கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 4 | பாலகணேஷ்

 கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 4 | பாலகணேஷ்

தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களின் லிஸ்ட் போட்டால் அதில் தவறாமல் இடம் பெறத் தக்க அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற அரிய நாவலின் சுருக்கம் இப்போது உங்களுக்காக இங்கே! இந்த நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் 13 வாரத் தொடராக திரு.மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிஞ்சி மலர்

நா.பார்த்தசாரதி

தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகள் பூரணி. சமீபத்தில் காலமான அவர், தம்பிகள் நாவுக்கர சனையும், சம்பந்தனையும், தங்கை மங்கையர்க்கரசியையும் காப்பாற்றும் பொறுப்பை பூரணியின் இளம் தோள்களில் சுமத்தி விட்டுப் போயிருந்தார். செல்வம் எதையும் சேகரித்து வைக்காவிட்டாலும் ஒழுக்கத்தையும், தமிழறிவையும் பூரணிக்கு சொத்துக்களாக விட்டுப் போயிருந்தார்.

    வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டுக் காலி செய்யும்படி வீட்டுக்காரர் சொல்லிவிட, அப்பாவுக்கு வர வேண்டிய பணத்தைக் கல்லூரியில் கேட்பதற்காக பூரணி தான் வசிக்கும் திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை வருகிறாள். கல்லூரியிலும் சரியான பதிலின்றி, அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளரும் பணம் தராமல் ஏமாற்றிவிட வெயிலில் நடந்து வரும் பூரணி நடுச்சாலையில் கார் ஒன்றின் முன் மயங்கி விழுகிறாள்.

    காரை ஓட்டிவந்த மங்களேசுவரி என்ற அம்மாள் அவளைத் தன் வீட்டிற்குக் கொண்டு சென்று மயக்கம் தெளிவிக்கிறார். பூரணியின் அழகும் பேச்சும் அவரைக் கவர்ந்து விடுகிறது. இலங்கையிலிருந்து வந்த செல்வம் மிகுந்த அந்த அம்மாள், நாகரீக மங்கையான தன் மூத்த மகள் வசந்தாவையும், அடக்கமான இளைய பெண் செல்லத்தையும் பூரணிக்கு அறிமுகப்படுத்துகிறார்.

    பூரணி மயங்கி விழுந்ததையும், எவரும் கவனிக்காமல் செல்வதையும் கண்ட அரவிந்தன் என்ற இளைஞன் தன் டைரியில் அதைக் கவிதையாக எழுதி வைக்கிறான். அரவிந்தன் அழகன்; கவிஞன்; ஏழைகளுக்கு உதவும் லட்சிய இளைஞன். தானே வேலை செய்து படித்து வளர்ந்தவன். மீனாட்சி அச்சகத்தின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் அவனுக்கு சிறு வயதிலிருந்து ஆதரவளித்தவர். பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் நூல்களை வெளியிட உரிமை வாங்கி வருமாறு அரவிந்தனை அனுப்புகிறார். அப்பாவின் பதிப்பாளர் ஏமாற்றிய கோபத்தில் பூரணி அரவிந்தனைத் திட்டிவிட, அரவிந்தன் போய் விடுகிறான். அவன் விட்டுச் சென்ற டைரியைப் படிக்கும் பூரணி, அவனைப் புரிந்து கொண்டு அப்பாவின் நூல்களை வெளியிட அனுமதி தருகிறாள்.

    மங்களேசுவரி அம்மாள் பூரணிக்கு ‘மங்கையர் கழக’த்தில் பாடம் சொல்லித் தரும் வேலையை வாங்கித் தருகிறார். புத்தகம் வெளியிடுவதற்காக அடிக்கடி சந்திக்க நேரும் அரவிந்தனும் பூரணியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கின்றனர். பேராசிரியரின் நூல்களை வெளியிட்ட புதுமண்டபப் பதிப்பாளர் பூரணியின் வீட்டுக்கு வந்து, அவள் மீனாட்சி அச்சகத்துக்கு உரிமை அளித்ததற்காக சண்டை போடுகிறார். அப்போது அங்கு வரும் அரவிந்தனையும் அறைந்துவிட்டு, கருவியபடி சென்று விடுகிறார்.

