என்னை காணவில்லை – 30 | தேவிபாலா

 என்னை காணவில்லை – 30 | தேவிபாலா

அத்தியாயம் – 30

பாலி, ஆரா கூட்டத்தை, போலீஸ் இழுத்துப்போய் வாகனத்தில் ஏற்ற, எங்கிருந்தோ வந்த சமூக வலை தளம், அவர்களது நிர்வாண கோலத்தை படமெடுக்க, ஆராவமுதன் கூசிப்போனான். ஏராளமான கற்கள் வந்து விழுந்தன. கபாலி எதற்கும் அசைந்து தரவில்லை. அதே நேரம் துவாரகேஷை ராஜேந்திரனின் ஆட்கள் பின்பற்ற, ஓரிடத்தில் காரை நிறுத்தி தன் அரூப விளையாட்டை துவாரகேஷ் நடத்த, அவர்களை கார் மோதி தள்ள, அவர்கள் தலை தெறிக்க சாலையில் ஓடி, வாகனங்கள் மோதி, மீடியனில் மண்டை மோதி களேபரமாகி, போக்குவரத்து ஸ்தம்பிக்க, ஒரு ஓரமாக உட்கார்ந்து இத்தனைக்கும் காரணமான துவாரகேஷ் வேடிக்கை பார்த்தான். போலீஸ் அதிகாரிக்கு தகவல் தந்து,

“ராஜேந்திரன் ஆட்கள், மூக்கு முட்ட குடிச்சிட்டு, தாறு மாறா வண்டி ஓட்டி, நூறடி ரோடே களேபரமா இருக்கு. கவனிங்க!”

அடுத்த சில நிமிஷங்களில் போலீஸ் அந்த பகுதியை ஆக்ரமித்து, அத்தனை பேரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். இந்த நேரம் அந்த மின்னணு எக்ஸ்பர்ட் சதீஷ், ராஜேந்திரன் எதிரே இருந்தான்.

“ இது தான் அந்த டிவைஸ். துவாரகேஷ் தயாரிச்ச டிவைஸ். இதை உள்ளே பொருத்தி, நீங்க அனுப்பின ஆராவமுதன் க்ரூப், பத்திரங்களை, கம்பெனி ஃபார்முலாக்களை கைப்பற்றும் போது, தன் சிஸ்டத்துல அதை பார்த்து கையும் களவுமா பிடிச்சிட்டான். இவங்க மாட்டினாங்க. அதுக்கான ஆப்பை என் சிஸ்டத்துல வச்சிருக்கேன்.!”

“அது சரி. ஆனா ஆளில்லாத கார், தானே ஓடற கார், க்ளீனிக்ல வெறும் குரல்னு ஏதோ வித்தை காட்டி எல்லாரையும் பயப்படுத்தறான். அதுவும் விஞ்ஞானம் தான்.”

ராஜேந்திரன் சொல்ல,

“ அந்த கண் கட்டி வித்தை நமக்கு இப்ப அவசியமில்லை. அவங்க டாக்குமென்ட் ரூமை திறக்க ரிமோட் ரெடி பண்ணியாச்சு. அவங்க கம்பெனி செக்யூரிட்டியை விலை பேசியாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல அத்தனை கம்பெனி ரகசியங்களும் கைக்கு வந்துடும். சேர்மன் ஊர்ல இல்லை. துவாரகேஷ் வெளில இருக்கான். முடிச்சிடலாம்.!”

“முடிச்சே ஆகணும். நானே வர்றேன். ஆரா, கபாலி எல்லாருமே அசிங்கமா போலீஸ்ல மாட்டியாச்சு. அவங்க கோலத்தை பாரு!”

அவர் தன் ஐ.ஃபோனில் காட்டினார்.

“ நான் துவாரகேஷை கொல்ல அனுப்பின அத்தனை ஆட்களும் போக்குவரத்துல ரகளை பண்ணி மாட்டியாச்சு. பத்திரங்களை இன்னும் ஒரு மணி நேரத்துல கை பற்றலைன்னா, எல்லாமே கந்தலாயிடும்.!”

