கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 5 | பாலகணேஷ்

 கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 5 | பாலகணேஷ்

சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் ‘யவனராணி’ தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான  இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளையும், அழகான உரையாடல்களையும், கதாநாயகன் இளஞ் செழியனின் வீரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உணர்வதற்கு முழுநாவலையும் படித்து அனுபவிப்பதே சிறப்புடையது. இது அதன் ஜுஸ் மட்டுமே!

யவன ராணி

சாண்டில்யன்

சோழர்களின் பிரதான கடற்கரை நகரமான பூம்புகாரில் சோழர் படை உபதலைவன் இளஞ்செழியன், தன் மேல் கோபத்துடன் இருக்கும் மாமன் மகள் பூவழகியின் நினைவுடன் கடற்கரையில் நடந்து சென்று கொணடிருக்கும் போது அவன் காலில் இடறுகிறாள் ஒரு யவனப் (கிரேக்க) பெண். அவளைத் தன் இல்லத்துக்கு எடுத்து வந்து முதலுதவி செய்ய முற்படுகிறான் இளஞ்செழியன்.  அவன் மெய்க்காப்பாளன் ஹிப்பலாஸ், அவள் அணிந்திருக்கும் அன்னப் பறவை ஆபரணத்தை வைத்து அவள் யவன அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும் அவள் வந்திருப்பது தெரிந்தால் புகாரின் யவனர்கள் ஒன்று திரண்டு புரட்சி செய்து புகாரைக் கைப்பற்றி அவளை அரசியாக்கி விடுவார்கள் என்றும் சொல்லி அஞ்சுகிறான். அதை மெய்ப்பிப்பது போல் கோட்டைக் காவல் தலைவன் (யவனன்) விசாரணைக்கு வர, யவன ராணியை மறைத்து கோட்டைத் தலைவனை மிரட்டி அனுப்புகிறான் இளஞ்செழியன்.

வீரர்களுடன் வருவதாகக் கூறிய கோட்டைத் தலைவன், சோழ மன்னன் இளஞ்சேட்சென்னி அவர் மாளிகையிலேயே இருங்கோவேள் என்பவனால் எரித்துக் கொல்லப் பட்டதாகவும், இளவரசன் திருமாவளவனைக் காணவில்லை என்றும் அதிர்ச்சிக் குண்டுகளை இளஞ்செழியன் மீது வீசிச் செல்கிறான். மயக்கத்திலிருந்து விழித்த அந்த யவனப் பெண்ணோ, தான் டைபீரியஸ் என்ற புகழ்பெற்ற கடற்படைத் தலைவனுடன் வந்ததாகவும் கடற் கொள்ளையருடன் ஏற்பட்ட போரினால் கப்பல் மூழ்கி தான் மரக்கட்டையைப் பிடித்து தப்பியதையும் கூறுகிறாள்.

இதற்கிடையில் கோட்டைத் தலைவன் பல வீரர்களுடன் இளஞ்செழியன் மாளிகையைச் சூழ்ந்து கொள்ள, போரிட்டுத் தப்பும் இளஞ்செழியன், யவன ராணியை பிரும்மானந்தர் என்னும் துறவியின் மடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே இருக்கும் பூவழகி அவன் ஒரு யவனப் பெண்ணுடன் வருவதைக் கண்டதும் மேலும் சினமடைகிறாள். அப்போது டைபீரியஸ் அங்கு வர, தன் ஆசிரமம் வீரர்களால் சூழப்பட்டிருப்பதை அறிந்த அடிகள், இளஞ்செழியன் விருப்பத்துக்கு மாறாக யவனராணியை அவனுடன் அனுப்புகிறார். சுரங்கப்பாதை வழியாக அனைவரும் தப்பிச் சென்று கடற்கரையை அடைகையில் டைபீரியஸால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது அவர்களுடன் வந்த இளஞ்செழியன் தப்பிச் சென்றுவிட்டதை அறிகிறான் டைபீரியஸ்.

