“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 4 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 4
வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரி, நிறைய நிறுத்தங்கள், நிறைய வழித்தட மாற்றங்கள், விதவிதமான மனிதர்கள், சில நேரம் விபத்துக்கள், அனைத்தையும் விரும்பியோ, விரும்பாமலோ, ரசித்துக் கொண்டே பயணிக்கின்றோம். அதுபோல், வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே பயணித்தால் சுமைகள் சுகமாகும்.
தனக்குப் பின்னால் ஒரு சதி நடப்பதையும், அதன் காரணமாய் தன் வியாபாரம் முற்றிலுமாய் சரிந்து போய் விட்டதையும், அறியாத வள்ளியம்மா, “இதுவும் கடந்து போகும்” என்கிற மனநிலையில் வாழ்க்கையை ரசித்துக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்தாள்.
அவள் கடை முன் வந்து நின்ற இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி வந்த அந்த இளைஞன், “ஏம்மா… நீதானே அந்த பிரகாஷோட அம்மா?” கேட்டான்.
“ஆமாம்ப்பா… நீ யாரு?”
“நான் யாரு?ங்கறது இருக்கட்டும்… எங்கே உன் மகன் பிரகாஷ்?” அந்த இளைஞனின் பேச்சில் ஒரு ஆணவமும், அதிகாரமும் கலந்திருக்க,
“தம்பி… நீ யாரு?ன்னு நீ சொல்ல மாட்டே!… ஆனா நான் மட்டும் என் மகன் பிரகாஷ் எங்கே?ன்னு நீ கேட்டவுடன் சொல்லிடணும்!.. அப்படித்தானே?… சொல்ல முடியாது போ…” சற்றும் தயக்கமில்லாமல் சொன்னாள் வள்ளியம்மா.
அவளிடம் தன் விறைப்புத்தனம் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்ட அந்த இளைஞன், “நான் துருவா ஃபைனான்ஸ் கம்பெனில இருந்து வர்றேன்!… உங்க மகன் மூணு மாசமா பைக் டியூ கட்டலை!… அதான் பைக்கை தூக்க வந்திருக்கேன்!” என்றான் சாதாரணமாக.
“என்னது?… மூணு மாசமா பைக்குக்கு தவணைத் தொகை கட்டலையா?… அடப்பாவி… கரெக்டா ஒம்பதாம் தேதி… ஆனா என் கிட்ட வந்து “ம்மா.. நாளைக்கு டியூம்மா”ன்னு சொல்லி வாங்கிட்டுப் போயிடுவானே?… கட்டலையா?”
“அது செரி… கட்டாததினாலதானே வந்திருக்கேன்!.. பைக் எங்கிருக்கு?” சுற்றும்முற்றும் தேடினான் அந்த இளைஞன்.
“அதை எடுத்திட்டுத்தான் அவன் போயிருக்கான்” என்றாள் வள்ளியம்மா.
“எப்ப வருவான்?”
“இன்னும் கால் மணி நேரத்துல எனக்கு சாப்பாடு கொண்டு வருவான்!”
“அப்பச் செரி… இங்கியே வெய்ட் பண்ணி வாங்கிட்டுப் போறேன்” என்ற இளைஞன் சற்றுத் தள்ளியிருந்த பெட்டிக்கடையை நோக்கி நடந்தான்.
“என்னவோ தெரியலை… கொஞ்ச நாளா எல்லாமே எனக்கு எதிராவே நடக்குது” தனக்குள் புலம்பிக் கொண்டாள் வள்ளியம்மா. அவளுக்கு எதிராய் பங்கஜம் என்னும் பாதகி ஒருத்தி செயல் பட்டுக் கொண்டிருப்பது பாவம், அவளுக்கெப்படித் தெரியும்?
மின்னல் வேகத்தில் வந்து நின்ற பல்ஸர் பைக்கிலிருந்து இறங்கிய வள்ளியம்மா மகன் பிரகாஷ், சாப்பாட்டுக் கூடையை அவளிடம் நீட்ட, அவள் பார்வையோ பெட்டிக்கடையிலிருந்து இவர்களை நோக்கி வரும் அந்த ஃபைனான்ஸ் இளைஞன் மீதேயிருந்தது.
