என்னை காணவில்லை – 29 | தேவிபாலா
அத்தியாயம் – 29
கபாலி பெரும் குழப்பத்தில், பயத்தில் இருந்தான். அவனது உளவாளி மூலம் சகல சங்கதிகளும் தெரிந்து விட்டது. காஞ்சனாவை ஆஸ்பத்திரியில் துவாரகேஷ் சேர்த்தது, துளசி ஃபோனை எடுக்காதது என தொடர் சம்பவங்கள் கபாலிக்கு பீதியை உண்டாக்க, ஏற்கனவே துவாரகேஷ் வீட்டில் நள்ளிரவில் வாங்கிய உதையும், போலீஸ் அவனை அடித்து இழுத்து போவதை, அவனது நிர்வாண கோலத்தை தெருவே பார்த்த அவலத்தை கபாலி மறக்கவில்லை.
“ காஞ்சனா உயிருடன் இருந்தா, பல உண்மைகள் வெளில வரும். அவ கதையை முடிச்சிடணும். எப்படீ?”
தன் உதவியாளனிடம் சொல்ல,
“அது ஆபத்து குருவே. ஒருத்தன் டாக்டர் வேஷத்துல காஞ்சனா கதையை முடிக்க வர, அந்த துவாரகேஷ் வித்தை காட்டி, சுடுகாடு வரைக்கும் போலீஸ் வந்து பெரிய களேபரம் ஆயாச்சு. ஊடகங்கள் வரிஞ்சு கட்டி எழுதுது. இன்னிக்கு சமூக வலை தளத்துல சூடான செய்தி இது தான்.!”
“நமக்கும் போலீஸ்ல செல்வாக்கு இருக்குடா. நான் சொல்ற படி செய்!”
அதற்குள் கபாலிக்கு ஃபோன் வந்தது.
“ நான் ஆராவமுதன் பேசறேன். பெரிய கம்பெனி முதலாளி ராஜேந்திரனோட வலது கை. துவாரகேஷ் எங்களோட பரம எதிரி. அவனை அழிக்க நாங்க துடிக்கறோம். காஞ்சனா உதவ வந்தா. அவளை வளைச்சு பிடிச்சிட்டான் துவாரகேஷ். அதனால நேரடியா உன்னை நாங்க சந்திக்கணும். துவாரகேஷை அழிக்க, நீ எங்களுக்கு உதவினா, உனக்கு பெரிய தொகையை நாங்க தருவோம். எங்க புத்தியும், உன் மந்திர, தந்திரங்களும் எங்களுக்கு உதவியா இருக்கணும்.”
“துவாரகேஷோட உச்சி முடி, நகத்துண்டுகள், ரத்தம் மூணும் எனக்கு இன்னிக்கே வேணும். கொண்டு வந்து சேர்த்தா, சுடு காட்ல நடு நிசி பூஜையை நான் நடத்தினா, நாளைக்கு காலைல சூரிய உதயத்துல அவன் எங்கேயிருந்தாலும் ரத்தம் கக்கி சாவான்.”
“இது நடந்தா, அஞ்சு கோடி ரூபாய் உனக்கு நாளைக்கே கை மாறும்.!”
“இன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்குள்ளே நான் கேட்ட பொருட்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துடுங்க. லொகேஷன் அனுப்பறேன்.!”
இதை பேசி முடித்த ஆரா, ராஜேந்திரன் எதிரே இருந்தான்.
“ சார்! இந்த கபாலி சொல்றதை நம்பலாமா?”
“மாந்த்ரீகம், ப்ளாக் மேஜிக் எல்லாமே உண்டு. ஒரு வேளை நடந்தா, துவாரகேஷை ஒழிச்சிடலாம் இல்லையா?”
“சார்! துவாரகேஷை நெருங்கறதே கஷ்டம். எந்த ரூபத்துல, எங்கிருந்து வர்றான்னே தெரியலை. அவன் உச்சந்தலை முடி, நகம், ரத்தத்தை எப்படி சார் எடுக்க முடியும்?”
“அவனை மயங்க வச்சுத்தான் இதை சாதிக்கணும்.!”
“முடியுமா சார்?”