தப்பிய இளஞ்செழியன் இரவில் கோட்டைச் சுவரேறி யவன ராணியைத் தன் வாணகரை என்னும் கடற்கரை தீவுக் கோட்டைக்கு கடத்திச் செல்கிறான். அவளை மீட்க வரும் டைபீரியஸிடம் பிரும்மானந்தர் உள்ளிட்டவர்களை விடுவிக்கும்படி யவனராணி சொல்ல, டைபீரியஸ் அவள் ஆணைப்படி அவர்களை விடுதலை செய்து அனுப்பி வைக்கிறான். பிரும்மானந்தர், திருமாவளவனின் மாமாவான இரும்பிடர்த் தலையர் என்பவருக்கு ஒரு ஓலை எழுதி இளஞ்செழியனை யவனராணியுடன் சேர நாட்டில் தன் சிஷ்யனின் மடத்துக்கு செல்லச் சொல்கிறார். அங்கு செல்லும் இளஞ்செழியன் அந்த ஓலையை இருங்கோவேளிடமே ஒப்படைக்கும்படி நேர்கிறது.  இருங்கோவேளை தந்திரமாகப் பேசி சமாளிக்கிறான் இளஞ்செழியன்.

அன்றிரவு. வீரர்களால் சூழப்பட்ட மடத்தில் சமணத் துறவியுடன் தங்கும் இளஞ்செழியன், மர்ம மாளிகை என்று அவர் காட்டும் ஒரு மாளிகை அப்போது எரிவதைக் காண்கிறான். இருவரும் அங்கு சென்று எரிந்த மாளிகையிலிருந்து தப்பும் திருமாவளவனைக் காப்பாற்று கின்றனர். ஒரு பாழடைந்த மாளிகையில் பதுங்குவதற்கு அவர்கள் வர, அங்கு பூவழகியம் அவள் தோழிகளும் இருக்கின்றனர். இருங்கோவேளி்ன் வீரர்களை சமாளித்து அனுப்பிவிட்டு திருமாவளவனின் காயங்களுக்கு சிகிச்சை செய்கிறாள் பூவழகி. தீயில் எரிந்ததால் அவன் கால் இனி கருநிறமாகவே இருக்கும் என அவள் சொல்ல, தன் பெயர் இனி கரிகாலன் எனவும், அவள் தன் சகோதரி எனவும் கூறி அங்கிருந்து செல்கிறான் திருமாவளவன்.

இளஞ்செழியன் மீண்டும் சமண மடத்திற்கு வர, அங்கு இருங்கோவேள் ராணியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயல்வதைக் கண்டு சினமடைய, அங்கு வரும் பிரும்மானந்தர் நைச்சியமாகப் பேசி இருங்கோவேளை சமாளித்து அனுப்புகிறார். இரவில் இருங்கோவேளின் வீரர்கள் யவனராணியைக் கடத்த முற்பட, இருளில் வாட்போர் செய்து அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான் இளஞ்செழியன். முன்னர் தன்னால் காப்பாற்றப் பட்ட அல்லி என்பவளின் வீட்டில் அவளைத் தங்க வைக்கலாம் என்று வர,அங்கே டைபீரியஸைக் காண்கிறான். டைபீரியஸும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, புகார் செல்லும் வழியில் ஏற்படும் ஆபத்திலிருந்து தன் புத்தி சாதுயர்யத்தால் அவர்களைக் காப்பாற்றுகிறான் இளஞ்செழியன்.

புகாருக்கு படகில் செல்கையில் யவன ராணியிடம் காதல் மயக்கத்தில் இருக்கும் இளஞ்செழியனை வஞ்சகமாக மயக்கத் துளிகளால் மயங்கச் செய்து யவனர் கப்பலில் ஏற்றி அனுப்பி விடுகிறான் டைபீரியஸ். அவன் செயலைக் கடுமையாக எதிர்க்கும் ராணியைச் சிறை வைத்து புகாரைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான். இதேநேரம் இருங்கோவேள் பூவழகியின் தந்தையை சிறை வைத்து விட்டு மற்ற வேளிர்கள் உதவியுடன் சோழநாட்டின் மறைமுக மன்னனாக இருப்பதுடன், பூவழகியை மணக்க விரும்பி அவளை மாளிகைச் சிறையில் வைக்கிறான்.

யவனர் கப்பலில் செல்லும் இளஞ்செழியன், ஹிப்பலாஸின் உதவியால் கப்பலிலிருந்து தப்பி அடிமை வர்த்தகர்களிடம் சிக்கிக் கொள்கிறான். அடிமை வர்த்தகர்கள் அவர்களை விற்க கப்பலில் அழைத்துச் செல்ல, கொள்ளையர் கப்பல் சூழ்ந்து கொள்கிறது. வீரமாகப் போரிடும் இளஞ்செழியனையும் மற்றவர்களையும் கொள்ளையர் கைது செய்கின்றனர். கொள்ளையர் தலைவனுக்கு ஆசை ஊட்டி இலி ஆஸு என்ற கொடுங்கோல் மன்னனிடம் அவர்களை மாட்டி விடுகிறான் இளஞ்செழியன்.