    அரவிந்தன் முருகானந்தம் என்ற ஒரு முரட்டு இளைஞனை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். பார்வைக்கு முரடனாகத் தெரியும் அவன் உண்மையில் நல்ல மனம் படைத்தவன் என்பதை உணர்கிறாள் பூரணி. அரவிந்தன், மீனாட்சி அச்சகத்திலுள்ள புத்தகங்களை எரிப்பதற்கு நள்ளிரவில் நடக்கும் ஒரு முயற்சியை முறியடிக்கிறான். அதை முருகானந்தத்திடம் கூறும்போது பூரணியை அழைத்துக் கொண்டு மங்களேசுவரி அம்மாள் பதறியபடி அங்கு வருகிறார். அவர் மகள் வசந்தா நிறையப் பணத்துடன் வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும், எங்கே என்று தெரியவில்லை என்றும் பதறுகிறார். போலீஸ் மூலம் மறுநாள் நடவடிக்கை எடுக்கலாம் என அவர்களுக்கு ஆறுதல்கூறி அனுப்பி வைக்கிறான் அரவிந்தன்.

    வசந்தாவின் போட்டோவைப் பார்க்கும் முருகானந்தம் தன் கஸ்டமர் விட்டுச் சென்ற பர்ஸிலிருந்த அவள் போட்டோவைக் காட்டுகிறான். பர்ஸிலிருந்த லெட்டர் மூலம் வசந்தா சினிமாவில் நடிக்கும் ஆசையில் வீட்டை விட்டு ஓடியதை அறிகிறார்கள். தான் திருச்சியில் இருப்பதாகவும், தன்னை அழைத்துச் செல்லுமாறும் வசந்தா கொடுத்த தந்தி அடுத்தநாள் மங்களேசுவரி அம்மாளுக்கு வருகிறது. பணம், நகைகளைப் பறிகொடுத்து ஏமாந்த அவளை முருகானந் தத்துடன் சென்று அழைத்து வருகிறார் அவர்.

    தீய சகவாசத்தால் ‌கெட்ட வழியில் செல்லும் பூரணியின் தம்பி நாவுக்கரசைத் திருத்தி தன் அச்சகத்திலேயே வேலைக்குச் சேர்க்கிறான் அரவிந்தன். வசந்தாவை ஏமாற்றியவனை முருகானந்தம் போலீசில் பிடித்துக் கொடுக்கிறான். இதற்கிடையில் பூரணி மேடைச் சொற்பொழிவாற்றுவதில் நல்ல புகழ் பெற்று, தொடர்ந்து சொற்பொழிவுகள் செய்த வண்ணமிருக்கிறாள். அவ்வாண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட பூரணியின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்கிறான் அரவிந்தன். சொற்பொழிவில் உணர்ச்சிவசப்பட்டு பேசும் பூரணி வாயிலிருந்து ரத்தம் வர மயங்கி விழுகிறாள். தொடர்ந்த சொற்பொழிவால் தொண்டை பாதிக்கப் பட்டிருக்கும் அவளுக்கு ஓய்வு ‌தேவை ‌என டாக்டர் சொல்ல, ஓய்வுக்காக வசந்தாவுடன் அவளை கொடைக் கானலுக்கு அனுப்புகிறார் மங்களேசுவரி.

    முருகானந்தத்துக்கு கொடைக்கானலிலிருந்து வந்த கடிதத்திலிருந்து அவனும் வசந்தாவும் காதலிப்பதை அறிகிறான் அரவிந்தன். மீனாட்சிசுந்தரம் அவனிடம் பூரணியை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கூறி, பூரணியை சம்மதிக்க வைக்குமாறு கேட்கிறார். அரவிந்தனுக்கு அதில் விருப்பமின்றி அரை மனதுடன் சம்மதி்கிறான். அவனால் கொடைக்கானல் போக இயலாதபடி சித்தப்பாவின் மரணம் குறுக்கிட, தானே முருகானந்தத்துடன் கொடைக்கானல் போகிறார் மீனாட்சிசுந்தரம்.

    சித்தப்பாவின் ஈமச்சடங்கில் அரவிந்தனைச் சந்திக்கும் பர்மாக்காரர் என்றழைக்கப்படும் அவன் உறவினர், புதுமண்டப பதிப்பாளர் தேர்தலில் நிற்கப் போவதாகவும், பூரணியை அரவிந்தன் நிறுத்தக் கூடாதென்றும் மிரட்டுகிறார். விளைவாக, அரவிந்தன் பூரணியை வேட்பாளராக நிறுத்துவ தென்று முடிவெடுத்து, அவள் சம்மதத்தையும் பெற்று விடுகிறான்.

    மங்களேசுவரி அம்மாளிடம் பேசி முருகானந்தம்-வசந்தாவுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் அரவிந்தன். அவனுக்கும் பூரணிக்கும் மணம் செய்து வைக்க மங்களேசுவரி அம்மாவும், மீனாட்சிசுந்தரமும் விரும்ப, மனம் ஒன்றுபட்ட வாழ்க்கையே போதும் என மறுத்து விடுகிறான் அரவிந்தன். பூரணிக்கு பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பேச அழைப்பு வர, வெளிநாடு செல்கிறாள்.

