கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 3 | பாலகணேஷ்
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று.
ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..!
இந்தத் தலைமுறைக்காகத் தமிழின் சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக சுருக்கி இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறேன்.
சிவகாமியின் சபதம் | கல்கி
நான்காம் பாகம்: சிதைந்த கனவு
ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டிய குமாரியுடன் திருமணமாகி மகேந்திரன் என்ற மகனும், குந்தவி என்ற மகளும் பிறந்திருக்கிறார்கள். மாமல்லர், ஆயனரைச் சந்தித்து தாம் திரட்டியிருக்கும் பெரும் படையுடன் வாதாபி நோக்கிச் செல்வதைச் சொல்ல, தாமும் வருவதாகக் கூறுகிறார் ஆயனர். தன் அரசையிழந்து நரசிம்மரிடம் உதவிகோரி வந்திருக்கும் இளவரசன் மானவர்மன் தானும் மாமல்லருடன் யுத்தத்துக்கு வருவதாகச் சொல்கிறான்.
தன் ஒற்றர் படை மூலம் சில ஆண்டுகளாகவே பல்லவர் படையெடுத்து வருவதாக வதந்தியைக் கிளப்பி, படையெடுக்காமல் புலிகேசியை ஏமாற்றியிருந்தார் மாமல்லர். இப்போது பல்லவர் படையை புலிகேசி எதிர்பார்க்கவில்லை. அஜந்தா மலைச் சித்திரங்களை அவரும் நாகநந்தியடிகளும் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது பல்லவர் படை கிளம்பிய செய்தி வருகிறது. இத்தகவல் முன்பே தெரிந்திருந்தும் தன்னுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக பிட்சு மறைத்துவிட்டார் என்பதை அறியும் புலிகேசி, கோபமாகி அவரைவிட்டுப் பிரிந்து செல்கிறார்.
புலிகேசி தன் படைகளுடன் வாதாபி வரும்முன் வாதாபியை முற்றுகையிட்ட பல்லவர் படையின் ஒரு பிரிவு அவரை எதிர்கொள்கிறது. போரில் சாளக்கிய வீரர்கள் தோல்வியுற, புலிகேசி மாயமாகிறார். நாகநந்தி பிட்சுவை காதலித்து அவரால் காபாலிகையாக்கப்பட்ட ரஞ்சனி என்ற கொடூரமான பெண் தோளில் ஒரு பிணத்துடன் வர, நாகநந்தி எதிர்ப்படுகிறார். அவர் இறந்து விட்டதாகவும், பிணத்தைத்தான் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகவும் அவள் வியப்புடன் கூற, இறந்தது புலிகேசி என்பதை அறிகிறார். சகோதரனைத் தகனம் செய்து விட்டு, வெறியுடன் வாதாபிக்குள் சுரங்கப்பாதை மூலம் வருகிறார்.
இதற்கிடையே முற்றுகையிலிருக்கும் வாதாபி மக்கள் சமாதானத் தூது அனுப்ப, பரஞ்சோதி ஒப்புக் கொள்ளலாம் என்க, மாமல்லர் மறுக்கிறார். அதற்குள் கோட்டையில் வெள்ளைக் கொடி இறக்கப்பட்டு, புலிகேசி தென்படவே போர் துவங்குகிறது. வாதாபியைத் தீக்கிரையாக்குகிறார் நரசிம்மர். புலிகேசியின் வேடத்தைத் துறந்து நாகநந்தியாகி, சிவகாமியைத் தூக்கிக் கொண்டு சுரங்க வழியாக தப்பிக்கப் பார்க்கிறார் பிட்சு. ஒரு புறம் சத்ருக்னனாலும், மறுபுறம் பரஞ்சோதியாலும் மடக்கப்பட, விஷக்கத்தியை எறிந்து சிவகாமியைக் கொல்லப் பார்க்கிறார். ஆத்திரமாகும் பரஞ்சோதி முந்திக் கொண்டு பிட்சுவின் கையைத் துண்டித்து அவரைப் பிழைத்துப் போகும்படி கூற, பிட்சு இருளில் மறைகிறார்.
தன்னை மீட்ட மாமல்லர் தன்னிடம் கடுமையாகப் பேசுவதன் காரணம் அறியாமல் தவி்க்கிறாள் சிவகாமி. தளபதி பரஞ்சோதி, மாமல்லரிடம், தாம் இனி சைவத் துறவியாக சிறுத்தொண்டர் என்ற பெயர் பூண்டு விளங்கப் போவதாகக் கூறி விடைபெற்றுச் செல்கிறார். சிவகாமி காஞ்சி திரும்பியதும்தான் மாமல்லருக்கு திருமணமானதையும், இரண்டு குழந்தைகள் இருப்பதையும் அறிகிறாள். இறைவனையே கணவனாகத் தேர்ந்தெடுத்து தன் வாழ்வை இறைத் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டு ஆலயத்தில் நாட்டியமாடுகிறாள் சிவகாமி. சிவகாமியின் நாட்டியப் பணி தொடர்கிறது.
(- தொடரும்…)