இளஞ்செழியனைத் தன் படைத்தலைவனாகும்படி வற்புறுத்தும் அந்த மன்னனை தன் புத்தி சாதுர்யத்தால் ஏமாற்றி தப்புகிறான் இளஞ்செழியன். அந்நாட்டில் அவன் மேல் மோகம் கொண்ட அலீமா ன்றெ பெண் அவனுக்கு உதவ, கிரேக்க நாட்டு ரதப் போட்டியில் வென்று பல கப்பல்களுடன் தமிழகம் திரும்பும் இளஞ்‌செழியன் தன்னிடம் இருக்கும் யவனர் உதவியுடன் முகக்கவசம் அணிந்து யவனத் தூதனாக டைபீரியஸை சந்திக்கிறான். அவனுடன் உறவாடியபடியே புகாரில் அவனை முறியடிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறான். அடிக்கடி வரும் யவனக் கப்பல்கலைக் கண்ட பிரும்மானந்தர் அல்லியைக் கொண்டு உளவறிய முற்பட, அவள் மூலம் கரிகாலனுக்குச் செய்தி அனுப்புகிறான் இளஞ்செழியன்.

யவன ராணியை ரகசியமாகச் சந்தித்து தமிழர்களின் இந்திர விழாவை யவனர்களின் வீனஸ் விழாவாக நடத்தும்படி இளஞ்செழியன் வேண்ட, அவள் தன்னை அவன் மணமுடிக்க வேண்டுமென்று பதிலுககு சத்தியம் கேட்கிறாள். அவ்வாறே சத்தியம் செய்கிறான் இளஞ்செழியன்.

அதேசமயம் திருமாவளவனும் இரும்பிடர்த் தலையரும் சிறு படை திரட்டி பதினெட்டு வேளிர் மற்றும் சேர, பாண்டிய மன்னர் துணையால் பெரும்படையுடன் இருக்கும் இருங்கோவேளுடன் போர் புரியத் தயாராகின்றனர்.  இளஞ்செழியன் அவர்களைச் சந்தித்து கோவில் வெண்ணி என்ற இடத்தில் போர் புரியச் சொல்லி வெற்றி தரும் போர்த்திட்டம் ஒன்றையும் வகுத்துத் தருகிறான். அவன் திட்டப்படி போர் நடக்க, கரிகாலன் போரில் வென்று, இருங்கோவேளை கொன்று பழி தீர்த்து வெற்றிவாகை சூடுகிறான். சோழர் படை, பின்வாங்கி ஓடிய சேர, பாண்டியப் படைகளை வாகை என்ற ஊருக்கு துரத்திச் செல்கிறது.

புகாரில் வீனஸ் விழாவில் பொதுமக்களுடன் கலந்து ‌வரும் கரிகாலன் தன் வீரர்களுடன் சூழ்ந்து கொள்ள, அவனுடன் போரிட்டுத் தப்பும் டைபீரியஸ், யவன நாட்டுக்கே செல்லும் உத்தேசத்துடன் கடற்கரைக்கு ராணியை இழுத்துச் செல்கிறான். அங்கே இளஞ்செழியனால் மடக்கப்பட, இனி தப்ப இயலாது என்றறியும் டைபீரியஸ் யவனராணியின் மீது குறுவாளை வீசிவிட்டு, இளஞ்செழியனின் உபதலைவன் வீசிய வேலுக்கு இரையாகி மடிகிறான்.

இளஞ்செழியனின் மாளிகையில் சிகிச்சை பலனின்றி அவன் மடியில் யவனராணி இறக்கிறாள். கரிகாலன் சோழ சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு அல்லியை மணந்து கொள்ள, பூவழகியை மணந்து கொண்டு சோழர்களின் பிரதான படைத்தலைவனாகும் இளஞ்செழியனின் நினைவில் (வாசகர்களின் மனதிலும்) யவனராணி வாழ்கிறாள்.

முந்தையபகுதி – 4 | அடுத்தபகுதி – 6

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...