யாருக்கு வேணா ஓட்டு போடுங்க… ஆனா.., “ஓட்டு” போடுங்க..!
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த வெள்ளி போய் அடுத்த வெள்ளியான ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
ஆட்சியை தொடர வேண்டும் என ஆளும் கட்சியும், மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என எதிர்க்கட்சியும் கூட்டணியில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என மற்ற பல கட்சிகளும் மக்களை தேடி நாடி வந்து கொண்டிருக்கும் தருணம் இது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க முதன்முறை வாக்காளர்கள் தொடங்கி பலமுறை வாக்களித்த மூத்த குடிமக்கள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் காலையில் எழுந்ததும் எனதருமை வாக்காளப் பெருமக்களே என வாக்கு கேட்டு வரும் உங்கள் மதத்தைச் சேர்ந்தவருக்கா? 500 ரூபாய் நோட்டை கொடுத்து உங்கள் வாக்குரிமையை கேட்கும் உங்கள் ஜாதிக்காரருக்கா என பல குழப்பங்கள் இருக்கலாம். எல்லாவற்றுக்கும் பொதுவானவர் ஒருவர் இருக்கிறார் அவருக்கு வாக்களியுங்கள். அப்படி நீங்கள் வாக்களிக்கும் போது நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் ஜனநாயகமும் வரலாறு இந்தியாவின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும்.
எந்த காரணத்தைக் கொண்டும் இன மத மொழி அடிப்படையில் வாக்கு செலுத்த வேண்டாம் யாராக இருந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நமது அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்பவரா என்பதை அறிந்து நீங்கள் வாக்களிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்தவித சாயமும் இன்றி மக்களுக்கான பணியை செவ்வனே செய்வார் என்ற நம்பிக்கை உள்ள ஒருவருக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். உங்களுடைய வாக்கு கேட்டு வருபவர்களில் யார் தெளிவான தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுகிறார்கள் பேசுகிறார்கள் யாருடைய தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கான அதிக திட்டங்களும் பலன்களும் தொலைநோக்கு பார்வையும் இருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்து வாக்களியுங்கள்.
புதியவர் என்றால் படித்தவரா அல்லது மக்களின் கஷ்டங்கள் குறைகளை அறிந்தவரா? நமது குரலுக்கு செவி கொடுப்பவரா? ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்றால் கடந்த காலகட்டங்களில் அவரது செயல்பாடுகள் என்ன? அவர் சார்பாகவும் அவர் கட்சியின் சார்பாகவும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றனவா? என உணர்ந்து உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டியது அவசியம். சின்னத்திற்காகவும் பணத்திற்காகவும் அல்லது வெற்று வாக்குறுதிகள் அலங்கார வார்த்தைகளுக்கு மயங்காமல் அவரது செயல்பாடுகள் எப்படி பிரச்சாரத்தின் போது கூட எப்படி நடந்து கொண்டிருக்கிறார்.
கடந்த காலங்களில் அவரது செயல்பாடுகளும் அவரது கட்சியின் செயல்பாடுகளும் எப்படி இருந்திருக்கிறது? அவர்கள் அளித்த வாக்குறுதிகள் உங்களுக்கு பிடித்துள்ளதா என நீண்ட பட்டியலே இருக்கிறது இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் செயல்பாடுகளையும் கவனித்து நீங்கள் வாக்களிக்கும் நபர் தான் உங்களை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏன் வாக்களிக்க வேண்டும்
தேர்தல் என்றால் ஒரு நாள் விடுமுறை அளிப்பார்கள் என்ற எண்ணம் கூடவே கூடாது. எண்ணில் அடங்காத மொழிகளும் பண்பாடுகளும் கொண்ட இந்திய திருநாட்டில் அடிப்படை சித்தாந்தங்களையும் லட்சியங்களையும் சுமந்து திரியும் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் யாரை நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பது தான் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்க இருக்கிறது. வாக்களிப்பது ஜனநாயக உரிமையை காப்பதற்காக மட்டுமல்ல நம் எதிர்காலத்தை தீர்மானிப்பது. நமது எதிர்காலம் மட்டுமல்ல நமது சந்ததியினர் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என நாம் கனவு காண்கிறோமோ அந்தக் கனவை நிகழ்காலத்து கனவோடு பொருத்திப் பார்த்து உங்கள் வாக்கை செலுத்தும் போது உங்கள் எதிர்காலம் மட்டுமல்ல எதிர்கால சந்ததியின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்படுகிறது.
வாக்களிப்பது இந்தியனாய் பிறந்த அனைவரின் ஜனநாயக கடமை மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமையும் கூட இந்திய இந்த இந்திய திருநாடு பாரபட்சம் இன்றி அனைத்து குடிமகனுக்கும் அளிக்கப்பட்டுள்ள வாக்குரிமையை சரியாக பயன்படுத்துவதே நமது கடமை. அப்படிப்பட்ட இணை இல்லாத வாக்குரிமையை நாம் பயன்படுத்தாமல் போனால் தவறாகும். நம்மை ஐந்தாண்டுகள் யார் ஆளப்போகிறார்கள் என்பதை தீர்மானித்து வாக்களிப்பது நமது கடமை தீர்மானிக்கக்கூடிய அந்த ஜனநாயக திருவிழா தான் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நிகழ இருக்கிறது. உங்கள் விரல் நுனியில் இடப்படும் ஒற்றைத் துளி மயில் இந்திய திருநாட்டின் ஜனநாயகம் எழுதப்பட போகிறது.
வாக்களிப்பதே அவசியம்
எது எப்படியோ? திருவிழாவில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதைவிட முக்கியம், நீங்கள் வாக்களிக்கிறீர்களா என்பதுதான். ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் வாக்களிப்பதோடு தன்னை சார்ந்தவர்களையும் வாக்களிக்க வைக்க வேண்டியது அவசியம். இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் 100 வாக்குப்பதிவு என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த தேர்தலில் அதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியோடு உங்களுக்கான மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுங்கள்.