அப்படி வாங்கிட்டுப் போறவன் அந்த நோய்க் கோழிகளைச் சுத்தம் பண்ணி மசாலா போட்டு மயக்கி… வண்டில வெச்சு கம்மி ரேட்டுக்கு விக்கறானே?… அவங்களுக்கெல்லாம் மனசாட்சி உறுத்தாதா…?”

“என்ன பங்கஜம்… என்னென்னவோ சொல்றே?”

“த பாரு சுந்தரி… நல்லவங்களால் இந்த உலகத்துல நல்லாவே வாழ முடியாது!… ஆனா நல்லவங்க மாதிரி நடிக்கத் தெரிஞ்சா போதும் நல்லாவே வாழலாம்!…. எத்தனை சிறப்பா வண்டி இழுத்தாலும் குதிரைக்கு சாட்டை அடி உண்டு!… அதே மாதிரி எத்தனை நல்லவளா நீ இருந்தாலும்… உனக்கும் விமர்சனங்கள் உண்டு!… அதனால… எதையும் கண்டுக்காம… அமைதிப்படைல சத்தியராஜ் சொன்ன மாதிரி… “நாம முன்னேறணும்ன்னா குறுக்க வர்றவங்க யாராயிருந்தாலும்… அடிச்சுத் தூக்கி வீசிட்டுப் போயிட்டேயிருக்கணும்!”

அன்று இரவு வீட்டிற்குள் நுழைந்த பங்கஜத்தை கோபத்தோடு வரவேற்றாள் அவள் மகள் அருந்ததி.  “அம்மா… நீ எதுக்கு தெனமும்… அந்த சுந்தரி பூக்கடைல போய் உட்கார்ந்திருக்கே?… அங்க என்ன வேலை உனக்கு?”

 “சும்மாதாண்டி உட்கார்ந்திருக்கேன்!… எனக்கும் பொழுது போகணுமில்லை?”

 “இல்லை… நீ அங்கே உட்கார்ந்து… போற பொம்பளைகளையெல்லாம் வலியக் கூப்பிட்டு ஏதேதோ பேசி அவங்களை அங்க பூ வாங்க வைக்கிறாயாமே!”

 “யாருடி சொன்னது அப்படி?”

 “ஊரே சொல்லுது… உங்கம்மாவுக்கு எதுக்கு இந்த வேலை?ன்னு”

 “ஊர் சொல்றது இருக்கட்டும்… உனக்கு யார் சொன்னது?” திருப்பிக் கேட்டாள் பங்கஜம்.

 “ம்… அந்த டெய்லர்கிட்டே பிளவுஸ் தைக்க குடுக்கப் போனேன்… அவன்தான் சொன்னான்”

“இங்க பாரு ஜனங்க வாய் இருக்குன்னு கண்டதையும் பேசிட்டுத் திரிவாங்க… அதுகெல்லாம் நாம முக்கியத்துவம் குடுக்கக் கூடாது!.. இப்ப என்கிட்டே கூட நாலஞ்சு பேர் வந்து,  “உன் மகள் அருந்ததி… அந்த மலையாள டெய்லர் கடைக்கு அடிக்கடி போறா… வர்றா… அவங்க ரெண்டு பேரும் பேசிப் பழகர விதம் அவ்வளவு சரியாய்ப் படலை”ன்னு சொல்றாங்க!… நான் இதுவரைக்கும் உன் கிட்ட அதைப் பத்தி ஏதாச்சும் கேட்டிருக்கேனா?”

தன்னால் அடுத்து எதுவும் பேச முடியாத விதத்தை தன் வாயை அடிஅத்து விட்ட தாயை முறைப்பாய் பார்த்துக் கொண்டே நகர்ந்தாள் அருந்ததி.

(-தொடரும்…)

முந்தையபகுதி 2 | அடுத்தபகுதி – 4

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...