“முடியணும். அடுத்து ரெண்டு பெரிய சர்வதேச வர்த்தகங்கள் வருது. இவனை அதுக்குள்ள ஒழிச்சாகணும். ஒழிச்சிட்டா இவன் சேர்மனால அதை அடைய முடியாது. நம்ம மடில அது வந்து விழும். இந்த நேரம் காஞ்சனா நமக்கு எதிரா ஆயிட்டாளே. துவாரகேஷை பின் தொடர்ந்து கண் காணிக்க ஆள் வச்சிருக்கேன். இப்ப துவாரகேஷ் எங்கேனு கேட்டு, அதுக்கு தக்க செயல் படலாம். நீ கபாலியை பார்த்து பொருட்களை ஒப்படைச்சிட்டு உன் சகாக்களோட தலை மறைவாயிடு. செந்தில் கண் முழிச்சு போலீஸ்ல வாக்கு மூலம் தந்துட்டா, போலீஸ் உன் கும்பலை வளைக்க தயாரா ஆயிடும்.!”
உதவியாளன் ஃபோன் செய்தான்.
“ சார்! துவாரகேஷ் வீட்ல தான் இருக்கார். ஷூகர் டெஸ்ட் எடுக்கணுமாம். ஹோம் டெஸ்ட்டாம். பத்து மணிக்கு வர்றாங்களாம்.!”
ராஜேந்திரன் படக்கென எழுந்தான்.
“ துவாரகேஷ் ஒடம்புல உள்ள சங்கதிகளை எடுக்கற வாய்ப்பு வந்திருக்கு. நான் சொல்ற மாதிரி செய். நம்மாள் லேப் டெக்னீஷியனா உள்ளே போகணும்!”
மள மளவென உத்தரவுகளை பிறப்பித்தான்.
“ கவனமா இருக்கணும். துவாரகேஷ் முட்டாள் இல்லை. கவனமான ஆசாமி. ஜாக்ரதையா இருக்கணும்.!”
அதே நேரம் துவாரகேஷ் வீட்டில் இருந்தான். மாமா, அத்தை இருவரையும் அழைத்து, காஞ்சனாவை ஆஸ்பத்திரியில் கொல்ல முயன்றது முதல், அந்த செந்திலை சுடு காடு வரை கொண்டு போய், போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தப்போகிறது. அடுத்த படியா கபாலியை பிடிக்கணும் என சகலமும் சொன்னான்.
“ மாப்ளே! என்ன கொடுமை இது? உங்களை சுற்றி ஆபத்து விலகலையா? எங்களுக்கு ரொம்ப பயம்மா இருக்கு மாப்ளே!”
“அத்தே பயந்து எந்த லாபமும் இல்லை. எதிரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிட்டே போகுது.!”
“நீங்க உங்க சேர்மன் கிட்ட சொல்லி, வெளி நாட்டுக்கு போயிடுங்க மாப்ளே. குழந்தைங்க கொடைல இருக்காங்க. எங்களையும் உங்கம்மா இருக்கற முதியோர் காப்பகத்துல விட்ருங்க. இங்கே இனி நீங்க இருக்க வேண்டாம்.”
சகலமும் கேட்டு கொண்டிருந்த துளசி வேகமாக வந்தாள்.
“ எனக்கென்ன வழி?”
“ஆஸ்பத்திரில காஞ்சனா கூட போய் படு. இல்லைன்னா நிர்வாண கபாலியை கொண்டு வந்து வீட்ல வச்சுக்கோ. ஒரு உத்தம புருஷனை காமுகனா நினைச்சு, வருஷ கணக்குல சந்தேகப்பட்டு, அவன் மனசை ரணமாக்கின உனக்கு எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மன்னிப்பே இல்லைடி. சந்தேக படற மனைவிகளோ, கணவன்களோ இங்கே இல்லைனு நான் சொல்லலை. ஆனா அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. நீ எல்லாம் கடந்து ரொம்ப தூரம் போயிட்டே. உனக்கு அழிவு தாண்டி வரும். அதுல சந்தேகமே இல்லை!”
துவாரகேஷூக்கு ஃபோன் வந்தது.
“சார்! அந்த செந்தில் முழிச்சு எல்லா உண்மைகளையும் சொல்லிட்டான். ஆராவமுதன், அவரை சேர்ந்த ஆறு பேரை, உடனே கைது பண்ணிடலாமா?”
“கொஞ்சம் பொறுங்க. அவருக்கு முக்கிய வேலை இருக்கு. அவங்களை வச்சுத்தான் ராஜேந்திரனை வளைக்கணும். ஆரா மேல கண்களும், பின் தொடர்தலும் இருக்கட்டும். நான் ப்ளட் டெஸ்ட் முடிச்சிட்டு வர்றேன்.!”