“உடனே புறப்படுங்க. உங்க செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணுங்க. வேலை முடியற வரைக்கும் யாரோடும் பேச வேண்டாம்.!”

“எல்லாம் சரியா நடக்குமா?”

“நிச்சயமா நடக்கும். துவாரகேஷை திசை திருப்பணும்.”

“அதுக்கான ஏற்பாட்டை நான் செஞ்சாச்சு.!”

இவர்கள் கம்பெனி ரகசியங்களை களவாட புறப்படும் நேரம், வீட்டில் துளசியின் ஃபோன் ஒலித்தது. அப்பா, அம்மா வெளியே போயிருந்தார்கள். துளசி எடுக்க,

“துவாரகேஷை கார் மோதி ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்க!”

“அய்யோ. எந்த ஆஸ்பத்திரி?”

துளசி அலறி விட்டாள்.

“ உங்களை நாங்க வந்து கூட்டிட்டு போறோம். வந்தாச்சு.!”

கார் வாசலில் நிற்க, துளசி பதட்டத்தில் கதவை கூட பூட்டாமல் காரில் ஏறி விட்டாள். கார் வேகம் பிடித்தது.

அதே நேரம் நிர்வாண கும்பலை ஒட்டு மொத்தமாக போலீஸ் அழைத்து வந்து லாக்கப்பில் போட, அதை காண காவல் நிலைய வாசலில் கனமான கூட்டம். அடி பட்ட ராஜேந்திரனின் கூட்டம் ஒரு புறம் ஸ்டேஷனை ஆக்ரமிக்க,  ஆள், ஆளுக்கு ராஜேந்திரன் பேரை உச்சரிக்க, உயர் போலீஸ் அதிகாரிகள் ராஜேந்திரனுக்கு ஃபோன் போட, ஸ்விட்ச் ஆஃப் என வந்தது.

“ ராஜேந்திரன் கம்பெனி அதிகாரிகளை மடக்குங்க. அவர் வந்தே ஆகணும். இல்லைன்னா அரெஸ்ட் வாரன்ட் ரெடி பண்ணுங்க. சமூகத்தை அசிங்கமாக்கின, விபத்துக்குள்ளாக்கின அத்தனை பேரும் அவர் பேரைத்தான் சொல்றாங்க.!”

கமிஷனர் லைனில் கிடைக்கவில்லை. மற்ற உயர் அதிகாரிகள் ராஜேந்திரனுக்கான அரஸ்ட் வாரன்டை தயார் செய்ய, இங்கே துளசியை சுமந்த கார், எங்கோ பிரதான சாலையை விட்டு விலகி, மண் சாலையில் இறங்க,

“ கார் எங்கே போகுது?”

துளசி கேட்க,

“உயிர் மேல ஆசை இருந்தா பேசாம வா. இல்லைன்னா உன் புருஷன் உயிரும் சேர்ந்து போகும்.!”

“என்னை கொன்னுடு. அவரை விட்ரு.!”

“அவர் தான் பொம்பளை வெறி புடிச்சவராச்சே. எதுக்கு விடணும்?”

“வாயை மூடு. அவரை தப்பா பேசினா உன் சங்கை அறுப்பேன்.!”

“த பார்றா. இது சங்கை அறுக்குமாம். இவ புருஷனோட அதை அறுக்கறதை இவ பாக்கணும்டா.”

துளசி மிரண்டாள்.

அதே நேரம் துவாரகேஷ் கம்பெனி, பின் கேட்டுக்கு அருகே கார் நிற்க, ராஜேந்திரனும், சதீஷூம் இறங்கினார்கள். செக்யூரிட்டி சல்யூட் அடித்து கேட்டை திறந்து விட, சேர்மன் மட்டுமே வரும் விசேஷ நழை வாயிலில் புகுந்து இருவரும் வர,

“சூப்பர். எப்படி இது சாத்தியமாச்சு சதீஷ்?

ராஜேந்திரன் கேட்க,

“எதுவும் பேசாம வாங்க. வேலை முடிஞ்ச பிறகு விளக்கமா சொல்றேன். சீக்கிரமா வாங்க.!”