     தன் நபர் தேர்தலில் ஜெயிப்பதற்காக அரவிந்தனுக்கு பல தொல்லைகள் தரும் பர்மாக்காரர், மீனாட்சிசுந்தரம் விற்க விரும்பிய சொத்தை விற்க விடாமல் செய்து அவரை பணக்கஷ்டத்தில் ஆழ்த்துகிறார். அந்தக் கவலையில் மீனாட்சிசுந்தரம் இறந்து விடுகிறார். தேர்தல் வேலையில் ஈடுபட்ட நாவுக்கரசை பர்மாக்காரரின் ஆட்கள் அடித்துவிட, கோபமாக நியாயம் கேட்கப் போகும் அரவிந்தனையும் அடித்துத் துன்புறுத்தி புதுமண்டப குடோனில் அடைத்து விடுகிறார்கள். விபரமறியும் முருகானந்தம், தன் நண்பர்களுடன் சென்று பர்மாக்காரரின் ஆட்களை உதைத்து, குடோன் பூட்டை உடைத்து அரவிந்தனை மீட்டு வருகிறான்.

    நாடு திரும்பும் பூரணி, நடந்ததையெல்லாம் அறிந்து வருந்துகிறாள். முருகானந்தம் தன் ஆட்களை அடித்ததில் கோபமான பர்மாக்காரர் மேலும் சூழ்ச்சி செய்து மீனாட்சிசுந்தரத்தின் மனைவி மற்றும் மருமகன்களின் மனதைக் கலைத்து அச்சகப் பொறுப்பை அவர்களே ஏற்று நடத்தும்படியும், அரவிந்தனை வெளியேற்றும்படியும் செய்கிறார். மனமுடைந்த அரவிந்தனை முருகானந்தமும், வசந்தாவும் வற்புறுத்தி தங்கள் வீட்டுக்கு அழைத்துவர, மங்களேசுவரி அம்மாள் ஆறுதல் சொல்கிறார்.

    மதுரை மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்தில் கொடும் விஷக்காய்ச்சல் ஒன்று பரவி, பலர் இறந்து கொண்டிருப்பதை செய்திகளில் படிக்கும் அரவிந்தன் கடிதம் எழுதி வைத்துவிட்டு மக்களுக்கு உதவ அங்கு சென்று விடுகிறான். தேர்தல் வேலையை வெறியுடன் கவனிக்கும் முருகானந்தத்திடம், அரவிந்தன் சென்ற நாளிலிருந்து பூரணி சோகமாக இருப்பதைக் கூறி அவனை அழைத்து வரும்படி விரட்டுகிறாள் வசந்தா. அரவிந்தன் அங்கு தொண்டு செய்து நிறையப் பேரைக் காப்பாற்றி, தான் விஷக்காய்ச்சலைப் பெற்றுக் கொண்டு களை இழந்தவனாக வருகிறான். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

    தேர்தலில் பூரணி வெற்றி பெற்ற செய்தியுடன், மேளதாளத்துடன் அவளை அழைத்துவர வருகிறான் முருகானந்தம். அங்கே அரவிந்தன் இறந்த செய்தி அவனுக்குக் கிடைக்கிறது. அரவிந்தனை இழந்து கதறி அழும் பூரணி, ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு வெள்ளை ஆடையுடன், திலகம், வளையல் அணியாமல் விதவைக் கோலம் பூணுகிறாள். தனக்குக் கிடைத்த பதவியையும் துறந்துவிட்டு பெண்கள் முன்னேற்றத்துக்காகத் தன் சொற்பொழிவுகளைத் தொடர்கிறாள். அந்தக் குறிஞ்சி மலர் என்றும் வாடாமல் அரவிந்தன் நினைவுடன் தன் சேவையைத் தொடர்கிறது.

நாவலில் ஆங்காங்கே திரு.நா.பார்த்தசாரதி அள்ளித் தெளித்திருக்கும் தத்துவ முத்துக்களையும், அநாயாசமாக வந்து விழும் அவருடைய உவமைகளையும், அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்களை அவர் வார்த்திருக்கும் அழகையும் இந்தக் ‘கேப்ஸ்யூல் நாவல்’ உங்களுக்குத் தந்துவிட இயலாது. புத்தகத்தை முழுமையாகப் படித்தால் மட்டுமே இந்தக் குறிஞ்சி மல’ரின் மணத்தை நன்கு நு்கர முடியும். குறிஞ்சி மலர் 800 பக்கத்திற்கும் மேற்பட்ட கடல். இந்த கேப்ஸ்யூல் நாவல் அந்தக் கடலிலிருந்து அள்ளிக் கொட்டிய ஒரே ஒரு ஸ்பூன்தான்!

முந்தையபகுதி – 3 | அடுத்தபகுதி 5

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...