“சீக்கிரம் வாங்க சார்.!”
சரியாக அடுத்த பதினைந்து நிமிஷங்களில் லேப் டெக்னீஷியன் ஒருவர் வந்தார் பெரிய பையை முதுகில் சுமந்து.
“உள்ளே வாங்க சார்!”
“உங்க யூரின் கலெக்ட் பண்ணி குடுங்க சார்!”
சின்ன குழாயை அவன் தர, துவாரகேஷ் உள்ளே வந்து ஜெல் தடவி, டிவைசை செட் செய்து, அரூபமாக வெளியே வந்தான். ட்யூப் மட்டும் நீண்டது அந்தரத்தில். அவன் மிரண்டான்.
“ ப்ளட் எடுத்துக்குங்க!”
குரல் மட்டும் வந்தது. ஆளை காணவில்லை. அவனுக்கு கண்கள் இருள மயக்கம் வந்தது. துவாரகேஷ் உருவம் பெற்று, வந்தவனின் ரத்தம், உச்சி முடி, நகங்களை சேகரித்தான். முடி நகங்களை ஒரு ஜிப் லாக் கவரில் சேகரித்தான். ரத்தம், சிறு நீரை துவாரகேஷ் என பெயரிட்ட குழாய்களில் சேகரித்து, வந்தவனை மயக்கம் தெளிவித்தான். அவன் மிரள மிரள விழித்தான். வாசலில் போலீஸ் தயாராக இருந்தது. அவனை ஒப்படைத்து விட்டு, ஒரு ஃபோன் செய்தான் ஆராவுக்கு. குரலை மாற்றினான்.
“ நம்மாளை சாகர் ஓட்டல் வாசல்ல நிக்க சொல்லுங்க. எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சு. வந்துடும்.!”
சகலத்தையும் துளசி கவனித்து கொண்டிருந்தாள். துவாரகேஷ் குளிக்க போனான். தன் உடைகளை களைந்து குளியலறைக்குள் வர, துளசி வந்தாள். கதவை சாத்தினான்.
“ நான் உங்க மனைவி தான்!”
“நான் சராசரி கணவன் இல்லை. மரத்து போய் ரொம்ப மாசங்களாச்சு. நீ தாராளமா இங்கே இருக்கலாம். உன் புருஷன் செத்தாச்சு. இந்த குளியல் செத்து போன துவாரகேஷூக்காக.”
உடைந்து போனாள் துளசி. பத்தே நிமிஷங்களில் துவாரகேஷ் தயாராகி காரை எடுத்தான். நேராக ஆஸ்பத்திரிக்கு வந்தான். காஞ்சனா தெளிவாக இருந்தாள்.
“ என்னிக்கு எனக்கு டிஸ்சார்ஜ்? எப்ப நான் கபாலியை பார்க்க போகணும்?”
“வேண்டாம் காஞ்சனா. நீ மாறியாச்சுனு அந்த கும்பலுக்கு தெரிஞ்சு போச்சு. அதனால உன்னை அனுப்பலை. இன்னும் ரெண்டு நாள், நீ இங்கே இரு அது தான் பாதுகாப்பு. எனக்கு நிறைய வேலை இருக்கு. வர்றேன்!”
துவாரகேஷ் புறப்பட்டான்.
அதே நேரம் ஆராவமுதனிடம் அவர்கள் கேட்ட துவாரகேஷின் பொருட்கள் ஒப்படைக்கப்பட, ராஜேந்திரன் காரில் காத்திருக்க,
“பார்த்தியா? லேப் டெஸ்ட்டை வச்சு மடக்கினேன். சரி, நீ உன் ஆட்கள் ரெண்டு பேரை கூட்டிட்டு புறப்படு. கபாலி காத்திருப்பான். கொஞ்சம் காட்டு பகுதியா இருக்கும். போய்ச்சேர ஒண்ணரை மணி நேரம் ஆகும். கவனமா இரு. அவன் சூன்யக்காரன்.!”