ராஜேந்திரன் அவனை பின் பற்றி சில நிலைகளை கடந்து குறிப்பிட்ட பகுதிக்கு வந்து விட்டான். அங்கே பேங்க் லாக்கர்கள் இருக்கும் ஸ்ட்ராங்க் ரூம் போல படு கனமாக ஒரு கதவு இருக்க, அதில் சில டிவைஸ்களை பொருத்தினான் சதீஷ். ராஜேந்திரன் படபடப்பாக பார்க்க, சில நிமிஷங்களில் கதவு திறந்தது.

“ உள்ளே வாங்க சார்.!”

இருவரும் உள்ளே வர, விளக்கை போட்டான் சதீஷ். தன் கையில் கொண்டு வந்த டிவைசை சரியான இடத்தில் பொருத்தினான்.

அதே நேரம் ராஜேந்திரன் கம்பெனியை போலீஸ் படை முற்றுகையிட, ஊடகம் சுற்றி சூழ, உயர் அதிகாரிகளை போலீஸ் வளைத்தது.

“ எங்கே ராஜேந்திரன்?”

“நாங்க முயற்சி பண்ணினோம். சார் எங்கே இருக்கார்னே தெரியலை.!”

“கபாலி, ஆரா மாதிரி ஆபாசமான சமூக விரோதிகளை ஏவி விட்டது ராஜேந்திரன். அதுக்கு சட்டத்துக்கு அவர் பதில் தந்தே ஆகணும். கூப்பிடுங்க!”

இந்த நேரத்தில், துளசியை ஒரு தனி வீட்டில் கொண்டு வந்து அடைத்தவர்கள்,

“கபாலி, ஆராவமுதனை போலீஸ் எந்த கோலத்துல கைது பண்ணியிருக்கு பார்த்தியா?”

அவளுக்கு காட்ட, துளசி அருவருப்புடன் முகம் சுருக்க,

“ என்னம்மா நடிக்கறே? கபாலி, நிர்வாண கோலத்துல, நடுநிசில உன் வீட்டுக்கு வரலியா? வந்தவன் உன்னை சும்மாவா விட்டிருப்பான்?”

“வாயை மூட்ரா!”

“ஏம்மா? எல்லா தகுதிகளும் நிறைஞ்ச அழகான உன் புருஷனை விடவா, கபாலி உனக்கு சுகம் தந்தான்?”

துளசி காதுகளை மூடிக்கொண்டாள்.

“ மாப்ளே! இது, நல்ல புருஷனை அழிக்க அசிங்கமான கபாலி கூட கள்ள உறவு வச்ச பொம்பளை. அவன் பாவம், தன் தாயை, குழந்தைகளை வீட்ல வச்சுக்கலை. இது மூளை கலங்கின பொம்பளை.!”

“சரி வா. வந்த வேலையை முடிப்போம்.!”

ஒருவன் சட்டையை கழட்ட,

“இந்த பொம்பளையையா  மாப்ளை?”

“மூஞ்சி எப்படி இருந்தா என்ன? கபாலியையே பார்த்தவ, நம்மை வேண்டாம்னா சொல்லுவா?”

துளசி கதறி விட்டாள். அவமானத்தில் துடித்தாள். ஒவ்வொரு சொல்லும், உள்ளே விஷம் தடவிய கத்தியாக நெஞ்சில் செருகியது.

‘எப்பேற்பட்ட உத்தம புருஷனை, அழகனை, அறிவாளியை, இத்தனை டார்ச்சர் தந்தும், மனைவியை வெளியே விரட்டாத மனசாட்சி காரனை, நான் படுத்திய கொடுமை கொஞ்சமா? அந்த மகா பாவத்துக்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான்.’

அதே நேரம், அங்கே சதீஷ் முக்கிய பத்திரங்களை, கம்பெனியின் வெற்றி ஃபார்முலாக்களை எடுத்து ராஜேந்திரனிடம் தர, அதை வாங்க ராஜேந்திரன் கை நீட்ட, ஓங்கி ஒரு உதை விழுந்தது. ராஜேந்திரன் தூரப்போய் விழுந்து அதிர்ந்து திரும்பி,

“சதீஷ், ஏன் என்னை உதைச்சே?”