“அட… சாப்பாட்டுக் கூடைய வாங்காம அங்கென்ன பார்வை?” கேட்டவாறே திரும்பிப் பார்த்த பிரகாஷ் அந்த இளைஞனை அடையாளம் தெரிந்து கொண்டு திருட்டு முழி முழித்தான்.
அதற்குள் அருகில் வந்தவன், இவனிடம் எதுவும் கேட்காமல் பைக்கின் சாவியை உருவித் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, “என்ன மூணு டியூ உடனே செட்டில் பண்றியா?.. இல்லை வண்டியைத் தூக்கட்டுமா?” மிரட்டல் தொணியில் கேட்க,
தாயைப் பார்த்தான் பிரகாஷ். “என்ன எதுக்குடா பாக்கறே?… நான்தான் ஒவ்வொரு மாசமும் கரெக்டா ஒன்பதாம் தேதி உன் கைல பணத்தைக் குடுக்கறேனே?”
“ம்மா… அது வந்து…”
“இங்க பாருங்க… உங்க பிரச்சினையை நீங்க அப்புறமா பேசிக்கங்க… இப்ப பணம் குடுக்க முடியுமா?.. முடியாதா? சொல்லுங்க நான் வண்டியைத் தூக்கணும்”” பறந்தான் அந்த ஃபைனான்ஸ் இளைஞன்.
“தூக்கிடுவியா?… தூக்கிடுவியா?” சும்மாவாகிலும் உதார் விட்டான் வள்ளியம்மா மகன்.
அந்தச் செயல் இந்தப் பிரச்சினையை இன்னும் அதிகமாக்கி விடும், என்பதைப் புரிந்து கொண்ட வள்ளியம்மா, “தம்பி… கொஞ்சம் இருப்பா… பத்தே நிமிஷத்துல பணத்தோட வர்றேன்”
மகனை கடைக்குக் காவல் வைத்து விட்டு அவசர அவசரமாய், நகை அடகுக் கடையை நோக்கி ஓடினாள் வள்ளியம்மா.
ஃபைனான்ஸ் இளைஞன் மீண்டும் பெட்டிக்கடைக்கே போனான் இன்னொரு சிகரெட்டை காலி செய்ய..
சரியாக இருபதாவது நிமிடத்தில் திரும்பிய வள்ளியம்மாவின் கைகளில் கற்றைப் பணம். “அம்மா… எப்படி?” பிரகாஷ் கேட்க,
கழுத்தைக் காட்டினாள். அது வெறுமையாயிருந்தது. “செயினை அடகு வெச்சிடேண்டா”
“ஏம்மா… எதுக்கும்மா?” மகன் கலங்கினான்.
“உன்னை மாதிரி ஒரு மகனைப் பெத்ததுக்கு தண்டனைன்னு வெச்சுக்கறேன்”
வள்ளியம்மா வந்து விட்டதைக் கண்டு பெட்டிக்கடையிலிருந்து வந்தான் ஃபைனான்ஸ்காரன். “என்னம்மா… மூணு டியூவும் கட்டறீங்களா?”
“ஆமாம்… எவ்வளவுன்னு சொல்லு”
“லேட் ஆனதுக்கு ஃபைனோட பதினேழாயிரத்து… முன்னூறு” என்று அவன் சொல்ல,
“அந்த ஃபைனெல்லாம் எதுவும் தர முடியாது!… வேணும்ன்னா மூணு டியூ பணத்தை வாங்கிட்டு இடத்தைக் காலி பண்ணு” என்றாள் வள்ளியம்மா.
“எனக்கென்ன… நான் வாங்கிக்கறேன்!… கடைசில அக்கௌண்ட் செட்டிலாகும் போது… இந்த அமௌண்ட் தொங்கிட்டு நிக்கும்” புலம்பியவாறே அவள் கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டு கிளம்பினான் அந்த ஃபைனான்ஸ்காரன்.
(- தொடரும்…)