ஆராவும், அவனுடன் முக்கிய இருவரும் காரில் கொஞ்சம் பயத்துடன் புறப்பட, துவாரகேஷ் காவல் நிலையத்துக்குள் நுழைந்தான். அந்த செந்திலை வைத்து சகல உண்மைகளையும் போலீஸ் வாங்கி விட்டது. அந்த சிப்பில் எல்லாம் பதிவாகி இருந்தது. கபாலி, காஞ்சனாவுடன் பேசியது, செந்திலுக்கு ஆராவமுதன் கொடுத்த உத்தரவு, இவர்களது மேல் கை, ராஜேந்திரன் என எல்லாமே வந்து விட்டது. செந்தில் தெளிவாக, ராஜேந்திரன் தன் காரியம் சாதிக்க ஆராவமுதன் கூட்டணியை பயன்படுத்துகிறான். கம்பெனியை அழிக்க, துவாரகேஷை கொல்ல ஏற்பாடுகள் நடக்கிறது என்றான்.
“ இப்ப என்ன செய்யலாம் துவாரகேஷ்?”
“ சார்! முதல்ல ஆரா க்ரூப்பை வளைக்கணும். அவங்க கபாலியை பார்க்க போறாங்க. அதுல கபாலியையும் சேர்த்து மடக்கிடலாம். போன தடவையே வெளில வர முடியாத அளவுக்கு அவங்க மேல கேஸை போட்டு உள்ளே வச்சிருப்பேன். அவங்களை வெளில நிறுத்தின காரணமா, பல உண்மைகள் வெளில வந்திருக்கு. சில க்ரிமினல்கள் மாட்டியிருக்காங்க. இன்னும் பெரிய முதலைகளை பிடிக்கணும். அதுக்குத்தான்!”
சில குறிப்புகளை தந்து, லொகேஷனையும் தந்து, அவர்களுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தான் துவாரகேஷ். அதற்குள் அவனுக்கு ஒரு ஃபோன் வந்தது.
“ தெரியும். நான் வர்றேன்!”
துவாரகேஷ் காரில் ஏறி புறப்பட, ராஜேந்திரனின் ஆட்கள் கணிசமான இடைவெளியில் பின் தொடர்ந்தார்கள்.
அதே நேரம் ஆராவமுதன் + மூன்று பேர் காரில் வேகமாக போய்க்கொண்டிருந்தார்கள்.
“ இந்த சுடு காட்டு பூஜையெல்லாம் பலிக்குமா தல?”
“பலிக்குதோ இல்லையோ, அதை மட்டும் நம்பாம, அவனை போட வேற ஏற்பாட்டையும் முதலாளி செஞ்சாச்சு. கபாலியை நான் பெரிசா நம்பலை. அவனோட நிர்வாண ஆசிரமத்தை பாக்கணும்னு ஆசை. ஆம்பளைங்க போனா, அவனை மாதிரி கோலத்துல தான் உள்ளே போகணுமாம்.!”
“வெக்கமா இருக்கு தல.!”
“கண்ணை மூடிக்கோ.!”
அடுத்த அரை மணியில் அவனது ஆஸ்ரமத்தை அடைந்தார்கள். விவரத்தை சொல்ல,
“நீங்களும் அவரை மாதிரியே வரணும்!”
மூவரும் பிறந்த நாள் கோலத்துக்கு மாறி, உள்ளே வந்தார்கள். கபாலி அவர்களை வரவேற்க, வெளியே வந்தான்.
“ இதோ நீங்க கேட்ட துவாரகேஷ் தலை முடி, நகங்கள், ரத்தம்!”
கபாலி கை நீட்டி வாங்க, ஃபோன் அடித்தது. எடுத்தான். துவாரகேஷ் தான்.
“ சூன்ய வேஷம் போடற ஆபாச நாயே! அந்த எதுவும் என் பொருள் இல்லைடா. திரும்பி, வாசலை கொஞ்சம் பாரு.”
கபாலி திரும்ப, ஒரு போலீஸ் பட்டாளமே நின்றது. வளைத்து பிடித்தது.
“ ஸ்பீக்கர்ல போடுடா. அந்த ஆரா எத்தனை கௌரவமா வாழ்ந்தான். பணத்தாசைல ராஜேந்திரனுக்கு விலை போய், பதவியை இழந்து, வீட்டை இழந்து, வீதிக்கு வந்து, இன்னிக்கு ஒட்டுத்துணி ஒடம்புல இல்லாம நிக்கறானா? இன்னுமா அவன் உயிரோட இருக்கான்.? இப்படியே இழுத்துட்டு போய் வண்டில ஏத்துங்க. ஜனங்க கல்லால அடிச்சு கொல்லட்டும்.!”
அத்தனை பேரும் மானத்தை இழந்து ஏற்றப்பட்டார்கள்.
(- அடுத்த வாரம் முடியும்…)
முந்தையபகுதி – 28 | அடுத்தபகுதி – 30