கேட்பதற்குள் சரமாரியாக அடி விழ, ஜெல்லை கலைத்து விட்டு, துவாரகேஷ், சேர்மன், போலீஸ் கமிஷனர் மூவரும் வெளியே வர, ராஜேந்திரன் இருண்டு போக,

“சதீஷ் நான் அனுப்பின ஆள் தான். உன்னை கையும் களவுமா பிடிக்கணும் இல்லையா? அதுக்குத்தான். எல்லாத்தையும் வீடியோ எடுத்தாச்சு. உன் கம்பெனி வாசல்ல களேபரம் நடக்குது. போலீஸ் அரஸ்ட் வாரன்டோட உன்னை தேடுது. உன் கம்பெனியை சீல் வைக்கப்போறாங்க. கௌம்பு.!”

சேர்மன், துவாரகேஷை கட்டித்தழுவ,

“ இனி ஜெல்லுக்கும், டிவைசுக்கும் வேலையில்லை சார். அது விஞ்ஞான விபரீதம். நான் உருவாக்கினதை, நானே அழிச்சிர்றேன். ரெண்டு பேரை ஏற்பாடு பண்ணி துளசியை தூக்கிட்டு போக ஏற்பாடு பண்ணியிருந்தேன். அவங்களுக்கு ஃபோன் பண்ணி துளசியை வீட்டுக்கு கொண்டு வர சொல்றேன்.!”

ராஜேந்திரன் கம்பெனிக்கு சீல் வைத்து தப்பான அத்தனை பேரையும் போலீஸ் கைது செய்ய, ஊடகத்தில் செய்தி புயலாக வீசி கொண்டிருக்க, துவாரகேஷ் பெரிய ஹீரோ ஆகி விட்டான். சகலமும் முடித்து துவாரகேஷ் வீடு திரும்ப, மாமியார் ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.

“ சாதிச்சிட்டீங்க மாப்ளை. அவ உள்ளே தான் இருக்கா!”

துளசி வெளியே வந்தாள்.

“ அத்தையை, குழந்தைகளை இங்கே கூட்டிட்டு வந்துடுங்க!”

“நீ இருக்கற இந்த வீட்டுக்கு யார் வருவாங்க?”

அம்மா கேட்க,

“இல்லைம்மா. இங்கே வாழ எனக்கு எந்த தகுதியும் இல்லை. என் காற்று கூட இந்த நல்லவர் மேல படக்கூடாது. நான் தற்கொலை செஞ்சுக நினைச்சேன். ஆனா என்னை மாதிரி ஒருத்தி படக்குனு சாகக்கூடாது. நிறைய அனுபவிக்கணும். காஞ்சனா இப்ப வருவா. நாங்க ஆர்ஃபனேஜ் போறோம். அவ பதிவு பண்ணிட்டா.! என்னை பார்க்க கூட யாரும் வராதீங்க. நல்ல புருஷனும், அவருக்கு நான் பெத்த முத்தான குழந்தைகளும், இதே ஊர்ல இருக்க, அவங்களை பிரிஞ்சு நான் வாழறது எனக்கு நானே விதிச்சுகிட்ட ஆயுள் தண்டனை. என்னை காணாம நானே வாழ் நாள் முழுக்க தேடணும்.!”

காஞ்சனா வந்து துவாரகேஷை வணங்கி, துளசியை அழைத்து போனாள்.

துவாரகேஷ் அவளை தடுக்கவில்லை.

கணவன், மனைவி சேர்க்கையும், நியாயமான உடல் உணர்வுகளும் இங்கே புனிதம். மனித இனத்தை பெருக்கும் வரம். ஆனால் ஆபாச பாலியல் சிந்தனைகளும், வக்கிர மனசும் வாழ்வின் நிம்மதியை அழித்து விடும். அம்மாவையும், குழந்தைகளையும் வீட்டுக்கு அழைக்க, துவாரகேஷ் புறப்பட்டு விட்டான்.

( நிறைவு)

முந்தையபகுதி – 29

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...